Published:Updated:

“ஜிமிக்கி கம்மலை மீட்டு, புல்லட் வாங்கணும்!’’ - ரேஸர் இலக்கியா

தமிழ்த்தென்றல்
“ஜிமிக்கி கம்மலை மீட்டு, புல்லட் வாங்கணும்!’’ - ரேஸர் இலக்கியா
“ஜிமிக்கி கம்மலை மீட்டு, புல்லட் வாங்கணும்!’’ - ரேஸர் இலக்கியா

நான்கு மாதம் முன்பு வரை இலக்கியாவை யாருக்கும் தெரியாது. ‘அப்படி ஓரமா நில்லும்மா..’ என்று ரேஸ் ட்ராக்கில் விரட்டியவர்கள், இப்போது ‘‘இலக்கியா வரலையா?’’ என்று ரேஸிங் டீம்களில் விசாரிக்க ஆரம்பிக்கிறார்கள்.

சாம்பியனெல்லாம் கிடையாது; பத்துப் பதினைந்து வருட அனுபவமும் கிடையாது. இலக்கியாவுக்கு இதுதான் மூன்றாவது ரேஸ். மூன்றாவது இடம் வந்து போடியம் ஏறிவிட்டார்.

‘‘ச்சே... ஜஸ்ட் மிஸ்ஸு... S பெண்டுல அவுட் ஆஃப் தி ட்ராக் போயிட்டேன். அதான் மூணாவது இடம்!’’ என்ற இலக்கியாவுக்கு 20 வயதாகிறது. ரேஸில் நுழைந்து மூன்று மாதங்கள்கூட நிறைவடையவில்லை. அதற்குள் இந்த வருடத்துக்கான நேஷனல் சாம்பியன்ஷிப்பில் பல ரேஸ் ஜாம்பவான்களுடன் ரவுண்டு கட்டி போட்டிப்போட ஆரம்பித்து விட்டார்.

நீங்கள் ஒரு துறைக்குப் புதுசு என்று வைத்துக்கொள்வோம். புரொஃபஷனலான பழுத்த ஆசாமிகளுடன் அந்தத் துறையில் உங்களை மோதச் சொன்னால்... உடம்பு படபடக்கும்தானே! அப்படித்தான் இலக்கியாவுக்கும் இருந்தது. கூட ரேஸ் ஓட்டியவர்களெல்லாம் பையன்கள்; இலக்கியாவோடு சேர்த்து சொற்பப் பெண்கள்தான். அவர்களும் பழுத்த அனுபவம் கொண்டவர்கள். முதல் ரேஸில் செம அடி. ‘உனக்கு எதுக்கும்மா இந்த வேலை’ என்று எள்ளி நகையாடினவர்களும் இருந்தார்கள். ‘அடுத்த ரேஸ்ல பார்த்துக்கலாம்’ என்று தூக்கி விட்டவர்களும் இருந்தார்கள்.

இரண்டாவது ரேஸில் ஏழாவது வந்தார். அடுத்த ரேஸில் மூன்றாவதாக போடியம் ஏறிவிட்டார். இப்போது அடுத்த ஒன்-மேக் நேஷனல் சாம்பியன்ஷிப் ரேஸுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார் இலக்கியா. ‘‘எல்லாத்துக்கும் காரணம், என்னோட டீம் ஓனர் இளங்கோ அண்ணாவும், கோச் ஜார்ஜ் அண்ணாவும்தான்." என்று இலக்கியமாகப் பேசுகிறார் இலக்கியா.

ஒரு பொண்ணு ஸ்கூட்டி ஓட்டினாலே மீம் போடும் உலகம் இது. அதில் ட்ராக்கில் ரேஸ் பைக்கை முறுக்கி போடியம் ஏறுவதெல்லாம் விஜய் மல்லையாவுக்கு ஜாமீன் கிடைப்பது மாதிரி ஈஸியான விஷயம் இல்லை என்பது ரேஸ் ஓட்டுபவர்களுக்குத் தெரியும்.

சென்னையைச் சேர்ந்த இலக்கியா ரேஸுக்குள் நுழைந்த கதையைக் கேட்டால் நெகிழ்வதா... மகிழ்வதா என்று தெரியவில்லை. ‘‘எப்படி இலக்கியா ரேஸில் இந்த ஆர்வம்?’’

"6-ம் வகுப்புப் படிக்கும்போதுதான் எனக்கு பைக் மேல ரொம்ப ஆசை வந்துச்சு. எங்க வீட்ல R15, ஆக்டிவா, பல்ஸர்னு கிட்டத்தட்ட ஆறு பைக்குகள் வெச்சிருக்கோம். என்னைப் பொறுத்தவரை எல்லாமே வேடிக்கை பார்க்க மட்டும்தாம். ‘அண்ணா மட்டும் பைக் ஓட்டுறான். நானும் ஓட்டுவேன்’ என்று இலக்கியா 11-வது வயதில் அப்பாவிடம் தன் ஆசையைச் சொன்னபோது, ‘பொம்பளைப் புள்ளையா கம்முனு இரு; பைக்கைத் தொட்டா கையை உடைச்சுடுவேன்’ என்று அம்மாவிடமிருந்து வழக்கம்போல் எதிர்ப்புதான் வந்தது. அப்புறம் அப்பாகிட்ட கெஞ்சித்தான் பைக்கை எடுத்தேன். ‘நீ கியர் போடு செல்லம்’னு ஃபர்ஸ்ட் கியர் போட்டு பைக் ஓட்டுற வரைக்கும் அப்பா கூடவே வருவாரு. அப்பான்னா சும்மாவா? விளையாட்டா பைக் ஓட்ட ஆரம்பிச்ச நான், இப்போ ரேஸ் ட்ராக்ல பைக்கை முறுக்கும்போது அப்பாதான் முன்னால தெரிவார்!’’ என்று சொல்லும் இலக்கியாவுக்கு, ரேஸ் ஆர்வம் துளிர்விட்டதும் விளையாட்டான விஷயம்தான்.

``நான் ஃபேஸ்புக்ல அக்கவுன்ட் வெச்சிருக்கேன். என்கிட்ட ஒரு பழக்கம். யார் ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் கொடுத்தாலும் அக்செப்ட் பண்ணிடுவேன். ஒரு தடவை அரவிந்த்னு ஒரு அண்ணா, ரெக்வெஸ்ட் அனுப்பியிருந்தாங்க. அக்செப்ட் பண்ணிட்டு, அவங்க பேஜுக்குள்ள போய்ப் பார்த்தேன். அவங்க ரேஸர்போல. அந்த ரேஸிங் சூட் செமையா இருந்துச்சு. ‘சூப்பரா இருக்கு’னு நானும் கமென்ட் பண்ணினேன். ‘நாமளும் இதைப் போட்டா என்ன’னு ஆசை வந்துச்சு. ஆனா, அதுக்கு ரேஸர் ஆகணும்; பைக் நல்லா ஓட்டத் தெரிஞ்சிருக்கணும்ங்கிற விஷயம் தெரிஞ்சதும், களத்துல இறங்க ஆரம்பிச்சேன்.

அப்பாகிட்ட சொன்னப்போ, வழக்கமா எதிர்ப்பே தெரிவிக்காத அப்பா, ‘அடி பிச்சுடுவேன்’னு மிரட்ட ஆரம்பிச்சுட்டார். அம்மாவும் அண்ணாவும் இதுக்கு சப்போர்ட். ‘நாம ஒண்ணும் கோடீஸ்வர வீட்டுப் பிள்ளைங்க இல்லை. ஒழுங்கா வீட்ல கிட’னு செம திட்டு. சரி; காலம் கனியட்டும்னு காத்திருந்தேன். யாரும் ஒப்புக்கலை. நான் ரேஸ்ல நுழையுறதுக்குக் காரணமே ரெஹானா அக்கா, சிண்டி அக்கா, ஆண்டி அண்ணாதான். சிண்டி அக்கா என்னை மாதிரி ஏழைப் பொண்ணுங்களுக்கு ட்ரெய்னிங் கொடுக்கிறதா கேள்விப்பட்டு, அவங்களுக்கு ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் கொடுத்தேன். அவங்களோட ‘AS’ அகாடமியில சேரச் சொன்னாங்க. 6,500 ரூபாய் தேவைப்பட்டுச்சு. அப்பாகிட்ட கேட்டேன். ‘கையில காசு இல்லை. சும்மா கிட’னு சொல்லிட்டார். அம்மாவுக்குத் தெரிஞ்சு அவங்களும் டென்ஷன். சிண்டி அக்கா தொகையைக் குறைச்சுக்கிட்டாங்க. 3,500 இருந்தா போதும்னு சொன்னாங்க. கையில இருக்கிற மோதிரம், காதுல கிடந்த ஜிமிக்கி, கம்மல்னு எல்லாத்தையும் அடகு வெச்சேன். 3,000 ரூபாய் வந்துச்சு. வீட்டுக்குத் தெரியாம இதையெல்லாம் அடகு வெச்சுத்தான் அகாடமியில சேர்ந்து சர்ட்டிஃபிகேட் வாங்கினேன். இன்னும்கூட அதை மீட்டலை. பாருங்க!’’ என்று வெறும் கை, காதுகளை அப்பாவியாகக் காண்பித்தார் இலக்கியா.

அப்புறம் அடகு விஷயம் வீட்டுக்குத் தெரிந்து பரேடு வாங்கியது... அண்ணனின் R15 பைக்கைத் தெரியாமல் ரேஸ் ட்ராக்குக்குக் கொண்டு போய்ச் சல்லி சல்லியாக உடைத்து பைக்கைவிட செம அடி வாங்கியது... ரேஸ் ட்ராக்கில் பைக் ஓட்டும்போது சக ரைடரிடம் உதை வாங்கி ட்ராக்கைவிட்டு வெளியே போனது... பைக் ஓட்டும்போது ‘ப்ப்பா... பேய் வண்டி ஓட்டுது’ என்று கலாய்த்த பசங்களை ‘பளார்’ என்று அறைவிட்டது... என்று இந்த நான்கு மாதங்களில் எக்கச்சக்க அனுபவங்களைச் சேர்த்து வைத்திருக்கிறார்.

சிண்டி அக்காவுக்கு டைம் கிடைக்கலை. அப்புறம் இளங்கோ அண்ணனோட `C2’ டீம் பற்றிக் கேள்விப்பட்டு, அவங்க கிளப்ல சேர்ந்து ட்ரெய்னிங் எடுத்தேன். ‘சாலையில் பைக் ஓட்டுவதுபோல் ரேஸ் ட்ராக்கைக் கையாளக் கூடாது; ரேஸ் ட்ராக்கில் பைக் ஓட்டுவதுபோல் சாலையில் பைக் விரட்டக் கூடாது’ங்கிறதை எனக்குத் தெளிவா புரியவெச்சது இளங்கோ அண்ணனும் ஜார்ஜ் அண்ணனும்தான்! அவங்களுக்கு என்னோட தேங்க்ஸ். ‘ஃப்யூல், ட்ராக் சூட் செலவு மட்டும் பார்த்துக்கோ; ரொம்பக் கஷ்டப்பட வேண்டாம்’னு சொல்லி என்னை அவங்க டீம்ல சேர்த்துக்கிட்டாங்க. அதுக்கப்புறம்தான் என்னோட வெறி அதிகமாச்சு.

போன ரவுண்ட்ல ஏழாவதா வந்தேன். இது எனக்கு மூணாவது ரேஸ். தீபிகாகிட்ட ஜஸ்ட் மிஸ்ல பெண்டுல வெளியே போயிட்டேன். இப்போ மூணாவதா ஃபினிஷ் பண்ணியிருக்கேன். அடுத்தமுறை விடமாட்டேன்!’’ என்று சபதம் போட்டார் இலக்கியா.

‘நீ பையனா பொறக்கவேண்டியவ... பொண்ணா பொறந்துட்ட’ என்று கவலைப்பட்டு வந்த இலக்கியாவின் அப்பாவிடம், ‘உங்க பொண்ணு என்ன பண்ணுது?’ என்று யாராவது கேட்டால், `அவ பெரிய ரேஸர்’ என்று பெருமை பொங்கச் சொல்லிவருகிறாராம் இப்போது.

அப்பா சமாதானம் ஆகிவிட்டார் என்ற சந்தோஷம், அண்ணா பைக் கொடுக்க ஆரம்பித்துவிட்டார் என்ற மகிழ்ச்சி, C2 டீமில் சேர்ந்த கொண்டாட்டம் - இதையெல்லாம் தாண்டி இலக்கியாவுக்கு முதல் குறிக்கோள் - ரேஸில் ஜெயித்து ஜிமிக்கி - கம்மல் மோதிரத்தை மீட்டெடுத்து, ராயல் என்ஃபீல்டு புல்லட் ஒன்று வாங்க வேண்டும் என்பதுதானாம்.

ஜிமிக்கி கம்மலும் புல்லட்டும் சீக்கிரம் கிடைக்கட்டும்!