Published:Updated:

`அஜித் படம் பார்த்துட்டு விஜய் என்கிட்ட என்ன கேட்டார்னா..." - `கில்லி' டு `வீரம்' கதை சொல்லும் பரதன்

'அஜித்தோட 'வீரம்' படம் பார்த்தேன். டயலாக்ஸ் நல்லாயிருந்தது. உடனே யார் எழுதியிருக்கானு கேட்டேன். அப்போ பரதன்னு உங்க பேரை சொன்னாங்க. கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருந்தது'னு சொன்னார்.

'கில்லி' திரைப்படம் ரிலீஸாகி 16 வருடங்கள் நிறைவடைந்துவிட்டன. இப்போதும், படம் டிவியில் ஒளிபரப்பானால் ட்ரெண்டாகும் அளவுக்கு சூப்பர் ஹிட் படம் இது. 'கில்லி' ஆக்‌ஷன் காட்சிகள் போலவே வசனங்களும் அப்ளாஸ் அள்ளியவை. மாஸ் வசனங்களுக்கு சொந்தக்காரர் இயக்குநர் பரதன். அவரிடம் பேசினேன்.

"தரணி சார் டைரக்‌ஷன் பண்ண 'தில்' 'தூள்' ரெண்டு படத்துக்கும் நான்தான் வசனம் எழுதியிருப்பேன். ரெண்டுமே செம ஹிட். இந்த ரெண்டு படத்துக்கும் ரத்னம் சார்தான் தயாரிப்பாளர். இப்படியிருந்த சூழல்ல ரத்னம் சார் கூப்பிட்டு, 'விஜய் சாரோட கால்ஷீட் இருக்கு. தெலுங்குல 'ஒக்கடு'னு ஒரு படம் சூப்பரா ஓடிக்கிட்டு இருக்கு. இதை ரீமேக் பண்ணலாம்'னு சொன்னார். சரினு சொல்லிட்டு நானும், தரணி சார் மற்ற உதவி இயக்குநர்கள் எல்லாரும் ஜெயப்பிரதா தியேட்டர்ல படம் பார்க்கப் போனோம். எங்களுக்கு பிடிச்சிருந்தது. இருந்தாலும் தெலுங்கு ஆடியன்ஸ்கூட படம் பார்த்தா நல்லாயிருக்கும்னு தோணுச்சு. ஏன்னா, அவங்க எந்தளவுக்கு படத்தை ரசிக்குறாங்கனு தெரிஞ்சா அதுக்கு ஏத்த மாதிரி நம்ம ஸ்க்ரிப்ட் ரெடி பண்ணா நல்லாயிருக்கும்னு நினைச்சோம். அதனால உடனே கிளம்பி நானும், தரணி சாரும் ஹைதராபாத் போய் அங்கே படம் பார்த்தோம். எந்த காட்சியெல்லாம் நாம பெட்டரா பண்ணலாம்னு நானும், தரணி சாரும் தியேட்டர்குள்ளயே உட்கார்ந்து பேசிக்கிட்டோம். முதல்ல, படத்தோட இடைவேளையை வேற மாதிரி மாத்தலாம்னு பேசினோம். ஏன்னா, எங்க முந்தையப் படங்களோட 'தில்' 'தூள்' இடைவேளைக்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது.

விஜய்
விஜய்
பைரவா

இதுக்கு அப்புறம் 'ஒக்கடு' படத்தோட இயக்குநர் குணசேகரன்கிட்ட மூணு மணிநேரம் நானும், தரணியும் படம் பற்றி பேசிட்டு இருந்தோம். எந்த சூழல்ல இந்த கதை உருவானது, நீங்க எதெல்லாம் பண்ணனும்னு நினைச்சி பண்ணாம விட்டுட்டீங்க'னு இதுல இருந்து சில குறிப்புகள் எடுத்துக்கிட்டோம். அப்போ அங்கே 'ஒக்கடு' படத்துக்காக போட்ட செட் இருந்தது. 'இந்த செட் ஓகேவா இருந்தா நாம எடுக்கப்போற படத்துக்கும் பயன்படுத்திக்கலாம்'னு தயாரிப்பாளர் சொன்னார். செட்டை நம்ம நேட்டிவிட்டிக்கு ஏத்தமாதிரி எப்படி மாத்துறதுன்னு பிளான் பண்ணோம்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வாசல்ல பொண்ணை தூக்கிட்டு, சென்னை லைட் ஹவுஸ்ல ஒளிச்சு வெச்சிட்டா எப்படியிருக்கும்னு தோணுச்சு. இப்படி எல்லாமே ஹைதாராபாத் டூ சென்னை வர்றப்போதே நானும், தரணி சாரும் முடிவு பண்ணிட்டு வந்துட்டோம்.

அதே மாதிரி தரணியும், நானும் சேர்ந்து வேலைப் பார்த்த முந்தைய ரெண்டு படத்துலயும் ஹீரோவுடைய பேர் முருகன் பேர் கொண்டததான் இருக்கும். ஏன்னா, எங்கப் படத்தோட முதல்நாள் ஷூட்டிங் வளரசரவாக்கம் முருகன் கோவில்லதான் நடக்கும். அதனால சென்ட்டிமென்ட்டா முருகன் பெயர் கொண்ட பெயரை ஹீரோவுக்கு வைப்போம். அதனாலதான் 'கில்லி' படத்துலயும் விஜய்க்கு சரவணவேலுனு வெச்சோம். அதே மாதிரி இந்தப் படத்துல 'மெளனகுரு' இயக்குநர் சாந்தகுமார் வேலை பார்த்தார். அவரோட சொந்த ஊர் மதுரை. அதனால மதுரை போர்ஷனுக்கு டயலாக்ஸ் எழுத அவர் எனக்கு உதவியா இருந்தார். பிரகாஷ்ராஜூக்கு மதுரையை சுத்தியிருக்குற பேர் வைக்கணும்னு சொன்னவுடனே 'முத்து பாண்டி'னு அவர்தான் பேரை சொன்னார். பிரகாஷ்ராஜ் அவரோட ஆபிஸ்ல நெருக்கமான சிலரை 'வாடா செல்லம், போடா செல்லம்'னு சொல்லிக் கூப்பிடுவார். அதை அப்படியே படத்துல கொண்டு வருவோம்னு அவரைச் செல்லம், செல்லம்னு கூப்பிட வெச்சிட்டோம்.

விஜய்
விஜய்
பைரவா

இந்தப் படத்தோட ஷூட்டிங்கின்போது விஜய் சாருக்கு டயலாக்ஸ் நான்தான் சொல்லிக் கொடுப்பேன். அவர் எல்லாத்தையும் உள்வாங்கிட்டு அப்படியே அவரோட பாடிலாங்குவேஜ்ல நடிச்சிக் கொடுத்திடுவார். 'கில்லி' படத்தோட டப்பிங் அப்போ எனக்கும், அவருக்குமான நெருக்கம் அதிகமாகிடுச்சு. இந்தப் படத்தோட டப்பிங் வேலைகள் போயிட்டிருந்தப்போதான் 'மதுர' படத்தோட ஷூட்டிங் ஆரம்பமாச்சு. முதல் நாள் டப்பிங் பேசி முடிச்சிட்டு முதல்நாள் ஷூட்டிங் போனார். அங்கே போனவுடனே விஜய் சார்கிட்ட இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அங்கே போனா, 'இந்தப் படத்துக்கு நீங்களும் டயலாக்ஸ் எழுதுறீங்க'னு சொன்னார். எனக்கு ஆச்சர்யமா இருந்தது. 'கில்லி' படத்தோட போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளை ஒருபக்கம் பார்த்துட்டே 'மதுர' படத்துக்கும் வசனம் எழுதி கொடுத்தேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்போ, விஜய் சாருக்கு நான் டைரக்‌ஷன் பண்ண தயார் ஆகிட்டிருக்கேன்னு தெரியும். அதனால நாம சேர்ந்து ஒரு படம் பண்ணலாம்னு சொல்லியிருந்தார். கதைகேட்டுட்டு ஒரு தயாரிப்பாளரைப் பார்க்கச் சொன்னார். சில காரணங்களால் அந்தக் கதையை படம் ஆக்க முடியாத சூழல். அப்போதில் இருந்தே விஜய் சாருக்கு ஒரு வருத்தம் இருந்துக்கிட்டே இருந்தது. 'இவரை கூப்பிட்டு ஒரு படம் பண்ணலாம்னு சொன்னோம். பண்ண முடியாம போயிருச்சே'னு ஃபீல் பண்ணியிருக்கார். அதுக்கு அப்புறம் அவரே கூப்பிட்டு கொடுத்த வாய்ப்புதான் 'அழகிய தமிழ்மகன்'. இதுக்கு அப்புறம் கிட்டத்தட்ட ஒன்பது வருஷத்துக்கு அப்புறம் அவரை 'பைரவா' படத்துக்காக சந்திச்சேன். ரொம்ப நெகிழ்ச்சியான சந்திப்பா இருந்தது. கை பிடிச்சிக்கிட்டு, 'எப்படியிருக்கீங்க அண்ணா'னு கேட்டார். என் மேல நிறைய நம்பிக்கை வெச்சிருந்தார்.

கில்லி போஸ்டர்
கில்லி போஸ்டர்

விஜய்யோட இந்த கேரக்டருக்காகதான் 'பைரவா' படத்துல, 'இன்னைக்கு நிறைய பேர்கிட்ட இல்லாத கெட்டபழக்கம் என்கிட்ட இருக்கு. சொன்ன வார்த்தையை காப்பாத்துறது'னு அவருக்காகவே வெச்சேன். விஜய் நினைச்சு இருந்தா என்னை அப்படியே விட்டிருக்கலாம். அதே மாதிரி விஜய் சார் பேசுறப்போ சொன்னார்,' " 'அஜித்தோட 'வீரம்' படம் பார்த்தேன். டயலாக்ஸ் நல்லாயிருந்தது. உடனே யார் எழுதியிருக்கானு கேட்டேன். அப்போ பரதன்னு உங்க பேரை சொன்னாங்க. கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருந்தது'னு சொன்னார். ரொம்பப் பெருமையா இருந்தது. விஜய் சார் இதெல்லாம் சொல்லவேண்டிய அவசியமே இல்லை. ஆனா, மனம் திறந்து பாராட்டினார்" என்ற பரதனிடம் "விஜய் மேடைகள்ல பேசுறதுக்கும் நீங்கதான் ஸ்க்ரிப்ட் ரைட்டர்னு சொல்றாங்களே... உண்மையா?" எனக் கேட்டேன்.

''ஒருதுளியும் உண்மையில்லை. அவருடைய ஸ்பீச்சை அவரேதான் எழுதிப் பேசுறார். இயல்பாவே நல்லா ஹியூமரா, நிறைய பன்ச்களோட பேசுற திறமை அவருக்கு இருக்கு. அவர் பேசுற ஃப்ளோவைப் பார்த்தாலே தெரியும். மனசுக்குள்ள இருந்து பேசுவார். வேற யாராவது எழுதிக்கொடுத்தா அப்படியெல்லாம் பேச முடியுமா? என்கிறார் பரதன்.

16 ஆண்டுகளுக்குப் பிறகும் விஜய்-யின் `கில்லி' ஏன் டிரெண்டிங்கில் இருக்கிறது தெரியுமா?!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு