Published:Updated:

அன்று பள்ளியில் பின்னுக்குத் தள்ளப்பட்டவர்தான் இன்றைய `மாஸ்டர்' பிரபுதேவா! #HBDPrabhudeva

`நான் ஆடுறதை யாருமே கண்டுக்கலடா' எனத் தன் நண்பனிடம் சொல்லி புலம்பிய அதே பிரபுதேவாவின் நடனம்தான் பலருக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கிறது. - பிரபுதேவா பிறந்தநாள் ஸ்பெஷல்!

பிரபுதேவா... கலை உலகில் இந்தியாவுக்கான அடையாளங்களுள் ஒரு பெயர். நடன உலகின் முக்கிய பெயர். `டெண்டுல்கர் படிச்சது பத்தாவது... ஆனாலும் அடிச்சா நூறாகுது' என்று `படிக்காதவன்' படத்தில் இடம்பெற்ற பாடல்வரி, பிரபுதேவா வாழ்க்கைக்கும் பொருந்தும். இந்தியாவைப் பொறுத்தவரை பெரும்பாலான சாதனையாளர்களின் வாழ்க்கையில் ஏட்டுக்கல்வி அவர்களை ஏற்றிவிடவில்லை. முழுக்க முழுக்க திறமை மட்டுமே இவரை உயர்த்திவிட்டது. சுருட்டை முடி, எப்போதும் கன்னத்தில் குடியிருக்கும் தாடி, சிம்பிளான உடை, ஆரவாரமான நடனம்... இதுதான் பிரபுதேவா.

மைசூரில் பிறந்து மயிலாப்பூரில் வளர்ந்த சிறுவன், இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் ஆவான் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அவரின் ஜூலி மிஸ் உட்பட. என்னதான் அப்பா சினிமாவில் புகழ்பெற்ற டான்ஸ் மாஸ்டராக இருந்தாலும் தன்னுடைய திறமை இல்லாமல் பெரிய இடத்திற்கு வர முடியாது. அப்படிப்பட்ட ரகம்தான் இவர். பள்ளியில் செய்யாத குறும்பு இல்லை; அடிக்காத லூட்டி இல்லை. பதின்பருவத்தில் தொடக்கத்திலேயே தனது அப்பாவுக்கு அசிஸ்டென்டாக ரஜினி, கமல் எனப் பல ஜாம்பவன்களின் படங்களில் பணியாற்றியுள்ளார்.

ஒரே நேரத்தில் அப்பா நிறைய படங்களில் மாஸ்டராகப் பணியாற்றியதால், இவரிடம் நம்பி டான்ஸ் கோரியோகிராபியை விட்டுச் செல்லத் தொடங்கிய கொஞ்ச காலத்திலேயே மாஸ்டர் பிரபுதேவாவாக மாறினார். `ராஜா... ராஜாதி ராஜன் இந்த ராஜா' என்ற ஐகானிக் பாடலில் குரூப் டான்ஸராக நடனமாடியவருக்கு `இதயம்' படத்தில் `ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே' என்ற பாடலில் லீடாக நடனமாட வாய்ப்பு வந்தது. பிறகு, `சிக்குப்புக்கு சிக்குப்புக்கு ரயிலே' எனப் பல படங்களில் பிரபுதேவா தோன்றியிருந்தாலும் ஹீரோவாக முதல் படம் `இந்து'. அந்தப் படம் ஹிட்டாக, அடுத்த படமான `காதலன்' சூப்பர் டூப்பர் ஹிட்! `முக்காலா முக்காபுலா' பாடலை மறக்க முடியுமா?

பிரபுதேவா
பிரபுதேவா

90-களின் தொடக்கம்... ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், பிரபு போன்ற முன்னணி நடிகர்கள் உச்சத்தில் இருக்க, விஜய், அஜித் என்ற இளம் நடிகர்களின் வரவும் இருந்த காலகட்டம். அந்த சமயத்தில்தான் ஹீரோ பிரபுதேவாவும் அறிமுகமாகி நடித்துக்கொண்டிருந்தார். 'வி.ஐ.பி', `மிஸ்டர் ரோமியோ', `மின்சாரக் கனவு' என அடுத்தடுத்த படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட். ஹீரோயிசத்தைத் தாண்டி நடனமும் ஹியூமரும்தான் பிரபுதேவாவுக்கு போனஸாக அமைந்தன. `காதலா காதலா' சு...சு...சுந்தரலிங்கத்தை மறக்க முடியாது. என்னதான் அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து முன்னணி ஹீரோவாக நிலைநிறுத்திக்கொள்ள முயற்சி செய்தாரோ, அதே சமயத்தில் தனது பிராதானமான நடனத்தையும் இவர் விடவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`என்னவளே', `பேட்ட ரேப்', `மலர்களே', `காதல் நீதானா', `ரோமியோ ஆட்டம் போட்டால்' என 90'ஸ் கிட்ஸின் விஷ் லிஸ்டில் பிரபுதேவா படத்தில் இடம்பெற்ற பல பாடல்கள் இருக்கும். நடன இயக்குநராகப் பல மொழிகளில் பிரபுதேவா பரிச்சயமாகி இருந்ததால், அவரை ஹீரோவாகவும் ஏற்றுக்கொண்டனர். `வானத்தைப்போல' படத்தில் பிரபுதேவா விஜயகாந்த்தைப் பற்றி பேசும் காட்சி ஃபேமஸான மீம் டெம்ப்ளேட். வடிவேலு என்றால் பிரபுதேவாவுக்கு அத்தனை பிரியம். `காதலன்' படத்தில் பிரபு - வசந்த் (வடிவேலு) இருவரும் ஜில், ஜங், ஜக் எனப் பெண்களை வகைப்படுத்துதல், `மனதை திருடிவிட்டாய்' படத்தில் தேவா (பிரபுதேவா) - ஸ்டீவ் வாக் (வடிவேலு) காம்போவில் உருவான அசத்தல் காமெடிகள் என அனைத்தும் எபிக்! இந்தப் பந்தம் அவர் இயக்குநரான பிறகும் `போக்கிரி' பாடிசோடா, `வில்லு' மாடா வரை தொடர்ந்தது.

பிரபுதேவா
பிரபுதேவா

தமிழில் பிஸியாக இருக்கும்போதே மற்ற மொழிகளில் சோலோவாகவும் அமிதாப் பச்சன், நாகர்ஜுனா எனப் பெரிய நடிகர்களின் படங்களிலும் நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் தமிழில் நடிகர், தெலுங்கில் நடன இயக்குநர், இந்தியில் இயக்குநர் எனத் தன்னை மூன்றாகப் பிரித்துக்கொண்டு பணியாற்றினார். `நுவ்வோஸ்தானன்டே நின்னோடான்டே' (`சம்திங் சம்திங்' படத்தின் ஒரிஜினல் வெர்ஷன்) என்ற தெலுங்கு படத்தில் இயக்குநரானவர், நடிப்புக்கு ப்ரேக் கொடுத்து இயக்கத்தில் அதிகம் செலுத்தி வந்தார். சல்மான் கான், அக்‌ஷய் குமார், சிரஞ்சீவி, விஜய் என அந்தந்த மொழிகளில் இருக்கும் டாப் ஸ்டார்களை இயக்கினார். தற்போது, சல்மான் கானை வைத்து `ராதே' படத்தை இயக்கி முடித்துள்ளார்.

இவை தவிர, `தேவி' படத்தின் மூலம் நடிகராகவும் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இவர், அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் தற்போது நான்கு படங்கள் வெளியாகக் காத்திருக்கின்றன. இவ்வளவு பிஸியாக இருக்கும் சமயத்திலும் இயக்குநர்கள் கேட்டுக்கொண்டால், குறிப்பிட்ட பாடலுக்கு கோரியோகிராப் செய்துகொடுப்பார். அதில் ஒன்றுதான் 800 மில்லியன் வ்யூஸ்களைப் கடந்த `ரெளடி பேபி.' பிரபுதேவாவின் உடம்பில் ஓடும் ரத்த நாளங்கள் அனைத்திலும் நடனம் ஊறியிருக்கிறது போலும்; புதுப்புது மூவ்மென்ட்ஸ், புதுப்புது ஸ்டைல் என தன்னை அப்டேட் செய்துகொண்டே இருக்கும் பிரபுதேவா என்றும் ஆச்சர்யம்தான். அதே போல, அவர் நடித்த படங்கள், ஆடிய நடனம், சொல்லிக்கொடுத்த நடனம் என அனைத்துமே அவர் ஒரு எவர்க்ரீன் நட்சத்திரம் என்பதற்கான சாட்சி. அவரின் நடனம்தான் அவரை இன்னும் அத்தனை இளமையாக வைத்திருக்கிறதோ என்னவோ?

பிரபுதேவா
பிரபுதேவா

இவர் இயக்கும் படங்களுக்கு பெரும்பாலும் இவர் கோரியோக்ராபி செய்ய மாட்டார். காரணம், மாஸ்டராக களமிறங்கினால் பிரபுதேவா வேற மாதிரியாம். ரஜினி, சிரஞ்சீவி உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் தன்னை பிரபுதேவா பெண்டு நிமித்தியதாகப் பல இடங்களில் கூறியிள்ளனர். பிரபுதேவா ஹைதராபாத்தில் இருந்தால், சிரஞ்சீவி வீட்டிலிருந்து அவருக்கு மிகவும் பிடித்த தோசை போகுமாம். `பலூன் பேகி' ரக பேன்ட்டை அறிமுகப்படுத்தி டிரெண்டாக்கியது பிரபுதேவாதான். `இந்தப் பேண்ட் நல்லாயிருக்கு. எங்க வாங்குன?'னு ஒருமுறை ரஜினி தன்னிடம் கேட்டதாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.`கிரிக்கெட், கால்பந்து என விளையாட்டில் அதீத ஆர்வம். தன்னுடன் பள்ளியில் படித்த நண்பர்கள்தான் இன்றளவும் பிரபுதேவாவின் பெஸ்ட் ஃபிரெண்ட்ஸ். ஷூட்டிங் இல்லாத சமயத்தில் இவர்களுடன் நேரம் செலவழிப்பதுதான் இவரின் ஹாபி. தான் படித்த பள்ளியின் விழாவில் தவறாமல் கலந்துகொள்வாராம்.

பிரபுதேவாவை தாடியில்லாமல் பார்ப்பது அரிதினும் அரிது. டபுள் ஆக்‌ஷன் ரோலில் நடித்தபோதுகூட இரண்டு கேரக்டருக்கும் தாடியோடுதான் நடித்திருப்பார். எப்போதும் தாடி வைத்திருக்க இரண்டு காரணங்களைக் கூறியிருக்கிறார். `மிகக் குறைவான வயதிலேயே மாஸ்டரானதால் தன்னை வயது முதிர்ச்சியோடு காட்டிக்கொள்வதற்காகவும் எப்போதும் க்ளின் ஷேவ் செய்யாமல் தாடியுடன் இருக்கும் தனது அப்பாவை இன்ஸ்பிரேஷனாக கொண்டதாலும்தானாம். வாழைப்பழமும் வித்தியாசமான வடிவங்களில் இருக்கும் ஸ்வீட் என்றால் அத்தனை பிரியமாம். இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என அழைப்படும் இவர் தனது பள்ளி கலை நிகழ்ச்சியில் ஒன்றில்கூட கலந்துகொண்டதில்லை என்பதுதான் ஆச்சர்யம்.

பிரபுதேவா பத்மஶ்ரீ வாங்கியபோது
பிரபுதேவா பத்மஶ்ரீ வாங்கியபோது
ஒருமுறை பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் இவர் பள்ளி சார்பாக நடனமாடி இருக்கிறார். இவருக்கு எட்டாவது இடம். பங்குபெற்றதே எட்டு பேர்தானாம். `நான் ஆடுறதை யாருமே கண்டுக்கலடா' எனத் தன் நண்பனிடம் சொல்லி புலம்பிய அதே பிரபுதேவாவின் நடனம்தான் பலருக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கிறது.

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என அவருக்கு பல முகங்கள் இருந்தாலும் `பிரபுதேவா மாஸ்டர்' என்பதுதான் அவரின் அடையாளம். பிரபுதேவா துரோணாச்சாரியாராக இருந்து பல அர்ஜுனன்களை உருவாக்கிய அதே சமயத்தில் எண்ணற்ற ஏகலைவன்களையும் உருவாக்கியிருக்கிறார். என்றைக்கும் எப்போதும் ஒரே ஒரு பிரபுதேவாதான். நடன உலகின் புரட்சியாளனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் !

ஹேப்பி பர்த்டே இந்தியன் மைக்கேல் ஜாக்சன்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு