Published:Updated:

``என்னோட பெயருக்குப் பின்னாடி நூறு புத்தகங்கள் இருக்கு!" - அரோல் கரோலி

ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டுக்குள் இருந்து வயலின் வாசித்து ஃபேஸ்புக் லைவ் மூலமாக ரசிகர்களைக் கவர்ந்த அரோலிடம் பேசினேன்.

``கொரோனா ஆரம்பிச்சதுல இருந்து இப்ப வரைக்கும் லாக் டௌன் போயிட்டிருக்கு. ரொம்ப போர் அடிக்குது. லாக் டௌன் தொடங்குறதுக்கு முன்னாடிதான் மனைவி அவங்க அம்மா வீட்டுக்குப் போனாங்க. அதனால, என்ன பண்றதுனு தெரியல. அதனால ஃபேஸ்புக் லைவ்ல மியூசிக் பண்ணலாம்னு முடிவு பண்ணினேன். வியூஸும், ரெஸ்பான்ஸும் நல்லா வந்தது. அவங்களுக்குப் பிடிச்ச பாடல்களைச் சொன்னாங்க. லைவ் வர்றதுக்கு ஒருநாள் முன்னாடி போஸ்ட் போட்டுட்டா போதும். நிறைய பாட்டை கமென்ட்ல சொல்வாங்க. அதெல்லாம் வாசிச்சேன். இளையராஜா சார் பாட்டு நிறைய பேர் கேட்டாங்க. இதுவும் ஒரு புதுவிதமான அனுபவமா இருக்கு. என்னோட ஃப்ரெண்ட்ஸ் சிலர் மியூசிக் கம்போஸரா இருக்காங்க. அவங்களோட சேர்ந்து க்ரூப்பா பண்ணா எப்படி இருக்கும்னு யோசிக்குறேன். இதுவரைக்கும் எதுவும் முடிவு பண்ணல. முக்கியமா, என்னோட மனைவி லைவ் பார்த்துட்டு நல்லா இருக்குனு சொன்னாங்க. நான் சோஷியல் மீடியாவுல ரொம்ப ஆக்டிவ் கிடையாது. ஆனா, மனைவி ஆக்டிவா இருக்கச் சொல்லிக் கேட்டுட்டே இருப்பாங்க."

அரோல் கரோலி
அரோல் கரோலி

``இந்த லைவ் பொறுத்தவரைக்கும் பெருசா எந்த டெக்னிக்கல் வேலையும் தேவைப்படல. ஒரு போன் மட்டும் போதும். அதுல தரமான ஒரு வீடியோ. இப்படித்தான் பொழுது போகுது. தவிர, இந்த லாக் டௌன் ஆரம்பிச்சதுல இருந்து வீட்டை நானே சுத்தப்படுத்திட்டு இருக்கேன். மனைவியும் ஊர்ல இல்லாதனால, பெரிய வித்தியாசம் இருக்கானு கேட்டா, கம்போஸருக்கு எந்த வித்தியாசமும் இருக்காதுனு நினைக்குறேன். கம்போஸர்ஸ் பெரும்பாலும் வீட்டுல இல்லைன்னா ஸ்டூடியோவுல இருப்போம். வெளியே வர்றதே அபூர்வம். அந்த வகையில எனக்கு எந்த வித்தியாசமும் தெரியல. ஆனா, அடிக்கடி எனக்கு பைக்ல ட்ரிப் போறது பிடிக்கும். இதெல்லாம் இல்லாததுதான் கொஞ்சம் கஷ்டமா இருக்கும். இருந்தாலும் சமூக விலகலை எல்லாரும் கடைப்பிடிக்கணும். அதனால வீட்டுக்குள்ளே இருக்கேன். தவிர, என்னைத் தேடி வந்த ரெண்டு ஸ்க்ரிப்ட் இருக்கு. அதைப் படிச்சிட்டு இருக்கேன். லாக் டௌன் நேரம் இதுக்குக் கொஞ்சம் பயனா இருக்கு. ரொம்ப நாளைக்கு முன்னாடி வாங்கி வெச்ச புத்தகமெல்லாம் இப்போ படிக்க ஆரம்பிச்சிருக்கேன். மக்கள்தான் ரொம்ப போர் அடிக்குதுனு சோசியல் மீடியாவுல மீம்ஸ் போட்டிருக்காங்க. எல்லாருக்கும் ஒரு சின்ன வாக்கிங் அல்லது பீச் போகணும்னு தோணும். முக்கியமா, நிறைய பேர் வெளியே பிரியாணி சாப்பிட ஆசையா இருக்காங்க. இது எல்லாத்தையும் தாண்டி எல்லாரும் கன்ட்ரோலா இருக்கணும். ஆனா, இந்த லாக் டௌன் முடிஞ்ச உடனே இப்ப கிடைச்சிருக்குற நேரம் கிடைக்கலனு கண்டிப்பா எல்லாரும் ஃபீல் பண்ணுவோம்'' என்ற அரோல் கரோலியிடன் கலவையான இயக்குநர்களிடம் வேலை பார்க்கும் அனுபவம் குறித்து கேட்டோம்.

``டைரக்டர்கிட்ட இருந்து ஸ்க்ரிப்ட் வந்தவுடனே படிக்க ஆரம்பிச்சிருவேன். மியூசிக்கு எந்தளவுக்கு ஸ்பேஸ் இருக்குனு பார்த்துட்டு அதுக்கு ஏத்த மாதிரி வேலை பார்ப்பேன். எனக்கு இந்த ஜானர்ல மட்டும்தான் படம் பண்ணணும்னு ஆசை இல்ல. எல்லா ஜானர்லயும் பண்ணணும். சொல்லப்போனா கமர்ஷியல் படங்களுக்கு மியூசிக் கம்போஸ் பண்ண ஆர்வமா இருக்கேன். இதுவரைக்கும் அரோல் ஒரு குறிப்பிட்ட ஜானர் படத்துக்குதான் மியூசிக் கம்போஸ் பண்ணுவான்னு இருக்குற இமேஜ் மாறிரும்னு நம்புறேன். `தெறி', `மெர்சல்' மாதிரியான படத்துகான ஸ்க்ரிப்ட் வர்றப்ப அந்த டைரக்‌ஷனல் போக ஆரம்பிச்சிருவேன். ஏற்கெனவே ஆரம்பிச்சிருக்கேன். பார்ப்போம்.''

அரோல் கரோலி
அரோல் கரோலி

``மிஷ்கினுடன் வேலை பார்த்த அனுபவம்?"

``எங்க ரெண்டு பேருக்குமான உறவு டெக்னிக்கல் பக்கமும் இருக்கும், ஒரு அப்பா மகன் உறவாகவும் இருக்கும். எனக்கு அவர் நல்ல நண்பர். மிஷ்கின் சார்கூட இருக்கப்ப பத்து மடங்கு உற்சாகமா இருக்கும். அவர் படங்களும் அதைத்தான் எதிர்பார்க்கும். பெரிய சவால் ஒண்ணு இருந்துட்டே இருக்கும். நிறைய நேரங்கள்ல ஸ்டூடியோ வருவார். அவர் பிஸியா இருந்தா அவர் எங்க இருக்காரோ நேரா நான் அங்க போயிடுவேன். `பிசாசு' படத்துல மியூஸிக் டைரக்டரா அறிமுகமாகுறப்ப, அவரைத்தான் புதுப் பெயர் செலக்ட் பண்ணி தரச் சொன்னேன். ஒரு நைட்ல நூறு புத்தகம் மேல புரட்டியிருப்போம். கடைசியில இருபது பெயரை ஃபில்டர் பண்ணோம். அப்படித்தான் கரோலி வந்தது. அதுக்கு அப்புறம் அருள்முருகன்ல இருக்கிற அருளை அரோல்னு மாத்திட்டேன். அப்படியே அரோல் கரோலி ஆகிட்டேன். இது இத்தாலி வயலினிஸ்ட் ஒருத்தரோட பெயர். மிஷ்கின் சார் படத்துலேயும் வயலின் இசை இருந்துட்டே இருக்கும்" என்றபடி சிரிக்கிறார் அரோல் கரோலி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு