Published:Updated:

`` `சூரரைப் போற்று'னு டைட்டில் வெச்சதுக்கு ரெண்டு காரணம்!" - சுதா கொங்கரா

சூர்யாவை வைத்து `சூரரைப் போற்று’ படத்தை இயக்கியிருக்கும் சுதா கொங்கராவுடன் ஒரு சின்ன உரையாடல்.

`இறுதிச்சுற்று’ படம் மூலம் மாதவனின் இரண்டாம் சுற்றை ஆரம்பித்து வைத்த இயக்குநர் சுதா கொங்கரா, தற்போது சூர்யாவை வைத்து `சூரரைப் போற்று’ படத்தை இயக்கியிருக்கிறார். அவரைச் சந்தித்துப் பேசினோம்.

``இந்தப் படம் ஏர் டெகான் நிறுவனத்தின் உரிமையாளர் ஜி.ஆர்.கோபிநாத்தின் பயோபிக்தானா?"

சூர்யா
சூர்யா

``இது ஜி.ஆர்.கோபிநாத்தோட வாழ்க்கை கதையில இருந்து இன்ஸ்பயராகி எடுத்த படம்தான். ஆனா, சினிமாவுக்கான சில விஷயங்களைச் சேர்த்து இந்தக் கதையை எழுதியிருக்கேன். இது முழுக்க, முழுக்க அவரோட கதையில்லை. நான் முதலில் இந்தக் கதையை 44 பக்கத்துக்குத்தான் எழுதியிருந்தேன். என்னோட நண்பர்கள் அதைப் பார்த்துட்டு, `இந்த மனுஷன் எப்படி இவ்வளவு விஷயங்களைப் பண்ணார்’னு ஆச்சர்யமா கேட்டாங்க. அதுதான் இந்தப் படத்தை எடுக்கத் தூண்டுச்சு.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``நடிகர், நடிகைகளின் வாழ்க்கையை அல்லது அரசியல்வாதிகளின் வாழ்க்கையைப் படமாக எடுக்கும்போது, படம் பார்க்கிற ஆடியன்ஸுக்கு ஈசியா கனெக்ட் ஆகும். ஜி.ஆர்.கோபிநாத் போன்ற சினிமா ஆடியன்ஸுக்கு அதிகம் பரிச்சயம் இல்லாத நபர்களில் வாழ்க்கையை படமாக எடுக்கும்போது அதில் என்னென்ன பிளஸ் அண்ட் மைனஸ் இருக்கு?"

சூரரைப் போற்று
சூரரைப் போற்று

``இந்தக் கேள்வியிலேயே படத்தோட ஒரு பிளஸ் பாயின்ட் இருக்கு. மக்களுக்கு அதிகம் பரிச்சயம் இல்லாத ஒருத்தரின் கதையா இது இருக்கும்போது கண்டிப்பா அவங்களுக்குப் புதுசா தெரியும். அந்தக் கதை நல்லா இருக்கும்போது, கண்டிப்பா அது மக்களுக்கும் பிடிக்கும். ஜி.ஆர்.கோபிநாத்தின் சாதனைகள் பத்திப் பலருக்கும் தெரியாது. இந்தப் படத்தில் அதைப் பார்க்கும்போது, கண்டிப்பா மக்களுக்குப் பிடிக்கும். இதுதான் படத்தோட மிகப்பெரிய ப்ளஸ். மைனஸ்னு சொல்றதைவிட, இந்தக் கதையைப் படமா எடுக்குறதுல சில சிரமங்கள் இருந்துச்சுனு சொல்லலாம். அப்படி நான் ஃபீல் பண்றது என்னன்னா, இது ரொம்ப டெக்னிக்கலானப் படம். ஏர்லைன்ஸ், ஏரோப்ளைன், பிசினஸ்னு ஈசியா புரிஞ்சிக்க முடியாத சில விஷயங்களை எளிமைப்படுத்தி, மக்கள் மனசை டச் பண்ற மாதிரி படமாக்கியிருக்கோம். அதுதான் கொஞ்சம் சிரமமா இருந்துச்சு.’’

``தெலுங்கு நடிகர் மோகன் பாபுவை ரொம்ப வருஷம் கழிச்சு தமிழில் நடிக்க வெச்சுருக்கீங்களே?"

suriya and mohan babu
suriya and mohan babu

``மோகன் பாபு சாரோட வேலை பார்த்தது மறக்கமுடியாத அனுபவம். காலையில 6 மணிக்கு ஷூட்டிங்னா, 5.45 மணிக்கே சாப்பிட்டு, மேக்கப் போட்டு ஸ்பாட்டுக்கு வந்திடுவார். அவ்வளவு டெடிகேஷன். தன்னால எந்த விஷயமும் லேட்டாகிடக் கூடாதுனு நினைப்பார். அவருக்குத் தமிழ் சரியா வராது. இருந்தாலும், அவரையே டப்பிங் பேச வெச்சுருக்கேன். அவர் சிவாஜி சாரோட நடிச்சப்போ, அவர் நடிச்ச கேரக்டருக்கு வேற ஒரு ஆளை டப்பிங் பேச வைக்கலாம்னு முடிவு பண்ணுனாங்களாம். ஆனா, சிவாஜி சார் இவர்தான் பேசணும்னு சொல்லி, இவரையே டப்பிங் பண்ண வெச்சாங்க. அந்த அனுபவத்தை எல்லாம் எங்ககிட்ட சொன்னப்போ, ரொம்பவே சந்தோஷமா இருந்துச்சு.’’

``ஜி.வி.பிரகாஷ்குமார் இப்போ பிஸியான நடிகர். அந்த பிஸி ஷெட்யூலில் இந்தப் படத்துகாக இசை வேலையை எப்படி பண்ணினார்?"

``இப்போவரைக்கும் ஜி.வி-யால ஒரு விஷயம்கூட லேட் ஆகலை. எனக்கு கால் உடைஞ்சு, நான் நடக்க முடியாம இருந்த சமயத்தில, ஜி.வி என் ஆஃபிஸுக்கு வந்து டியூன் கம்போஸ் பண்ணார். டீசரோட ஃபைனல் கட் ரெடியாகுறதுக்கு ஒரு மாசத்துக்கு முன்னாடியே டீசர் மியூசிக்கை போட்டுக்கொடுத்தார். இப்படி ஒரு இசையமைப்பாளர் கிடைக்கிறது ரொம்பவே கஷ்டம்.’’

`` `Period - End Of Sentence' எனும் ஆவணக் குறும்படத்துக்காக ஆஸ்கர் விருது வாங்கிய தயாரிப்பாளர் குனீத் மொங்கா எப்படி இந்தப் படத்துக்குள்ள வந்தாங்க?"

சூரரைப் போற்று
சூரரைப் போற்று

``என் நண்பர் மூலமா எனக்கு அறிமுகமானவங்கதான் குனீத் மொங்கா. அப்படி பழக்கமாகி, ஒரு நாள் இந்தக் கதையை அவங்ககிட்ட சொன்னேன். இந்தக் கதையைக் கேட்டதுல இருந்தே, `இந்தப் படத்தை நான் தயாரிக்கணும்’னு சொல்லிட்டே இருந்தாங்க. என்னைப் பார்க்கும்போதெல்லாம், `சுதா அந்த மதுரைக்காரரோட கதையைப் படமாக பண்ணும்போது, கண்டிப்பா சொல்லுங்க’னு சொல்வாங்க. இப்படி சூர்யா இந்தப் படத்தை தயாரிக்கிறேன்னு சொல்றதுக்கு முன்னாடியே இவங்க இந்தப் படத்தோட தயாரிப்பாளராகிட்டாங்க. அதுக்கப்பறம் சூர்யாவே இந்தப் படத்தை தயாரிக்கிறேன்னு சொன்னதும், குனீத் மொங்கா சூர்யாவோட சேர்ந்து இந்தப் படத்தை தயாரிக்கிறேன்னு சொன்னாங்க.’’

`` `சூரரைப் போற்று’னு டைட்டில் வைக்க என்ன காரணம்..?"

``இதை ரெண்டு விதமா எடுத்துக்கலாம். ஒண்ணு, பாரதியாரோட கவிதைப்படி, சூரன்னா அறிவாளி, எல்லாத்தையும் கத்துக்கிட்டவன். அவனைப் போற்றணும்னு `அச்சம் தவிர்’ கவிதையில் எழுதியிருப்பார். அதன்படி பார்த்தாலும் இந்த டைட்டில், ஹீரோவோட கேரக்டருக்கு செட்டாகும். பலர் பேர் போன வழியில பயணிக்காம தனக்கென ஒரு வழியை உருவாக்கி அதில் வெற்றிகொண்ட, பிசினஸில் சூரசம்ஹாரம் செய்த ஒரு சூரரைப் போற்றுன்னும் சொல்லலாம். இந்த ரெண்டு விஷயங்களுக்காகத்தான் இந்த டைட்டிலை வெச்சோம்.’’

``சூர்யாவோட கரியரில் இப்போதுதான் முதல் முறையாக பெண் இயக்குநரின் படத்தில் நடிக்கிறார். இதுக்கு ஜோதிகாவோட ரியாக்‌ஷன் என்ன?"

சூர்யா
சூர்யா

``என் படத்தில் நடிக்கிறவங்க யாரும் என்னை ஒரு பெண் இயக்குநரா பார்த்ததே இல்லை. அதே மாதிரிதான் சூர்யாவும். ரொம்ப வருஷமா நாங்க பழகுறனால, என்னைப் பெண் இயக்குநர்னு அவர் பிரிச்சுப் பார்த்தது இல்லை. அதே மாதிரி, நானும் ஜோதிகாவும் ரொம்ப வருஷமாகவே நண்பர்கள்தான். ஜோதிகாவை வெச்சு விளம்பரப் படம் எடுத்திருக்கேன். சூர்யா இந்தக் கதைக்கு ஓகே சொன்னதுக்கு அப்பறம், ஜோதிகாவுக்கு நான் இந்தக் கதையை படிக்கக் கொடுத்தேன். படிச்சு முடிச்சதும், `சூர்யா இந்த மாதிரியான ஒரு கதையில் கண்டிப்பா நடிக்கணும்’னு சொன்னாங்க.’’

`நேரில் வரமுடியாத என் தாய், போனில் கேட்டுக் கொண்டிருக்கிறார்!' - மாணவி பேச்சால் கண்கலங்கிய சூர்யா

``பல வருஷமா சினிமாத்துறையில் பயணப்பட்டுட்டு இருக்கீங்க. பல சிரமங்கள் இருந்தபோதும், எந்த விஷயம் உங்களை முன்நோக்கி ஓட வைக்குது?"

`` 'நீ இதை பண்ணக் கூடாது’னு ஒருத்தவங்க சொன்னா, அதை நான் பண்ணணும்னு நினைப்பேன். அதுதான் என்னை ஓட வைக்குதுனு நினைக்கிறேன். அதுமட்டுமல்லாம, என் படத்தைப் பார்க்கிற ஆடியன்ஸோட ரெஸ்பான்ஸைப் பார்க்கிறதுக்கு எனக்கு ரொம்பப் பிடிக்கும். `பிகே’ படத்தோட டைரக்டர் ராஜ்குமார் ஹிரானி, `இறுதிச்சுற்று’ படத்தைப் பார்த்துட்டு, என்னைக் கட்டிப்பிடிச்சு அழுதார். அதுதான் ஒரு கிரியேட்டருக்குத் தேவை. அதெல்லாம் பார்க்கும்போதுதான், இன்னும் பல பிரச்னைகள் வந்தாலும் நாம ஓடலாம்னு தோண வைக்குது.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு