Published:Updated:

`` `நானும் ரெளடிதான்’ படத்தை மிஸ் பண்ணதுக்கு சந்தோஷப்படுறேன்... ஏன்னா!’’ - கெளதம் கார்த்திக்

"`மசாலா அரைக்கச் சொல்லுமா’ டயலாக்கை வெச்சு வந்த மீம்ஸ் எல்லாமே எனக்கு ஃபேவரைட்..." - கெளதம் கார்த்திக்

தாத்தா முத்துராமன், அப்பா கார்த்திக்கைத் தொடர்ந்து சினிமாவில் மூன்றாம் தலைமுறை நடிகர் கெளதம் கார்த்திக். மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பிரமாண்ட அறிமுகத்துடன் சினிமாவுக்குள் வந்தவர் இப்போது 8 ஆண்டுகளைக் கடந்துவிட்டார். கெளதம் கார்த்திக்கிடம் பேசினேன்.

`கடல்’ படம் மூலமா உங்களுக்கு கிடைச்ச பிரமாண்ட ஓப்பனிங்கைப் பார்த்தப்போ எப்படி இருந்தது?

கெளதம் கார்த்திக்
கெளதம் கார்த்திக்

``நான் சினிமா ஃபேமிலியா இருந்தாலும் நடிக்கிறதுக்கு ஆர்வம் இல்லாமல் இருந்தேன். சின்ன வயசுல இருந்து சினிமா அதிகமா பழக்கம் இல்லாதனால, என்னோட முதல் படத்தில் எத்தனை பெரிய பிரபலங்கள் இருந்தாங்கங்கிற விஷயம் அப்போ எனக்கு பெருசா தெரியலை. இப்போ அதை நினைச்சுப் பார்த்தால், மணிரத்னம் சார் டைரக்‌ஷன், ஏ.ஆர்.ரஹ்மான் மியூசிக், அர்ஜூன் சார், அர்விந்த் சாமி சார்னு நம்மளோட முதல் படத்திற்கு பெரிய டீம் கிடைச்சிருக்கேனு பிரமிப்பா இருக்கு. ஒரு வேளை இந்த பிரமிப்பு எனக்கு `கடல்’ படம் பண்ணும்போதே இருந்திருந்தால், நான் ரொம்ப பயத்தோட இருந்திருப்பேன். அந்த பயம் எனக்கு அப்போ இல்லாதனாலதான் என்னால சுதந்திரமா நடிக்க முடிஞ்சது.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நீங்க சினிமாவுக்குள் வரும்போது உங்க அப்பா என்ன அட்வைஸ் கொடுத்தார்?

கெளதம் கார்த்திக்
கெளதம் கார்த்திக்

``அப்பா எனக்கு எப்போதுமே ஆக்டிங் சம்பந்தமா எந்த அட்வைஸும் கொடுக்க மாட்டார். ஒண்ணே ஒண்ணுதான் சொன்னார். `நீ யாரோ அதை நீ நடிக்கிற கேரக்டருக்குள்ள கொண்டுவா. அப்போதான் அந்தக் கேரக்டருக்கு உயிர் இருக்கும். நீ பண்ற தப்பை எல்லாம் நீயே சரி பண்ணு. அப்போதான் நீ நல்லா வளருவ’னு சொன்னார். அதைத்தான் இன்னைக்கு வரைக்கும் ஃபாலோ பண்ணிட்டு இருக்கேன்.’’

`கடல்’ படம் ரிலீஸாகி 8 வருஷம் ஆகுது. கடைசியா அந்தப் படத்தை எப்போ பார்த்தீங்க; அந்த சமயம் உங்களுக்கு ஞாபகத்துக்கு வந்த ஒரு விஷயம் சொல்லுங்க..?

``கடைசியா `கடல்’ படம் பார்த்து சில வருஷங்கள் ஆகிடுச்சு. நான் எப்போதுமே என் படம் ஒண்ணு ரிலீஸாச்சுன்னா, ரெண்டு, மூணு முறை பார்ப்பேன். அதுக்கப்புறம் அதை பார்க்க மாட்டேன். அடுத்த வேலைகளில் பிஸியாகிடுவேன். ஆனால், `கடல்’ படத்துக்கு மட்டும் நிறைய பேர் எழுதுற போஸ்ட் அப்பப்போ கண்ணுலபடும். அப்போ என் மெமரி எல்லாம் `கடல்’ பட சமயத்துக்கே போயிடும். `கடல்’னு சொன்னா எனக்கு முதலில் ஞாபகத்துக்கு வரது, `அடியே’ பாட்டுதான். அந்தப் பாட்டுக்காக உழைச்சது; லொகேஷன்; பிருந்தா மாஸ்டர் கோரியோகிராபினு முதலில் இதெல்லாம்தான் ஞாபகத்துக்கு வரும்.’’

`சிலம்பாட்டம்’ பட இயக்குநர் சரவணன் இயக்கத்தில் நீங்களும் லட்சுமி மேனனும் நடிச்ச `சிப்பாய்’ படம் ரிலீஸாகாததுக்கு என்ன காரணம்?

`` `சிப்பாய்’ படத்தோட 95 சதவிகித காட்சிகளுக்கு ஷூட், டப்பிங், எடிட்டிங் வேலைகள் முடிஞ்சிடுச்சு. க்ளைமேக்ஸ் மட்டும்தான் எடுக்கணும். அந்தப் படத்தோட தயாரிப்பாளருக்கு சில சொந்தப் பிரச்னைகள் இருந்ததுனாலதான், படத்தை நிறுத்திட்டாங்க. ஆனால், இன்னைக்கு வரைக்கும் தயாரிப்பாளர், இயக்குநர்கிட்ட பேசிட்டுத்தான் இருக்கேன். வருஷத்துக்கு ஒரு முறை இந்தப் படத்தை திரும்ப ஆரம்பிக்கிறதுக்காக பேச்சுவார்த்தை வரும்; அப்புறம் நின்னுடும். அவங்க ஷூட் பண்ணலாம்னு சொல்லிட்டால், எப்போனாலும் நான் ரெடி.’’

இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் ஷங்கர் ராஜா, இமான்னு தமிழ் சினிமாவோட முக்கியமான இசையமைப்பாளர் உங்க படங்களுக்கு இசையமைச்சிருக்காங்க. நீங்க ஓர் இசைக் கலைஞரா இருக்கிறதுனால, உங்க படங்களோட ஆல்பத்தை பெருசா ப்ளான் பண்றீங்களா?

Gautham Karthik
Gautham Karthik

``நான் கிட்டார் வாசிப்பேன்; கொஞ்சம் நல்லாவும் பாடுவேன். ஆனால், அதுக்கும் என் படங்களுக்கும் சம்பந்தமேயில்லை. இதுவரைக்கும் என் படங்களோட ஆல்பம் வேலைகளில் நான் தலையிட்டதே கிடையாது. கடவுளோட ஆசிர்வாதத்தால் என் படங்களுக்கு பெரிய பெரிய இசையமைப்பாளர்கள் கிடைச்சிருக்காங்க. `முத்துராமலிங்கம்’ படத்துக்கு இளையராஜா சார், `கடல்’ படத்துக்கு ரஹ்மான் சார், `வை ராஜா வை’ படத்துக்கு யுவன் சார், `என்னமோ ஏதோ’ படத்துக்கு இமான் சார்னு எனக்கு நல்ல பாடல்களை இவங்க கொடுத்திருக்காங்க. இது ஓர் ஆசிர்வாதம்னுதான் சொல்லணும்.’’

நீங்க நடிக்கிறதா இருந்து மிஸ்ஸான படங்கள் சிலது இருக்கே... அந்தப் படங்கள்ல நடிக்க முடியாமப் போனதை நினைச்சு வருத்தப்படுவீங்களா?

naanum rowdy thaan
naanum rowdy thaan

``ஒவ்வொரு நடிகருக்கும் அவங்க மிஸ் பண்ணினப் படங்கள்னு ஒரு லிஸ்ட் இருக்கும். அதுல சில படங்களை ஏன் மிஸ் பண்ணிட்டோம்னு வருத்தப்படுவோம்; ஒரு சில படங்களை நல்லவேளை மிஸ் பண்ணோம்னு சந்தோஷப்படுவோம். ஆனால், ஒரு நல்லப் படத்தை மிஸ் பண்ணியும், நான் வருத்தப்படல. ஆமாம், அந்தப்படம் `நானும் ரெளடிதான்’. நான் அந்தப் படத்தைப் பண்ணாமவிட்டதால்தான், அது விஜய் சேதுபதி அண்ணாவுக்கு போச்சு. அதனாலதான், அந்தப் படம் ரொம்ப நல்லா வந்துச்சு. நான் பண்ணியிருந்தால், இந்தளவுக்கு வந்திருக்காது. அந்தவகையில், ஒரு நல்லப் படத்தை நான் மிஸ் பண்ணதுக்கு சந்தோஷப்படுறேன்.’’

``கமல், கெளதம் மேனன்கிட்ட சொன்ன `தசாவதாரம்' எப்படி என்கிட்ட?'' - கே.எஸ்.ஆர் #12YearsofDasavathaaram

சமூக வலைதளங்களில் உங்களைப் பற்றி வர மீம்ஸ்களுக்கு உங்களோட ரியாக்‌ஷன் என்ன?

``ஒருத்தருக்கு தன்னைப் பார்த்தே சிரிக்கிற பழக்கம் இருந்தால்தான் அவங்க சந்தோஷமா வாழ முடியும்னு எங்க அம்மா என்கிட்ட சொல்லியிருக்காங்க. நானும் அதை சின்ன வயசுல இருந்தே ப்ராக்டீஸ் பண்ணியிருக்கேன். இந்தப் பழக்கம் எனக்கு சினிமாவுக்கு வந்தப்பிறகு ரொம்பவே யூஸ் ஆகுது. என்னைப் பற்றி வர மீம்களைப் பார்த்து செமையா என்ஜாய் பண்ணுவேன். ஒரு நடிகரா இதை நான் சொல்லக் கூடாது. இருந்தாலும் உண்மையைச் சொல்லணும்னா, `முத்துராமலிங்கம்’ படம் சரியா போகாதப்போ, அந்தப் படத்துக்கு வந்த மீம்ஸை எல்லாம் பார்த்து வெடிச்சு, வெடிச்சு சிரிச்சேன். அதிலும் குறிப்பா, `மசாலா அரைக்கச் சொல்லுமா’ டயலாக்கை வெச்சு வந்த மீம்ஸ் எல்லாமே எனக்கு ஃபேவரைட். இது அவங்களோட கிரியேட்டிவிட்டி; இதை ரசிக்கிறதுல தப்பே இல்லை.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு