Published:Updated:

``வனிதா இனிமேலாவது ஒழுங்கா இருங்க... உங்களால் அந்த ரெண்டு பேருக்குத்தான் பிரச்னை?!'' - ராபர்ட்

"‘ஏங்க இப்படி சொன்னீங்க’னு கேட்டதுக்கு, `பட ரிலீஸ் சமயத்தில் இப்படி சொன்னாதான் ஒரு பப்ளிசிட்டி கிடைக்கும்’னு சொன்னாங்க. வனிதா அப்போதிலிருந்தே பப்ளிசிட்டிக்காகப் பல விஷயங்கள் பண்ணுவாங்க." - ராபர்ட்

சமீபத்தில் நடன இயக்குநர் ராபர்ட் வெளியிட்ட இரண்டு வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின. வனிதா திருமணத்தில் தனது பெயரை அசிங்கப்படுத்துவதாகவும், மற்ற மொழி நடன இயக்குநர்களுக்கு தமிழ் சினிமாவில் அதிக வாய்ப்பு கொடுப்பதால் தமிழ் நடன இயக்குநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் அந்த வீடியோக்களில் கூறியிருந்தார். அவரிடம் பேசினேன்.

''நடன இயக்குநர்கள் குறித்து வீடியோ வெளியிட வேண்டும் என்கிற எண்ணம் எப்போது வந்தது?''

Robert
Robert

``சமீபத்தில்தான் பட்டாஸ்’ படத்தோட ’சில் ப்ரோ’ பாட்டைப் பார்த்தேன். பிரபுதேவா மாஸ்டரோட வொர்க்கிங் ஸ்டைலில் அந்தப் பாட்டு இருந்துச்சு. ரொம்பவே நல்லா இருந்துச்சு. உடனே என் அசிஸ்டென்ட்டுக்கு போன் பண்ணி, ’பிரபு மாஸ்டரா அந்தப் பாட்டை பண்ணது’னு கேட்டேன். ’இல்ல மாஸ்டர்... ஜானி மாஸ்டர் பண்ணிருக்கார்’னு சொன்னார். கோலிவுட்டிலும் ஒரு ஜானி மாஸ்டர் இருக்கார். ராஜூ சுந்தரம் மாஸ்டர், பிரபுதேவா மாஸ்டர் கோரியோ பண்ண பாடல்களில் குரூப் டான்ஸரா இருந்தவர். நான் அந்த ஜானி மாஸ்டரானு கேட்டதும், ’ஹைதராபாத் ஜானி மாஸ்டர்’னு சொன்னார். ’பரவாயில்லடா நல்லா பண்ணியிருக்கார்’னு சொன்னதும், ‘மாஸ்டர், படத்துல எல்லா பாட்டுமே அவர்தான்’னு சொன்னான். அதுதான் எனக்கு பயங்கர ஷாக்கா இருந்துச்சு.

ஏன்னா, ரொம்ப வருஷமாகவே கோரியோகிராபர்ஸ் தமிழில் இருந்து தெலுங்கு போனாலும், தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்தாலும் ஒண்ணு, ரெண்டு பாட்டுதான் கொடுப்பாங்க. மத்தப் பாடல்களை அந்தந்த ஊர் மாஸ்டர்ஸ்தான் பண்ணுவாங்க. ஆனால், இப்படி ஒரு படம் முழுக்கவே வெளியூர் மாஸ்டர்களுக்கு கொடுக்கிறது ரொம்பவே குறைவு. அப்படி கொடுக்கக்கூடாதுங்கிறது ரூல் கிடையாது. அந்தந்த மொழி கலைஞர்களின் வாழ்வாதாரம் முக்கியம்னு இத்தனை வருஷமா இதை ஃபாலோ பண்ணிட்டு வராங்க. தமிழ் சினிமாவிலேயே எத்தனையோ திறமையான மாஸ்டர்ஸ் படங்கள் கிடைக்காமல், கஷ்டப்பட்டுட்டு இருக்காங்க. இப்போ பாடல்களே இல்லாமல் படமும் வர ஆரம்பிக்கிது. அப்படிப்பட்ட சூழலில் பாடல்கள் இருக்கிற படங்களிலும் இப்போ இருக்கிற மாஸ்டர்களுக்கு வேலை கொடுக்கலைன்னா, அவங்க நிலைமை என்ன ஆகும். அதனாலதான், என் ஆதங்கத்தை எல்லாம் ஒரு வீடியோவா எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவு பண்ணேன்.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்த வீடியோவில் பிரபுதேவா பற்றியும் சொல்லியிருக்கீங்க; அது ஏன், அவர்கிட்ட இருந்து பதில் வந்ததா?

Prabhu Deva
Prabhu Deva

'' ‘ரெளடி பேபி’ பாட்டை பிரபுதேவா மாஸ்டர்தான் கோரியோ பண்ணியிருப்பார். தனுஷ் சார் ஆடுற ஸ்டைலைப் பார்த்தாலே அது தெரியும். அப்படியே பிரபுதேவா மாஸ்டரோட ஸ்டைலில் ஆடியிருப்பார். ஆனால், டைட்டில் கார்டில் ஜானி மாஸ்டரோட பேர்தான் இருக்கும். ஜானி மாஸ்டருக்குத்தான் அவார்ட்டும் கொடுத்தாங்க. அந்த அவார்ட் நிகழ்ச்சியில் பிரபுதேவா மாஸ்டர் பேசுன ஒரு வீடியோவும் போட்டாங்க. அதில், ‘இந்தப் பாட்டுல நான் எதுவுமே பண்ணலை. பண்ணது எல்லாமே ஜானிதான்’னு பிரபு மாஸ்டர் சொல்லியிருப்பார். அதெல்லாம் பார்க்கும் போதுதான், அந்த வீடியோவில் பிரபு மாஸ்டர் பெயரையும் சேர்ந்து சொன்னேன். அந்த வீடியோவை போடுறதுக்கு முன்னாடியே அவர்கிட்ட பேசலாம்னு நினைச்சேன். ஆனால், முடியலை. வீடியோ பார்த்திட்டு பேசுவார்னு நினைக்கிறேன். ஏன்னா, எனக்கு பிரபு மாஸ்டருக்கும் ’சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே’ பாட்டுல இருந்து கனெக்‌ஷன் இருக்கு. அந்தப் பாட்டோட ஓப்பனிங்ல ஜீ.வி.பிரகாஷ் பாடுன ஒரு போர்ஷன் வரும். அதுக்கு ஒரு சின்ன பையன் வேணும்னு ஆடிஷன் வெச்சாங்க. அதுல நான் போய் கலந்துகிட்டேன். பிரபு மாஸ்டருக்கு என் டான்ஸ் ரொம்ப பிடிச்சப்போய் உடனே ஓகேனு சொல்லிட்டார். அப்பறம் சுந்தரம் மாஸ்டர்தான், ’இன்னும் சின்னப் பையன் வேணும்டா’னு சொல்லி வேற பையனை செலக்ட் பண்ணாங்க.

அப்பறம் ’காதலா காதலா’ படத்துல ’காசுமேலே காசுவந்து’ பாட்டுக்கு குரூப் டான்ஸரா ஆடினேன். நான் மாஸ்டரானதுக்கு அப்புறம் கன்னடப் படத்துக்காக பிரபு மாஸ்டருக்கு கோரியோகிராப் பண்ணேன். இப்படி அவரோட நான் பல வருஷமா டிராவல் பண்ணதுனால, கண்டிப்பா அந்த வீடியோ பார்த்தார்னா, என்கிட்ட பேசுவார். இப்போ வரைக்குமே அந்த வீடியோவைப் பார்த்த பல பேர் போன் பண்ணி, ‘சூப்பரா சொல்லியிருக்கீங்க மாஸ்டர். இனிமேலாவது மாற்றம் வருதானு பார்ப்போம்’னு சொன்னாங்க. தனுஷ் சார்கிட்ட இந்த விஷயம் சம்பந்தமா பேசினேன். ‘எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்ல மாஸ்டர். அதுவா நடந்திருக்கு. நான் கதையில் மட்டும்தான் கவனமா இருந்தேன்’னு சொன்னார். இதுக்கு பிரபு மாஸ்டர்தான் பதில் சொல்லணும்னு நினைக்கிறேன்.’’

உங்களுக்கு மற்ற மொழிப் படங்களில் இருந்து வாய்ப்பு வருதா?

``எனக்கு தமிழ்லதான் நல்ல மார்க்கெட். தெலுங்கு, கன்னடத்தில் சில படங்கள் பண்ணியிருக்கேன். அங்க இருக்கிற நடிகர்கள் என்கிட்ட நல்லா பேசுவாங்க. ’சிலம்பாட்டம்’ படத்துல ’நலம்தானா’ பாட்டுல முதுகை வெச்சு ஜம்ப் பண்ற ஒரு மூவ்மென்ட் கம்போஸ் பண்ணியிருப்பேன். அதைப் பார்த்துட்டு அல்லு அர்ஜூன் போன் பண்ணி, ’ ‘ஆர்யா - 2’ படத்துல ’ரிங்க ரிங்கா’ பாட்டுல அந்த மூவ்மென்ட்டை யூஸ் பண்ணிக்கவா மாஸ்டர்’னு கேட்டார். ’தாராளமா பண்ணிக்கோங்க ஜி’னு சொன்னேன். இப்படி மற்ற மொழி நடிகர்கள் என் வொர்க்கை ஃபாலோ பண்ணுவாங்க; பேசுவாங்க. அப்பப்போ அங்க வொர்க் பண்றதுக்கு கூப்பிடுவாங்க.’’

வனிதா - பீட்டர் பால் திருமணம் குறித்து நீங்க பேசியதற்கு என்ன காரணம்?

Vanitha Wedding
Vanitha Wedding

``வனிதா ஹீரோயினா நடிச்ச ஒரு படத்துக்கு நான் டான்ஸ் கோரியோ பண்ணப் போனேன். அப்போதான் எனக்கு வனிதா பழக்கமானார். என் வொர்க்கைப் பற்றியெல்லாம் கேட்டார். அப்போ நான் இயக்குநராக முயற்சி பண்ணிக்கிட்டு இருந்தேன். அதை அவங்ககிட்ட சொன்னதும் ஒரு படம் பண்ணலாமான்னு கேட்டாங்க. அப்போதான் வனிதாவோட தயாரிப்புல எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் ரசிகர்கள் நற்பணி மன்றம்னு ஒரு படம் ஆரம்பிச்சோம். அந்த சமயத்திலேயே என்னையும் அவங்களையும் சேர்த்து வெச்சு பேச ஆரம்பிச்சிட்டாங்க. பட ரிலீஸ் சமயத்தில் அவங்க கொடுத்த ஒரு பேட்டியில், ‘நாங்க சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கப்போறோம்’னு சொல்லிட்டாங்க. ‘ஏங்க இப்படி சொன்னீங்க’னு கேட்டதுக்கு, ‘பட ரிலீஸ் சமயத்தில் இப்படி சொன்னாதான் ஒரு பப்ளிசிட்டி கிடைக்கும்’னு சொன்னாங்க. வனிதா அப்போல இருந்தே பப்ளிசிட்டிக்காக பல விஷயங்கள் பண்ணுவாங்க. அதில் இருந்தே நான் அவங்ககிட்ட பேசுறது இல்லை.

எனக்கும் வனிதாவுக்கும் இடையில எதுவுமே இல்லைனு எப்போதோ முடிவாகிடுச்சு. இருந்தாலும், இந்த விஷயத்தில் ஏன் என் பெயரை இழுக்குறாங்கனு தெரியலை. அதுனாலதான் அந்த வீடியோவை பதிவு பண்ணேன். வனிதா கல்யாணத்தைப் பற்றி என்கிட்ட கருத்து கேட்டா, முதல் மனைவியை முறையா விவாகரத்து பண்ணாமல் வனிதாவை கல்யாணம் பண்ணது பீட்டர் பாலோட தப்பு. எனக்கு தப்பாப்பட்ட இன்னொரு விஷயம் என்னன்னா, பீட்டர் பால் கையில பைபிளை வெச்சுக்கிட்டு வனிதாவுக்கு கிஸ் பண்றார். நானும் ஒரு கிறிஸ்டியன்கிற முறையில அதைப் பார்த்தப்போ எனக்கு வருத்தமா இருந்துச்சு. வனிதாவுக்கே ஒரே அட்வைஸ்தான். ஒழுங்கா இருங்க. ஒழுங்கா இருந்தாப்போதும் அவங்க. உங்களை ஆயிரம் பேர் திட்டட்டும். நீங்க ஏன் திட்றீங்க. வனிதா பண்ற தப்புக்கெல்லாம் அவங்க பேருக்குப் பின்னாடி இருக்கிற விஜயகுமாருக்குத்தான் பிரச்னை. பொண்ணை சரியா வளர்க்கலைன்னு சொல்லுவாங்க. அதேமாதிரி இப்போ வனிதா பண்றதுக்கெல்லாம் அவங்க பொண்ணுதான் பின்னாடி கஷ்டப்படுவாங்க.’’

லாக்டெளன் நாள்கள் எப்படிப் போயிட்டு இருக்கு; உங்க நண்பர் சிம்புகிட்ட பேசுனீங்களா..?

’’சின்ன வயசுல இருந்து ஷூட்டிங் போயிட்டு இருக்கேன். திடீர்னு இவ்வளவு நாள் ப்ரேக் கொடுத்து வீட்டுல இருக்க சொல்லிட்டாங்க. வேலைப் பார்க்காமல் கஷ்டமாத்தான் இருக்கு. ஆனால், ஃபேமிலியோடு அதிக நேரம் செலவிடுறதுக்கு இது சரியான நேரமா படுறதுனால, அதைப் பண்ணிக்கிட்டு இருக்கேன். சிம்புவுக்கு லாக்டெளன் பழக்கப்பட்டதுதானே. அவர் எப்போதுமே வீட்டுக்குள்ளதான் இருப்பார். அதனால, இந்த லாக்டெளன் அவருக்கு ரொம்ப சிரமமா இருக்காது. சமீபத்தில் பேசினபோதும், `எனக்கு என்னடா ஜாலியா இருக்கேன். கதை பண்ணிட்டு இருக்கேன்’னு சொன்னார். `மன்மதன்’ மாதிரி இன்னொரு படம் பண்ணணும்னு பிளான் பண்ணிக்கிட்டு இருக்கார்.’’

இந்தப் பேட்டியை வீடியோ வடிவில் காண... இங்கே க்ளிக் செய்யவும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு