Published:Updated:

பீரியட் ஃப்லிம், போர், மம்மூட்டி... எல்லாம் இருந்தும் `மாமாங்கம்' படத்தில் என்ன மிஸ்ஸிங்?

வெள்ளையர்களுக்குத் திருவிழா குறித்து மலையாளத்தில் விளக்கும் ஒருவர், தன் மொழிப்பெயர்ப்பாளனிடம் தான் கூறியதை அப்படியே ஆங்கிலத்தில் கூறுமாறும், இல்லாத எதையும் சேர்த்துச் சொல்ல வேண்டாம் என்றும் எச்சரிப்பார். இந்தப் படத்துக்கும் அவரின் அறிவுரை பொருந்தும்!

17-ம் நூற்றாண்டில், பரதப்புழா நதிக்கரையில் 12 வருடங்களுக்கு ஒருமுறை நிகழும் `மாமாங்கம்' திருவிழா வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல! சூழ்ச்சியால் தங்கள் வள்ளுவநாட்டை தன்வசப்படுத்திக்கொண்ட சாமுத்திரிகர்களை (Zamorins) பழிவாங்கத் தற்கொலைப் படை வீரர்களான சாவேரிகள் (Chavers) ஒவ்வொரு மாமாங்கத்திலும் தங்களின் கால் தடங்களைப் பதிப்பார்கள். ஒருமுறையேனும் அரசனைக் கொன்று, இழந்த கௌரவத்தை மீட்க நினைக்கும் சாவேரிகள் படையின் குறிப்பிட்ட மூன்று தலைமுறையைச் சேர்ந்த நாயகர்கள்தான் படத்தின் நாயகர்களும்.

மாமாங்கம்
மாமாங்கம்

சந்த்ரோத் மாமான் மற்றும் குருப்பச்சன் என இரண்டு பரிமாணங்களில் மம்மூட்டி. அவருக்கு அடுத்த தலைமுறை நாயகனாக சந்த்ரோத் பணிக்கராக உன்னி முகுந்தன். ஆனால், இவர்கள் இருவரையும்விட படத்தின் நாயகனாக நம் மனதில் அமர்வது மூன்றாம் தலைமுறையாக வரும் சிறுவன் சந்த்ரோத் சந்துண்ணி எனும் அச்சுதன்தான். இரண்டாம் பாதிவரை மம்மூட்டிக்குப் பெரிய வேலையில்லை. அவ்வப்போது மற்றவர்கள் சொல்லும் கதையில் வந்துபோனாலும், அவர் இந்தக் கதைக்கு நேரடிப் பங்காற்றுவதைப் பார்க்க நாம் இரண்டாம் பாதியின் இறுதிவரை காத்திருக்க வேண்டியிருக்கிறது. கொடுத்த பாத்திரத்தைச் சிறப்பாகச் செய்திருந்தாலும் மம்மூட்டியிடமிருந்து இன்னொரு `முன்னறியிப்பு' எப்போது வரும் என்று எதிர்பார்த்துப்போன ரசிகர்களுக்கு ஏமாற்றமே கிடைத்திருக்கும்.

முதல் காட்சியிலேயே மாமாங்கம் திருவிழாவைப் பிரமாண்டமாகக் காட்டி அதில் மம்மூட்டியை வைத்து ஆக்ஷன் பில்டப் கொடுத்து மலையாளத்திலும் மசாலா வாடையை வீசச் செய்திருக்கிறார்கள். கயிறுகட்டித் தூக்கி, ஹீரோ பறந்து பறந்து சண்டையிடும் காட்சிகளைத் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களே மறுபரிசீலனை செய்யும் காலகட்டத்தில் மலையாள சினிமா இதில் பின்னோக்கி நகர்வது ஏனோ? என்னதான் இதுவும் ஒரு கலை என்று சொல்லி வசனங்களிலேயே முட்டுக் கொடுத்தாலும் படத்தில் வேறு ஃபேன்டஸி எலிமென்ட்கள் எதுவும் இல்லாததால் இதை ஒருவித சமாளிப்பாகத்தான் பார்க்கத் தோன்றுகிறது.

மாமாங்கம்
மாமாங்கம்
கொடூரக் கொலைகள், கேங்ஸ்டர் நட்பு, டீ-ஏஜிங் புரட்சி! எப்படியிருக்கிறது ஸ்கார்சஸியின் #TheIrishman

`திருவிழாவில் அரங்கேறும் பழிவாங்கும் படலம்' என ஒற்றை வரிக்கதைதான் என்றாலும் அதை சுவாரஸ்யமாக, ஒரு கலாசாரப் பின்னணியுடன் சொல்லும் வாய்ப்பு இந்த மாமாங்கத்தில் இருக்கிறது. ஆனால், அதைக் காட்சிப்படுத்திய முறையும், வந்த கதையைப் பேசாமல் மூலக்கதைக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாத கதாபாத்திரங்களைக்கொண்டு கதையை நகர்த்தியிருப்பதும்தான் பிரச்னையே!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அம்மனின் அருள் கிடைத்துவிட்டதாகச் சொல்லிவிட்டு சாவேரிகளாக மாமாங்கத்துக்குப் புறப்படும் உன்னிமுகுந்தன் மற்றும் சிறுவன் அச்சுதனின் கதையை நேரடியாகச் சொல்வதை விட்டுவிட்டு சம்பந்தமே இல்லாமல் தங்கும் விடுதி, துப்பறியும் நிபுணர், வில்லனைத் திசை திருப்ப `மூக்குத்தி' பாட்டு என 80 மற்றும் 90-களின் மசாலாப் படங்களை நினைவூட்டுகிறார்கள். பிரச்சி தெஹ்லான், சித்திக், இனியா என அதில் தோன்றுபவர்கள் சிறப்பாகப் பங்காற்றி இருந்தாலும் எத்தனை நேரம்தான் இந்தக் கொலைக் குற்றத்தைத் துப்புத் துலக்குவார்கள் என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை.

Mamangam
Mamangam

இவை எல்லாவற்றையும் தாண்டி படத்தில் ஒரு சுவாரஸ்ய முடிச்சும் இருக்கிறது. 24 வருடங்களுக்கு முன்பு ஆக்ரோஷத்துடன் பழிவாங்கப் புறப்பட்ட மம்மூட்டி பின் ஏன் தலைமறைவாக அமைதி காக்கிறார்... பழிக்குப்பழி தீர்வாகாது என்ற அவரின் மனமாற்றத்துக்குக் காரணம் என்ன? மம்மூட்டி போன்ற ஒரு நடிகரை வைத்துக்கொண்டு இப்படியான விஷயங்களையும் கொஞ்சம் விரிவாக அலசியிருந்தால் இந்த 'மாமாங்கம்' அந்தத் திருவிழாவைப் போலவே களைகட்டியிருக்கும்.

சாவேரிகளாகப் பழிவாங்கப் போனவர்கள் பிணமானார்கள் என்ற சேதி வருமே தவிர அவர்களின் உடல் அவர்களின் உறவுகளுக்குத் திரும்பக் கிடைக்க வாய்ப்பேயில்லை. ஆனால், இந்தப் போரில் மாண்ட ஒரு சிறுவனின் உடல் திரும்பக் கிடைத்ததாய் வரலாறு சொல்கிறது. யார் அதை மீட்டுக்கொண்டு வந்தார்கள் என்பதற்குப் பல்வேறு கட்டுக்கதைகள் உலாவுகின்றன. இந்த ஒற்றை வரியை இறுதியில் ஒரு காட்சியில் மட்டும் வைத்துவிட்டு இதற்கு விடையாக ஒரு பலமான புனைவுக் கதையை அமைக்காமல் எங்கெங்கோ தடுமாறியிருக்கிறது திரைக்கதை.

Mamangam
Mamangam

அதேபோல், பழிக்குப் பழி வாங்க முயன்று இறந்துபோகும் ஆண்களின் பிணங்களுக்குப் பின்னால் அவர்களைப் போருக்கு அனுப்பும் பெண்களின் வைராக்கியமும் இருக்கிறது என்ற வசனத்துக்கு நியாயம் சேர்க்கும் காட்சிகளும் படத்தில் வலிமையாக இல்லை.

ஜெயச்சந்திரன் இசையில் 'மாமாங்கம்' பாடல் மட்டும் முறுக்கேற்றுகிறது. மனோஜ் பிள்ளையின் ஒளிப்பதிவு மற்றும் கமலக்கண்ணனின் VFX, திருவிழா செட்டுக்கு முடிந்தளவு நம்பகத்தன்மையைக் கொடுத்திருக்கிறது.

மனிதர் பாதி காட்டேரி மீதி!
Mamangam
Mamangam
படத்தின் தொடக்கத்தில் வெள்ளையர்களுக்குத் திருவிழா குறித்து மலையாளத்தில் விளக்கும் ஒருவர், தன் மொழிப்பெயர்ப்பாளனிடம் தான் கூறியதை அப்படியே ஆங்கிலத்தில் கூறுமாறும், இல்லாத எதையும் சேர்த்துச் சொல்ல வேண்டாம் என்றும் எச்சரிப்பார். இந்தப் படத்துக்கும் அவரின் அறிவுரை பொருந்தும்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு