Published:Updated:

`சமீபத்திய ஃபார்மினால் ஒலிம்பிக் தேர்ச்சியில் பாதிப்பு இருக்காது!’ - பாட்மின்டன் வீரர் கிடம்பி ஶ்ரீகாந்த்

ராம் கார்த்திகேயன் கி ர

டோக்கியோ ஒலிம்பிக் நடைபெற இன்னும் ஒரு வருடம் உள்ளது. நான் அதற்காக கடுமையாகப் பயிற்சி செய்துவருகிறேன். அதற்கு நடுவில் கிட்டத்தட்ட 15 தொடர்கள் உள்ளன. அதில் சிறப்பாகச் செயல்பட்டு, முதலில் ஒலிம்பிக்கிற்குத் தேர்வாவதே இப்போதைய முதல் நோக்கம்...

Kidambi Srikanth
Kidambi Srikanth

2017-ல், நான்கு சூப்பர் சீரிஸ் பட்டத்தை வென்று ஒரே ஆண்டில் பேட்மின்டன் உலகத் தரவரிசையில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறி, பாட்மின்டனில் தனக்கென தனி முத்திரையைப் பதித்தவர், கிடம்பி ஶ்ரீகாந்த். தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு, கடந்த ஏப்ரல் மாதம் உலகத் தரவரிசையில் முதலாம் இடத்துக்கு முன்னேறியது மட்டுமல்லாமல், 2018 காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார்.

முதல் வரிசை வீரர்களுடன் தோல்வியுற்றிருந்தாலும் அவர்களுடன் நான் ஆடிய விதம் எனக்கு நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.
கிடம்பி ஶ்ரீகாந்த்

ஶ்ரீகாந்த், கோபிசந்த் அகாடமியில் பயிற்சிபெற்றவர். 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் பாட்மின்டனில் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுபவர்களில் இவரும் ஒருவர். எப்போதும் காயங்களால் மட்டுமே தரவரிசையில் பின்னுக்குப் போனவர். கடந்த ஆண்டு, மோசமான ஃபார்ம் காரணமாக, தரவரிசையில் 9-வது இடத்திற்குத் தள்ளப்பட்டார். டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு இன்னும் ஓராண்டே இருப்பதால், அவரின் சமீபத்திய ஃபார்ம், பதக்கக் கனவை கவலைக்குள்ளாகியுள்ளது.

இந்தியா ஸ்போர்ட்ஸ் ஃபுளோரிங்ஸ் ஆதரவிலான வி.எஸ்.ஆர் ஸ்போர்ட்ஸ் அகாடமியைத் திறந்துவைக்க சென்னை வந்த ஶ்ரீகாந்த், டோக்கியோ ஒலிம்பிக்கிற்குத் தயாராவதுகுறித்து நம்மிடம் பேசினார்.

``கடந்த சில போட்டிகளில் தோல்வியுற்றதைப் பற்றி வருந்தவில்லை. டோக்கியோ ஒலிம்பிக்கிற்காகக் கடுமையாக பயிற்சி செய்துவருகிறேன். அதற்கு நடுவில் கிட்டத்தட்ட 15 தொடர்கள் உள்ளன. அதில் சிறப்பாகச் செயல்பட்டு, முதலில் ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாவதே என் நோக்கம். முதல் வரிசை வீரர்களுடன் தோல்வியுற்றிருந்தாலும், அவர்களுடன் நான் ஆடிய விதம் எனக்கு நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. முக்கியமான தருணங்களில் புள்ளிகளை எடுப்பதில்தான் வெற்றி உள்ளது” என்றார்.

Kidambi Srikanth
Kidambi Srikanth

ஶ்ரீகாந்த், கடந்த ஆண்டு பல கஷ்டமான போட்டிகளைச் சந்தித்தார். தற்போது, தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் உள்ள கென்டோ மொமடாவிடம் இந்த வருடம் நடந்த சிங்கப்பூர் ஓப்பன், இங்கிலாந்து ஓப்பன் தொடர்களில் தோல்வியுற்றார். அதுபோக, கடந்த 9 போட்டிகளிலும் ஶ்ரீகாந்த் அவரிடம் தோல்வியடைந்தார்.

மொமடா, இடதுகை பாட்மின்டன் வீரர். இடதுகை பாட்மின்டன் வீரர்களைச் சமாளிப்பதில் ஏன் கஷ்டம் என்ற கேள்விக்கு, ``பொதுவாகவே இந்தியாவில் இடதுகை ஆட்டக்காரர்கள் மிகக்குறைவு. அவர்களிடம் ஆடி, பழக்கப்படாததால் கொஞ்சம் சவாலாக இருக்கும். அதனால்தான் பாட்மின்டனில் எல்லா காலகட்டத்திலும் இடதுகை ஆட்டக்காரர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். அவர்களை எதிர்கொள்ளவும் நான் சிறப்பாக பயிற்சி மேற்கொள்கிறேன்” என்றார்.