Published:Updated:

1,200 நடிகர்கள்... லட்சங்களில் சம்பளம்... ஆனால், ஷூட்டிங்குக்குத் தடை! - கே.ஜி.எஃப் 2 அப்டேட்ஸ்

Yash
Yash ( KGF )

கே.ஜி.எஃப் இரண்டாம் பாகத்துக்கான பணிகள் பரபரப்பாக நடந்துகொண்டிருக்க, `இயற்கை வளங்ளை பாதிக்கும் வகையில் படமாக்கப்படுகிறது' என்று ஶ்ரீனிவாஸ் என்பவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கிறார்.

கடந்த வருடம் வெளியான `கே.ஜி.எஃப்' படத்தின் முதல் பாகம் வைரல் ஹிட். `யார்யா இவரு... எனக்கே இவரை பார்க்கணும் போல இருக்கு' என்று மக்கள் கூகுளிடம் கேட்க, `இவர்தான் யஷ், சாண்டல்வுட்ல மாஸ் ஹீரோ' என பதில் சொன்னது கூகுள். முதல் பாகத்தைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்துக்கான பணிகள் பரபரப்பாக போய்க்கொண்டிருக்க, `இயற்கை வளங்ளை பாதிக்கும் வகையில் படமாக்கப்படுகிறது' என்று ஶ்ரீனிவாஸ் என்பவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கிறார்.

Prashanth Neel
Prashanth Neel
KGF

கே.ஜி.எஃப் படத்துக்கு கதை, திரைக்கதை எழுதி இயக்கியவர், பிரஷாந்த் நீல். இப்படத்துக்கு முன் `உக்ரம்' எனும் படத்தை இவர் இயக்கியிருக்கிறார். `கே.ஜி.எஃப்' இவருக்கு இரண்டாவது படம். ஏறத்தாழ 80 கோடி பட்ஜெட் கொண்ட இப்படத்தை, விஜய் கிரகண்டூர் என்பவர் தயாரித்திருந்தார். டீஸரும், டிரெய்லரும் வெளியான பிறகு படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமானது. படம் வெளியான பிறகு கன்னட ரசிகர்கள் தவிர மற்ற மொழி ரசிகர்களும் இதைப் பாராட்டித் தீர்த்தனர். 70, 80-களில் நடக்கும் விதமாக கதை எழுதப்பட்டதாலும், யஷ்-ஷின் ஸ்க்ரீன் ப்ரசென்ஸ் மக்களை வெகுவாகக் கவர்ந்தது. யஷ்ஷின் ரசிகர்கள் அவரது கட் அவுட்டுக்கு ஹெலிகாப்டரில் பறந்தெல்லாம் மலர்களைத் தூவி தங்கள் வெறியை வெளிக்காட்டினர்.

படம், இந்தளவுக்கு மாஸ் ஹிட்டடிக்கக் காரணம், பல்வேறு நபர்களின் உழைப்பு. நம்பகத்தன்மையின்மை, ஓவர் மசாலா என படத்தின் மீது ஏகப்பட்ட விமர்சனம் முன்வைத்தாலும், இப்படம் நம்மை என்டர்டெய்ன் செய்யத் தவறவில்லை. 7 பேர் கொண்ட குழுவை தனிப்படையாக அமைத்து படத்திற்காக ஆராய்ச்சியெல்லாம் மேற்கொண்டிருக்கிறார், இயக்குநர் பிரஷாந்த் நீல். அதுவும் போக, படத்தின் ஷூட்டிங் சமயத்தில் மழை காரணமாக செட்டின் சில பகுதிகள் நாசமடைந்துவிட்டது. அதைச் சரி செய்த பின்னரே படப்பிடிப்பு மேலும் தொடர்ந்திருக்கிறது. கன்னட சினிமாவில் முதல் முறையாக 5 மொழிகளில் தயாராகி வெளியானதும் கே.ஜி.எஃப்தான். அதுமட்டுமன்றி மஸ்திகுடியில் ஏற்பட்ட ஓர் விபத்தினால், மொத்த படக்குழுவுக்கும் இன்ஸூரன்ஸ் போடப்பட்ட பிறகே, படத்தின் ஷூட்டிங்கை தொடர்ந்திருக்கின்றனர்.

மாஸ்! மாஸ்!! மாஸோ மாஸ்!!! மாஸுக்கெல்லாம் மாஸ்!!!! அப்படியிருக்கிறது #KGF
மாஸ்! மாஸ்!! மாஸோ மாஸ்!!! மாஸுக்கெல்லாம் மாஸ்!!!! அப்படியிருக்கிறது #KGF

`கே.ஜி.எஃப்' முதல் பாகம் கொடுத்த பிரமாண்ட வெற்றியால் 2021-ல் வரப்போகும் இதன் இரண்டாம் பாகத்துக்கு எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. முதல் பாகத்தில் செட்டோடு சேர்த்து, கிராஃபிக்ஸும் படத்திற்கான விஷுவலைத் தூக்கிக் கொடுத்தது. இதற்காக கர்நாடாகாவில் உள்ள கோலார் கோல்டு ஃபீல்டுக்கு அருகில் உள்ள சைனைடு மலை எனும் இடத்தில் பிரமாண்ட செட் அமைத்து படத்தின் ஷூட்டிங்கை நடத்தி வந்தனர். முதல் பாகத்தின் ஷூட்டிங் அங்குதான் நடந்தது. படத்தின் தொடர்ச்சிக்காக இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கும் அதே செட்டில் தற்போது நடைபெற்று வந்தது. தனுஷ் `மன்மத ராசா' பாடலுக்கு 100 டிகிரி காய்ச்சலோடு குத்தாட்டம் போட்டதும் இந்த இடத்தில்தான்.

தற்போது, ஶ்ரீனிவாஸ் என்பவர், அந்தப் பகுதியில் இருக்கும் மலைகளைக் குடைந்து இந்தப் படத்திற்கான செட்டை அமைத்திருப்பதாகவும், இதனால் சுற்றுச் சூழல் மாசுபடுகிறது என்றும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த கோலார் நீதிமன்றம், ''இந்த வழக்கை முழுமையாக விசாரிக்கும் வரை குறிப்பிட்ட அந்த மலைப்பகுதியில் படப்பிடிப்புநடக்கக்கூடாது'' என தடை உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இதனால் கடும் வருத்தத்தில் இருக்கிறது படக்குழு.

Vikatan

படத்தில் கூட்டம் காட்டுவதற்காக பல்வேறு பகுதியைச் சேர்ந்த 1,200 பேரை நடிக்க வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு தினசரி 500 ரூபாய் சம்பளம் தருவதாகவும், இதிலேயே பல லட்சம் ரூபாய் செலவாவதாகும் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து கூறப்படுகிறது. முதல் பாகத்தைப்போல் இந்தப் பாகத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கும், படக்குழுவுக்கும் இன்ஷூரன்ஸ் போடப்பட்டிருக்கிறது. போக, பாரத் கோல்டு மைன் லிமிட்டெட் நிறுவனத்திடமும் (BGML) அரசாங்கத்திடமும் முறையாக அனுமதி பெற்றே படப்பிடிப்பை நடத்தி வருவதாக படக்குழுவின் சார்பாக வாதாடும் சாந்தி புஷன் சொல்கிறார்.

``நீதிமன்றத்தின் இந்த முடிவை நாங்கள் மதிக்கிறோம். தீர்ப்பு வரும் வரை சைனைடு மலையில் ஷூட்டிங் நடக்காது. `கே.ஜி.எஃப்' முதல் பாகத்தின் படப்பிடிப்பு 6 மாத காலம் இதே செட்டில்தான் நடைபெற்றது. படத்தின் தொடர்ச்சிக்காக இரண்டு மாதத்திற்கு முன்புதான் இங்கு படப்பிடிப்பைத் தொடங்கினோம். ஒரே நாளில் மொத்த படப்பிடிப்பும் முடிய இருந்த நிலையில் இப்படி ஆகிவிட்டது. இருப்பினும், சட்டப்படி இப்பிரச்னையை சமாளிப்போம்'' என்றார் தயாரிப்பாளர் கார்த்திக் கௌடா.

Sanjay Dutt
Sanjay Dutt

பாலிவுட் புகழ் சஞ்சய் தத் சமீபத்தில்தான் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். மேலும், `வடசென்னை' படப் புகழான சரண், இப்படத்தின் இளைய ராக்கி பாயாக நடிக்கிறார்.

தற்போது, படத்தின் மீது இப்படியொரு சர்ச்சை எழுந்திருப்பதால் அந்தப் பகுதியில் படப்பிடிப்பைத் தொடர நீதிமன்றம் தற்காலிகமாக தடை விதித்துள்ளது. வழக்கு முடியும் வரை ஹைதரபாத்தில் ஷூட்டிங்கைத் தொடர, படக்குழு முடிவுசெய்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு