Published:Updated:

சினிமா விகடன்: டைட்டில் வச்சதே ‘ஜெயம்’ ரவிதான்!

“கதையைச் சொல்லும்போதே ரவி சார் ‘நோ’ சொல்ல மாட்டார்னு எனக்கு நம்பிக்கை இருந்தது.

பிரீமியம் ஸ்டோரி

‘`ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடந்துட்டு இருந்தப்போ இந்தக் கதையோட விதை என் மனசுல விழுந்துச்சு. அந்தப் போராட்டத்துக்குப் பின்னால் உள்ள அரசியலை மக்கள்கிட்ட சொல்லியே ஆகணும்னு நினைச்சு ‘பூமி’ படத்தோட கதையை எழுத ஆரம்பிச்சேன்’’ என்கிறார் படத்தின் இயக்குநர் லக்‌ஷ்மன். ‘ரோமியோ ஜூலியட்’ ‘போகன்’ படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஜெயம் ரவியுடன் இணைந்திருக்கும் லக்‌ஷ்மனைச் சந்தித்தேன்.

``மூன்றாவது முறையா ஜெயம் ரவியுடன் இணைஞ்சிருக்கீங்க. ஒருவேளை இந்தக் கதைக்கு ரவி ‘நோ’ சொல்லியிருந்தா யாரை ஹீரோவா போட்டிருப்பீங்க?’’

“கதையைச் சொல்லும்போதே ரவி சார் ‘நோ’ சொல்ல மாட்டார்னு எனக்கு நம்பிக்கை இருந்தது. அவருக்கு சமூக அக்கறை அதிகம்கிறதால் இந்தக் கதை கண்டிப்பா அவருக்குப் பிடிக்கும்னு எனக்குத் தெரியும். முதலில் ‘சர்வதிகாரி’ன்னுதான் டைட்டில் வெச்சிருந்தேன். ரவி சார்தான் ‘மக்களுடன் ஒன்றும்படி டைட்டில் வைக்கணும்டா’ன்னு சொல்லி ‘பூமி’ டைட்டிலைச் சொன்னார். இது அவரின் 25வது படம். இதை நான் இயக்குறது பெருமையா இருக்கு. ரவி சார் கேரக்டர் பெயர் பூமிநாதன். அவருடைய உடல்கட்டு நல்லா இருந்தது. அதற்கு ‘பொன்னியின் செல்வன்’ மணிரத்னத்துக்குத்தான் நன்றி சொல்லணும். ஷூட்டிங் நாள்களில் ரவி சார் குடும்பத்தில் இருந்த நேரத்தைவிட எங்களுடன் இருந்த நேரம்தான் அதிகம். அவர் மகன் ஆரவ் பர்த்டே கொண்டாட்டமே எங்க ஷூட்டிங் ஸ்பாட்டில்தான் நடந்துச்சு.”

சினிமா விகடன்: டைட்டில் வச்சதே ‘ஜெயம்’ ரவிதான்!
 லக்‌ஷ்மன்
லக்‌ஷ்மன்

``தியேட்டர் ரிலீஸுக்கு பிளான் பண்ணுன படம் இப்ப ஓ.டி.டி தளத்துல வெளிவருதே?’’

“படம் பார்க்கும்போதே, ‘இது தியேட்டருக்கான படம்’னு ஆடியன்ஸ் பீல் பண்ணுவாங்க. தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் மேடம்தான் படத்தை ஓ.டி.டி-யில் வெளியிடும் முடிவை எடுத்தாங்க. இன்றைய சூழலில் வேற வழியில்லையே? ஓ.டி.டி-யில் வெளியானதுக்குப் பிறகு தியேட்டரிலும் ரிலீஸ் ஆக வாய்ப்பிருக்குன்னு நம்புறேன். பார்ப்போம்!”

``விவசாயம் பற்றிப் பேசக்கூடிய படங்கள் நிறைய வந்துட்டுதான் இருக்கு. ‘பூமி’ படத்துல என்ன புதுசா சொல்லியிருக்கீங்க?’’

“விவசாயம் பற்றி நிறைய படங்கள் வருதுதான். ஆனா, இந்தப் படத்தின் கருத்து வேறமாதிரி இருக்கும். படம் பார்த்தாத்தான் அது தெரியும். படத்தின் ஸ்கிரிப்ட்டுக்காக நிறைய பீல்டு வொர்க் பண்ணியிருக்கேன். நிறைய புத்தகங்கள் படிச்சிருக்கேன். அதுக்காகப் படம் ரொம்ப சீரியஸா இருந்திடும்னு நினைச்சிடாதீங்க. பார்வையாளர்கள் ரசிக்கிற மாதிரியான கமர்ஷியல் படமாத்தான் எடுத்திருக்கேன். ஷங்கர் சார் எப்படி கருத்தையும் கமர்ஷியலா சொல்வாரோ, ‘பூமி’ படமும் அப்படி இருக்கும்.’’

சினிமா விகடன்: டைட்டில் வச்சதே ‘ஜெயம்’ ரவிதான்!

``வில்லனை பாலிவுட்ல இருந்து கூட்டிட்டு வந்திருக்கீங்களே?’’

‘‘ஆமா, ஒரு பவர்புல்லான வில்லனா இருக்கணும்னு நினைச்சேன். பாலிவுட்ல இருந்து ரோனித் ராயைக் கூட்டி வந்திருக்கேன். தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் என்பதால் நல்லா நடிக்கிறார். ‘பாலிவுட்ல கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டா நடிச்சுக்கிட்டிருக்கேன். வில்லனா நடிக்கச் சொல்றீங்களே?’ன்னு கேட்டார். ‘கண்டிப்பா இந்த ரோலுக்கு நீங்க பொருத்தமா இருப்பீங்க’ன்னு சொல்லி நடிக்க வெச்சிருக்கேன்.”

``ஏற்கெனவே இரண்டு படங்களில் ஹன்சிகா ஹீரோயினா இருந்திருக்காங்கன்னுதான் இப்ப நிதி அகர்வாலைக் கூட்டி வந்தீங்களா?’’

‘‘ஐயய்யோ, அப்படிலாம் இல்லைங்க. என் ரெண்டு படங்களிலும் நல்லா நடிச்ச திறமையான நடிகை ஹன்சிகா. அவங்களை வேணாம்னு சொல்வேனா? இந்தப் படத்தில் ஹீரோயினுக்கான ஸ்பேஸ் குறைவு. ரவி சார் கேரக்டருக்குத்தான் முக்கியத்துவம் இருக்கும். அதனால்தான் நிதி அகர்வாலை பிக்ஸ் பண்ணினேன்.’’

சினிமா விகடன்: டைட்டில் வச்சதே ‘ஜெயம்’ ரவிதான்!

``விவசாயிகள் பற்றிப் படமெடுத்திருக்கீங்க. டெல்லி விவசாயிகள் போராட்டத்தை எப்படிப் பார்க்கிறீங்க?’’

‘‘இந்தப் போராட்டத்துக்கு நிறைய காரணங்கள் இருக்கு. மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்கள் விவசாயிகள் வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் கொண்டுவரப் போறதில்லை. விவசாயிகள் வாழ்க்கை மேம்பட நிறைய விஷயங்கள் பண்ண வேண்டியிருக்கு.”

``எஸ்.ஜே.சூர்யாகிட்ட உதவி இயக்குநரா இருந்திருக்கீங்க, அவருக்கு எப்போ கதை ரெடி பண்ணப் போறீங்க?’’

“கதையெல்லாம் ரெடி பண்ணியாச்சு. சூர்யா சாரும் கேட்டுட்டு ‘ரொம்ப நல்லாருக்கு’ன்னு சொல்லிட்டார். சில கமிட்மென்ட்ஸ்னால சரியான டைம் இன்னும் அமையல. கூடிய சீக்கிரம் எல்லாம் நல்லபடியா நடக்கும்னு நினைக்குறேன்.’’

``வந்த வேகத்துல தயாரிப்பாளர் ஆனீங்க. அப்புறம் அதை விட்டுட்டீங்களே?’’

“24 வயசுல தயாரிப்பாளராகி ‘கள்வனின் காதலி’ படத்தை எடுத்தேன். படத்தோட தோல்விக்குப் பிறகு ரொம்ப சிரமப்பட்டேன். அந்தப் படத்தோட தோல்விதான் என்னை இயக்குநர் ஆக்குச்சு. இப்போ, ரொம்பத் தெளிவா இருக்கேன். சினிமாத் தொழிலின் நுட்பங்கள் தெரிஞ்சுகிட்டேன். சீக்கிரமே தயாரிப்பாளர் லக்‌ஷ்மனை எதிர்பார்க்கலாம்!’’

`` ‘பூமி’ படம் பற்றிக் கதைத் திருட்டு புகார் வந்ததே?’’

‘‘ரைட்டர் யூனியன்ல இருந்து இந்தப் புகார் பற்றி விசாரிக்கக் கூப்பிட்டாங்க. போனேன். ‘ரெண்டு பேர் கதையிலுமே மரபணு மாற்ற விதைகள் பற்றி வருது’ன்னு சொன்னாங்க. ‘யூடியூப் பார்த்தீங்கன்னா லட்சக்கணக்கான பேர் இதைப் பத்திப் பேசியிருக்காங்க. மேலும் புகார் கொடுத்திருக்கிற கார்த்திங்கிறவரையே இப்பதான் பார்க்கிறேன். இவர் கதை சொல்லி அதை நான் திருடிப் படமா எடுத்தாத்தானே தப்பு?’ன்னு கேட்டேன். ‘இல்ல லக்‌ஷ்மன், மரபணு மாற்ற விதையைப் பற்றிய கதையை உங்களுக்கு முன்னாடியே பதிவு பண்ணியிருக்கார்’னு ரைட்டர் யூனியன்ல இருந்து பதில் சொன்னாங்க. ‘சரிங்க சார், நான் என்ன பண்ணணும்’னு கேட்டேன். ‘தேங்க்ஸ் கார்டு போடணும்’னு சொன்னாங்க. ‘சரிங்க சார்’னு சொல்லிட்டு வந்துட்டேன். இந்த விஷயத்துல வேற என்ன பண்றதுன்னு எனக்குத் தெரியல. இனி, எத்தனையோ இயக்குநர்களும் மரபணு மாற்றம் பற்றிப் பேசத்தான் போறாங்க. யூனியன் விதின்னு ஒண்ணு இருக்குறப்போ அதை மீற முடியாது.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு