Published:Updated:

விம்பிள்டன் டென்னிஸ்:பூபதி-சானியா ஜோடி தோல்வி!

Vikatan Correspondent
விம்பிள்டன் டென்னிஸ்:பூபதி-சானியா ஜோடி தோல்வி!
விம்பிள்டன் டென்னிஸ்:பூபதி-சானியா ஜோடி தோல்வி!

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் கலப்பு இரட்டையரில் இந்தியாவின் சானியா மிர்சா-பூபதி இணை தோற்று வெளியேறியது.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 4 முறை சாம்பியனான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் நூலிழையில் தோல்வியில் இருந்து தப்பினார்.

அவர் தன்னை எதிர்த்த சீனாவின் ஜி செங்கை 2 மணி 28 நிமிடங்கள் போராடி 6-7 (5-7), 6-2, 9-7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார். 23 'ஏஸ்' சர்வீஸ்களை வீசியது செரீனாவின் வெற்றிக்கு பேருதவியாக இருந்தது.

4-வது சுற்றில் செரீனா வில்லியம்ஸ், 'வைல்டு கார்டு' வீராங்கனை கஜகஸ்தானின் ஷிவ்டோவாவை சந்திக்கிறார்.ஷிவ்டோவா தனது 3-வது சுற்றில் பிரெஞ்ச் ஓபனில் 2-வது இடம் பிடித்தவரான இத்தாலியின் சாரா எர்ரானிக்கு 6-0, 6-4 என்ற நேர் செட்டில் அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்.

விம்பிள்டன் டென்னிஸ்:பூபதி-சானியா ஜோடி தோல்வி!

நடப்பு சாம்பியன் செக்குடியரசின் கிவிடோவா 6-1, 6-0 என்ற நேர் செட்டில் லெப்சென்கோவையும் (அமெரிக்கா), 2-ம் நிலை வீராங்கனை பெலாரசின் விக்டோரியா அஸரென்கா 6-3, 6-0 என்ற நேர் செட்டில் சுலோவக்கியாவின் சிபலோவாயும் துவம்சம் செய்தனர்.அர்ஜென்டினா வீரர் ஜுவான் மார்ட்டின் டெல் போட்ரோ,முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை செர்பியாவின் இவானோவிச் ஆகியோரும் 3-வது சுற்றில் வெற்றி கண்டனர்.

சானியா ஜோடி தோல்வி

ஒலிம்பிக்கில் சேர்ந்து விளையாட விரும்பிய தங்களை பிரித்து விட்டதாக குற்றம் சாட்டிய இந்தியாவின் மகேஷ் பூபதி-சானியா மிர்சா இணை விம்பிள்டன் போட்டியில் சாதித்து இந்திய டென்னிஸ் சங்கத்திற்கு நெருக்கடி கொடுக்க திட்டமிட்டது.ஆனால் விம்பிள்டன் கலப்பு இரட்டையரில் அவர்களது பயணம் 2-வது சுற்றுடன் முடிவுக்கு வந்தது.

இதில் நேற்று அவர்கள் ஆஸ்திரேலியாவின் பால் ஹான்லே ரஷியாவின் குட்ரியவ்ட்செவா ஜோடியை எதிர்கொண்டனர்.50 நிமிடங்கள் மட்டுமே நடந்த இந்த ஆட்டத்தில் 3-6, 1-6 என்ற நேர் செட்டில் பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான பூபதி-சானியா இணை வீழ்ந்தது.ஒலிம்பிக் கலப்பு இரட்டையரில் சானியா, லியாண்டர் பெயசுடன் இணைந்து விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்கள் இரட்டையர் 2-வது சுற்றில் இந்தியாவின் லியாண்டர் பெயஸ், செக்குடியரசின் ராடக் ஸ்டெபனக் கூட்டணி 6-2, 6-4, 7-6 (5) என்ற நேர் செட்டில் இஸ்ரேலின் ஜோனதன் எர்லிச்-ஆன்டி ராம் ஜோடியை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றது.