Published:Updated:

``அஜித்கூட நடிக்கவேண்டியது ஜோதிகா இல்லை..?!'' - இயக்குநர் துரை #20YearsofMugavari

நடிகர் அஜித்தின் கரியரில் முக்கியமான படம் `முகவரி'. படம் வெளியாகி 20 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. இயக்குநர் வி.இசட்.துரையிடம் பேசினேன்.

``எனக்கு அப்பா, அம்மா வச்ச பெயர் பீர் மொய்தீன். இது என்னோட தாத்தா பெயர். அதனால, என் பாட்டி என்னை பீர் மொய்தீன்னு கூப்பிட மாட்டாங்க. `துரை’னுதான் கூப்பிடுவாங்க. அந்தச் செல்லப் பெயரைத்தான் வீட்டுல இருக்கிறவங்களும் கூப்பிட ஆரம்பிச்சாங்க. அது ஸ்கூல், காலேஜ் வரைக்கும் வந்துச்சு. ஒரு கட்டத்துக்கு மேல அதுவே என்னோட பெயரா மாறிடுச்சு. இயக்குநர் ஆனதுக்கு அப்புறமும் அந்தப் பெயரையே டைட்டில் கார்டிலும் போடலாம்னு முடிவு பண்ணிட்டேன். அந்தப் பெயரோடு என் அப்பா, அம்மா பெயர்களின் முதல் எழுத்தையும் சேர்த்து, வி.இசட்.துரைனு போட்டுக்கிட்டேன். இப்படித்தான் பீர் மொய்தீன், வி.விசட்.துரையாக மாறினான்...’’ - தன் 20 வருட சினிமா பயணத்தை பேசத்தொடங்கினார் இயக்குநர் வி.இசட்.துரை.

``முதல் படமான `முகவரி’யில் பெரிய டீமை எப்படி சமாளிச்சீங்க?"

VZ Durai
VZ Durai

``எனக்கு பெருசா அனுபவம் இல்லைனாலும், நான் பார்க்கப்போறே வேலையில் தெளிவா இருந்தேன். சீன் பை சீன் எல்லாமே எப்படி இருக்கணும்னு பக்காவா பிளான் பண்ணியிருந்தேன். அதைப் படத்தோட கேமராமேன் பி.சி.ஸ்ரீராம் சார்கிட்ட சொன்னதும், அவர் உடனே ஓகே சொல்லிட்டார். என் முதல் படத்திலேயே பாலகுமாரன் சார் வசனம், பி.சி சார் கேமரா, தேவா சார் இசை, அஜித், ஜோதிகா, ரகுவரன்னு பெரிய நடிகர்கள் இருந்தாங்க. ஆனால், எனக்கு எந்த பயமும் இல்லை. முதல் நாள் ஷூட்டிங்கிலேயே பி.சி சார்கிட்ட பிரச்னை வர மாதிரி ஆகிடுச்சு. முதலில் இந்தப் படத்துக்கு ஹீரோயினா இஷா கோபிகர்தான் கமிட்டாகி இருந்தாங்க. அவங்களை வெச்சுதான் முதல் நாள் ஷூட்டிங் ஆரம்பிச்சோம். அஜித்துக்கு நாளு நாள் கழிச்சுதான் ஷூட் இருந்துச்சு. முதல் ஷாட்டை என் ஸ்கிரிப்ட் பேப்பரில் கேமராவை எங்க வைக்கணும்னு எழுதி இருந்தேனோ, அந்த இடத்தில் பி.சி சார் வைக்காமல் வேற இடத்தில் வெச்சிருந்தார். அப்போ நான் அவர்கிட்ட, `சார், இந்த சீனுக்கு கேமரா இங்க இருக்கக் கூடாதே’னு கேட்டதுக்கு, `இந்த ஷாட் ரொம்ப நல்லா வரும் துரை’னு சொன்னார். `உங்க அளவுக்கு எனக்கு கேமராவைப் பற்றி தெரியாது. ஆனால், இது எனக்கு முதல் படம். இந்த சீனில் கேமராவை என் ஸ்கிரிப்ட்டில் இருக்கிற மாதிரி நீங்க வெச்சால்தான், அடுத்த சீன் தொடர்ச்சியா இருக்கும். அப்படித்தான் நான் எழுதியிருக்கேன். நீங்க மாத்திட்டால், அடுத்த சீனுக்கும் நான் மாத்தணும். அப்படியே எல்லாத்தையும் மாத்துற மாதிரி வந்திடும் சார். எனக்குதான் இது பிரச்னை ஆகும்’னு சொன்னதும், `குட். உனக்கு என்ன வேணும்கிறதுல நீ தெளிவா இருக்க. ஓகே’னு சொல்லி ஸ்கிரிப்ட் படி கேமராவை மாற்றினார்.

ajith
ajith

முதல் மூணு நாள் எடுத்த காட்சிகளைத் தயாரிப்பாளர் பார்த்துட்டு, `நல்லா இருக்கு. இப்படியே போயிடலாம்’னு சொன்னார். ஆனால், எனக்கு ஹீரோயின் செட்டாகாத மாதிரி இருந்துச்சு. அதைத் தயாரிப்பாளர்கிட்ட சொன்னதும், `என்னப்பா... இப்போ வந்து இப்படி சொல்ற’னு ஷாக்கானார். `சார்... அவங்க நல்லாதான் நடிக்கிறாங்க. ஆனால், இந்தக் கேரக்டருக்கு அவங்க சரியில்லாத மாதிரி இருக்கு’னு சொல்லி ஜோதிகாவை கமிட் பண்ணினோம். இது பி.சி சாருக்கு தெரிஞ்சதும் கொஞ்சம் கோபப்பட்டார். `ஹீரோயினை மாத்துனா சொல்ல மாட்டீங்களா’னு கேட்டார். ஜோதிகா நடிச்ச முதல் நாள் ஷூட்டிங்கைப் பார்த்த தயாரிப்பாளரும் பி.சி சாரும் என் முடிவு சரிதான்னு பாராட்டுனாங்க. அஜித்துக்கு நான் கதையே சொல்லாததனால, தினமும் ஸ்பாட்டுக்கு வந்து அன்னைக்கு என்னென்ன சீன்ஸ் எடுக்கப்போறோமோ அதை மட்டும் கேட்டுப்பார். `ஓ சூப்பர்’னு அந்த சீனுக்கு தயாராக ஆரம்பிச்சிடுவார். ஒரு நாள் ஷூட்டிங்கில் ஜோதிகாகிட்ட, `என்னை வெச்சுதான் படம் பண்ணுவேன்னு துரை அடம்பிடிச்சார். எப்படியோ ஒரு வழியா அதை நடத்தியும் காட்டிட்டார்’னு சொன்னார். ஒவ்வொரு நாளும் அன்னைக்கு எடுக்கப்போற சீனை கேட்டுட்டு ரொம்பவே உற்சாகமா இருப்பார். டப்பிங்கில் படம் பார்த்துட்டு, `இதுவரைக்கும் நான் பண்ணின படங்களுக்கு டப்பிங் பேசும்போது, இன்னும் நல்லா பண்ணியிருக்கலாம்னு நினைப்பேன். ஆனால், இந்தப் படத்தில் நான் என்னை பார்க்கவேயில்லை. அந்த ஸ்ரீதர் கேரக்டர்தான் என் கண்ணுல தெரியுது’னு அவர் நடிச்சதைப் பார்த்து அவரே ஆச்சர்யப்பட்டார். ரீ-ரிக்கார்டிங் முடிஞ்சதும் படம் பார்த்த அஜித், `நீங்க சொன்ன மாதிரி நல்ல படம் எடுத்துட்டீங்க. இப்போ நான் சொன்ன மாதிரி உங்களுக்கு கார் கொடுக்குறேன்’னு சொல்லி, கார் கிஃப்ட் பண்ணார்.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``அஜித், விக்ரம், சிம்புனு தொடர்ந்த உங்க ஹீரோக்களின் தேர்வு பரத், ஷாம்னு மாறினது ஏன்..?"

Bharath in Nepali Movie
Bharath in Nepali Movie

``நான் செலக்ட் பண்ணுன ஹீரோக்கள் எல்லாருமே அந்த சமயத்தில் தொடர்ந்து ஹிட் கொடுத்துட்டு பீக்ல இருந்தவங்கதான். அப்படித்தான் அஜித், விக்ரம், சிம்புனு இவங்களை வெச்சு படம் பண்ணிட்டு, `எம்டன் மகன்’, `வெயில்’ பட ஹிட்டுக்கு அப்புறம் பரத்தை வெச்சு `நேபாளி’ படம் பண்ணேன். நான் எந்த ஹீரோ கூட படம் பண்றேனோ அந்த ஹீரோக்கள் என் முந்தைய படங்களுக்கு ரசிகரா இருப்பாங்க. அப்படித்தான் பரத்தும் `தொட்டி ஜெயா’ மாதிரி நாமளும் ஒரு படம் பண்ணலாம்னு சொன்னார். `நேபாளி’ படத்தில் லவ் போர்ஷன் எடுக்கும்போது, `நானா இவ்ளோ அழகா இருக்கேன்’னு சொல்லிட்டே நடிச்சார். `நேபாளி’ எனக்கும் பரத்துக்கும் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்துச்சு.’’

``நடிகராகவும் சில படங்களில் நடிச்சிருக்கீங்க; அந்த அனுபவம் எப்படி இருந்தது..?"

`` `முகவரி’ படத்தில் என்னை நடிக்கச் சொன்னது அஜித்தான். அந்த சீனை அவர்கிட்ட சொல்லும்போதே, `அந்த இயக்குநர் ரோலை நீங்களே பண்ணிடுங்க’னு சொன்னார். ஆனால், அது எனக்கு சிரமமா இல்லை. ஏன்னா, அது என் கதை. அதை நான் பல பேர்கிட்ட சொல்லியிருக்கேன். அப்படியே அந்த சீனை நான் கேமரா முன்னாடி சொல்லப்போறேன். அவ்வளவுதான்னு ஈஸியா நான் பண்ணிட்டேன். ஆனால், `ரமணா’வில் நடிக்கிறதுக்கு கொஞ்சம் பயந்தேன்னு சொல்லலாம். முருகதாஸும் நானும் ஒரே செட். அதனால, அவர்கிட்ட என் கதைகளை சொல்லியிருக்கேன். நான் கதைகளைச் சொல்லும்போது என்னோட முகபாவனைகளைப் பார்த்த முருகதாஸ், `நண்பா நீங்க நடிக்கலாமே’னு சொல்லியிருக்கார். இதையும், `முகவரி’ படத்துல நான் நடிச்சதையும் பார்த்துட்டுத்தான், ` `ரமணா’ படத்துல ஒரு கேரக்டர் இருக்கு. அதை நீங்கதான் பண்ணணும்’னு சொன்னார். முதலில் விளையாட்டாகக் கேட்கிறார்னு நினைச்சுக்கிட்டு, `நான் பண்ணவே மாட்டேன்’னு சொல்லிட்டேன். ஒரு நாள் முருகதாஸ் போன் பண்ணி, `நண்பா, விஜயகாந்த் சார்கிட்ட நீங்க பேசுற மாதிரி சீன். அவரோட போர்ஷன் எடுத்தாச்சு. நீங்க வந்துட்டா உங்க போர்ஷனை எடுத்திடலாம்’னு சொன்னார். அப்போதான் அவர் சீரியஸாவே என்னை நடிக்க வைக்கணும்னு நினைக்கிறார்னு தெரிஞ்சுக்கிட்டேன். உடனே கிளம்பிப்போய், இரண்டரை மணி நேரத்தில் என்னோட போர்ஷனை ஃபுல்லா நடிச்சுக் கொடுத்துட்டேன். என் மாமா இப்ராஹிம் ராவுத்தரும் விஜயகாந்த் சாரும் நல்ல நண்பர்ங்கிறதுனால, எனக்கு விஜயகாந்த் சாரும் நல்ல பழக்கம். என்னை `ரமணா’ ஷூட்டிங்கில் பார்த்ததும், `ஏய் துரை... நீதான் நடிக்கப்போறீயா. நான்கூட வேற ஆளோனு நினைச்சேன்’னு சொல்லி, என் நடிப்பையும் பாராட்டினார். இப்போ வரைக்கும் என்னை பார்க்கிற மக்கள், `நீங்க ரமணாவுல நடிச்சவர்தானேனு சொல்லுவாங்க. அந்தளவுக்கு எனக்கு ஒரு நல்ல ரீச்சைக் கொடுத்துச்சு.’’

இயக்குநர் வி.இசட்.துரையின் முழுமையான பேட்டி இந்த வாரம் வெளியாகி இருக்கும் ஆனந்த விகடன் இதழில் வெளியாகியிருக்கிறது.

“அஜித் என் டைரக்‌ஷனில் நடிக்கத் தயங்கினார்”
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு