Published:Updated:

இனிமேல் தயவு செய்து கரித்துக் கொட்டாதீர்கள் : சான்ஸே இல்லை சானியா!

விகடன் விமர்சனக்குழு
இனிமேல் தயவு செய்து கரித்துக் கொட்டாதீர்கள் : சான்ஸே இல்லை சானியா!
இனிமேல் தயவு செய்து கரித்துக் கொட்டாதீர்கள் : சான்ஸே இல்லை சானியா!

சானியா மிர்சா.. சாதனைகளும், சர்ச்சைகளும் சரிசமமாக அடிக்கடி உரிமைகோரும் ஒரு பெயர். இந்திய விளையாட்டில் பல பெண்களுக்கு இன்ஸ்பிரேஷன். மகளிர் இரட்டையர் பிரிவில் தற்போது உலகின் நம்பர் 1டென்னிஸ் வீராங்கனை. நிச்சயமாக கடந்த ஆண்டு, சானியா மிர்சாவின் விளையாட்டு வாழ்க்கையில் பொற்காலம் என்றே கூறலாம். அடுத்தடுத்து அணிவகுத்தது வெற்றிகள். சாதனைகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போனது. கடந்த ஒரு வருடமாக சானியா செய்தவை என்ன?

இனிமேல் தயவு செய்து கரித்துக் கொட்டாதீர்கள் : சான்ஸே இல்லை சானியா!


 
வெற்றியுடன் துவங்கிய 2015 :


உடல் நிலை காரணமாக, ஒற்றையர் பிரிவில் விளையாடாமல் இரட்டையர் பிரிவில் மட்டுமே தற்போது, விளையாடி வருகிறார் சானியா.2015 ம் ஆண்டில் , இரட்டையர் பிரிவில் 6 வது இடத்தில் இருந்து, புதுவருடத்தை தொடங்கினார். முதல் வெற்றியாக சிட்னியில் நடந்த, ஏ.பி.ஐ.ஏ  இன்டர்நேஷனல் போட்டியில் பட்டம் வென்றார் சானியா. உடனே ஒரு இடம் முன்னேறி ஐந்தாவது இடத்தைப்பிடித்தார். பிறகு மார்ச் மாதம் தனது பார்ட்னராக இருந்த சீனாவின் ஹூ வே சேயுடன் இருந்து பிரிந்து, சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் உடன் ஜோடி சேர்ந்தார். ஏற்கனவே லியாண்டர் பயஸ் உடன் கலப்பு இரட்டையர் பிரிவில் விளையாடி வந்தவர் ஹிங்கிஸ். “இதற்கு முன்பு சே உடன் விளையாடிய போட்டிகளில் சிறப்பான வெற்றிகளை பெற முடியவில்லை. உலகின் சிறந்த வீரர்களுக்கு எதிராக நாங்கள் இருவரும் சிறப்பாக விளையாட முடியாது. எனவே அனுபவம் வாய்ந்த மார்ட்டினா ஹிங்கிஸ் உடன் இணையவிருக்கிறேன்” என அறிவித்தார்.
 
வெற்றிமேல் வெற்றி :


 கூட்டணி அமைத்த முதல் போட்டியிலேயே அதற்கான பலன் கிடைத்தது. மார்ச் மாதம் நடந்த, பி.என்.பி பரிபாஸ் ஒபன் போட்டியில் ஒன்றாக முதல் பட்டம் வென்றது இந்த ஜோடி. “ எங்கள் இருவருக்குள்ளும் இருந்த நம்பிக்கைதான் இந்த வெற்றிக்கு காரணம்” என அறிவித்தனர் இருவரும். இந்த வெற்றிக்கு அடுத்த நாளே தரவரிசைப்பட்டியலில் முதல்முறையாக மூன்றாவது இடத்திற்கு முன்னேறி அசத்தினார் சானியா. கூடவே, சானியாவின் சமூக அக்கறைக்காக, பருவநிலை மாற்றத்திற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்த, WWF ன் விளம்பரத்தூதராகவும் நியமிக்கப்பட்டார்.

இனிமேல் தயவு செய்து கரித்துக் கொட்டாதீர்கள் : சான்ஸே இல்லை சானியா!

ஏப்ரல் மாதம் நடந்த மியாமி ஒப்பன் டென்னிஸ் போட்டியிலும் தொடர்ந்தது இந்தக்கூட்டணியின் ஆதிக்கம். ரஷிய அணியை வீழ்த்தி, தனது25 வது சர்வதேச பட்டத்தை வென்றார் சானியா. இன்னும் ஒரு பட்டம் வென்றாலோ, அல்லது 145 புள்ளிகள் எடுத்தாலோ  உலகின் நம்பர் 1வீராங்கனை சானியாதான் என்ற நிலையில், WTA ஃபேமிலி சர்க்கிள் கோப்பையை வென்றது சானியா- ஹிங்கிஸ் ஜோடி. தங்கள் கூட்டணியில் கிடைத்த இந்த மூன்றாவது பட்டம், சானியா மிர்சாவை முதல்முறையாக நம்பர் 1 இடத்திற்கு உயர்த்தியது. “ என்னுடைய கனவு நனவாகி விட்டது. இது என்னுடைய, என் குடும்பத்தின், தேசத்தின் கனவு. அது இன்று நிறைவேறியுள்ளது. இந்த வெற்றிகள் இத்துடன் முடிந்துவிடாது என நம்புகிறேன்” என நெகிழ்ந்தார் சானியா.

தேசமே மீண்டும் கொண்டாட, லைம்லைட்டில் இருந்தார் சானியா. “ வியக்கத்தக்க சாதனை” என பிரதமர் மோடி வாழ்த்தினார். “சானியாவின் வெற்றி இந்தியாவுக்கு மட்டுமல்ல.பாகிஸ்தானுக்கு கூட பெருமைதான் “ என நெகிழ்ந்தார் கணவர் ஷோயப் மாலிக். பேட்மின்டனுக்கு சாய்னா, டென்னிஸ் விளையாட்டுக்கு சானியா என ஒரே சமயத்தில் நம்பர் 1 இடம் பிடித்த இருவரையும், ‘ராக்கெட் ராணிகள்’ எனக்கொண்டாடின ஊடகங்கள். எத்தனையோ கிரிக்கெட் வீரர்களை தூக்கிவைத்துக்கொண்டாடிய இந்த நாடு, கிரிக்கெட் தவிர்த்து இரண்டு வீராங்கனைகளை முதல்தடவையாக கொண்டாடியது. “நான் வெளிநாட்டில் இருக்கும் போது கூட, இந்தியாவில் இருப்பது போன்றே இருக்கிறது. அந்த அளவுக்கு எங்கு சென்றாலும் இந்தியர்கள் எனக்கு ஆதரவு அளிக்கிறார்கள்” என இதனைக்குறிப்பிட்டார் சானியா.

இனிமேல் தயவு செய்து கரித்துக் கொட்டாதீர்கள் : சான்ஸே இல்லை சானியா!

இன்னொரு பக்கம் ஷோயப் மாலிக் மீண்டும் பாகிஸ்தான் அணிக்கு திரும்பியிருந்தார். “சானியாவின் வெற்றியால் என் மீதும் நிறைய எதிர்பார்ப்பு வருகிறது. எனக்கும் பிரஷர் இருக்கிறது” எனக்கூறிய மாலிக், ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் 76 பந்தில் 112 ரன்கள் எடுத்து அசத்தினார். ஆறு வருடங்களுக்கு ப்பிறகு பதிவு செய்த இந்த சதத்தை சானியாவுக்காக சமர்ப்பித்தார் மாலிக். “இருவருமே விளையாட்டு வீரர்கள். இருவருமே ஒரே நேரத்தில் விளையாடி வருகிறோம். திருமணத்திற்கு பிறகும் இருவரும் தங்கள் நாட்டுக்காக விளையாட முடியுமா என நினைத்தேன். ஆனால் இந்தளவு விளையாடுவோம் என நினைக்கவில்லை” என்றார் சானியா.
  
நிறைவேறிய விம்பிள்டன் கனவு :


மகளிர் இரட்டையர் பிரிவில் ஹிங்கிஸ் இரண்டு முறை விம்பிள்டன் பட்டம் வென்றிருக்கிறார். ஆனால் சானியா மிர்சா வென்றதில்லை. இந்த சாதனையையும் தகர்த்தெறிந்தனர் இருவரும். ஜூலை மாதம், நடந்த விம்பிள்டன் இறுதிப்போட்டியில் ரஷிய வீராங்கனைகளை வீழ்த்தி, முதல்முறையாக மகளிர் இரட்டையர் பிரிவில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று அசத்தினார் சானியா.

“ இது என் வாழ்வின் மற்றுமொரு முக்கியமான தருணம். நான் நினைத்ததை விடவும்,பெரிய விஷயம்” என்றார் ஹிங்கிஸ். “சின்னக்குழந்தைகள் போல இதற்காக நாங்கள் ஆசைப்பட்டோம். எங்கள் வெற்றி நிறையப்பெண்களுக்கு நம்பிக்கை அளித்திருக்கும் . அவர்களும் இனி கிராண்ட்ஸ்லாம் வெல்ல வழி ஏற்பட்டுள்ளது” என்றார் சானியா. பிரதமர், குடியரசுத்தலைவர், பாலிவுட் பிரபலங்கள், ஃபெடரர், சச்சின் என வாழ்த்துமழையில் நனைந்தார் சானியா. ஆகஸ்ட் மாதம் ராஜீவ் காந்தி கேல்ரத்னா விருதுக்கும் விளையாட்டுத்துறையால் பரிந்துரைக்கப்பட்டார்.


ஷோயப் மாலிக்கும், சானியாவும் சேர்ந்து எடுத்த செல்பி டான்ஸ் வீடியோ செம வைரல் ஆனது. இருவருமே தங்கள் துறைகளில் நல்ல பார்மில் இருக்க, ஜாலியாக  டான்ஸ் ஆடி, டிவிட்டரில் விட்டார் மாலிக். யுவராஜ் சிங் “இருவரும் நல்ல விளையாட்டு வீரர்கள் என நினைத்தேன். இருவரும் நல்ல டான்சரும் கூட” என ஆர்.டி போட, மாலிக், யுவியையும் டான்ஸ் ஆட, சவால் விட்டார். சவாலை ஏற்று, டான்ஸ் ஆடிய வீடியோவை பதிவேற்றி, மிஷன் பாசிபிள் ஆக்கினார் யுவி.


விளையாட்டு தவிர்த்து பேஷன் பக்கமும் அடிக்கடி தலைகாட்டி, அசத்துவார் அப்படி சானியா. ஆகஸ்ட் மாதம் நடந்த இன்டர்நேஷனல் ஜுவல்லரி வீக்கில் , நகைகளுக்காக ராம்ப் வாக் செய்தார் சானியா. “ நான் விளையாட்டு வீராங்கனை என்றாலும், நானும் ஒரு பெண்தான். மற்ற பெண்களை போல எனக்கும் நகைகள் என்றால் மிகவும் பிடிக்கும்.” என ஆப் தி கோர்ட்டிலும் அசத்தினார்.

இனிமேல் தயவு செய்து கரித்துக் கொட்டாதீர்கள் : சான்ஸே இல்லை சானியா!


 
தேடி வந்த கேல் ரத்னா:


  பங்கஜ் அத்வானி, கிரிஷா என பல விளையாட்டு வீரர்கள் சானியாவின் கேல் ரத்னா விருதினை சர்ச்சையாக்கினர். விருது தேர்வு நடைமுறைகள் சரியானது இல்லை என குற்றம் சுமத்தினர்  இதையெல்லாம் தாண்டி, விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு, ஆகஸ்ட் மாதம் 29 ம்  தேதி கேல்ரத்னா விருதினை பிரணாப் முகர்ஜியிடம் இருந்து பெற்றார். “என் நாட்டுக்காக விளையாடும் வாய்ப்பு பல வருடங்களாக கிடைத்தது. தற்போது என் நாடு எனக்கு அளிக்கும் இந்த அங்கீகாரமும், ஊக்கமும் மகிழ்ச்சியளிக்கிறது” என்றார் சானியா. லியாண்டர் பயஸ்க்கு பிறகு இந்த விருதைப்பெறும், டென்னிஸ் பிரபலம் சானியாதான். முதல் டென்னிஸ் வீராங்கனையும் சானியாதான். “ நான் எனக்காகவும், குடும்பத்திற்காகவும்,நாட்டுக்காகவும்தான்  டென்னிஸ் விளையாடுகிறேன். வேறு எந்த சர்ச்சைக்கும் நான் பதில் சொல்லப்போவதில்லை.என்னை வைத்து விளம்பரம் தேடும் ஊடகங்களை பற்றி எனக்கு கவலை இல்லை. நான் விளையாடுவதில் மட்டுமே கவனமாக இருக்கிறேன்” என பதில் கொடுத்தார் சர்ச்சைகளுக்கு.
  அதே போல, இப்போதும் சர்ச்சைகளும் தொடர்கிறது. சமீபத்தில் மீடியா ஒன்றிற்கு அளித்த பேட்டியில், “எப்போது குழந்தை பெற்றுக்கொள்ள போகிறீர்கள்?” என்ற கேள்விக்கு பதில் அளித்திருந்தார். “ பெண்கள் எதைசெய்தாலும் இரண்டு மடங்கு உழைக்க வேண்டியிருக்கிறது. ஆனால் இப்படிப்பட்ட கேள்விகள் கேட்கும்போது வருத்தமாக இருக்கிறது. நான் ஒரு பிரபலமான மனிதர் என்பதால் யாருக்கும் எனது சொந்த விஷயங்களில் தலையிடும் உரிமையை நான் அளிக்கவில்லை” என நச்சென பதில் அளித்தார் சானியா.
 
இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் வெற்றி :


முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற மகிழ்ச்சியில் இருந்த சானியா- ஹிங்கிஸ் ஜோடிக்கு அடுத்த சவாலாக வந்து நின்றது செப்டம்பர் யு.எஸ்.ஒப்பன் போட்டிகள். அதிலும் பட்டம் வென்றது இந்த இணை. இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை ஒன்றாக வென்று மொத்த டென்னிஸ் உலகையும் மீண்டும் திரும்பி பார்க்க வைத்தனர்.

அதே செப்டம்பர் மாதம் இறுதியில் குவாங்சு ஒபன் பட்டத்தையும் தன் வசப்படுத்தினர். அடுத்து அக்டோபர் மாதம் வுஹான் ஒபன் பட்டத்தையும் வென்று 7 வது பட்டத்தை வசப்படுத்தினர். போட்டிகள் வரவர, பின்னாடியே வெற்றிகளும் வந்து தொற்றிக்கொண்டன.

அதே அக்டோபர் மாதம், சீன ஒபன் போட்டியிலும் கைவசமானது பட்டம். இருவரும் இணைந்து வென்ற 8 வது பட்டமாக அமைந்தது சீன ஒபன். 5 வருடங்களுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் களம் இறங்கிய ஷோயப் மாலிக், இங்கிலாந்துக்கு எதிராக 245 ரன்கள் அடித்து அசத்தினார் இன்னொரு பக்கம். “சானியாதான் எனக்கு இன்ஸ்பிரேஷன். சானியாவின் வெற்றி என்னையும் உற்சாகப்படுத்துகிறது” என போட்டிக்குப்பின் பேட்டி தட்டினார் ஷோயப் மாலிக்.

இத்தனை பேருக்கு முன்னோடியாக இருந்து ஊக்கமளித்த சானியா மிர்சாவை ‘உலகின் நம்பிக்கையூட்டும் 100 பெண்கள்’ பட்டியலில் இடமளித்து கௌரவித்தது பி.பி.சி. இந்தியாவின் சார்பில் இடம் பெற்ற 7 பெண்களில், சானியாவும் ஒருவராக இடம்பெற்றார் சானியா. இந்தியாவில் டென்னிஸ் விளையாட்டை பிரபலபடுத்தும் நோக்கில் நடக்கும் இன்டர்நேஷனல் டென்னிஸ் பிரீமியர் லீக்கின் புரமோஷன் நிகழ்ச்சியில் மேற்கு வாங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு டென்னிஸ் விளையாட கற்றுத்தந்தது சோஷியல் மீடியாவின் ஹைலைட். கடந்த ஆண்டு, கூகுளில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு பிரபலங்கள் வரிசையிலும் இடம் பிடித்தார்.

தில்வாலே ஷூட்டிங்கிற்காக ஹைதராபாத்தில் இருந்த ஷாருக், கஜோல் , ஃபராகான், ரோஹித் ஷெட்டி என மொத்த டீமிற்கும் பிரியாணி செய்து அனுப்பிவைத்தார் சானியா. டிவிட்டரில் இதைக்கொண்டாடிய தில்வாலே டீமுக்கு, இரண்டாவது முறை, வீட்டிலேயே பிரியாணி விருந்து வைத்தார் சானியா. சான்சே இல்லை சானியா எனப்பாராட்டினார் ஷாருக்கான்.

உலக சாம்பியன்கள் :


 டிசம்பர் வரை போட்டிகளில் பிசியாக இருந்த, சானியா ஆண்டு இறுதியில் சின்ன ரிலாக்ஸ்க்காக பரிணிதி சோப்ராவுடன் சேர்ந்து கோவாவிற்கு மினி ட்ரிப் அடித்தார். அப்போது இருவரும் எடுத்த செல்பிக்கள் செம வைரல். மொத்தமாக கடந்த வருடம் மட்டுமே 10 பட்டங்களை வென்றது சானியா-ஹிங்கிஸ் ஜோடி. 22 போட்டிகளில் தொடர் வெற்றி பெற்றது இந்த ஜோடி. ஒவ்வொரு வருடமும், சிறந்து விளங்கும் வீரர்களை உலக சாம்பியன்களாக அறிவிப்பது வழக்கம். அப்படி கடந்த ஆண்டு, சானியா-ஹிங்கிஸ் இருவரையும் உலக சாம்பியன்களாக அறிவித்தது சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு. நம்பர் 1 அந்தஸ்துடன் கடந்த வருடத்தை நிறைவு செய்தார் சானியா.

இனிமேல் தயவு செய்து கரித்துக் கொட்டாதீர்கள் : சான்ஸே இல்லை சானியா!இது ஒரு தொடர்கதை :


இந்த ஆண்டும் இந்த சாதனைக்கூட்டணி இன்னும் தொடர்கிறது. வெற்றிகளும் தொடர்கிறது. ஜனவரி மாதம் பிரிஸ்பேன் போட்டியில் மீண்டும் வந்தது சர்வதேசப்பட்டம். சிட்னி இன்டர்நேஷனல் போட்டியில் வென்று இந்த ஆண்டின் இரண்டாவது பட்டத்தை கைப்பற்றியிருக்கின்றனர் இவர்கள். சமீபத்தில் ஆஸ்திரேலிய ஒப்பன் போட்டியிலும் வெற்றி. இருவரும் இணைந்து வென்ற மூன்றாவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இது. சச்சினின் நூறாவது சதத்துக்கு கொஞ்சமும் குறைவில்லாத சாதனை இது. இந்த வருடம் பத்மபூஷன் விருது பெறுவோர் பட்டியலிலும் இடம் பிடித்துள்ளார் சானியா.

இனி வாட் நெக்ஸ்ட் என சானியாவிடம் கேட்டால், “ இது நிச்சயம் எங்களால் நம்பவே முடியவில்லை. நாங்கள் தோல்வியடைந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. எதுவுமே நிலையானது இல்லை. இந்த வெற்றிகள் தொடரவேண்டும் என ஆசைப்படுகிறோம். முதலிடத்தை பிடிப்பதை விட, அதை தக்கவைத்துக்கொள்ள, நிறைய பயிற்சியும், உழைப்பும் தேவை. அதனால்தான் எல்லோரும் அந்த இடத்தை பிடிக்க முடிவதில்லை. நிறைய மக்கள், இன்னும் நீங்கள் எத்தனை பட்டங்கள்தான் வெல்லப்போகிறீர்கள்? எனக்கேட்பார்கள். இதுவெல்லாம் எங்களுக்கு ஒருவகையான அழுத்தம்தான். ஆனால் ஹிங்கிஸ்க்கும் எனக்கும் இடையேயான நட்பு இதனை சரிசெய்து விடுகிறது.  இனி அடுத்து ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே நோக்கம். இனி அதற்கான நேரம்” என்கிறார் சானியா.

இன்னும் பல சிக்கல்களையும், சர்ச்சைகளையும் சானியாவுக்காக வருங்காலம் வைத்திருக்கலாம். ஆனால் அதையெல்லாம் தகர்த்தெறியும் தன்னம்பிக்கையை சானியா நிறைய வைத்திருக்கிறார். எல்லாம் தாண்டி, ஒலிம்பிக்கில் சாதிக்க வாழ்த்துவோம் !
 
ஞா.சுதாகர்