Published:Updated:

`சிவாஜியால் வந்த அழுகை; இளையராஜா சொன்ன ஜானகியம்மா ரகசியம்!' - `தேவர் மகன்' அனுபவங்கள் பகிரும் ரேவதி

சாதி ரீதியான பல்வேறு விமர்சனங்கள் மற்றும் சர்ச்சைகளுக்கு மத்தியில், பெரும் வெற்றி கண்ட `தேவர் மகன்', 30-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. மீனாவுக்கு மாற்றாகப் பஞ்சவர்ணம் ரோலில் நடித்து கவனம் பெற்ற ரேவதியிடம், இந்தப் படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்துப் பேசினோம்.

ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான சினிமாக்கள் வெளியானாலும், வெகு சில படங்கள் மட்டுமே காலங்கள் கடந்தும் பேசப்படும். அந்த வரிசையில், 30-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் `தேவர் மகன்' கமலின் திரைப்பயணத்தில் முக்கிய படங்களில் ஒன்று.
`தேவர் மகன்' படத்தில் ரேவதி...
`தேவர் மகன்' படத்தில் ரேவதி...

ஊரில் செல்வாக்கு மிகுந்த பெரிய தேவராக `மிடுக்'கான தோற்றத்தில் சிவாஜி. வெளிநாட்டில் படிப்பை முடித்து சொந்த ஊருக்குத் திரும்புவார் கமல். அதே ஊரில் வசிக்கும் சின்ன தேவரின் மகன் நாசரால் ஊர் மக்களுக்குப் பல்வேறு பிரச்னைகள் உருவாகும். தனிப்பட்ட கெளரவப் பகையை மனதில் வைத்து, பஞ்சாயத்து ஒன்றில் சிவாஜியை நாசர் அவமானப்படுத்த, அந்தத் தாக்கத்தில் சிவாஜி காலமாகிவிடுவார். `நம்மளையே நம்பியிருக்குற இந்த மக்களுக்கு ஏதாச்சும் செய்' என்று முன்பு கூறியிருந்த சிவாஜியின் வேண்டுகோளுக்காக, வெளிநாட்டுக்குச் செல்லும் விருப்பத்தை மாற்றிக்கொண்டு அப்பாவின் வழியில் அதே ஊரில் வாழ்வதுடன், கெளதமியுடனான காதலை முறித்துக்கொண்டு, ரேவதியைக் கரம் பிடிப்பார் கமல். ஊர் மக்களுக்கு இடையூறாக இருக்கும் நாசரை அவர் வீழ்த்துவதுதான் படத்தின் கதை.

சாதி ரீதியான பல்வேறு விமர்சனங்கள் மற்றும் சர்ச்சைகளுக்கு மத்தியில், பெரும் வெற்றிகண்ட `தேவர் மகன்' பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. சிவாஜி, கமல்ஹாசன், இளையராஜா, பரதன், பி.சி.ஶ்ரீராம் போன்ற ஆளுமைகளுக்கு மத்தியில் பஞ்சவர்ணமாகக் கவனம் பெற்ற ரேவதி, அந்தப் படத்துக்காகத் தேசிய விருதையும் வென்றார். அந்தக் கதாபாத்திரத்தில் நடிகை மீனா ஒருநாள் மட்டுமே நடித்த நிலையில், சில காரணங்களால் அவருக்குப் பதிலாக ரேவதி தேர்வானார். இந்திப் படத்தின் படப்பிடிப்பிலிருந்த ரேவதியிடம், `தேவர் மகன்' நாஸ்டால்ஜியா நினைவுகள் குறித்துப் பேசினோம்.

'தேவர் மகன்' குழுவினர்...
'தேவர் மகன்' குழுவினர்...

``கொல்கத்தாவுல மலையாளப் பட ஷூட்டிங்ல இருந்தேன். ஒருநாள் எனக்கு போன் செஞ்ச டைரக்டர் பரதன் சார், `என்னோட படத்துல ஒரு ரோல் இருக்கு. கிராமத்து சப்ஜெக்ட். நீ நடிச்சா நல்லாயிருக்கும். உடனே வரணும்'னு சொன்னார். ஏற்கெனவே அவரோட ரெண்டு படங்கள்ல வேலை செஞ்சிருந்தேன். அவர் மேல எனக்கிருந்த நம்பிக்கையில, மறுபேச்சு சொல்லாம, கதை என்னனுகூட கேட்காம, சம்மதம் சொன்னேன். அப்போ நான் நடிச்சுகிட்டிருந்த மலையாளப் படத்தின் டைரக்டரான ப்ரியதர்ஷன் சார்கிட்ட, பரதன் சாரே பேசி சம்மதம் வாங்கினார். உடனடியா அங்கிருந்து புறப்பட்டு பொள்ளாச்சிக்கு வந்தேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`கமல் எழுதினது'ன்னு சொல்லி பிரின்டட் ஸ்கிரிப்ட்டை என்கிட்ட கொடுத்தார் பரதன் சார். மலையாளத்துல சில படங்களுக்கு ஸ்கிரிப்ட் படிச்சிருந்தாலும், முதன்முறையா தமிழ்ப் படத்துக்காக எனக்கு ஸ்கிரிப்ட் கொடுத்தது `தேவர் மகன்'லதான். அந்தக் கதையைப் படிச்சதுமே எனக்கு ரொம்பவே பிடிச்சுப்போச்சு. `பஞ்சவர்ணத்தை நீங்க எப்படி எதிர்பார்க்குறீங்க?'ன்னு பரதன் சார்கிட்ட கேட்டு, அவரோட எதிர்பார்ப்பை மனசுல பதிய வெச்சுகிட்டேன். சரிகா மேடம்தான் அந்தப் படத்துக்கு காஸ்டியூம் டிசைனர். கொஞ்சம் டார்க் மேக்கப் பண்ணிகிட்டு அடுத்தநாள் காலையில லொகேஷன் போனேன். என்னைப் பார்த்ததுமே, தான் எதிர்பார்த்த பஞ்சவர்ணமா நான் இருப்பேன்னு பரதன் சாருக்குப் பெரிய நம்பிக்கை உண்டாச்சு. எனக்கு முன்பா மீனா தேர்வு செய்யப்பட்டதைத் தெரிஞ்சுகிட்டேன். ஆனா, அவங்க ஏன் விலகினாங்கன்னு எனக்குத் தெரியல.

'தேவர் மகன்' படத்தில்...
'தேவர் மகன்' படத்தில்...

சிவாஜி சாரின் மரணத்துக்கு முன்பா, தாடியுடன் இருக்குற கமல் என்கூட ஒரு சீன்லதான் வருவார். அந்த சீனை உடனடியா எடுத்தாங்க. `ஒரு கைதியின் டைரி', `புன்னகை மன்னன்' படங்கள்ல கமல்கூட ஏற்கெனவே நடிச்சிருந்தேன். அதேபோல அந்தப் படத்தோட ஒளிப்பதிவாளர் பி.சி.ஶ்ரீராம் சார்கூடவும் அதுக்கு முன்பே சேர்ந்து வேலை செஞ்சிருக்கேன். அதனால, ரொம்பவே பழக்கப்பட்ட டீம்கூட சேர்ந்து மறுபடியும் வேலை செஞ்சதால, ஒவ்வொருநாள் அனுபவமும் சுவாரஸ்யமா இருந்துச்சு. தன்னோடு நடிக்கிற எல்லாக் கலைஞர்களுமே நல்லா நடிக்கணும்னு கமல் தனி கவனம் கொடுப்பார். வெகுளித்தனமான அந்த பஞ்சவர்ணம் எப்படிப் பேசணும், நடந்துக்கணும்னு தனிப்பட்ட முறையில அவரும் எனக்குச் சொல்லிக்கொடுத்தார்.

நான் வியந்தும் ரசிச்சும் பார்க்குற நபர்களோடு அதிகமா பேசாம, அவங்க செய்யுற வேலைகளை மட்டுமே கூர்ந்து கவனிப்பேன். அதன்படியே, கமல்கூட வேலை விஷயம் தாண்டி தனிப்பட்ட முறையில நான் அதிகம் பேசல. தேர்த்திருவிழா சீன்ல, சுத்துவட்டாரத்திலேருந்து ஆயிரக்கணக்கான மக்களை வர வெச்சாங்க. அவங்க எல்லோரும் பயனடையுற மாதிரி மெடிக்கல் கேம்ப் நடத்தினார் கமல். அந்த க்ளைமாக்ஸ் சீனை சில நாள்கள் எடுத்தாங்க. அதுவரைக்கும் அந்த மக்களுக்கு வயிராற சாப்பாடு கொடுத்து, கமல் மூலமா மருத்துவ உதவிகள் கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டேன்.

