Published:Updated:

பத்து வருஷத்துல வாழ்க்கையே மாறிடுச்சு!

எனக்கும் கெளதம் மேனன் சாருக்கும் காம்பினேஷன் சீனே இல்லை. அவர் எப்படி இந்தக் கதையில நடிக்க ஓகே சொன்னார்னு எனக்கே ஆச்சர்யம்தான்

பிரீமியம் ஸ்டோரி
நடன இயக்குநர் சாண்டி இப்போது ‘3.33’ என்ற படத்தில் நாயகனாக அறிமுகமாகவிருக்கிறார். நடனம், நடிப்பு என இரட்டைக் குதிரை சவாரி செய்துகொண்டிருக்கும் சாண்டியிடம் ஒரு சின்ன சாட்..!
பத்து வருஷத்துல வாழ்க்கையே மாறிடுச்சு!

`` ‘3.33’ எப்படி வந்திருக்கு?’’

‘`3.33 - இந்த நேரத்துல நடக்கிற விஷயம்தான் படம். ஹாரர் கலந்த த்ரில்லர் ஜானர்ல இருக்கும். குறிப்பா, அந்த நேரத்துல நடக்கிற அமானுஷ்ய விஷயங்கள் கனவா நனவான்னு தெரியாமல் குழப்பத்துலயும் பயத்துலயும் இருக்கிற கேரக்டர் என்னுடையது. அந்தக் கேரக்டருக்குள்ள வர்றதுக்கு ரொம்ப நேரம் எடுத்துக்கிட்டேன். தனியா இருந்து, அதுக்காக என்னை நானே பழக்கிக்கிட்டேன். எனக்கு ரொம்ப சர்ப்ரைஸான படம் இது. மக்கள் இதை எப்படி ஏத்துக்குவாங்கன்னு கொஞ்சம் பயமாதான் இருக்கு. ஏன்னா, சாண்டினா ரொம்ப ஜாலியா இருப்பான்னு தெரியும். என்னுடைய இயல்பும் அதுதான். ஆனா, இந்தப் படத்துல காமெடியே இருக்காது. படம் முழுக்க முழுக்க சீரியஸாதான் போகும். மக்கள் என்னைப் புதுசா பார்ப்பாங்க. ஏத்துப்பாங்கன்னு நம்புறேன். டயலாக் பெருசா இருக்காது. ரியாக்‌ஷன்தான் நிறைய இருக்கும். எனக்கே கொஞ்சம் நம்பிக்கை இல்லாமல் இருந்தது. ஆனா, என் மேல நம்பிக்கை வெச்ச இயக்குநர் சந்துருவுக்குத்தான் நன்றி சொல்லணும். இந்தப் படத்துக்குப் பிறகு, சில படங்கள் நடிக்க பேசிக்கிட்டிருக்கேன். அடுத்தடுத்து அறிவிப்புகள் வரும்.’’

``கெளதம் மேனன்கூட நடிச்சது எப்படி இருந்தது?’’

‘`எனக்கும் கெளதம் மேனன் சாருக்கும் காம்பினேஷன் சீனே இல்லை. அவர் எப்படி இந்தக் கதையில நடிக்க ஓகே சொன்னார்னு எனக்கே ஆச்சர்யம்தான். கதையும் இந்த கான்செப்டும் அவருக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அப்படித்தான் படத்துக்குள்ள வந்தார். அவர் போர்ஷன் கொஞ்சம் பார்த்தேன். கலக்கிட்டார். 3.33-ங்கிற நம்பரை ஆய்வு பண்ற ஒருத்தர். 3.33-னா என்னன்னு அவர்தான் சொல்லுவார். நான் நடிக்கிறது தெரிஞ்சவுடன் வாழ்த்து சொன்னார்.’’

பத்து வருஷத்துல வாழ்க்கையே மாறிடுச்சு!

``ரியாலிட்டி ஷோக்களில் உங்களுடைய கோரியோகிராபியில் ஒரு டிராமா இருக்கும். அது சினிமாவில் நடிக்கும்போது உதவியா இருந்ததா?’’

‘`ரொம்ப ரொம்ப உதவியா இருந்தது. எல்லா டான்ஸர்களுக்குள்ளேயும் நடிக்கிற திறமை இருக்கும். அதை எப்படித் தயார் பண்ணி வெளிக்கொண்டு வர்றாங்க என்பதில்தான் ஸ்பெஷல் இருக்கு. பிரபுதேவா மாஸ்டர், லாரன்ஸ் மாஸ்டர் எல்லாம் தனியே ஆக்டிங் கிளாஸ் போகலை. ஆனா, சூப்பரா பெர்ஃபாம் பண்றாங்க. அது மாதிரிதான். கோரியோகிராபியிலேயே ஒரு டிராமா மாதிரி பண்ணுனதால எனக்குக் கொஞ்சம் ப்ளஸ்தான். ஆனா, நான் கத்துக்க வேண்டியது அவ்ளோ இருக்கு. இந்தப் படத்துல பாடல்களே இல்லை.’’

``உங்களை நடிங்கன்னு ஆரம்பத்திலேயே சொன்ன நபர் யார்?’’

‘`நிறைய பேர் ‘நடிங்க’ன்னு சொல்லியிருக்காங்க. நிறைய பேர் ‘நடிக்காதீங்க’ன்னு சொன்னாங்க. ‘எதுக்கு உங்களுக்கு நடிப்பு? டான்ஸ்லேயே இருங்க. அதுதான் உங்களுக்கு செட்டாகும்’னு சொல்லியிருக்காங்க. டான்ஸ் டு நடிப்புல பிரபுதேவா மாஸ்டர், லாரன்ஸ் மாஸ்டருக்கு அடுத்து நான் அந்த இடத்துல இருக்கணும்னு எனக்கு ஆசை. ரெண்டு பேருமே படங்களும் நடிச்சுக்கிட்டு கோரியோகிராபியும் பண்றாங்க. அந்த மாதிரி இருக்கணும்னு நினைக்கிறேன். பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமாங்கிற மாதிரி, நடிச்சா ஹீரோதான்னு இல்லை. நல்ல கேரக்டரா இருந்தால், வித்தியாசமான கெட்டப் எல்லாம் போட்டு நடிக்கிற மாதிரி இருந்தால், ஜாலியா சந்தோஷமா பண்ணுவேன்.’’

பத்து வருஷத்துல வாழ்க்கையே மாறிடுச்சு!

``நிறைய பாடல்களில் நீங்க என்ட்ரியாகி வந்து ஆடுவீங்க. அதெல்லாம் இயக்குநர் முடிவு பண்றதா?’’

‘`ஆமா. இயக்குநர்கள் சின்ன கேமியோ பண்ணுங்கன்னு சொல்லுவாங்க. உண்மையா சொல்லணும்னா, அதுல எனக்கு உடன்பாடே இருக்காது. ஹீரோ ஆடிக்கிட்டிருக்கும்போது, நான் திடீர்னு உள்ளே வந்து ஆடினா, ‘யார்ரா இவன்’னு தோணும்ல. அது மாதிரிதான் எனக்கும் இருக்கும். இப்போ ‘சார்பட்டா’ படத்துல ‘வம்புல தும்புல...’ பாடல்ல ஒரு சின்ன டிராமா இருந்தது. அது பண்ணினேன். நாம வரணுமேங்கிறதுக்காகப் பண்ணக்கூடாது.’’

``இப்போ சாண்டின்னா யார்னு வெளியே தெரிஞ்சுடுச்சு. டான்ஸ், நடிப்புன்னு பிஸியா இருக்கீங்க. பத்து வருஷத்துக்கு முன்னாடி உங்களுக்கு எதிர்காலத்தைப் பத்தின பார்வை எப்படியிருந்தது?’’

‘`ஜாலியா சுத்திட்டு இருந்தேன். ‘இதெல்லாம் எங்க உருப்படப்போகுது’ங்கிற ரேஞ்ச்லதான் இருப்பேன். இப்போ அப்படியே மாறிடுச்சு. அப்போலாம் எனக்குக் கல்யாணமாகுமான்னே சந்தேகம் இருந்தது. இப்போ கல்யாணமாகி ரெண்டு குழந்தைகள் இருக்காங்க. அப்போ ‘கல்யாணம் பண்ணாதீங்க’ன்னு பசங்ககிட்ட சொல்லிக்கிட்டிருந்தேன். ஆனா, இப்போ ‘கல்யாணம் பண்ணுங்கடா, லைஃப் மாறும்’னு சொல்லிக்கிட்டிருக்கேன். இதுவே பெரிய மாற்றம்தான். சின்ன வயசுல பார்த்து ரசிச்ச, ரஜினி சார், கமல் சாரை எல்லாம் நேர்ல பார்ப்பேன்னு அப்போ யோசிச்சதில்லை. அவங்ககூட பேசி, ஆடி வேலை செய்றது ரொம்ப சந்தோஷமா இருக்கு. சில சமயங்கள்ல நாம இவங்ககூடவா பேசிக்கிட்டிருக்கோம்னு பிரமிப்பாவும் இருக்கும்.’’

பத்து வருஷத்துல வாழ்க்கையே மாறிடுச்சு!

``கமல்கூட தொடர்ந்து பயணிக்கிறது எப்படி இருக்கு?’’

‘`அவர்கூட பயணிக்கிறது ரொம்ப ரொம்ப சந்தோஷம். பிக்பாஸ்ல நான் இருந்த நாள்கள் பெரிய கிஃப்ட். அவர்கூட நிறைய பேசி நூறு நாள்கள் உள்ளே இருந்தேன். அவர் ‘என்ன சாண்டி?’ன்னு கூப்பிடும்போதெல்லாம் எனக்குள்ள அப்படியொரு சந்தோஷமா இருக்கும். அந்த சீசன் முடிச்சுட்டு, அடுத்த சீசன்ல புரொமோவுல வொர்க் பண்ணினேன். இப்போ லோகேஷ் பிரதர் என்னை ‘விக்ரம்’முக்கு கோரியோகிராபி பண்ணக் கூப்பிட்டவுடன் இன்னும் சந்தோஷம். கமல் சார் நடிக்கிறதைப் பார்க்கிறதே அவ்வளவு ஆச்சர்யமா இருக்கும். ரஜினி சார் சொன்ன மாதிரி, கலைத்தாய் கமல் சாரை இடுப்புல தூக்கி உட்கார வெச்சிருக்காங்க. அவருடைய ரியாக்‌ஷன்களைப் பார்க்க ஆயிரம் கண்கள் தேவை. அவருக்கும் எனக்கும் நடக்கிற உரையாடல் பெரும்பாலும் டான்ஸைப் பத்திதான் இருக்கும். அவரும் மாஸ்டரா இருந்ததனால அந்தக் கதையெல்லாம் சொல்லும்போது நான் ரொம்ப ஆர்வமா கேட்பேன். அவர் ஒரு அட்சயப்பாத்திரம் மாதிரி.’’

``லோகேஷ்கூட ‘விக்ரம்’ல வொர்க் பண்ணுனது எப்படி இருந்தது?’’

‘`லோகேஷ் செம ஜாலி. அதிகமா அன்பு காட்டுற நபர். இயக்குநர்ங்கிறதைத் தாண்டி ஒரு நட்பு இருக்கு. ரொம்ப சாஃப்ட். செம பாசிட்டிவான நபர். அவரை ரொம்ப லவ் பண்ண ஆரம்பிச்சுட்டேன். உங்களை ஒன்சைடா லவ் பண்ணிக்கிட்டிருக்கேன்னு அவர்கிட்டயே சொல்லியிருக்கேன். கமல் சாருடைய வெறி பிடிச்ச ரசிகர். ‘விக்ரம்’ படத்துல கமல் சாரை அப்படிக் காட்டியிருக்கார்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு