Published:Updated:

`இதே காரணத்தோடு உயர் நீதிமன்றத்தை அணுக முடியாது!' - `பிகில்' வழக்கு குறித்து வழக்கறிஞர்

`பிகில்' படத்தின் கதை தன்னுடையது என்று குற்றம்சாட்டியிருந்த உதவி இயக்குநர் செல்வா தொடுத்த வழக்கு தொடர்பாக வழக்கறிஞர் சாரதா விவேக் பதில் கூறியுள்ளார்.

சாரதா விவேக்
சாரதா விவேக்

`தெறி', `மெர்சல்' படங்களைத் தொடர்ந்து இயக்குநர் அட்லி விஜய்யை வைத்து இயக்கிவரும் படம், `பிகில்'. இந்தப் படத்தின் கதை தன்னுடையது என உதவி இயக்குநர் செல்வா என்பவர் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். விசாரணைக்கு வந்த இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது நீதிமன்றம். இந்த வழக்கு தொடர்பாக பிகில் படக்குழு சார்பில் வழக்கறிஞர்கள் பி.வி. பாலசுப்பிரமணியம், ஸ்ரீநாத் ஸ்ரீதேவன் மற்றும் சாரதா விவேக் ஆகியோர் வாதாடினர்.

இந்த வழக்கு தொடர்பாக பாடலாசிரியர் விவேக்கின் மனைவியான வழக்கறிஞர் சாரதா, `பிகில்' படக்குழுக்குவுக்கு சாதகமாக நீதிமன்றத்தில் வாதாடினார். இதுகுறித்து அவரிடம் பேசினோம்.

`இதே காரணத்தோடு உயர் நீதிமன்றத்தை அணுக முடியாது!' - `பிகில்' வழக்கு குறித்து வழக்கறிஞர்

``என்னுடைய கணவர் பாடலாசிரியர் விவேக், அட்லியின் `மெர்சல்' படத்தின் எல்லாப் பாடல்களும் எழுதியிருந்தார். இப்போ, `பிகில்' படத்துக்கும் விவேக்தான் பாடல்களுக்கான வரிகள் எழுதியுள்ளார். இவர் மூலமாகதான் இயக்குநர் அட்லி எனக்குப் பழக்கம்.

இந்தப் படத்தின் ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கும்போது கே.பி.செல்வா என்ற தனிநபர், இந்தப் படத்தின் கதை எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட தனது கதையின் பதிப்புரிமையை மீறுவதாக சொல்லி வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடர்ந்து நடக்கக் கூடாது என்றும் சொல்லியிருந்தார். இதுதொடர்பாக சிவில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, `பிகில்' படக்குழு சார்பாக நான் வாதாடினேன். செல்வா தொடுத்த இவ்வழக்கில் முகாந்திரம் இல்லாததால் தள்ளுபடி செய்யச் சொல்லி வாதாடினோம்.

இந்த நிலையில், செல்வா தொடுத்த இந்த வழக்கை திரும்பப் பெறுவதாக கூறினார். மேலும், புதிதாக வழக்கை உயர்நீதிமன்றத்தில் தொடுப்பதாகவும் விண்ணப்பம் செய்திருந்தார். வழக்கைத் திரும்பப் பெற அனுமதி தந்த நீதிமன்றம், இதே காரணத்தின் பெயரால் புதிய வழக்கைத் தொடுக்க உரிமை அளிக்கவில்லை. இறுதியில் செல்வா வாபஸ் வாங்கியதையடுத்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. செல்வா மேல்முறையீட்டுக்காக உயர்நீதிமன்றம் போனாலும் இந்த வழக்கை சட்டபடிச் சந்திக்க `பிகில்' படக்குழு தயாராக உள்ளது. சிவில் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு படக்குழுவுக்கு அளவற்ற சந்தோஷத்தைக் கொடுத்திருக்கிறது'' என்றார் சராதா விவேக்.