'தேவர் மகன்' படத்தில் ரேவதி...
'தேவர் மகன்' படத்தில் ரேவதி...
நானும் நீயுமா - 8 : எம்ஜிஆர் Vs சிவாஜி... சத்தமில்லாமல் நடந்த நடிகர் சங்க சண்டைகளின் பின்னணி என்ன?

அரசியல்ரீதியா இந்தப் படம் எப்படிப் பேசப்படும்னு யோசிக்குற பக்குவம் அப்போ எனக்கில்ல. சிவாஜி சார், கமல் சார், பரதன் சார் போன்றோரின் பங்களிப்புடன், இளையராஜா சாரின் மியூசிக், பி.சி.ஶ்ரீராம் சாரின் ஒளிப்பதிவு உட்பட பல விஷயங்களும் சிறப்பா அமைஞ்சதாலதான் படம் ரொம்பவே சிறப்பா வந்துச்சு" என்பவருக்கு, சிவாஜியின் பாராட்டும், எஸ்.ஜானகியின் குரலும் கூடுதல் வியப்பைக் கொடுத்திருக்கின்றன.

``டப்பிங் பேசுறப்போ கமல் என்கூடவே இருந்து, அந்த ராமநாதபுரம் ஸ்லாங்ல எப்படிப் பேசணும்னு ஒவ்வொரு வார்த்தையையும் உன்னிப்புடன் கத்துக்கொடுத்தார். `இஞ்சி இடுப்பழகா' பாடலின் தொடக்கத்துல, `உச்' கொட்டுற மாதிரி வித்தியாசமான ஒரு மாடுலேஷனை வெளிப்படுத்தியிருப்பாங்க ஜானகி அம்மா. அதை எப்படிச் செய்யணும்னு நான் கமல்கிட்ட கேட்க, அதைச் சரியா தெரிஞ்சுகிட்டு வந்து எனக்குச் சொல்லிக் கொடுத்தார். அந்தப் பாட்டுல ஜானகி அம்மா எக்கச்சக்க மாடுலேஷன் கொடுத்திருப்பாங்க. அதைச் சரியா உள்வாங்கி, என்னால முடிஞ்ச அளவுக்கு வாயசைச்சு நடிச்சேன். நான் ஹீரோயினா நடிச்ச காலத்துல ஜானகி அம்மாவின் குரலுக்குத்தான் நான் அதிகமா வாயசைச்சிருக்கேன். அது பத்தி ஒருமுறை இளையராஜா சார்கிட்ட கேட்டேன். `நீ நடிக்குற பாடல்களுக்கு ஜானகி அம்மா பாடுறதுதான் பொருத்தமா இருக்கும்'னு அழுத்தமா சொன்னதை இங்க குறிப்பிட்ட ஆசைப்படுறேன்.

'தேவர் மகன்' படத்தில் ரேவதி...
'தேவர் மகன்' படத்தில் ரேவதி...
`முடக்கிய விபத்து, விஜய்யின் அன்பு, குடும்பத்தினரின் பாசம்!' - மகன் குறித்து கமீலா நாசர்

`தேவர் மகன்' ரிலீஸுக்கு முன்பு சத்யம் தியேட்டர்ல பிரீவியூ ஷோ நடந்துச்சு. சிவாஜி சாருக்குப் பக்கத்து சீட்ல நான் உட்கார்ந்திருந்தேன். அதனால, பயத்துல அதிகம் சிரிக்காம என்னைக் கட்டுப்படுத்திகிட்டு படம் பார்த்தேன். படம் முடிஞ்சதும் அவரின் ஒரு கையால என் கையை இறுக்கமா பிடிச்சுகிட்டு, அவரோட இன்னொரு கையை என் கன்னத்துல தட்டிக்கொடுத்து, `செகண்டு ஹாஃப்ல படத்தை நீ சாப்டிட்டியேடா'ன்னு சொன்னார்.

அவர் அவ்வளவு சீக்கிரத்துல யாரையும் பாராட்ட மாட்டார்னு கேள்விப்பட்டிருக்கேன். அது பத்தி பிரபுகூட என்கிட்ட சொல்லியிருக்கார். அதனால, சிவாஜி சாரின் வாழ்த்துல உணர்ச்சிவசப்பட்டு அழுதுட்டேன். படத்தோட நூறாவது நாள் வெற்றி விழாவுல பாலிவுட் நடிகர் திலீப்குமார் சார் கலந்துகிட்டார். என் கேரக்டர் பத்தியும், படத்துல என் நடிப்பு பத்தியும் கமல் அப்போதான் விரிவா பேசினார். அந்தப் படத்துல நான் நடிக்காம இருந்திருந்தா, பெரிய கெளரவத்தை இழந்திருப்பேன்" என்று பெருமிதமாகச் சொல்பவர், சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது வென்ற அனுபவத்தைப் பகிர்ந்தார்.

'தேவர் மகன்' படத்தில் கமல்...
'தேவர் மகன்' படத்தில் கமல்...
``சில்க்கை கிள்ளிட்டேன்; கமல் சிரிச்சான்!" - `நேத்து ராத்திரியம்மா' Making Secrets -`புலியூர்' சரோஜா

``ஶ்ரீலங்காவுல ஒரு நிகழ்ச்சியை முடிச்சுட்டு சென்னைக்கு வந்தேன். ஏர்போர்ட்டுல பலரும் எனக்கு வாழ்த்துச் சொன்னாங்க. அதுக்கான காரணமே எனக்குப் புரியல. `உனக்குத் தேசிய விருது கிடைச்சிருக்கு'ன்னு சுரேஷ் மேனன் சொன்னார். ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. அந்த விருதை வாங்க டெல்லி போனப்போ, `ரோஜா' படத்துக்குத் தேசிய விருது வாங்க ஏ.ஆர்.ரஹ்மான் அங்க வந்திருந்தார். அவரை முதன்முறையா அங்கதான் பார்த்தேன். அவரோட அம்மாகிட்டயும் பேசினேன். மணிரத்னம் சாரும் அங்க இருந்தார். `இஞ்சி இடுப்பழகா' பாட்டுக்காகத் தேசிய விருது வாங்க ஜானகி அம்மாவும் வந்திருந்தாங்க. அவங்களுக்கு நன்றியும் வாழ்த்தும் சொன்னேன்" என்று `தேவர் மகன்' நினைவுகளை முடித்தவர், அண்மையில் வெளியிட்ட புராஜெக்ட் அறிவிப்பு குறித்தும் பகிர்ந்துகொண்டார்.

`ஏழு வருடங்களாக எனக்குள் வைத்திருக்கும் கதாபாத்திரத்தை வடிவமைக்க காத்திருக்கிறேன்' என்று தான் இயக்கும் புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டிருந்தார் ரேவதி. `The Last Hurrah' என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் படத்தில் கஜோல் நடிக்கிறார். திரைத்துறையில் பெண்கள் இயக்குநராகப் பங்களிப்பு செய்வது அரிதிலும் அரிது. அந்தக் களத்திலும் திறமையை வெளிப்படுத்திவரும் ரேவதி, தான் இயக்கும் படங்களில் சமூகப் பிரச்னைகளை மையப்படுத்திய கதைகளை மட்டுமே தேர்வு செய்கிறார்.

கஜோலுடன் ரேவதி...
கஜோலுடன் ரேவதி...
தேவர்மகன் முதல் விஸ்வரூபம் வரை... கமலின் அரசியலும் அதன் மீதான விமர்சனங்களும்!

``பல வருஷங்களா என் மனசுல இருந்த கதை இது. சரியான நேரத்துல இந்தப் படத்தோட வேலைகள் தொடங்கும்னு உறுதியா நம்பினேன். அது இப்போ நடக்கவிருக்கு. பிரபலமான நடிகையா இருக்கணும்; அவங்க சிறப்பா நடிக்கக்கூடியவங்களாவும் இருக்கணும்னு நினைச்சேன். கஜோல்கிட்ட மட்டும்தான் கதை சொன்னேன். சரியான நேரத்துல அவங்ககிட்ட கேட்டதால ஒப்புக்கிட்டாங்க. அடுத்த வருஷம் பிப்ரவரியில ஷூட்டிங் தொடங்குது. வெகுஜன மக்கள்கிட்ட ஒரு நல்ல கதையைக் கொண்டு சேர்க்கலாம்னுதான் இந்தியில இந்தப் படத்தை எடுக்குறேன். இதுக்கிடையில பல மொழிப் படங்கள்ல நடிக்குற வேலைகளையும் முடிச்சுக் கொடுக்கணும். நடிப்போ, டைரக்‌ஷனோ... ஒரு வேலையை முடிச்சுட்டுத்தான் இன்னொரு வேலையில கவனம் செலுத்துவேன்" என்று புன்னகையுடன் விடைகொடுத்தவர், படப்பிடிப்பு வேலையில் பிஸியானார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு