Published:Updated:

"அஜித் ஓகே சொல்லலைனா `வசூல் ராஜா' படமே எடுத்திருக்க முடியாது!"- இயக்குநர் சரண் #16YearsofVasoolRaja

வசூல் ராஜா: '' 'இது ரீமேக் படம். இதனால நீங்க மாட்டிக்க கூடாது. நான் தயாரிப்பாளர்கிட்ட பேசுறேன். நாம ரீமேக் இல்லாமல் உங்களோட கதையில வேற ஒரு படம் பண்ணலாம். என்ன சொல்றீங்க?'னு கமல் சார் கேட்டார்.''

கமல்ஹாசனின் காமெடி ஹிட் லிட்ஸ்ட்டில் 'மைக்கேல் மதன காமராஜன்', 'காதலா காதலா', 'சிங்காரவேலன்', 'பஞ்சதந்திரம்' என ஏகப்பட்ட படங்கள் இருக்கின்றன. இந்த வரிசையில் எப்போதும் மிஸ் செய்யக்கூடாதது 'வசூல் ராஜா MBBS'. இந்தி ரீமேக்காக இருந்தாலும் கமல்ஹாசனின் அசால்ட்டான நடிப்பும் கிரேஸி மோகனின் அசாத்திய வசனங்களும் படத்தை கிளாஸிக் ஆக்கிவிட்டது. இந்தப் படத்தின் கதாநாயகர்கள் கமல், கிரேஸி மோகன், இயக்குநர் சரண், பிரகாஷ்ராஜ் என அனைவருமே கே.பாலசந்தரின் பள்ளியிலிருந்து வந்தவர்கள். இந்தப் படம் வெளியாகி 16 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இதன் இயக்குநர் சரணிடம் பேசினேன்.

'' 'முன்னா பாய் டு வசூல் ராஜா எம்பிபிஎஸ்... இந்தப் படம் ஆரம்பிச்ச கதை சொல்லுங்க?''

"ஜெமினி ஃபிலிம்ஸ் மனோகர் பிரசாத் சார்தான் 'முன்னா பாய் MBBS' படத்தை தமிழ்ல ரீமேக் பண்ணணும். 'கமல் சார் ரெடி, நீங்க பண்றீங்களா?'னு கேட்டார். கமல் சார் ஒரு லெஜெண்ட், ஜெமினி ஃபிலிம்ஸ் பாரம்பர்யமான தயாரிப்பு நிறுவனம். இந்த ரெண்டு பெரிய விஷயங்கள் இருக்கிறதுனால அந்த பொன்னான வாய்ப்பை நானே எடுத்துக்கிட்டேன். எப்போ ஆரம்பிக்கணும்னு கேட்டா, இன்னும் 15 நாள்ல ஷூட்டிங் ஆரம்பிக்கணும். கமல் சார் கால்ஷீட் 45 நாள்கள்தான்னு சொன்னாங்க. அந்த 15 நாள்கள்ல நான் எல்லா வேலையும் பார்க்கணுங்கிறது மிகப் பெரிய சவால். சரியா இன்னும் மூணு மாசத்துல படம் ரிலீஸாகிடணும்னும் டாஸ்க் இருந்தது. இதை எல்லாம் என்கிட்ட அவங்க சொல்லும்போது 'அட்டகாசம்' படத்தோட ஷூட்டிங் ரெண்டு ஷெட்யூல்தான் முடிஞ்சிருந்தது. இப்படி ஒரு வாய்ப்பு வருதுனு அஜித் சார்கிட்ட சொன்னதும், 'கமல் சார் படம். நீங்க போய் அதை முடிச்சுட்டு வாங்க. நானும் அதுக்குள்ள 'ஜி' படத்துடைய ஷூட்டிங்கை முடிச்சு கொடுத்திடுறேன்'னு சொல்லி அனுப்பி வெச்சார். அஜித் சார் ஓகே சொல்லலைன்னா என்னால வசூல் ராஜா எடுத்திருக்கமுடியாது. அதுக்கு அப்புறம்தான், இந்தப் படத்துக்குள்ளயே வந்தேன்."

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

''15 நாள்கள்ல எப்படி இவ்ளோ பெரிய டீமை செட் பண்ணீங்க?''

'வசூல் ராஜா MBBS'
'வசூல் ராஜா MBBS'

"டைம் ரொம்பவும் குறைவுன்றதால பரத்வாஜ், ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ்னு என் படங்கள்ல இருக்கிற டெக்னீஷியன்களை முதல்ல கமிட் பண்ணேன். அப்புறம், அவங்களோட சேர்ந்து போய் கமல் சாரை மீட் பண்ணேன். எல்லோர்கிட்டயும் பேசி முடிச்சவுடன், 'உங்கக்கிட்ட தனியா பேசணும்'னு கமல் சார் சொன்னார். மத்தவங்க எல்லாம் வெளியே வெயிட் பண்ணாங்க. அவர் என்கிட்ட, 'இந்த ப்ராஜெக்ட் சரியா வரும்னு நினைக்கிறீங்களா?'னு கேட்டார். நிச்சயமா வரும்னு சொன்னேன். 'நீங்க என்கூட வொர்க் பண்ணணும்னு ஆசைப்பட்டுதான் படத்துக்குள்ள வந்தீங்களா? ஏன்னா, இது ரீமேக் படம். இதனால நீங்க மாட்டிக்க கூடாது. நான் தயாரிப்பாளர்கிட்ட பேசுறேன். நாம ரீமேக் இல்லாமல் உங்களோட கதையில ஒரு படம் பண்ணலாம். என்ன சொல்றீங்க?'னு கேட்டார். 'இந்தப் படத்துக்குள்ள நான் வர்றதுக்கு முன்னாடியே 'முன்னா பாய்' பார்த்திருக்கேன் சார். இதுல பேசப்படுற விஷயம் எல்லா மொழிக்கும் பொதுவானது. எல்லோருக்கும் கனெக்டாகும். இதுல சொல்ற கருத்துகள் உங்களைத் தவிர யார் சொன்னாலும் சரியா இருக்காது. தைரியமா நான் பண்றேன். நீங்களும் தைரியமா பண்ணலாம் சார்'னு சொன்னேன். நான் சொன்னது அவருக்கும் ஓகே. அப்புறம், 'இது ஒரு ரீமேக் படம். அதை அப்படியே நம்மளும் பண்றதுல எந்தவொரு பெப்பும் இருக்காது. நம்ம ஸ்டைலுக்கு கொண்டு வருவோம். கிரேஸி மோகனை டயலாக் எழுதச் சொல்லலாம். அவர் டிராமால செம பிஸியா இருப்பார். டயலாக் சரியான நேரத்துக்கு கிடைக்காது. அதனால, அவருக்கு இந்தப் படத்துல ஏதாவது ஒரு கேரக்டரைக் கொடுத்து பண்ண வெச்சிடுங்க. நம்ம கூடவே இருப்பார்'னு ஐடியா கொடுத்தார். அப்படித்தான் கிரேஸி மோகன் சார் படத்துக்குள்ள வந்தார்."

பிரபு, பிரகாஷ்ராஜ், சினேகா... இவங்க எல்லாம் எப்படி படத்துக்குள்ள வந்தாங்க?

"ஜோதிகாதான் முதல் சாய்ஸ். கால்ஷீட் பிரச்னை காரணமா அவங்களால பண்ண முடியலை. அப்புறம் சினேகா வந்தாங்க. நான் கமல் சாரை வெச்சு படம் பண்றேங்கிற செய்தி வெளியே வர ஆரம்பிச்சிடுச்சு. அதை கேள்விப்பட்டதும் பிரகாஷ்ராஜ் சார் எனக்கு போன் பண்ணி, 'அந்த டீன் கேரக்டரை நான் பண்ணட்டுமா?'னு கேட்டார். உடனே ஓகே சொல்லிட்டேன். அவருடைய முதல் தமிழ் படமான 'டூயட்'ல நான் அசிஸ்டென்ட் டைரக்டர். அதனால, அப்போதிலிருந்தே என்னை அவருக்குத் தெரியும்.'முன்னா பாய்'ல அர்ஷத் வர்ஸி கேரக்டர்ல பிரபு சார் நடிக்கணும்னு நினைக்கிறார்னு எனக்குத் தகவல் வந்தது. முக்கியமான கேரக்டர்கள் எல்லாம் அடுத்தடுத்து அமைஞ்சுடுச்சு."

டைட்டில்?

'வசூல் ராஜா MBBS'
'வசூல் ராஜா MBBS'

"முக்கியமான கேரக்டர்கள் எல்லாம் முடிவானவுடன் தலைப்பை முடிவு பண்ணிடுவோம்னு நிறைய சாய்ஸ் எழுதினேன். அதுல 'மார்க்கெட் ராஜா MBBS' டைட்டில் பிடிச்சிருந்தது. இந்தப் படத்துக்கான ஆபீஸ் போடும்போது ஒரு பூஜை நடந்தது. அப்போ கமல் சார், கிரேஸி சார் எல்லாம் வந்தாங்க. அந்தப் பூஜை முடிச்சுட்டு கார்ல கிளம்புற சமயத்துல, 'கிரேஸி ஒரு டைட்டில் சொல்றார். எப்படியிருக்குனு பாருங்க'னு கமல் சார் சொன்னார். அப்போ அவர் சொன்னதுதான் 'வசூல் ராஜா MBBS'"

''இந்தில சஞ்சய் தத் பண்ணிட்டார்... நாம இப்படி பண்ணணும்னு கமல் சார் எதுவும் சொன்னாரா?''

"அவர் 'முன்னா பாய்' பார்க்கவேயில்லை. அந்தப் படம் இந்தில நல்ல ஹிட்னு அவருக்குத் தெரியும். அதோட ரீமேக்ல நடிக்கப்போறோம்னு தெரிஞ்ச உடனே, பார்க்கிறதையே தவிர்த்துட்டார். அதனால, ஒப்பீடே கிடையாது. இந்தப் படத்தோட ஷூட்டிங் போகும்போதே 'மும்பை எக்ஸ்பிரஸ்' படத்துடைய ப்ரீ புரொடக்‌ஷன் ஆரம்பிச்சிடுச்சு. 'வசூல் ராஜா' ஷூட்டிங்ல அவருக்கான கேரவன் இல்லாமல், இன்னொரு கேரவன் இருக்கும். அதுல சிங்கீதம் ஶ்ரீனிவாசராவ் சார் எல்லாரும் இருப்பாங்க. அவருக்கான சீன் முடிஞ்சதும், அந்த கேரவன்ல மும்பை எக்ஸ்பிரஸ் டிஸ்கஷனுக்குப் போயிடுவார். ஷாட் ரெடினு கூப்பிட்டா, அந்தப் பட மைண்ட்ல இருந்து உடனே இந்தப் படத்துக்கு வந்திடுவார். ஸ்பாட்லதான் டயலாக் என்னனு கேட்பார். அந்த சூழலையும் டயலாக்கையும் சொன்னவுடன் உள்வாங்கி அவருக்கான ஸ்டைல்ல கொடுப்பார். எல்லாமே மேக்ஸிமம் ஒரு டேக்தான். நடிச்சு முடிச்சிட்டு மறுபடியும் 'மும்பை எக்ஸ்பிரஸ்' வேலைக்குப் போயிடுவார்."

'' 'முன்னா பாய்' படத்துல சஞ்சய் தத் அப்பாவா அவருடைய அப்பா சுனில் தத்தே நடிச்சிருப்பார். இதுல நாகேஷை நடிக்க வெச்சிருப்பீங்க. அந்த ஐடியா யாருடையது?''

இயக்குநர் சரண் - நாகேஷ்
இயக்குநர் சரண் - நாகேஷ்

" 'என்னை கன்ட்ரோல் பண்ற மாதிரியான அப்பா கேரக்டர்ல நம்ம வாத்தியார் (கே.பி சார்) பண்ணா நல்லாயிருக்கும். கேட்டுப்பாருங்களேன்'னு கமல் சார் சொன்னார். கே.பி சார்கிட்ட கேட்டதுக்கு, "கமல் முன்னாடி என்னால நடிக்க முடியாதுடா. அவனை டைரக்ட் பண்றதுனா வந்திடுவேன். ஆனா, நடிக்கிறதெல்லாம் அதுவும் அவன் முன்னாடியெல்லாம் முடியாது போடா'னு சொல்லிட்டார். அப்புறம் கமல் சார் கொடுத்த ஐடியாதான் நாகேஷ் சார். இந்தியில நடிச்ச ரோகினி ஹட்டங்காடி மேடமையும் நடிக்க வெச்சோம். இதைவிட முக்கியமான விஷயம் என்னன்னா, ஆனந்த் (கோமாவில் இருப்பவர்) கேரக்டர்ல நடிக்க எத்தனையோ நடிகர்களை ஆடிஷன் பண்ணி பார்த்தேன். ஆனா, எனக்கு அந்த ஃபீல் வரலை. சரினு இந்தியில நடிச்ச யதின் கர்யேகரையே கூட்டிட்டு வந்து நடிக்க வெச்சோம்."

கருணாஸ் கேரக்டர்?

"கருணாஸ் 'அட்டகாசம்' படத்துல நடிச்சுட்டு இருந்தார். அப்போ அவர்கிட்ட 'நல்ல ரோல் இருந்தா சொல்றேன்'னு சொல்லியிருந்தேன். அவருக்கு நான் நினைச்சிருந்தது வட்டி கேரக்டர்தான். ஆனா, அவர்கிட்ட சொல்லலை. அப்புறம், அந்த கேரக்டருக்கு பிரபு சார் வந்தவுடன், இவருக்குனு வேறொரு கேரக்டர் எழுதி, அதுல நடிக்க வெச்சேன். சூப்பரா பண்ணியிருப்பார். 'ஹைட்டுனாலே பயம்னா... நான் அமிதாப் பச்சனை பார்த்தாலே பயப்படுவேன், இங்கிலீஷ் கக்கூஸுண்ணா... நான் வீட்டாண்ட போய் போய்க்கிறேன்'னு அவருடைய டயலாக் எல்லாம் நல்லா ரீச்சாச்சு."

''கமல் ஸ்பாட்ல கவுன்டர் கொடுக்கிறது எப்படியிருக்கும்?''

'வசூல் ராஜா MBBS'
'வசூல் ராஜா MBBS'

"கமல் சார், கிரேஸி சார், நான்னு மூணு பேருமே கே.பி சார் ஸ்கூல். அதனால, எங்களுக்குள்ள நல்ல கெமிஸ்ட்ரி இருந்தது. மூணு பக்கம் தேவைப்படுற சீனுக்கு 30 பக்கம் டயலாக் எழுதுவார், கிரேஸி சார். எல்லாமே அவ்ளோ அருமையா இருக்கும். அதுல நிறைய நல்ல டயலாக்குகளை தியாகம் பண்ணி 30 பக்கத்தை ரெண்டு பக்கமா சுருக்குவேன். மீதி இருக்கிற ஒரு பக்கம் கமல் சார் ஸ்பாட்ல டெலவப் பண்ணார்னா தேவைப்படும்னு வெச்சிருப்பேன். அதை எல்லாம் சூப்பரா பண்ணி அசத்திடுவார். நிறைய ஸ்பாட்ல பேசுவார். அதுல குறிப்பா எனக்கு ரொம்ப பிடிச்சதுனா, 'அன்பே வெங்கடாசலம் இல்லையா?'னு கமல் சார் கேட்பார். அப்போ சுவாமிநாதன் கேரக்டர்ல நடிச்சவர் 'அன்பே சிவம்தானே' சொன்னதும், 'அதான் ஏற்கெனவே சொல்லிட்டோமேனு இந்த முறை புதுசா இருக்கட்டுமேனு சொன்னேன்'றது ஸ்பாட்ல பேசினதுதான்."

''ஜெயசூர்யா நடிச்ச ஜாகீர் கேரக்டர் வந்த பிறகுதான், படத்துல எமோஷன் அதிகமாகும். அந்தக் கேரக்டர்ல மலையாள நடிகர் ஜெயசூர்யாவை நடிக்க வைக்க என்ன காரணம்?''

"ஜெயசூர்யாதான் என்னை அணுகி ஜாகீர் கேரக்டர் பண்றேன்னு சொன்னார். ரொம்ப நல்ல நடிகர். நானும் ஓகே சொல்லிட்டேன். நீங்க சொன்ன மாதிரி இந்த கேரக்டர் வந்தப் பிறகுதான், படம் ரொம்ப எமோஷனலா இருக்கும். எனக்கு இதுக்கு யாரை நடிக்க வைக்கலாம்னு எல்லாம் யோசிக்க நேரமேயில்லை. எல்லாமே தானா அமைஞ்சுடுச்சு."

15 நாள்கள்ல எப்படி கிரேஸி மோகன்கிட்ட டயலாக் வாங்குனீங்க?

'வசூல் ராஜா MBBS'
'வசூல் ராஜா MBBS'

"அவர் எப்போ டிஸ்கஷனுக்கு வருவார்னு எதிர்பார்த்துட்டு இருப்பேன். காரணம், அவ்ளோ ஜாலியா இருக்கும். அதே சமயம், ரொம்ப சீரியஸா இருப்பார். முதல் நாள் என்கிட்ட 'நாளைக்கு என்ன சீன் எடுக்கப்போறோம்?'னு கேட்டு நோட்ஸ் எடுத்துட்டு போயிடுவார். அதை காலையில 5 மணிக்கு எழுந்து ரெண்டு மணி நேரத்துல எழுதி முடிச்சுட்டு அவங்க டிரைவர்கிட்ட டயலாக் பேப்பரை கொடுத்து அனுப்புவார். இப்படித்தான் ஷூட்டிங் போவோம். அவர் வரும்போது சீவலை நெய்ல வறுத்து ஒரு டப்பாவுல போட்டு எடுத்துக்கிட்டு வருவார். நல்ல மூட்ல இருந்தால் சீவலை எடுத்து வாய்ல போட்டுக்கிட்டுதான் பேச ஆரம்பிப்பார். அந்த நெய்ல வறுத்த சீவலுக்கு நான் அடிமை. அவர் வந்தவுடன் கையை நீட்டுவேன். எனக்கு கொடுப்பார். ரொம்ப பாசிட்டிவான மனிதர். யாரைப் பத்தியும் புறம் பேசமாட்டார். அவர் எழுதினதை படிக்கும்போதே ஒரு உற்சாகம் வரும். அவர்கூட இருந்த ஒவ்வொரு நிமிஷமும் என்ஜாய் பண்ணேன். அவருக்கு எந்தளவுக்கு ஹியூமர் வருதோ அதே அளவுக்கு எமோஷனும் வரும். இப்போ அவர் இல்லாதது ரொம்ப வருத்தமா இருக்கு. தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய இழப்பு."

''தயாரிப்பு தரப்புல இருந்து ரீ-ஷூட் போலாம்னு சொன்னாங்களாமே?''

'வசூல் ராஜா MBBS'
'வசூல் ராஜா MBBS'

"படத்துக்கான ரீ ரெக்கார்டிங் போயிட்டிருந்தது. அப்போ தயாரிப்பாளருக்கு படத்தை போட்டுக்காட்டினேன். ரொம்ப அப்செட்டாகிட்டாங்க. 'உங்களை 'முன்னா பாய்' ரீமேக்தான் பண்ண சொன்னோம். ஆனா, இது வேற மாதிரி இருக்கு. இதுல நிறைய காமெடி இருக்கு. அதுல இருக்கிற கருத்து எப்படி ரீச்சாகும்... மறுபடியும் ரீ ஷூட் பண்ணலாம்'னு சொன்னாங்க. 'அங்கப் பண்ணதை அப்படியே நாம காப்பி பண்றதுக்கு, கமல் சாரோ, கிரேஸி சாரோ, நானோ தேவையில்லை. நிச்சயமா எல்லோருக்கும் பிடிக்கும்'னு சொல்லி அவங்களை சமாதானப்படுத்தினேன். 'வசூல் ராஜா' பண்ணிட்டு இருந்தபோதே தெலுங்குல சிரஞ்சீவி சாரை வெச்சு 'சங்கர் தாதா MBBS', கன்னடத்துல உபேந்திரா சாரை வெச்சு 'உப்பி தாதா MBBS'னு மொத்தம் மூணு படங்கள் தயாரிச்சுட்டு இருந்தாங்க. மத்த ரெண்டும் 'முன்னா பாய்' மாதிரியே இருக்கும். அதனால, அவங்களுக்கு சந்தேகம் வந்துடுச்சு."

''' அட்டகாசம்' ரெண்டு ஷெட்யூல் முடிச்சுட்டு இங்கே வந்தீங்க. இதை முடிச்சுட்டு அங்கப்போனதும் அஜித் என்ன சொன்னார்... அவர் படம் பார்த்தாரா?''

"வசூல் ராஜா முடிஞ்சவுடன் நான் அஜித் சாருக்குதான் போட்டு காட்டணும்னு நினைச்சேன். அவர் ரொம்ப ஹியூமர் சென்ஸ் உள்ளவர். அவர்கூட இருந்தா சிரிச்சுக்கிட்டே இருக்கலாம். எனக்கு 'வசூல் ராஜா' எப்படி வந்திருக்குனு தெரிஞ்சுக்கணும்னு நினைச்சு, அஜித் சார் - ஷாலினி மேடம் ரெண்டு பேரையும் வர வெச்சு அவங்களுக்குப் படத்தை போட்டுக் காட்டினேன். ரெண்டு பேரும் கைத்தட்டி சிரிச்சு ரொம்ப என்ஜாய் பண்ணாங்க. அப்போதான் எனக்கு காமெடி வொர்க் அவுட் ஆகிடுச்சுனு நம்பிக்கையே வந்தது. அப்புறம், 'அட்டகாசம்' மூணாவது ஷெட்யூலுக்கு வொர்க் பண்ண ஆரம்பிச்சுட்டேன்."

ராதிகா... 80'ஸ் மட்டுமா, மில்லினியல்ஸுக்கும் இவரைப் பிடிக்கும்... ஏன் தெரியுமா? #42YearsofRadhika

'முன்னா பாய் MBBS' படத்துடைய சீக்வெல் 'லகே ரஹோ முன்னா பாய்'னு வந்துச்சு. அதை தமிழ்ல ஏன் பண்ணலை?

"அதை ரீமேக் பண்ணவும் என்னை கேட்டாங்க. அந்தப் படம் இந்தியில நல்ல ஹிட். ஆனா, தமிழுக்கு அது செட்டாகாதுனு தோணுச்சு. அதனால, நான் மறுத்துட்டேன்."

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு