Published:Updated:

108 கோடி ரூபாய் சம்பளம்... ரஜினி இன்னும் சூப்பர் ஸ்டாராக இருப்பதன் ரகசியம் என்ன?! #HBDRAJINI

ரஜினி எப்போதும் ஆச்சர்யம்தான். 30 ஆண்டுகளுக்கும் மேலாக உச்சநட்சத்திரமாக இருக்கும் ரஜினியைச் சுற்றித்தான் தமிழ் சினிமா இயங்கிக்கொண்டிருக்கிறது. இன்னமும் எப்படி ரஜினி சூப்பர் ஸ்டாராக இருக்கிறார்?

1. எளிமைதான் இன்னமும் ரஜினியை உச்சத்தில் வைத்திருக்கிறது என்பதுதான் அவர் நண்பர்களின் கருத்து. சென்னையில் இருந்தாலும் சரி, நியூயார்க்கில் இருந்தாலும் சரி ரஜினியின் லைஃப்ஸ்டைலில் எந்த மாற்றமும் இருக்காது. பெரிய ஹோட்டல், அதிக வசதிகள் கொண்ட ராயல் சூட் அறைகள் எல்லாம் ரஜினியின் விருப்பம் இல்லை. "ஒரேயொரு பால்கனி இருக்கமாதிரி ரூம் இருந்தா போதும்" என்பதுதான் ரஜினியின் கண்டிஷன்.

2. உணவிலும் எளிமைதான். மட்டன் மிகவும் பிடிக்கும். ஆனால், சமீபகாலமாக அசைவ உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வதில்லை.

3. யோகா, மூச்சுப்பயிற்சி, நடைப்பயிற்சிகள் இல்லாமல் அந்த நாளைத் தொடங்கமாட்டார். மூன்று வேளை உணவு என இல்லாமல் 2 அல்லது 3 மணி நேரத்துக்கு ஒருமுறை உணவுகள் எடுத்துக்கொள்வது ரஜினியின் வழக்கம். இரவு 7 மணிக்கு மேல் எதுவும் சாப்பிடுவதில்லை.

4. வயதில் பெரிய இயக்குநர், சிறிய இயக்குநர் என்றெல்லாம் இல்லாமல் இன்னமும் முதல் நாள் ஷூட்டிங்கின்போது இயக்குநரின் காலைத்தொட்டு வணங்கிவிட்டுத்தான் ஷூட்டிங்கைத் தொடங்குவாராம் ரஜினி.

ரஜினி
ரஜினி

5. கதையைக்கேட்டு படத்தில் நடிக்க ஓகே சொல்லி, அட்வான்ஸ் வாங்கியப்பிறகு கதையில் மாற்றங்கள் சொல்வது, வசனங்களை மாற்றச்சொல்வது என எதிலும் தலையிடும் பழக்கம் ரஜினிக்கு இல்லை.

6. ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டப்பிறகு அதில் இருந்து எக்காரணம் கொண்டும் பின்வாங்கமாட்டார். எவ்வளவு பெரிய கருத்துவேறுபாடுகள் வந்தாலும் படத்தை முடித்துக்கொடுக்காமல் விடமாட்டார்.

7. இயக்குநருக்கு ஷாட் திருப்தியாகும் வரை நடித்துக்கொடுப்பார் ரஜினி. "டைரக்டர் சார், உங்களுக்கு டேக் ஓகேவா, உங்களுக்கு திருப்தியா" எனக் கட் சொன்னப்பிறகும் இயக்குநரிடம் இருந்து சம்மதம் வாங்கியப்பிறகுதான் ஷாட்டில் இருந்து வெளியேறுவார்.

8. ஷூட்டிங் ஸ்பாட்களில் பெரும்பாலும் கேரவேன்களில் உட்காருவது ரஜினிக்குப் பிடிக்காது. வெளியே உட்கார்ந்து ஷூட்டிங்கில் இருக்கும் நண்பர்களுடன் பேசுவதை விரும்புவார்.

9. ஷூட்டிங் ஸ்பாட்டில் தனியாக உட்கார்ந்து சாப்பிடமாட்டார். நண்பர்களுடன் சினிமா, ஆன்மிகம் என எதாவது ஒரு டாபிக் பேசிக்கொண்டே சாப்பிடுவதுதான் ரஜினியின் வழக்கம். இன்று ரஜினி சாருடன் சாப்பிடுவது யார் என்கிற போட்டாபோட்டி ஷூட்டிங் ஸ்பாட்களில் தினமும் நடக்குமாம்.

10. அவ்வளவு சீக்கிரத்தில் தன்னை சந்திக்க யாருக்கும் நேரம் கொடுக்கமாட்டார். அப்படி நேரம் கொடுத்துவிட்டால் அவர்களோடு மனம் திறந்து பேசாமல் இருக்கமாட்டார். தன்னுடைய அரசியல் கருத்துகளை அவர்களிடம் சொல்லி, அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கூர்ந்து கவனிப்பது ரஜினியின் வழக்கம்.

ரஜினி - கருணாநிதி
ரஜினி - கருணாநிதி

11. வீட்டுக்குத் தன்னை சந்திக்க வருபவர்களுக்கு தன் கையால்தான் டீ, காபி கொடுப்பார். பணியாளர்களைப் பயன்படுத்தமாட்டார். வந்தவர்களை அவர்களின் கார் வரை சென்று வழியனுப்புவது ரஜினியின் பாலிசி. இதைத்தான் விஜய், அஜித் என எல்லா உச்ச நடிகர்களும் பின்பற்றுகிறார்கள்.

12. ஷூட்டிங் ஸ்பாட்களில் தன்னை சந்தித்து போட்டோ எடுத்துக்கொள்ள வரும் ரசிகர்களுக்கு, சாமான்ய மனிதர்களுக்கு நேரம் ஒதுக்குவார் ரஜினி. ஆனால், அதிகாரபலம், பணபலத்தைக்காட்டி சிலர் நேரம் ஒதுக்கக்கேட்டால் எக்காரணம் கொண்டும் அதற்கு அனுமதிக்கமாட்டார்.

13. எம்ஜிஆர், கலைஞர் என இருவர் மீதும் மிகப்பெரிய மரியாதை ரஜினிக்கு உண்டு. எம்ஜிஆருக்கும், ரஜினிக்கும் இடையே ராமாபுரம் தோட்டத்தில் நடந்த சம்பவம் பற்றி வெளியே பல்வேறு கிசுகிசுக்கள் உலவினாலும் ரஜினி, தன்னை மிக மரியாதையாக எம்ஜிஆர் பேசியனுப்பினார் என்றுதான் அந்த சம்பவம் குறித்து நண்பர்களிடம் பகிர்ந்திருக்கிறார். "பணம், அதிகாரம், பெண்கள் என எதுவுமே வாழ்க்கையில் நிரந்தரம் இல்லை" என்று ரஜினியிடம் சொன்னாராம் எம்ஜிஆர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

14. திருமணமானப் புதிதில் ரஜினிக்கு மனைவி லதாவின் வீட்டினருடன் பழகுவதில் சில சங்கடங்கள் இருந்திருக்கின்றன. அதை சரிசெய்ய ரஜினி எடுத்தவழி சம்ஸ்கிருத மந்திரங்கள் கற்றுக்கொள்வது. ஒருநாள் வீட்டில் நடந்த பூஜையின்போது சம்ஸ்கிருதத்தில் மந்திரங்கள் சொல்லி ரஜினி அசத்த, வியந்துபோய் பார்த்திருக்கிறது லதாவின் குடும்பம்.

15. மேடைகளில் மட்டும் அல்ல தன்னை சந்திக்கும் இளம்தலைமுறையினரிடமும் குட்டிக்கதைகள் சொல்வது ரஜினியின் வழக்கம். ஒரு குழந்தைப்போன்ற குதூகலம் அவரிடம் இருக்கும்.

16. யாரையும் உதாசீனப்படுத்தும் பழக்கம் ரஜினிக்கு இல்லை. வயதில் சிறியவர், பெரியவர் என யாராக இருந்தாலும் 'சார்' என்றுதான் அழைப்பார்.

17. வீட்டில் பல கார்கள் இருந்தாலும் ரஜினி இப்போது பயன்படுத்துவது முழுக்க முழுக்க இனோவா கார்தான். எந்த கார் வாங்கினாலும் அதை விற்றுவிட்டு புது கார்கள் வாங்கும்பழக்கும் ரஜினியிடம் இல்லை. பிரிமியர் பத்மினி முதல் ஹோண்டா சிவிக் வரை பழைய கார்கள் அவரிடம் இன்னமும் அப்படியே இருக்கிறது.

ரஜினி
ரஜினி

18. இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் தன் சொத்துகளை தன் மகள்களுக்கும், பேரக்குழந்தைகளும் பிரித்து எழுதினார் ரஜினி. ஒரு பாதியை பேரன்கள் லிங்கா, யாத்ரா, செளந்தர்யாவின் மகன் வேத் என மூவருக்கும் எழுதியிருக்கிறார்.

19. ஷூட்டிங் இல்லையென்றால் பேரன்களோடு கிரிக்கெட் விளையாடுவதுதான் ரஜினியின் பொழுதுபோக்கு. கொரோனா லாக்டெளனில் போயஸ் கார்டன், கேளம்பாக்கம் வீடுகளில் பேரன்களுடன்தான் அதிக நேரம் செலவிட்டிருக்கிறார் ரஜினி.

20. மருமகன் தனுஷ்மீது மிகுந்த மரியாதை ரஜினிக்கு உண்டு. தனுஷ், ரஜினியை 'சார்' என்றுதான் எப்போதும் அழைப்பார். மகள்கள், மருமகன்கள் தொடர்பாக வீட்டில் எந்தப்பிரச்னை வந்தாலும், அதை உடனடியாக சரிசெய்துவிடவேண்டும் என்பதில் ரஜினி மிகவும் கவனமாக இருப்பாராம். "எதையுமே பெருசா வளரவிட்ரக்கூடாதும்மா!" என்பதுதான் ரஜினியின் அட்வைஸாக இருக்கும் என்கிறார்கள்.

21. கடந்த 10 ஆண்டுகளில் ரஜினியிடம் நிகழ்ந்திருக்கும் முக்கிய மாற்றங்களில் ஒன்று அவர் புகைப்பிடிப்பதில்லை. கிட்டத்தட்ட 50 ஆண்டுகாலப்பழக்கத்தை சிங்கப்பூர் அறுவைசிகிச்சைக்குப் பிறகு முழுவதுமாக நிறுத்திவிட்டார் ரஜினி. மது அருந்தும் பழக்கமும் அவருக்கு இப்போது கிட்டத்தட்ட இல்லை என்றே சொல்கிறார்கள்.

22. எந்த நிகழ்ச்சிக்குப்போய் வந்தாலும் அங்கே எப்படி பேசினேன், நான் வருவதற்கு முன்பு அங்கு என்ன நடந்தது, நான் போனப்பிறகு என்னப் பேசிக்கொண்டார்கள் என எல்லா விவரங்களையும் தனக்கு நெருக்கமானவர்களிடம் கேட்டுத்தெரிந்துகொள்வாராம் ரஜினி.

23. பிறந்தநாளுக்குத் தன் வீட்டுக்குப் பூங்கொத்து அனுப்பியவர்களுக்கு மாலையில் போன் செய்து நன்றி சொல்வது ரஜினியின் வழக்கம்.

24. ரஜினியின் செல்போனில் இருந்து பெரும்பாலும் யாருக்கும் போன் அழைப்புகள் போகாது. லேண்ட்லைனில் இருந்து அவரது உதவியாளர் முதலில் போனில் அழைத்து, அழைப்பை கனெக்ட் செய்தப்பிறகுதான் ரஜினி பேசுவார். உடனடியாக செல்போனில் பேசவேண்டும் என்றால் உதவியாளர் சுப்பையாவின் மொபைல் போனில் இருந்துதான், "நான் ரஜினி பேசுறேன் சார்" எனப் பேச ஆரம்பிப்பார்.

25. நண்பர்கள், தெரிந்தவர்கள், உறவினர்கள் வீடுகளில் துக்க சம்பவங்கள் நிகழ்ந்தால் சில நாட்கள் கழித்து அவர்களோடு ஆறுதலாக சில நிமிடங்கள் போனில் பேசுவது ரஜினியின் வழக்கம்.

26. ட்விட்டர், ஃபேஸ்புக் எல்லாம் ரஜினி பயன்படுத்துவதில்லை. சமூக வலைத்தளங்களில் தன்னைப்பற்றி வரும் செய்திகளை வாட்ஸ்அப்பில் அனுப்பச்சொல்லி படிப்பார். ஷூட்டிங்கில், மீட்டிங்கில் இல்லையென்றால் ரஜினிக்கு மெசேஜ் அனுப்பினால் அடுத்த 10 நொடிகளுக்குள் வாட்ஸ்அப்பில் பதில் வருமாம். அவர் அனுப்பும் பெரும்பாலான பதில்கள் 'Thanks Sir' என்பதாகத்தான் இருக்கும்.

27. 'பேட்ட' படத்துக்கு 108 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதுதான் ரஜினியின் உச்சம். 'பேட்ட' படத்தை தயாரித்த சன்பிக்சர்ஸுக்கே 'அண்ணாத்த' படத்தைக் கொடுத்திருக்கிறார் ரஜினி. ஆனால், 'பேட்ட' படத்துக்கான சம்பளத்தைவிட 'அண்ணாத்த' படத்துக்கான சம்பளம் சற்று குறைவு.

ரஜினி, குஷ்பு, மீனா
ரஜினி, குஷ்பு, மீனா

28. அரசியலுக்குள் நுழைவதால் 'அண்ணாத்த' படம்தான் ரஜினியின் கடைசிப்படமாக இருக்கும் என்று பரவும் யூகங்களில் உண்மையில்லை என்கிறார்கள். தேர்தல் முடிந்தப்பிறகும் ரஜினி தொடர்ந்து சினிமாவில் நடிப்பார் என்பதே அவருக்கு மிகவும் நெருக்கமான நண்பர்களின் கருத்தாக இருக்கிறது.

29. கமல்ஹாசன்தான் ரஜினியின் நண்பர், போட்டியாளர் என எல்லாமே! கமல்ஹாசன் என்ன செய்கிறார், என்னென்ன படங்களில் நடிக்கிறார், யாரையெல்லாம் சந்திக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்வதில் ரஜினி அவ்வளவு ஆர்வமாக இருப்பாராம்.

30. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ராஜ்கமலுக்கு படம் நடிப்பதில் ஆர்வமாக இருந்திருக்கிறார் ரஜினி. 'இந்தியன் -2' படத்தின் ஷூட்டிங்கில் இருந்த கமல்ஹாசனிடம் ரஜினியே போன் செய்து தன் விருப்பத்தை சொல்லியிருக்கிறார். ஆனால், கொரோனா மற்றும் தயாரிப்புத்தரப்பில் சில புதிய முதலீட்டாளர்கள் உள்ளே வந்ததுபோன்ற காரணங்களால் ரஜினி கொஞ்சம் தயங்க, கமல் அந்தத் தயக்கதைப் புரிந்துகொண்டார் என்கிறார்கள். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருந்தால் அதில் கமலும் ஒரு கேரக்டரில் நடித்திருப்பார். பல ஆண்டுகளுக்குப்பிறகு ரஜினியும், கமலும் சேர்ந்து நடிக்கும் படமாக அது இருந்திருக்கும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு