Published:Updated:

கோப்பைகளை ஏலம் விடும் நிலைக்குத் தள்ளப்பட்ட போரிஸ் பெக்கர்... ஜாம்பவனுக்கு நேர்ந்த பரிதாபம்!

எம்.குமரேசன்

போரிஸ் பெக்கரின் 82 வகையான பொருள்கள் ஏலம் விடப்பட்டன.

போரிஸ் பெக்கர்
போரிஸ் பெக்கர்

கடந்த 1985-ம் ஆண்டு ஜூலை 7-ம் தேதி டீன் ஏஜ் வயதான போரிஸ் பெக்கர் விம்பிள்டன் இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றிருந்தார். இவரை, எதிர்த்து நின்றவர் கெவின் கரென். தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த கெவின் கரெனும் முதன்முறையாக விம்பிள்டன் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தார். இளங்கன்று போரிஸ் பெக்கர், கெவின் கரென் இருவரில் யார் வென்றாலும் முதன்முறையாக விம்பிள்டன் கோப்பையைக் கையில் ஏந்துவார்கள். போட்டி மிகப் பலமாக இருந்தது. 4 செட் ஆட்டத்தின் முடிவில், போரிஸ் பெக்கர் வென்று விம்பிள்டன் கோப்பைக்கு முத்தமிட்டபோது அவருக்கு வயது 17 மட்டுமே. விம்பிள்டன் வரலாற்றில் இன்றுவரை முறியடிக்கப்படாத சாதனை இது.

போரிஸ் பெக்கர் பொருள்கள் ஏலம்
போரிஸ் பெக்கர் பொருள்கள் ஏலம்

ஆனால் , எந்தக் கோப்பையை கனவுக் கோப்பையாக நினைத்தாரோ, அதே கோப்பையை பிற்காலத்தில் ஏலம் விடுவோம் என்று பெக்கர் கனவிலும் அப்போது நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். அடுத்து 1986, 89-ம் ஆண்டுகளிலும் போரிஸ் பெக்கர் விம்பிள்டன் கோப்பையை வென்றெடுத்தார். பல ஆண்டு காலமாக டென்னிஸ் களத்தில் போராடி வென்ற கோப்பைகளை விற்று கடனை அடைக்கும் நிலைக்கு போரிஸ் பெக்கர் தள்ளப்பட்டதுதான் சோகம்.

2017-ம் ஆண்டு பிரிட்டனைச் சேர்ந்த Arbuthnot Latham & Co என்ற தனியார் வங்கியிடம் வாங்கிய கடன் தொகையைக் கட்ட முடியாமல் போனதால், போரிஸ் பெக்கர் தன்னை திவால் ஆனதாக அறிவித்தார். தொடர்ந்து வென்ற கோப்பைகளை ஏலம் விட்டு வரும் தொகையைக் கொண்டு கடனை அடைக்க முடிவு செய்தார் போரிஸ் பெக்கர். Wyles Hardy and Co போரிஸ் பெக்கரின் பொருள்களை ஏலம் விட்டது. ஆன்லைனில் விடப்பட்ட ஏலத்தில் இதுவரை 852,652 அமெரிக்க டாலர்கள் வசூலாகியுள்ளது. மொத்தம் 82 பொருள்கள் ஏலம் விடப்பட்டன. போரிஸ் பெக்கர் 1989-ம் ஆண்டு வென்ற அமெரிக்க ஓபன் டிராபி அதிகபட்சமாக 150,250 அமெரிக்க டாலருக்கு ஏலம் போனது.

கோப்பைகளை ஏலம் விடும் நிலைக்குத் தள்ளப்பட்ட போரிஸ் பெக்கர்... ஜாம்பவனுக்கு நேர்ந்த பரிதாபம்!

டேவிஸ் கோப்பை 52,100 அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் எடுக்கப்பட்டது. International tennis hall of fame மோதிரம், கைக்கடிகாரங்கள், விளையாட்டு உடைகள், காலணிகளும் ஏலம் விடப்பட்டன. தன் டென்னிஸ் வாழ்க்கையில் 6 கிராண்ட்ஸ்லாம் கோப்பைகளை போரிஸ் பெக்கர் வென்றுள்ளார். விம்பிள்டனை மட்டும் மூன்று முறை கைப்பற்றியுள்ளார். 1992-ம் ஆண்டு பார்சிலோனா ஒலிம்பிக்கில் இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கமும் வென்றுள்ளார்.