Published:Updated:

``இந்தக் கலைஞனின் எதிர்பார்ப்பு அந்தக் கைத்தட்டல்தான்!'' - `உத்தம வில்லன்' ஏன் எடுத்தார் கமல்ஹாசன்?!

அங்கீகாரம்... இந்த ஒற்றைச் சொல்தான் உலகத்தில் உள்ளோர், ஓரிடத்தில் தேங்கி நின்றுவிடாமல் செயல்பட்டுக்கொண்டே இருக்கச் செய்யும் உந்துசக்தி.

மரணத்தைவிடக் கொடுமையானது மறக்கப்படுவது
சுஜாதா
உத்தம வில்லன்
உத்தம வில்லன்
அங்கீகாரம்... இந்த ஒற்றைச் சொல்தான் உலகத்தில் உள்ளோர், ஓரிடத்தில் தேங்கி நின்றுவிடாமல் செயல்பட்டுக்கொண்டே இருக்கச் செய்யும் உந்துசக்தி.

மனிதர்களின் ஒவ்வொரு பருவத்திலும் அவர்கள் தேடுவது வேறாக இருக்கும். படிக்கும் பருவத்தில் முதல் மார்க், விளையாட்டுப் போட்டியில் வெற்றி, நண்பர்களிடத்தில் முக்கியத்துவம் என விருப்பம் இருக்கும். பதின்பருவத்தில் எதிர்பாலினத்தவர்களின் ஏகோபித்தத் தேர்வாக இருக்க வேண்டுமென ஆசையிருக்கும். வேலைக்குச் சேர்ந்த பின் அங்கே தவிர்க்க இயலா ஆளாக இருக்க வேண்டுமென்ற ஆர்வம் இருக்கும். ஓய்வு பெற்ற பின்னர் உறவினர், ஊர் வட்டாரங்களில் நம்மை யாரும் மறந்துவிடக் கூடாது என்ற துடிப்பு இருக்கும். கோயில் விழாக்கள், திருமண விசேஷங்களுக்கு ஆர்வத்துடன் செல்லுதல், வாட்ஸ்அப் குரூப்பில் எல்லோருக்கும் செய்திகளை அனுப்புதல் என ஆளுக்குத் தகுந்தபடி மாறும். இது எல்லாவற்றுக்கும் ஆதாரம் மனிதனின் அங்கீகாரம் தேடும் மனது. தன் அந்திமக் காலங்களில் மனிதன், தன்னை யாரும் மறந்துவிடக் கூடாது என பிரயத்தனப்படுவான். ஏனென்றால் அதுதான் அவன் வாழ்ந்ததற்கான அடையாளம். சுஜாதா சொன்னதுபோல ``மரணத்தைவிடக் கொடுமையானது மறக்கப்படுவது.” இன்று சுஜாதாவின் பிறந்தநாளும்கூட!

கலைஞர்கள் இந்த அங்கீகாரம் தேடுவதில் இன்னும் ஒரு படி மேல். கைத்தட்டுகளை சுவாசமாகக் கொண்டு வளர்ந்தவர்கள் அவர்கள். கைத்தட்டல் ஓசை கேட்காமல் போகும் நாள் அவர்களைப் பொறுத்தவரையில் அவர்களது கடைசி நாள். மக்கள் தங்களை மறந்துவிடக் கூடாது என்பதுதான் அவர்களது ஒரே நோக்கமாக இருக்கும். தங்கள் வாழ்நாள் முடிவதற்குள் என்ன முடியுமோ அதைச் செய்து மக்கள் மனதில் நீங்கா இடம் பெற வேண்டுமென நினைப்பார்கள். என்றென்றும் மக்கள் மனதில் இடம் பிடித்திருப்பதுதானே உச்சபட்ச அங்கீகாரம்... கிட்டத்தட்ட சாகாவரம்!

ஒரு கலைஞன், வாழ்க்கையில் சில தவறுகள் செய்தவன், திடீரென தனக்கு கேன்சர் இருப்பதையும், ஆயுள் சில மாதங்கள்தான் என்பதையும் அறிகிறான். மீதமிருக்கும் நாள்களுக்குள் மக்கள் தன்னை மறக்காமல் இருக்க இன்னுமோர் கலைப்படைப்பை கொடுத்துவிட்டுச் செல்ல வேண்டுமென நினைக்கிறான். அவனது கடைசி மாதங்களை, அவன் ஏக்கங்களை, அவன் தன் தவறுகளைத் திருத்துவதை நமக்கு காட்சிப்படுத்தியதே `உத்தம வில்லன்' திரைப்படம். `உத்தம வில்லன்' வெளியாகி ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது.

உத்தம வில்லன் கமல்
உத்தம வில்லன் கமல்
காதல், பாசம், தேங்க் யூ, ஸாரி... இதெல்லாம் சொல்றதுக்கு நேரம் இல்லைங்கிறது புரிய ஆரம்பிக்குது!
மனோரஞ்சன்

கமல்ஹாசன், மனோ ரஞ்சன் என்னும் நடிகராக இந்தப் படத்தில் வாழ்ந்திருந்தார். அவரது இளமைப்பருவத்தில் ஒரு காதலி, ஆனால், நிர்பந்தங்களுக்காக தன்னை வைத்து தொடர்ச்சியாக படம் தயாரித்தவரின் மகளை மணம் செய்துகொள்கிறார். தனக்கு ஆரம்பத்தில் வழிகாட்டியாக இருந்த இயக்குநரிடமும் தன் மாமனாரால் பிணக்குகொள்கிறார். அவரது தற்போதைய பெண் மருத்துவரிடமும் அவருக்குக் காதல். இந்தச் சூழலில்தான் தன் முன்னாள் காதலி இறந்துவிட்டதும், அவளுக்கு தன் மூலம் ஒரு பெண் இருப்பதும் தெரியவருகிறது. மனோரஞ்சனுக்கு அதற்கடுத்த இடியாக, தனக்கு கேன்சர் என்பதும் இன்னும் சில மாதங்களில் இறக்கப்போகிறோம் எனவும் தெரிய வருகிறது. எல்லாவற்றையும் சரி செய்து கொண்டே, தன் கடைசி படத்தையும் முடிக்கிறான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குழந்தைகளுக்கான படம், இளைஞர்களுக்கான படம், குடும்பத்தோடு பார்க்கும் படம் என்பதைப்போல இது நாற்பது வயது ஆண்களுக்கான படம். நாற்பதுக்கு மேல் வயதான ஆண்கள் இந்தப்படத்துடன் தங்களை எளிதில் தொடர்புபடுத்திக்கொள்வார்கள். அவர்கள் வாழ்வில் நடந்த ஏதாவது ஒரு சம்பவம் இந்தப்படத்தில் இருக்கும். அது இள வயது நிறைவேறாத காதலாக இருக்கலாம், நிர்பந்தத்தால் தொடரும் மண வாழ்க்கையாக இருக்கலாம், வேலை அழுத்தத்தால் மகன் என்ன படிக்கிறான், எப்படிப் படிக்கிறான் என்று அறியாத நிலையாகவும் இருக்கலாம், நடுத்தர வயதில் இன்னொரு பெண்ணால் ஈர்க்கப்பட்டதாகவும் இருக்கலாம், வாழ்வு முடிவதற்குள் குறைந்தபட்ச கடமைகளையாவது முடிக்க வேண்டுமென்ற எண்ணமாகவும் இருக்கலாம். தங்கள் வாழ்வை மனோரஞ்சனோடு ஒப்பிட்டு ஒரு சுய பரிசோதனை செய்து கொள்ளும் அளவுக்கு தேர்ந்த பாத்திரப்படைப்பு கொண்டது `உத்தம வில்லன்.'

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

`உத்தம வில்லன்' திரைப்படத்தின் ஆரம்பக்காட்சியிலேயே எல்லோரும் இயல்பாக அவரவர் குணாதியங்களுடன் அறிமுகமாவார்கள். இவர் இன்னார், இவர் இவருக்கு இப்படி உறவு என்றெல்லாம் வாய்ஸ் ஓவர் இருக்காது. கமல்ஹாசனின் பெரும்பாலான படங்களில் வாய்ஸ் ஓவர்களைப் பயன்படுத்துவதில்லை. சினிமா என்பது காட்சி ஊடகம். காட்சி மூலமே எல்லாவற்றையும் பார்வையாளனுக்கு கடத்த வேண்டும் என்பது கமல்ஹாசனின் நிலைப்பாடு. `விஸ்வரூபம்' படத்தின் ஆரம்பக் காட்சியில் இருவரின் உரையாடலிலேயே ஆரம்பக் கதை சொல்லப்பட்டுவிடும். இதேபோல்தான் `தசாவாதார'த்திலும். மக்களுக்கு எளிமைப்படுத்தவே சில வாய்ஸ் ஓவர்களைப் பயன்படுத்தியிருப்பார். `உத்தம வில்லன்' படத்தில் மனோரஞ்சன் நடித்த ஒரு படத்தின் ப்ரீமியர் ஷோ ஒரு மாலில் உள்ள திரையரங்கில் நடக்கும். அதைக்கொண்டே எல்லா முக்கிய கேரக்டர்களும் அறிமுகமாவார்கள்.

`என்ன, இன்னும் இப்படிப்பட்ட மசாலாப் படங்களில் நடிக்கிறாரே அப்பா' என விசனப்படும் மகன் கேரக்டர்கூட அதன்போக்கில் அறிமுகமாகும். கமல்ஹாசன் திரைப்படங்களில் இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம், புதிதான காட்சிகள். மற்ற திரைப்படங்களில் எண்பது, தொண்ணூறு காட்சிகள் இருக்கிறதென்றால் அவற்றில் வழக்கமான ஹீரோ, ஹீரோயின் அறிமுகக்காட்சி, நகைச்சுவைக் காட்சி, பாடல் காட்சி, சண்டைக் காட்சி தவிர கதைக்குத் தேவையான சம்பவங்கள் என ஏழெட்டுக் காட்சிகள்தான் புதிதாக மற்ற திரைப்படங்களில் வராத காட்சிகளாக இருக்கும். கமல்ஹாசன் திரைப்படங்களில் கதைக்குத் தேவையான சம்பவ காட்சிகள் மற்ற படங்களைவிட அதிகமாகவே இருக்கும். அந்தக் காட்சிகள்தான் கமல்ஹாசன் படங்களை ஞாபகத்தில் வைத்திருக்க உதவுகின்றன. `உத்தமவில்லன்' படத்தில் அதுபோல ஏராளமானக் காட்சிகள் இருந்தாலும், ஆறு காட்சிகள் என்றும் இந்தத் திரைப்படத்தை ஞாபகத்தில் வைத்திருக்கச் செய்பவை.

அந்த ஆறு காட்சிகளும் கீழே உள்ள ஸ்லைடில் இருக்கிறது!

மனோரஞ்சன் தன் இயக்குநருடன் சேர்ந்து கடைசியாக நடிக்கும் படத்தின் பெயராக உத்தம வில்லன் இருக்கும். அந்தப்படம் ராஜா ராணி காலப் படம். அதில் தெய்யம் கலைஞராக கமல் வேடமேற்றிருப்பார். தொடர்ச்சியாக நாட்டுப்புறக் கலைகளையும், மற்ற கலை வடிவங்களையும் தமிழ்சினிமாவில் காட்டிக்கொண்டே இருக்க வேண்டும் என்பது கமல்ஹாசனின் ஆசைகளில் ஒன்று. `அன்பே சிவம்' படத்தில் தெருக்கூத்து, `விஸ்வரூபம்' படத்தில் கதக் எனப் பல உதாரணங்கள் சொல்லலாம். `உத்தம வில்லன்' படத்தில் வில்லுப் பாட்டையும், தெய்யத்தையும் பயன்படுத்தியிருப்பார். எடுக்கப்படும் காட்சிகளின் இடைவேளையில் தன் செயலாளருடன் சந்திப்பு, மகளுடன் சந்திப்பு போன்ற நுணுக்கமான காட்சிகள் வரும்.

மல்யுத்தம் செய்பவன் மல்லன், வில்யுத்தம் செய்பவன் வில்லன்!
கமல்ஹாசன்
உத்தம வில்லன்
உத்தம வில்லன்

மனோரஞ்சன் தான் அறிமுகமாகும் காட்சியில் நல்ல அழகுடன், தேஜஸாக இருந்து கடைசியில் முடி இழந்து உடல் வலுவிழந்து இறந்து போவான். ஆனால், தான் நடிக்கும் படத்தில், அறிமுக காட்சியில் தாடி மீசை, மோசமான சிகை அலங்காரத்தில் தோன்றி, படம் முடியும் தறுவாயில் அழகாக தேஜஸாக மன்னர் வேடத்தில் கம்பீரமாக நிற்பான். உடல் அழியக்கூடியது, புகழ் அழியக்கூடியதல்ல... சாகாவரம் கொண்டது எனப் படம் முடியும். படத்தின் இயக்கம் ரமேஷ் அரவிந்த், இசை ஜிப்ரான். சில பாடல்களை கமல்ஹாசன் எழுதியிருந்தார். அதில் முக்கியமான பாடல் `சாகாவரம் போல் சோகம் உண்டோ கேளாய் மன்னா' என்ற பாடல். சாகாவரம் போல் கொடுமையானது ஒன்றில்லை. நாம் உடல் ஆரோக்கியத்துடன் இருந்தால்கூட நம்மைச் சுற்றியுள்ளவர்களின் இழப்பு, நம்மை வேதனைப்படுத்தத் தொடங்கி விடும். எல்லோரும் அந்த வரம் பெற்றுவிட்டாலும் அதற்கு சிறப்பு ஏதும் இல்லை. உடலால் சாகாவரம் பெறாமல் புகழால் பெறு என்பதே `உத்தம வில்லன் ' படத்தின் சாராம்சம்.

படத்தின் ஆரம்ப காட்சி முடிந்ததும், ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கு பெறுவார் மனோரஞ்சன். கைத்தட்டுகள் முடிந்ததும், நிகழ்ச்சியை நடத்திச் செல்பவர் உங்கள் வாழ்க்கையில் சிறப்பான சம்பவம் எது எனக் கேட்பார். உடனே மனோரஞ்சன் ``இந்தக் கைத்தட்டுதான். அடுத்து எப்போது கிடைக்கும் எனத் தெரியாது, கிடைக்காமலும் கூடப் போகலாம்'' என்பார். அது பெரும்பாலான கலைஞர்களுக்கு நடந்திருக்கிறது. உச்சத்தில் இருந்தவர்கள் பேச்சுத்துணைக்கு ஏங்கிய எடுத்துக்காட்டுகள் தமிழ் சினிமாவில் ஏராளம் உண்டு. அது ஐந்து வயது முதல் கைத்தட்டு வாங்கிப்பழகிய கமல்ஹாசனுக்கு நன்றாகவே தெரியும். குழந்தைப்பருவம் முடிந்து வாலிபனாக மாறும் வயது வரை கைத்தட்டல்கள் இல்லாமல் ஏங்கிக் கிடந்த காலம் இன்னும் அவர் ஞாபகத்தில் இருந்துகொண்டேதான் இருக்கிறது. அந்தக் காலத்திலும் கைத்தட்டல் வாங்க நாட்டிய நிகழ்ச்சி நடத்துதல் போன்றவற்றில் ஈடுபட்டுக் கொண்டேயிருந்திருக்கிறார். பின் சிறிய வேடங்களில் நடிக்க ஆரம்பித்ததில் இருந்து கைத்தட்டல் நிற்கா கலையுலகப் பயணம் அவருடையது.

உத்தம வில்லன்
உத்தம வில்லன்

தற்போதைய கைத்தட்டலும் வேண்டும். அதேசமயம் தன்னை பிற்காலத்திலும் மக்கள் மறந்துவிடக் கூடாது என்பதால் காலத்தை மீறிய முயற்சிகளையும் அவர் தொடர்ந்து எடுத்துக் கொண்டேயிருந்தார். அதில் ஒன்றுதான் `உத்தம வில்லன்.' காலத்தைக் கடந்து அவர் பெயரை இந்தப் படம் சொல்லிக் கொண்டேயிருக்கும்.

`சாகாவரம்போல் சோகம் உண்டோ... தீராக்கதையைக் கேட்பார் உண்டோ...' என்ற கமலின் குரலோடு, அந்தச் சிரிப்புச் சத்தமும் காதுகளில் ஒலிக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு