Published:Updated:

தென்கொரியாவில் ஆசிய விளையாட்டுப் போட்டி கோலாகலமாக தொடக்கம்!

விகடன் விமர்சனக்குழு
தென்கொரியாவில் ஆசிய விளையாட்டுப் போட்டி கோலாகலமாக தொடக்கம்!
தென்கொரியாவில் ஆசிய விளையாட்டுப் போட்டி கோலாகலமாக தொடக்கம்!

இன்சியோன்: 45 நாடுகள் பங்கேற்கும் ஆசிய விளையாட்டு போட்டி,  தென்கொரியாவில் இன்று மாலை கண்ணைக் கவரும் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது.
 

தென்கொரியாவில் ஆசிய விளையாட்டுப் போட்டி கோலாகலமாக தொடக்கம்!

‘450 கோடி மக்களின் கனவு ஒரே ஆசியா’ என்ற கருத்தை மையமாக கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெற்றது. ‘ஆசியாட்’ என்ற பாடலை தென்கொரிய பாடகி ஜோ சுமி பாடினார்.

அதனைத் தொடர்ந்து கொரியாவின் வரலாற்றையும், கலாசாரத்தையும் பறைசாற்றும் வித்தியாசமான கலை நிகழ்ச்சிகளும், வண்ணமயமான வாணவேடிக்கையும் நடைபெற்று வருகிறது. தொடக்க விழாவில் இந்திய அணி, ஹாக்கி கேப்டன் சர்தார்சிங் தலைமையில் தேசிய கொடியுடன் அணிவகுத்து சென்றனர்.

தென்கொரியாவின் இன்சியோன் நகரில் இன்று மாலை தொடங்கி, அடுத்த மாதம் 4ஆம் தேதி வரை நடைபெறும் 17வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் சீனா, இந்தியா, தென்கொரியா, வடகொரியா, ஜப்பான், பாகிஸ்தான், ஈரான், இந்தோனேஷியா உள்பட ஆசிய கண்டத்தை சார்ந்த 45 நாடுகளில் இருந்து 9,429 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். மொத்தம் 36 வகையான பந்தயங்களில் 439 தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது.

இந்திய தரப்பில் 516 பேர் கொண்ட குழுவினர் தென்கொரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 163 பயிற்சியாளர் மற்றும் அதிகாரிகளும் வீரர்களுடன் சென்றுள்ளனர். நீச்சல், தடகளம், வில்வித்தை, பேட்மிண்டன், கூடைப்பந்து, குத்துச்சண்டை, கனோயிங் (ஒரு வகை படகு போட்டி), சைக்கிளிங், குதிரையேற்றம், கால்பந்து, கோல்ப், ஜிம்னாஸ்டிக்ஸ், ஹேண்ட் பால், ஹாக்கி, ஜூடோ, கபடி, துடுப்பு படகு, செபக்தாக்ரா (கைப்பந்து பாணியில் பந்தை காலால் உதைக்கும் ஒரு வகை விளையாட்டு), துப்பாக்கி சுடுதல், ஸ்குவாஷ், தேக்வாண்டோ, டேபிள் டென்னிஸ், டென்னிஸ், கைப்பந்து, மல்யுத்தம், வுசூ, பளுதூக்குதல், பாய்மர படகு ஆகிய 28 விளையாட்டுகளில் மட்டும் இந்தியா கலந்து கொள்கிறது.

இந்திய அணியை எடுத்துக் கொண்டால் துப்பாக்கி சுடுதல், தடகளம், கபடி, குத்துச்சண்டை, மல்யுத்தம், பேட்மிண்டன், பளுதூக்குதல், ஜிம்னாஸ்டிக்ஸ், வில்வித்தை, ஹாக்கி போன்றவற்றில் பதக்கங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.