Published:Updated:

கால்பந்து வீராங்கனைகளை குழந்தைகள் போல பார்த்து கொண்ட நேபாளத்துக்கு நன்றி!

Vikatan Correspondent
கால்பந்து வீராங்கனைகளை குழந்தைகள் போல பார்த்து கொண்ட நேபாளத்துக்கு நன்றி!
கால்பந்து வீராங்கனைகளை குழந்தைகள் போல பார்த்து கொண்ட நேபாளத்துக்கு நன்றி!

நேபாள நிலநடுக்கத்தில் இருந்து தப்பிய 14 வயதுக்குட்பட்ட இந்திய கால்பந்து வீராங்கனைகள் தங்கள் குழந்தைகள் போல பார்த்துக் கொண்ட நேபாள அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக இந்திய கால்பந்து சங்கத் தலைவர் பிரஃபுல் படேல் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.

கால்பந்து வீராங்கனைகளை குழந்தைகள் போல பார்த்து கொண்ட நேபாளத்துக்கு நன்றி!

ஏ.எப்.சி. கோப்பைக்கான கால்பந்து போட்டியில் பங்கேற்க 14 வயதுக்குட்பட்ட இந்திய மகளிர் அணி நேபாளத்துக்கு சென்றிருந்தது.  நேற்று முன்தினம் பூகம்பம் தாக்கியபோது இந்திய வீராங்கனைகள் ஈரான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடுவதற்காக மைதானத்தில் தயாராக இருந்தனர். அந்த சமயத்தில்தான் பூகம்பம் 7.1 ரிக்டர் அளவில் நேபாளத்தை தாக்கியது. இதனால், ஸ்டேடியத்தின் கட்டிடங்கள் அதிர்ந்துள்ளன, மைதானமே குலுங்கியுள்ளது. போட்டியை பார்க்க மைதானத்தில் 100க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கூடியிருந்துள்ளனர்.

ஸ்டேடியம் அதிர்வதை பார்த்து ரசிகர்கள் அங்குமிங்கும் ஓட, இந்திய  வீராங்கனைகள் அதிர்ச்சியில் செய்வதறியாது திகைத்துள்ளனர். நடப்பதை பார்த்து சில வீராங்கனைகள் கதறி அழுதுள்ளனர். அந்த சமயத்தில் இந்திய அணியைச் சேர்ந்த அலுவலர் ஒருவர்தான் இந்திய அணி வீராங்கனைகளை வேகமாக மைதானத்தின் நடுபகுதிக்கு ஓடுமாறு கூறியுள்ளார். இதையடுத்து மைதானத்தின் நடுப்பகுதிக்கு ஓடி இந்த வீராங்கனைகள் உயிர் தப்பியுள்ளனர்.

பின்னர் இந்தியா உள்ளிட்ட பிற நாட்டு வீராங்கனைகள் அனைவரையும் மீட்ட நேபாள அரசு நேற்று அங்குள்ள மைதானம் ஒன்றில் பத்திரமாக தங்க வைத்து அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செயது கொடுத்தது. இந்நிலையில், நேற்று மாலை இந்திய கால்பந்து வீராங்கனைகள் அடங்கிய 23 பேர் கொண்ட குழு ராணுவ விமானம் மூலம் மீட்கப்பட்டு டெல்லி அழைத்து வரப்பட்டது.

இது குறித்து இந்திய கால்பந்து சங்கத் தலைவர் பிரஃபுல் படேல் வெளியிட்டுள்ள அறிக்கையில், வீராங்கனைகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதற்கு கடவுளுக்கும் வீராங்கனைகளை தங்கள் குழந்தைகள் போல பார்த்து கொண்ட நேபாள கால்பந்து சங்கத்துக்கு நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

அகில இந்திய கால்பந்து சங்கம் நேபாள கால்பந்து சங்கத்துக்கு உடனடி நிவாரண நிதியாக ரூ. 11 லட்சமும் வழங்கியுள்ளது.