Published:Updated:

DOG-ஐ திருப்பிப்போட்டால் GOD; இந்த வடுமுகத்தானைத் திருப்பிப்போட்டது அன்பு! #17YearsOfAnbeSivam 

அன்பையே சிவமாக வழிபட்டு, அதைத் தானும் உணர்ந்து, நமக்கு உணர்த்திய `அன்பே சிவம்' எனும் கலைப்படைப்பு வெளியாகி 17 ஆண்டுகள் நிறைவுபெற்றதையடுத்து அதைப்பற்றியதோர் சிறப்புக் கட்டுரை.

பொதுவாக ஒரு படத்தின் அடிப்படையே அதனுடைய ஜானர்தான். அப்படி எளிதான விஷயத்தைக்கூட சிக்கலைக்கொண்டு கட்டமைப்பவரே `நம்மவர்' கமல்ஹாசன். அன்பு ஒன்றுதான் அநாதையென்பது மாடர்ன் கோட்பாடு. ஆனால், அன்பையே சிவமாக வழிபட்டு, அதைத் தானும் உணர்ந்து, நமக்கும் உணர்த்திய `அன்பே சிவம்' எனும் கலைப்படைப்பு வெளியாகி 17 ஆண்டுகள் நிறைவுபெற்றதையடுத்து அதைப் பற்றியதோர் சிறப்புக் கட்டுரை.

கமல் - மாதவன்
கமல் - மாதவன்
அன்பே சிவன்

தன் பெயரில் இருக்கும் சிவம் பிடிக்காத நல்லா (எ) நல்லசிவம். அன்பு பிடிக்காத ஏ.அர்ஸ் (எ) அன்பரசு. இந்த இருவரது பயணத்திலிருந்து தொடங்குகிறது `அன்பே சிவம்'. `ஆத்திகம் பேசும் அடியார்க்கெல்லாம் சிவமே அன்பாகும்... நாத்திகம் பேசும் நல்லவருக்கா அன்பே சிவமாகும்' என்ற ஒற்றை வரி உணர்த்துகிறது படத்தின் கதையை. விபத்துக்குள்ளாகி ஒரு கால் குட்டையாகி, கை விளங்காமல் போய்விடுகிறது கமலுக்கு. இந்த இயலாமையைக் கடைசிவரைத் திரையில் தக்க வைப்பதற்குக் கமலால் மட்டுமே முடியும்.

கமல், கிரேஸி மோகனின் நெருங்கிய நண்பர் என்பதாலோ என்னவோ தெரியவில்லை, இந்த வார்த்தை விளையாட்டானது, கமல் நடிக்கும் எல்லாப் படங்களிலும் தானாகவே ஒட்டிக்கொள்கிறது.

அதேபோல் இந்தப் படத்திலும் மதனின் வசனங்கள்தான் ஹைலைட்! `கல்யாணத்தை வெச்சிட்டு எந்த மடையனாவது லொக்கேஷன் பார்க்க புபனேஷ்வர் வருவானா' என்று ஓயாமல் புலம்பிக்கொண்டிருக்கும் மாதவன், தன்னுடைய வருங்கால மனைவியான`சரஸ்'ஸிடம் பேசத் தவிக்க மொபைலையே உலகமெனத் தட்டித்தட்டிப் பார்த்துக்கொண்டிருப்பார். அப்போது கமல், `கற்றது கை மண் அளவு, கல்லாதது செல்லளவு' என்று கேலியாகச் சொல்வார். படம் நெடுகவே இப்படியான வார்த்தை விளையாட்டுதான். `வல்லவனுக்குப் பில்லோவும் ஆயுதம்'தானே!

``ரஜினி, கமல் சரித்திரத்தில் என் பெயர் தவிர்க்க முடியாதது, ஏனெனில்..."- பின்புலம் பகிரும் ஸ்ரீப்ரியா

கடந்த காலத்து நினைவுகளை நிகழ்காலத்தில் சுமக்கும் ஒரு காம்ரேட்டின் கதையாகவும் அன்பே சிவத்தைச் சொல்லலாம். படத்தில் விரிந்திருக்கும் ஒவ்வொரு காட்சியும், அடுத்தடுத்த காட்சிகளில் சொல்லப்போகும் முன்விளக்கமாகவே அமைந்திருக்கும். கமல், மாதவனிடம் அவரது பிளட் குரூப் என்னவெனக் கேட்பார். மாதவன், தன்னுடைய பிளட் குரூப்பை AB நெகட்டிவ் எனச் சொல்வார். அதேபோல் கமல் தன்னுடைய குரூப்பை O பாசிட்டிவ் எனச் சொல்வார். எளிதாகக் கிடைக்கப்பெறாத பிளட் குரூப்புக்குச் சொந்தக்காரர் அன்பு, எல்லோருக்கும் பொதுவாக இருக்கும் பிளட் குரூப் கமலுடையது. இதிலேதான் இவர்களுடைய கதாபாத்திரமும் வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த உணர்த்துதலும், ஹைப்பர் லிங்க் திரைக்கதையும் வேண்டுமென்றே புகுத்தப்பட்டதுபோல் இல்லாமல் இயல்பாக அமைந்ததே படத்தின் தனிச்சிறப்பு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

படத்தில் நடித்திருக்கும் கமல், மாதவன், கிரண், நாசர், சந்தான பாரதி, உமா ரியாஸ் எனக் கதையை நகர்த்திச் செல்லும் ஒவ்வொருவருக்கும் இரு சாயல்கள் இருப்பது அவரவரது கதாபாத்திர வடிவமைப்பில் ஒளிந்திருக்கும். கமலுக்கு கம்யூனிஸ்ட் எனும் பொதுநலவாதியாக ஒரு பக்கம், பின் அன்பையே சிவமாகக்கொண்டிருக்கும் நாத்திகராக ஒரு பக்கம். படத்தில் கமல் நாத்திகர் என்று சொல்லாமல் சொல்லும் காட்சிகள் நிறைய உள்ளன. மாதவனுக்கு அன்பை விரும்பாத சுயநலவாதியாக ஒரு பக்கம், பிறகு உயிர் மதிப்பை உணர்ந்த பின்னர் கரிசனப்படும் இன்னொரு முகம்.

