Published:Updated:

எங்கிருந்தாலும் அவன் அரசன், சிலம்பரசன்! - சிம்பு பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு #HBDSTR

வெறும் புகைப்படங்களால் லைம்-லைட்டில் வருவது சாதாரண விஷயமல்ல. அன்று திரையில் அவர் காட்டிய திறமைக்கான கைத்தட்டல்தான் இன்று வரை ஒலித்துக்கொண்டிருக்கிறது. சிம்புவைக் கேலி செய்பவர்களுக்கும் அவர் திறன் தெரியும்!

12 படங்களில் குழந்தை நட்சத்திரம், 19 வயதில் இளம் நட்சத்திரம், 21 வயதில் முன்னணி நட்சத்திரம்! 25 வயதுக்குள் திரைக்கதை, இயக்கம், பாடல்கள் எனத் திரையுலகின் முக்கியத் துறைகளில் தடம் பதித்த சகலகலா வல்லவன், சிலம்பரசன். எங்கிருந்தாலும் அவன் அரசன்!

குழந்தை நட்சத்திரமாக சிம்பு
குழந்தை நட்சத்திரமாக சிம்பு

`ஐ எம் எ லிட்டில் ஸ்டார், ஆவேன் நான் சூப்பர் ஸ்டார்' என சுட்டிச்சிறுவனாக சிம்பு ஆடிய மழலை ஆட்டம் கண்டு மலைத்துப்போனது தமிழ் சினிமா. 'எங்க வீட்டு வேலன்' என எண்ணற்ற குடும்பங்கள் சிம்புவை தத்தெடுத்த பிள்ளையாக அன்பு காட்டியது. குழந்தை நட்சத்திரமாக 12 படங்கள் நடித்து முடித்தவர், தந்தையின் கரம் பற்றித்தான் இளம் நாயகனாகவும் அடியெடுத்து வைத்தார். முதல் அடி கொஞ்சம் சறுக்கினாலும், அடுத்தடுத்த அடிகள் ஆழப்பதிந்தன. `கோவில்', `குத்து', `மன்மதன்' என ஒரே ஆண்டில் சிம்பு அடித்த ஹாட்ரிக், இளம் நடிகர்களிலும் முன்னணி நடிகர் எனும் அந்தஸ்தை பெற்றுத்தந்தது. லிட்டில் ஸ்டார், லிட்டில் சூப்பர் ஸ்டாராக மாறினார்.

`லிட்டில் சூப்பர் ஸ்டார்' சிலம்பரசனாக அவர் பயணித்த பாதையில் சிகரங்களையும் தொட்டார், சிரமங்களையும் தொட்டார். `தொட்டி ஜெயா', `காளை' போன்ற படங்கள் மக்களை ஈர்க்கவில்லை என்றாலும், அவற்றில் சிம்பு காட்டிய `மாஸ்' அவருக்கென ரசிகர்களை ஈர்த்துக்கொள்ளத் தவறவில்லை. மிக இளம் வயதிலேயே, மாஸான ஸ்க்ரீன் பிரசென்ஸ், எனர்ஜியான டான்ஸ் மூவ்மென்ட்ஸ், உடை முதல் உடல்மொழி வரை அத்தனையிலும் ஸ்டைல் எனத் தமிழ் சினிமாவின் `மாஸ் ஹீரோ'வாக வளர்ந்துகொண்டிருந்தார். அப்போது, `விரல் வித்தையும், விரசமான காட்சிகளையும் நீக்கிவிட்டால் சிம்பு படம் ஒன்றுமில்லை' என எழுந்துவந்த பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த படம்தான் `விண்ணைத்தாண்டி வருவாயா'.

சிம்பு
சிம்பு

அது, அதுவரை பார்த்திருந்த வழக்கமான சிம்புவும் இல்லை, சிம்பு படமும் இல்லை. படத்தின் அத்தனை ஃபிரேம்களிலும் அவர் இருந்தார். திரையிலிருந்து கண்களை எடுத்துவிடாத மாதிரி, மாயங்கள் நிகழ்த்திக்கொண்டிருந்தார். சிம்பு என்றால் `மாஸ்' எனும் விளக்கத்தில், `அண்ட் க்ளாஸ்' எனும் வார்த்தை புதிதாகச் சேர்ந்தது. லிட்டில் சூப்பர் ஸ்டார், அந்தப் படத்தில்தான் யங் சூப்பர் ஸ்டாராக மாறினார்! `வானம்' படத்தில் சிம்புவின் நடிப்பு, `அண்டர்ரேட்டட்' எனும் சொல்லுக்கு எடுத்துக்காட்டாய் மாறிப்போனது. அதைத் தொடர்ந்து வந்த `ஒஸ்தி'யும் பெரிதாய் சோபிக்கவில்லை. `போடா போடி'யும் பெரிதாய் பேசப்படவில்லை. என்ன வாழ்க்கைடா இது!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அடுத்து மூன்று ஆண்டுகள், சிம்பு நாயகனாக நடித்த ஒரு படமும் வெளியாகவில்லை. `போடா போடி'யில் சிக்ஸ்பேக்ஸில் பார்த்த சிம்பு, இடைப்பட்ட நாள்களில் அதிகம் எடை போட்டிருந்தார். சில படங்களில் கேமியோ கதாபாத்திரங்களில் வந்தார். `செக்கச்சிவந்த வானம்', `அச்சம் என்பது மடமையடா' படங்களைப் பார்வையாளர்கள் கொண்டாடினாலும், ரசிகர்களால் மனதாரக் கொண்டாட முடியவில்லை. அதில் சிம்பு அணிந்திருந்த ஆடைகள் மட்டும் எனர்ஜி, கரிஷ்மா என்பதற்கான ஃபேஷன் ஸ்டேட்மென்ட் ஆகிப்போனது.

சிம்பு
சிம்பு

தமிழ் சினிமாவின் சிறந்த டான்ஸர்களில் ஒருவர். எந்த வேடத்திற்கும் பொருந்திப்போகும் உடலமைப்பு என `மாஸ்' ஹீரோவுக்கான அத்தனை இலக்கணத்திற்கும் தன்னைப் பொருத்திக்கொண்டவர் அவர். திரைப்படங்கள் ரிலீஸாகும்போதுகூட, லைம்-லைட்டின் வெளிச்சம் பாயாத பல நடிகர்களைக் கொண்ட இத்திரையுலகில், வெறும் புகைப்படங்களால் லைம்-லைட்டில் வருவது சாதாரண விஷயமல்ல. அன்று திரையில் அவர் காட்டிய திறமைக்கான கைத்தட்டல்தான் இன்று வரை ஒலித்துக்கொண்டிருக்கிறது. சிம்புவைக் கேலி செய்பவர்களுக்கும் அவர் திறன் தெரியும்!

கிட்டத்தட்ட, பெரும் கலைஞன் ஒருவன் நம் கண் முன்னே தடுமாறிக்கொண்டிருக்கும் ஆதங்கம்தான் அது. கரம் தந்து அக்கலைஞனைத் தூக்கி நிறுத்தி, கரகோசங்கள் எழுப்பிக் கொண்டாடும் ஆசை, அத்தனை பேருக்குமே இருக்கிறது. சிம்புவுக்கும் அந்த ஆசை இருந்தால், இது நிச்சயம் நிகழும்! லிட்டில் ஸ்டாராக இருந்து லிட்டில் சூப்பர் ஸ்டாராக மாறினார். லிட்டில் சூப்பர் ஸ்டாராக இருந்து இளம்படையின் மனம் கவர்ந்த யங் சூப்பர் ஸ்டாராக மாறினார்.

சிம்பு பிறந்தநாள்
சிம்பு பிறந்தநாள்

தற்போது, அந்த யங் சூப்பர் ஸ்டார் மீண்டெழுந்து வரவேண்டும் என்பதே அவர் ரசிகர்களின் விருப்பம். எத்தனை பிரச்னைகளில் சிக்கினாலும் இத்தனை நாள் வரையிலும் சிம்பு ரசிகர்கள், சிம்புக்காகத் துணை நின்றார்கள். அவர்களுக்காக, அவர்களின் விருப்பத்தை விரைவில் நிறைவேற்றுவார் என நம்புவோம். பிறந்தநாள் வாழ்த்துகள் மிஸ்டர் எஸ்.டி.ஆர். சீக்கிரமே, ராஜாவா வாங்க!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு