Published:Updated:

``அன்புள்ள விஜய்...உனக்கு ஒரு நீண்ட பிகில்!'' - விஜய்க்கு அவர் அம்மா எழுதிய கடிதம் #VikatanExclusive

விஜய்க்கு அவரது அம்மா ஷோபா சந்திரசேகர் எழுதிய கடிதம்!

Shoba - S. A. Chandrasekhar
Shoba - S. A. Chandrasekhar

சுவரில் கிறுக்குவது தொடங்கி தன் குழந்தைகள் செய்யும் எல்லாச் செயல்களுக்கும் முதல் ரசிகை அவரவர் அம்மாதான். எந்தளவுக்கு உயரத்திற்குப் போனாலும் உயர் பதவியில் இருந்தாலும் அவரவர் அம்மாக்களுக்கு என்றும் அவர்கள் குழந்தைகள்தான்.

`` `பகவதி' படம் பண்றதுல விஜய்க்கு உடன்பாடே இல்லை..!'' - எஸ்.ஏ.சந்திரசேகர்

தன் பிள்ளையை இந்தச் சமூகம் கொண்டாட ஆரம்பித்தால் முதலில் சந்தோசப்பட்டு பெருமைப்படுவது அம்மாதான். ஆனால் வீட்டில் அம்மாவின் பாசத்திற்கு முன்னால் அனைத்துப் பிம்பமும் உடைந்துவிடும். இதை எல்லாம் எதற்குச் சொல்கிறேன் என்று நினைக்கிறீர்களா?

வரும் வியாழக்கிழமை வெளியாகயிருக்கும் ஆனந்த விகடன் இதழில், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் - ஷோபா தம்பதியர் தங்களின் காதல் கதை, 46 ஆண்டுக்கால திருமண வாழ்க்கையில் அவர்கள் சந்தித்த சவால்கள், ஏற்ற இறக்கங்கள், வெற்றி - தோல்விகள் எனப் பலவற்றை நம்மிடம் பகிர்ந்துகொண்டனர். அந்த உரையாடலில் விஜய்யின் குழந்தைப் பருவம், விஜய்யின் வளர்ச்சி, விஜய்யின் திருமணம், விஜய் அமைதிக்கு என்ன காரணம், தங்களது மருமகள், பேரக்குழந்தைகள் பற்றி அவர்கள் கூறும் சுவாரஸ்யமான விஷயங்களும் இருக்கின்றன.

S.A.Chandrasekhar - Shoba
S.A.Chandrasekhar - Shoba

உதாரணத்திற்கு, 'உங்கள் மனைவி சமையலில் உங்களுக்கு எது பிடிக்கும்' என எஸ்.ஏ.சியிடம் கேட்டால், 'இதுக்கு நான் பதில் சொல்றேன்' என ஆரம்பித்த ஷோபா, "நான் பண்ற இட்லி அவருக்கு ரொம்ப பிடிக்கும். இப்போவும் இட்லி வெச்சு நிறைய சாம்பார் ஊத்தி சாப்பிடுவார். மும்பைக்கு ஷூட்டிங் போனாலும் வீட்டிலிருந்து கிளம்பும்போது இட்லியை எடுத்துக்கிட்டு போவார். யாராச்சும் இட்லியை ஃபிரிட்ஜ்ல வெப்பாங்களா? இவர் ஃபிரிட்ஜ்ல வெச்சு அப்புறம் சூடு பண்ணி சாப்பிடுவார். ஆனா, விஜய்க்கு தோசைதான் ஃபேவரைட். விஜய் தோசை சூப்பரா சுடுவார். என்னைக்காவது அவருக்கு தோணுச்சுனா, எங்களுக்கும் வீட்ல வேலை செய்றவங்களுக்கும் அவர் தோசை சுட்டுக் கொடுப்பார். அவர் தோசை ஸ்பெஷலிஸ்ட். சஞ்சய்யும் திவ்யாவும் வீட்டுக்கு வராங்கன்னா முன்னாடியே போன் பண்ணி, ‘பிரியாணி வேணும்’னு சொல்லிட்டுதான் வருவாங்க. நான் செய்ற பிரியாணி அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும்" என்றார். 'உங்க மருமகள் சமையல்ல பிடிச்சது என்ன?' எனக் கேட்க, '’எனக்கு சங்கீதா சமைக்கிற மட்டன் குழம்பு ரொம்ப பிடிக்கும்’' என்று எஸ்.ஏ.சியிடமிருந்து உடனடி பதில் வருகிறது. "அவங்க அசைவ சமையல் எல்லாமே சூப்பரா, காரசாரமா சமைப்பாங்க. இவர் எப்போ வீட்டுக்குப் போனாலும் அன்னைக்கு லன்ச் மட்டன்தான்" என்றார் ஷோபா. இது போன்று பல ஜாலியான கேள்விகளுக்கு அவர்கள் பதிலளித்துள்ளனர்.

அந்தப் பேட்டியின் முடிவில் விஜய்க்கு வாழ்த்துமடல் ஒன்றை தனது கைப்பட எழுதிக் கொடுத்துள்ளார், அவரது அம்மா ஷோபா சந்திரசேகர். அந்த வாழ்த்துமடலில் அவர் எழுதியவை.

`` ‘பிகில்’ல 100 நாள் விஜய் சார்க்கூட நடிச்சேன்; அடுத்து ‘பொன்னியின் செல்வன்'..!’’ - நடிகர் ஆத்மா

"ஈன்றெடுக்கும் சிசு ஒரு செவிலியரின் உள்ளங்கையில் தவழ்ந்து பின் தாயின் உள்ளம் நோக்கி வரும். அவளும் உச்சி முகர்வாள். ஆனால், நான் பெற்ற பிள்ளை இன்று கோடானுகோடி தாய்மார்கள், ரசிகர்கள் உள்ளங்களில் தவழ்ந்து கொண்டிருப்பதையும் அவர்களும் அதை தளபதியாய் கொண்டாடிக் கொண்டிருப்பதையும் காண்கையில் என் இமை ஓரம் சிறு ஈரம் கசிந்து வழிகிறது. அதை மீறி வேறென்ன நான் எழுத்தில் வடிக்க விஜய் உன்னைப் பற்றி.

நீ என் கரம் பற்றி நடந்ததை, பின் நடந்ததை எல்லாம் (ஏற்றம், இறக்கம், தோற்றல், போற்றல்) அசைப்போட்டு பார்க்கையில் என் எண்ணங்களின் உச்சிக் குளிர்ந்து என் அகம் எங்கும் வடிகிறதே அந்த நுண்ணிய உணர்வுகளை எந்த காகிதத்தில் வடிப்பது.

Mom Shoba's letter to her son Vijay
Mom Shoba's letter to her son Vijay

அமைதி என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரியாமல் ஆர்பரிக்கும் இளவயதில் கூட நீ அமைதியில் அவதாரமாய் இருக்கையில் இயங்குகையில் என் ஆழ் மன ஊற்று பெருகி ஆனந்தம் வடிகையில் அதை எந்த பேனாவுக்குள் மையாய் ஊற்றி எழுத முடியும்.

நீ உன் அழுகை நிறுத்தி, முதல்முதல் உன் பூவிதழ் விரித்து, புன்னகைத்தது முதல் இன்று உன் இதயத்தளவு ரசிகர்களின் பெருவெள்ளத்திற்கு இடையே இன்பத்தளிப்பில் நீ புரியும் புன்னகையை விவரிக்க... தேடி கிடைக்காமல் வார்த்தைகளை கடன் வாங்கும் (கோடி கோடியாய் பொருள் இருந்தும்) நிலையை ஒரு சிறப்பிதழுக்குள் என்னால் எப்படி எழுதி விட முடியும்?

Mom Shoba's letter to her son Vijay
Mom Shoba's letter to her son Vijay

சுருங்கக்கூறின் திரு.எம்.கே.தியாகராஜ பாகவதர், திரு.எம்.ஜி.ராமச்சந்திரன், திரு.ரஜினிகாந்த் வரிசையில் அடுத்த சூப்பர் ஸ்டாராக உன்னை கொண்டாட உலகமே காத்திருக்கையில், தாய் என்பதெல்லாம் மறந்து ரசிகர்களுடன் கூட்டத்தோடு கூட்டமாய் நானும் அடிக்கிறேன் ஒரு நீண்ட பிகில்..."

இப்படிக்கு

ஷோபா சந்திரசேகர்

தாய் / ரசிகை