கமல் - மாதவன்
கமல் - மாதவன்
அன்பே சிவம்

கிரண், கமல் விரும்பும் பாலாவாக ஒரு முகம், பின் மாதவன் மணக்கவிருக்கும் சரஸ்வதியாக இன்னொரு முகம். நாசருக்கு உழைப்பார்களின் வியர்வைக்கு 910 ரூபாய்யை ஊதியமாக நிர்ணயிக்கும் சர்வாதிகார தொழிலதிபர் எனும் ஒரு முகம், `தென்னாடுடைய சிவனே போற்றி' என ஊர் மத்தியில் வேஷம் போட்டிருக்கும் ஆத்திகனாக இன்னொரு முகம். கடைசியில் அன்பை உணரும் சந்தான பாரதியும் கமலைக் கொல்லாமல் கடவுளாகிறார். இப்படி ஒவ்வொருவருக்குள்ளேயும் இருக்கும் வெவ்வேறு முகங்களை ஆழமாகக் கடத்தியிருப்பார்கள்.

கடைசி வரை நம்முடன் வருபவர்கள் மட்டுமே உறவுக்காரர்கள் கிடையாது. நம்முடைய பயணத்தின்போது நம் மீது குறைந்தபட்ச அன்பு செலுத்தும் ஒவ்வொருவரும் நம் உறவுதான். அதற்குப் பெயரும் அன்புதான். அதனால்தான் சனியன் (எ) சங்குவைக்கூட தான் செல்லும் இடத்துக்கெல்லாம் அழைத்துச் செல்கிறார். இன்னும் சொல்லப்போனால் சங்குதான் கமல், கமல்தான் சங்கு. இருவரது காலும் அடிபடுவது அந்த விபத்தின்போதுதான். கம்யூனிஸத்தை வீதி நாடகங்களில் அரங்கேற்றும் அந்தக் கோபக்கார கவிஞன், அவனுக்கு நேர்ந்த விபத்துக்குப் பிறகு சாந்தமான அன்புக்காரனாகிறான். அன்பைப் பகிர்கிறான், பரப்புகிறான். இதனால்தான் யார் அழைப்பையும் பொருட்படுத்தாத சங்கு, கமல் கூப்பிட்ட மறுகணமே காலடியில் வந்து கிடக்கிறது. இதுவே சங்குவே மகனாகவும் தத்தெடுக்கச் செய்திருக்கும்.

அன்பே சிவம்
அன்பே சிவம்

படத்தில் நிகழும் இரு விபத்துதான் இருவரது வாழ்க்கையையும் புரட்டிப்போடுகிறது. அந்தப் பேருந்து விபத்துக்குப் பிறகுதான் கமல் தன்னுடைய வாழ்க்கையின் ஒரு பக்கத்தோடு சேர்த்து, தன்னுடைய முகத்தின் அழகையும் இழக்கிறார். ஆனால், அவருடைய வாழ்க்கை அழகாவதே அதற்குப் பிறகுதான். அன்பை மட்டுமே சுமந்துகொண்டு தன் பயணத்தைத் தொடங்குகிறார். மறுபக்கம், மாதவன் சந்திக்கும் டிரெயின் விபத்துதான் அவரது வாழ்க்கையைப் புரட்டிப்போடுகிறது. அதிலும், அங்கு அடிபட்டு, பின்னர் ஆம்புலன்சில் இறக்கும் ஒரு பையனின் நிலை கண்டு மனமுருகிவிடுகிறார். அன்பையும் உலகையும் உணர்கிறார்.

இறுதியில் உடல் ஊனத்துக்காக வாக்கிங் ஸ்டிக்கை கையில் ஏந்தியிருக்கும் நல்லா, அதையே தன் மனைவியாக்கிக்கொண்டு `மனசு ஊனமாகிடக்கூடாதுல்ல... அதுக்காகத்தான்' என்று அதற்குக் கோட்பாடும் வைத்துக்கொள்கிறார். அரிவாளைக் கீழே போட்டு திருந்தும் ஏராளமான வில்லன்களைத் தமிழ் சினிமா காட்டியிருக்கிறது. ஆனால், அன்பை உணர்ந்து கீழே விழும் சந்தான பாரதியின் அரிவாள் ஏதோ ஒரு வகையில் தனித்துத் தெரிகிறது.

``வஞ்சப் புகழ்ச்சிதான் `ஹேராம்' படமும்!" - கமல் டீகோடிங் @ விகடன் பிரஸ்மீட்!

கூண்டுக்குள் அடைபடாத இந்த வடுமுகத்தான், எல்லோரையும் அரவணைக்கும் அன்புக்காரன். இவரிடம் கற்றுக்கொள்ள ஏராளம் உள்ளது. தென்னாடுடைய அன்பே போற்றி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு