Published:Updated:

செர்பியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது பிரேசில்! # SRBBRA

ரஞ்சித் ரூஸோ
செர்பியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது பிரேசில்! # SRBBRA
செர்பியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது பிரேசில்! # SRBBRA

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் குரூப் E பிரிவில் இருந்து அடுத்தச் சுற்றுக்கு யார் போவார்கள் என்பதை முடிவு செய்யும் போட்டி செர்பியா மற்றும் பிரேசிலுக்கு இடையே இன்று நடைபெற்றது. பிரேசில் ஜெயிக்க வேண்டும் அல்லது ஆட்டத்தைச் சமன்செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இருக்க, செரிபியாவுக்கு ஜெயித்தால் மட்டுமே அடுத்தச் சுற்றுக்கு போகமுடியும் என்ற அழுத்தத்தோடு மேட்ச் தொடங்கியது. 

ஃபார்மேஷனில் மூளையைக் காட்டியிருந்தாலும், முதல் பாதி முழுவதும் பிரேசில் பிளேயர்களுக்கு பிரஷர் கொடுக்காமலேயே விளையாடியது செர்பியா. முதல் பாதி முழுவதும் ஒரு ஆன்-டார்கெட் ஷாட்டுகளை கூட அடிக்கவில்லை என்றாலும் கார்னர் கிக் மூலம் கோலுக்கு சில வாய்ப்புகள் கிடைத்தன. அது எதுவுமே பலிக்கவில்லை. பிரேசில் அட்டாக் ஆட்டத்தில் கோல் கீப்பருக்கு அழுத்தம் தர 36-வது நிமிடம் கோட்டினியோவின் சிப் பாஸ் மூலம் டிஃபென்ட் லைனை தாண்டி நுழைந்த பாலின்னோ கோல் கீப்பரின் தலைக்கு மேல் பந்தைத் தட்டிவிட்டு கோல் போட பிரேசில் முதல் பாதியிலேயே லீட் எடுத்து செர்பியாவுக்கு ஷாக் கொடுத்துவிட்டது. 39 சதவிதித பொசஷன் இருந்தாலும் முதல் பாதியில் செர்பியாவுக்கு கோல் எதுவுமே கிடைக்கவில்லை. 

இரண்டாம் பாதி தொடங்கியதும் செர்பியா தன் அட்டாக் ஆட்டத்தைத் தொடங்கியது. செர்பியா கேப்டன் கோலரோவ் அட்டாக்குக்கு வந்து விளையாட,  மிட்ரோவிக் பலமுறை கோல் போட முயன்றும் பிரேசில் கோல்கீப்பர் ஆலிசனை தாண்டி செர்பியாவால் எதுவுமே செய்யமுடியவில்லை. பிரேசிலின் டிஃபென்ட் லைன் பந்தைக் கோல் பாக்ஸ் அருகே வராமல் பார்த்துக்கொள்ள பெரும்பாடு பட்டார்கள்.

ஆட்டத்தின் 68-வது நிமிடத்தில் கார்னர் கிக்கில் ஹெட்டர் மூலம் பிரேசிலுக்காக இரண்டாவது கோல் அடித்தார் தியாகோ சில்வா. ஆட்டம் முடியும் வரை பல முறை முயற்சி செய்தும் கோல் எதுவுமே அடிக்கமுடியாமல் 0-2 என்ற கோல் கணக்கில் செர்பியா உலகக்கோப்பையில் இருந்து வெளியேறியது. பல வாய்ப்புகள் கிடைத்தும் நட்சத்திர வீரர் நெய்மார் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. அபாரமான ஆட்டத்தின் மூலம் எந்த பிளேயரும் தனித்துத் தெரியவில்லை என்றாலும், ஒரு அணியாகச் சேர்ந்து அழகான ஆட்டத்தை வெளிப்படுத்தி தன் அணியை அடுத்தச் சுற்றுக்கு கொண்டுசென்றுள்ளார்கள் பிரேசில் வீரர்கள். 

நடந்து முடிந்த இந்த ஆட்டத்தின் 10-வது நிமிடத்தில் மார்செலோ காயம் காரணமாக வெளியேறியதால் அடுத்த ஆட்டத்தில் அவர் ஆடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பிலிப்பே லூயிஸ் காயத்தில் இருந்து சமீபத்தில்தான் குணமாகியுள்ளார். இன்னொரு டிஃபென்டரான டனிலேவும் காயம் காரணமாக ஆடவில்லை என்பதால் ரவுண்ட் ஆஃப் 16 ஆட்டத்தில் மெக்ஸிகோவுடன் மோதப்போகும் பிரேசிலுக்கு முழு பலம் இல்லையோ எனத் தோன்றுகிறது. பொறுத்திருந்துப் பார்ப்போம்.