Published:Updated:

யூரோ கால்பந்து: இத்தாலி-குரோஷியா ஆட்டம் டிரா; ஸ்பெயின் வெற்றி!

விகடன் விமர்சனக்குழு
யூரோ கால்பந்து: இத்தாலி-குரோஷியா ஆட்டம் டிரா; ஸ்பெயின் வெற்றி!
யூரோ கால்பந்து: இத்தாலி-குரோஷியா ஆட்டம் டிரா; ஸ்பெயின் வெற்றி!
யூரோ கால்பந்து: இத்தாலி-குரோஷியா ஆட்டம் டிரா; ஸ்பெயின் வெற்றி!

வார்சா: யூரோ கால்பந்து போட்டியில் சி பிரிவு ஆட்டத்தில் அயர்லாந்து அணியை ஸ்பெயின் அணி வீழ்த்தியது. முன்னதாக நடைபெற்ற இத்தாலி, குரேஷியா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது.
 
14-வது யூரோ கோப்பை கால்பந்து போட்டிகளை போலந்தும், உக்ரைனும் இணைந்து நடத்துகின்றன. இத்தொடரில் இன்று நடைபெற்ற சி பிரிவு லீக் ஆட்டத்தில் இத்தாலி-குரோஷியா அணிகள் மோதின.
 
இந்த ஆட்டத்தின் 38-வது நிமிடத்தில் இத்தாலி அணியின் ஆண்டியா பிர்லோ கோல் அடித்து, அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். முதல் பாதியில் மேலும் பல கோல் அடிக்க கிடைத்த சில வாய்ப்புகளை இத்தாலி அணியினர் கோட்டைவிட்டனர். எனினும் முதல் பாதியின் முடிவில் இத்தாலி அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
 
2-வது பாதியின் ஆரம்பத்திலேயே கோல் அடித்து, சமன் செய்ய குரோஷிய வீரர்கள் முயன்றனர். ஆனால் 70-வது நிமிடம் வரை அவர்களால் கோல் அடிக்க முடியாமல் போனது. எனினும் ஆட்டத்தின் 71-வது நிமிடத்தில் குரோஷிய வீரர் ஜியார்ஜியோ சீல்லினி கோல் அடித்தார்.
 
இதனால் இரு அணிகளும் 1-1 என்ற சமநிலையை எட்டின. ஆட்டம் முடிய மேலும் 19 நிமிடங்களே இருந்த நிலையில் இரு அணிகளும் சமநிலை வகித்ததால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இரு அணி வீரர்களும் மேலும் கோல் அடிக்கும் முனைப்பில் ஆடினர். இதனால் ஆட்டத்தில் அனல் பறந்தது. இரு அணி வீரர்களும் பலமுறை கோல் அடிக்க முயன்றும், அவர்களது முயற்சி தடுக்கப்பட்டது.
 
90 நிமிடங்களின் முடிவில் இரு அணியும் 1-1 என்ற சமநிலையில் இருந்ததால், ஆட்டத்தின் முடிவை நிர்ணயிப்பதற்காக கூடுதல் 3 நிமிடங்கள் வழங்கப்பட்டன. கூடுதல் நேரத்திலும் கோல் அடிக்கப்படாததால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

நேற்றைய ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர்களின் தவறுகளால் இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

ஸ்பெயின் அபார வெற்றி!

யூரோ கால்பந்து: இத்தாலி-குரோஷியா ஆட்டம் டிரா; ஸ்பெயின் வெற்றி!

அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் அயர்லாந்தை 4-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் வீழ்த்தியது.

ஆட்டம் தொடங்கிய 4-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் பெர்னாண்டோ டோரெஸ் கோல் அடித்து, அயர்லாந்து அணியினருக்கு அதிர்ச்சி அளித்தார். பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடிய அனுபவமுள்ள சில வீரர்கள், ஸ்பெயின் அணியில் இடம் பெற்றுள்ளது, அந்த அணிக்கு சாதகமாக அமைந்தது. முதல் பாதியின் முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணி முன்னிலை வகித்தது. 
 
இரண்டாவது பாதியிலும் முதல் பாதியைப் போலவே 4-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணி கோல் அடித்தது. அதாவது ஆட்டத்தின் 49-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் டேவிட் சில்வா பந்தை சிறப்பாக கடத்தி சென்று கோல் அடித்தார். தொடர்ந்து 70வது பெர்னாண்டோ டோரெசும், 83-வது நிமிடத்தில் செஸ்க் பேப்ரிகஸசும் ஸ்பெயின் அணிக்காக கோல் அடித்தனர்.
 
இதனால் ஸ்பெயின் அணி 4-0 என்ற அசைக்க முடியாத முன்னிலையைப் பெற்றதுடன், வெற்றியையும் உறுதி செய்துகொண்டது. ஆறுதலுக்காக ஒரு கோலாவது அடிக்க முயன்ற அயர்லாந்து வீரர்களுக்கு, இறுதிவரை ஏமாற்றமே மிஞ்சியது. இறுதியில் ஸ்பெயின் அணி 4-0 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தியது.
 
இப்போட்டியில் ஸ்பெயின் அணிக்காக அடிக்கப்பட்ட 4 கோல்கள் உட்பட கடைசியாக பங்கேற்ற 9 போட்டிகளிலும், பார்சிலோனா கிளப் அணிக்காக ஆடிய வீரர்களே ஸ்பெயினுக்கு வெற்றி தேடி கொடுத்துள்ளனர் என்பது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய ஆட்டங்கள்!

இரவு 9.30 மணிக்கு உக்ரைன் அணி, பிரான்ஸ் அணியை எதிர்த்து களமிறங்குகிறது. இந்த போட்டியில் உக்ரைன் வெற்றி பெற்றால் கால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

12.15க்கு நடைபெறும் மற்றொரு போட்டியில் இங்கிலாந்து அணி, சுவீடன் அணியை எதிர்த்து களமிறங்குகிறது. இந்த போட்டி சுவீடன் அணிக்கு வாழ்வா? சாவா? என்ற நிலையில் இருப்பதால் இன்றைய போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.