Published:Updated:

`லவ் லைஃப்; கௌதம் சார் கொடுத்த `நச்’ அட்வைஸ்!’ - `ஈரமான ரோஜாவே' ஷியாம் ஷேரிங்ஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், ஷியாம்
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், ஷியாம்

ஒவ்வொரு முறை அவரை சந்திக்கும் போதெல்லாம், நான் கொஞ்சம் எக்ஸைட் ஆகி, `சார் எப்படியாச்சும் ஹீரோவாகணும். என்னை ப்ரூஃப் பண்ணணும்'னு பேசுவேன்.

ஈரமான ரோஜாவே சீரியலில், புகழ் - அகிலா ஜோடியின் கெமிஸ்ட்ரி க்யூட் ரகம். புகழ் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஷியாம், பல்வேறு டான்ஸ் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்குபெற்று அசத்தியவர். தற்போது, வெள்ளித்திரையிலும் மின்னத் தொடங்கிவிட்டார். தன் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய இரண்டு முக்கிய நபர்கள் பற்றி நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

ஷியாம்
ஷியாம்

``சில வருடங்களுக்கு முன்பு, என் நண்பரோட காபி ஷாப் போயிருந்தேன். அங்குதான் கௌதம் சாரை முதன்முதலா நேரில் பார்த்தேன். அவரைப் பார்த்ததும் ஓடிப்போய் பேசினேன். என் கனவு இயக்குநர் நீங்க, உங்களை ரொம்பப் பிடிக்கும், அப்படி இப்படின்னு எல்லாத்தையும் பேசினேன். அப்புறம் சினிமா மேல எனக்கிருந்த ஆர்வத்தைப் பார்த்து அவரே. `அச்சம் என்பது மடமையடா' படத்துக்கு ஆடிஷனுக்குக் கூப்பிட்டார்.

விஷ்ணு விஷாலின் எஃப்.ஐ.ஆர் படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் மனு ஆனந்த், என்னை ஆடிஷன் பண்ணித் தேர்வு பண்ணார். அந்தச் சமயத்தில் மனு ஆனந்த், கௌதம் சாரிடம் உதவி இயக்குநராக இருந்தார். இப்படித்தான் வெள்ளித்திரைக்குப் போனேன். அதுவும் கௌதம் சாரின் செட் என்னோட ட்ரீம் லேண்ட் மாதிரி இருந்துச்சு. அங்க எல்லாமே அழகா இருக்கும். செட்ல எங்ககூட நிறையா நேரம் பேசுவார்.

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், ஷியாம்
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், ஷியாம்

கௌதம் வாசுதேவ் மேனன் சார் ரொம்ப ஃபிரெண்ட்லி. ஒருவரை அவருக்கு பெர்சனலா தெரிஞ்சிட்டா போதும் அவர் அளவுக்கு யாராலயும் அக்கறை காட்ட முடியாது. என் விஷயத்திலும் அப்படிதான். என் காதல், கேரியர் எல்லாமே அவருக்குத் தெரியும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நடிப்பு, பெர்சனாலிட்டி இதை தாண்டி வாழ்க்கைப் பாடங்கள் நிறையா சொல்லுவார். ஒவ்வொரு முறையும் அவரைச் சந்திக்கும் போதெல்லாம், நான் கொஞ்சம் எக்ஸைட் ஆகி, சார் எப்படியாச்சும் ஹீரோவாகணும். என்னை ப்ரூஃப் பண்ணணும்னு பேசுவேன். அவர் எல்லாத்தையும் கேட்டுக்கொள்வார்.

ஷியாம்
ஷியாம்

திடீர்னு ஒருமுறை அவர்கிட்ட நேரடியா, சார் எனக்கு உங்ககூட உதவி இயக்குநரா பணிபுரியணும்னு கேட்டேன். அதற்கு அவர், `நீ ஒரு நல்ல நடிகன், நடிப்பை நோக்கிப் பயணி, இயக்குநர் ஆசை இப்போதைக்கு வேணாம்'னு சொன்னார்.

அதன் பிறகு, ஒரு தனியார் சேனலின் `மெட்ராஸ்’ அப்படிங்குற புராஜெக்ட்டுக்காக என் உடம்பைக் குறைச்சு, தாடி வெச்சு கெட் அப் மாத்தி ஷூட் பண்ணோம். அந்தத் தொடருக்காக மற்ற டான்ஸ் ஷோக்களை எல்லாத்தையும்விட்டு வெளிய வந்து கிட்டத்தட்ட 10 கிலோ உடம்பைக் குறைச்சேன். கேங்ஸ்டர் ஸ்டோரி அது. வடசென்னை பையன் மாதிரி உடல்மொழி வரக் கடுமையா ஹோம் வொர்க் பண்ணேன். ஒரு வருஷம் ஷூட் நடந்துச்சு. ஆனா, என்னுடைய போதாத நேரம் அந்தத் தொடர் வெளிவரவேயில்லை.

ஷியாம்
ஷியாம்

இதனிடையே கௌதம் சாரின் துருவ நட்சத்திரம் படத்தின் ஆடிஷனும் மிஸ் பண்ணிட்டேன். அப்புறம் அவரை சந்திச்சு இப்படியெல்லாம் ஆகிருச்சுன்னு சொல்லிப் புலம்பினேன். அவரின் `என்னை நோக்கி பாயும் தோட்டா’ படப் பிரச்னைகள் ஓடிக்கொண்டிருந்த நேரம் அது. என் பிரச்னைகளை முழுசா கேட்டுட்டு, ``என்னையும் நோக்கி நிறையா தோட்டாக்கள் பாயுது’னு சர்காஸ்டிக்கா பேசி என்னைச் சிரிக்க வெச்சார்.

`சினிமாக்காரர்கள் எல்லாருக்கும் இந்த மாதிரி பிரச்னைகள் வரத்தான் செய்யும். நீ காதல் திருமணம்தானே பண்ணிக்கிட்ட, உன் திருமண வாழ்க்கை எப்படிப்போகுது’ன்னு கேட்டார். எல்லா நிராகரிப்புகளையும் சந்திச்சு, இன்னமும் நான் தாக்குப் பிடிக்க ஒரே காரணம் என் காதல் மட்டும்தான் சார்’ன்னு சொன்னேன். அவர் உடனே, `வேற என்னய்யா வேணும், உனக்கு லவ் லைஃப் நல்லா இருந்தா உன் வாழ்க்கையே நல்லாருக்குன்னு அர்த்தம்’ன்னு சொல்லி என்னைத் தேற்றினார்.

சந்துரு துரையப்பா - ஷியாம்
சந்துரு துரையப்பா - ஷியாம்

நான் நிறையா சீரியல் நடிச்சிருந்தாலும் எனக்கு `புகழ்’ அப்படிங்குற கதாபாத்திரம் கொடுத்து, எனக்காக ஃபேன் பேஜ் உருவாகுற அளவுக்கு பேர் வாங்கிக் கொடுத்தது சந்துரு துரையப்பா சார்தான். அவரோட எழுத்துதான் அந்த சீரியலை இன்னும் அழகாக்குது. எனக்கு கொடுக்குற காதல் காட்சிகள் எல்லாம் அவர் வடிவமைக்கிறதுதான்.

`புகழ்’ கேரக்டர் மக்கள் மத்தியில் ரீச் ஆனதற்கு அவரோட அழகான வசனங்கள்தான் காரணம். சின்னத்திரைக்கு என்னை முதன்முதலா ஆடிஷன் பண்ணதும் சந்துரு சார்தான். அவர் என் வாழ்க்கையில் ரொம்ப ஸ்பெஷல். அவருக்கு நான் ரொம்பக் கடமைப்பட்டிருக்கேன்’’ என நெகிழ்ச்சியோடு பேசி முடித்தார் ஷ்யாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு