Published:Updated:

'கபடி...கபடி' ன்னா தெரியும்... 'சர்ஜீவ்னி' ன்னா என்னான்னு தெரியுமா...?

Vikatan Correspondent
'கபடி...கபடி' ன்னா தெரியும்... 'சர்ஜீவ்னி' ன்னா என்னான்னு தெரியுமா...?
'கபடி...கபடி' ன்னா தெரியும்... 'சர்ஜீவ்னி' ன்னா என்னான்னு தெரியுமா...?

1 . சர்ஜீவ்னி :

தென்னிந்தியாவில் , குறிப்பாக தமிழ் நாட்டில் கிரிக்கெட் விளையாட்டுபிரபலமாவதற்கு முன்பிருந்தே விளையாடும் விளையாட்டு இது கபடி அல்லது சடுகுடு அல்லது பலிஞ்சடுகுடு என்று அழைக்கப்படும்.  இதன் விதிமுறைகள் யாவும் இந்திய கபடி வாரியத்தால் வகுக்கப்பட்டவை.

பாடிச்செல்லும்போது  'கபடிக்கபடிக்கபடி......' என்று ஒரே மூச்சில  பாடணும்னு அவசியம் இல்லை. 'கபடி ..கபடி...கபடி...' என்று ஒரே சீரான இடைவெளியில் மூச்சுவிட்டும் பாடலாம். எதிரணியினர் பிடித்தால் மட்டுமே ஒரே மூச்சில்  தப்பித்து வரவேண்டும். ஒவ்வோர் அணியிலும் அதிகபட்சம் 12  பேர் இருப்பார்கள். ஆனால் களத்தினுள் இருப்பவர்கள் 7 பேர் மட்டுமே. மீதி ஐவரும் ரிசர்வ் .(மாற்று விளையாட்டு வீரர்கள்)

'டாஸ்'வென்ற அணி 'சைடு 'அல்லது 'ரைடு ' தேர்ந்தெடுக்கலாம். ஆனால் இரண்டாம்பகுதியில் மாற்றி எடுக்க வேண்டும். ஆட்டத்தின் பொது கோட்டுக்கு வெளியே செல்லும் ஆட்டக்காரர் 'அவுட் 'ஆக நேரிடும். எல்லைக்கோட்டுக்கு வெளியே உடம்பின் எந்தப்பகுதி தரையைத்தொட்டாலும் 'அவுட் 'தான்.

பாடி வருபவரின் கை,கால், இடுப்புப்பகுதிகளை மட்டும்தான் பிடிக்கவேண்டும். அவர் வாயை  பொத்தக்கூடாது. மீறிச் செய்தால் அது ஃபவுல் 'ஆக எடுத்துக்கொள்ளப்படும். 

ஒருவர் ,பல முறை ரைடு போகலாம். ரைடு போகிறவர் ஏறு கோட்டை தொடாமல் வந்தாலும் அவுட். எதிரணியில் உள்ள அனைவரையும் 'அவுட்'  செய்தால், இரண்டு புள்ளிகள் கூடுதலாகக் கிடைக்கும். இதற்கு 'லோனா' என்று கூறுவார்கள்

2 . அமர் (பஞ்சாப் ஸ்டைல்) :    

நம்ம  ஊரில்  விளையாடப்படும்  'சர்ஜீவினி'  முறை கபடிக்கு எல்லா  வீரர்களும் பலசாலியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.  ஏனென்றல் இதில் பாடி வருபவரை எல்லோரும் பிடிக்கலாம். ஆனால் 'அமர்' முறை ஆட்டத்தில் பாடி வருபவரை ஒருவர்  மட்டுமே பிடிக்கவேண்டும். மற்றவர்கள் எல்லோரும் 'தேமே' ன்னு நின்னு வேடிக்கை பார்க்க வேண்டியதுதான். தொடப்பட்ட நபர் உடனே மைதானத்தை விட்டு  வெளியே  செல்லவேண்டும்  என்ற அவசியம் கிடையாது. பாடி வருபவர் திரும்பிப் போகும் வரை பிடிக்க முயற்சி செய்யலாம். இந்த விதிமுறைதான் இரண்டிற்கும் உள்ள முக்கிய வேறுபாடு. 

மேலும், இதன் ஆடுகளம் வட்ட வடிவில் இருக்கும். இந்த விளையாட்டு முறை அதிகமாக பஞ்சாப்பில் தான் விளையாடப்படுகிறது. இதற்கு 'வட்டக்கபடி'  என்ற பெயரும் உண்டு.

3. ஹுட்டுட்டு :

மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் விளையாடப்படும் விளையாட்டு. பிரிட்டிஷ் ராணுவத்தில் பொழுதுபோக்குக்காக விளையாடுகிறார்கள். ஸ்காட்லாந்து கிராமங்களில், வேறு மாதிரியான நெறிமுறைகளை வைத்து விளையாடபடும் விளையாட்டு ஹுட்டுட்டு.  அமர், ஹுட்டுட்டு போன்ற கபடி விளையாட்டுகளில் விதிமுறைகள் குறைவு. ஆனால் தமிழ்நாட்டு கபடி போட்டியில் நிறைய ரூல்ஸ் இருக்கிறதாம்.

படங்கள் : என்.ஜி.மணிகண்டன், கே.குணசீலன்