Published:Updated:

அடையாளம்தான் பிரச்னை எனும்போது கழிவிரக்கம் எதற்கு... எப்படியிருக்கிறது `நசீர்'?!

`நசீர்' ஒரு மிக முக்கியமான முயற்சி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒரு பெரும் பயணத்தின் முதல் அடியை அது எடுத்துவைத்திருக்கிறது.

தமிழக இஸ்லாமிய மக்களின் வாழ்வியல், தமிழ் சினிமாக்களில் ஒருவித மிகைப்படுத்தப்பட்ட, யதார்த்தத்தில் இருந்து விலகிய அல்லது எதிர்மறையான முறையிலேயே பெரும்பாலும் சித்திரிக்கப்பட்டுள்ளன. அவர்களின் வாழ்வியலை அதன் இயல்பிலேயே அணுகிப் பதிவுசெய்த படைப்புகள் என்பது தமிழ் சினிமாவில் மிகவும் குறைவு. இந்தப் பெரும் வெற்றிடத்தின் சின்னஞ்சிறு பகுதியை நிரப்பியிருக்கிறது `நசீர்'.
Nasir
Nasir

இந்திய - டச்சு கூட்டுத்தயாரிப்பில் உருவாகியுள்ள `நசீர்' திரைப்படம், சுயாதீன திரைப்பட இயக்குநர் அருண் கார்த்திக்கின் இரண்டாவது படம்.`வி ஆர் ஒன் குளோபல் ஃபிலிம் ஃபெஸ்ட்டிவல்' எனும் திரைப்பட விழாவில் மற்றும் இணையத்தில் திரையிடப்பட்ட இப்படம், சினிமா ஆர்வலர்களின் மத்தியில் இப்போது பேசுபொருளாக மாறியிருக்கிறது. கோயம்புத்தூரில் வாழும் ஒரு இஸ்லாமிய குடும்பத் தலைவனின் ஒருநாள் வாழ்க்கையைப் பதிவுசெய்துள்ள இப்படம் எப்படியிருக்கிறது?

கதையின் நாயகன் நசீர். தன் மனைவிமீது அளவில்லா காதல் கொண்ட ஒரு கணவன். பதின்ம வயதாகியும் குழந்தைத்தனம் மாறாதிருக்கும் ஒரு சிறப்புக் குழந்தையின் தகப்பன். நோய் தின்றுகொண்டிருக்கும் தன் தாயை மீட்டெடுக்க வழி தேடிக்கொண்டிருக்கும் ஒரு மகன். நல்ல கவிஞன். துணிக்கடையில் விற்பனையாளராகப் பணிபுரியும் நசீர், பணியிடத்திலும் நேர்மையானவன். இவை அத்தனையையும் தாண்டி, அவன் ஓர் இஸ்லாமியன் எனும் காரணத்தினாலேயே அவன் வாழ்க்கையில் சந்திக்கும் அக, புற நெருக்கடிகளைக் காட்சிப்படுத்த முயன்றிருக்கிறது இப்படம்.

Nasir
Nasir

படத்தின் இறுதிக்காட்சி மிகவும் கனமானது. ஆனால், அதற்கு வந்து சேர்வதற்கான காட்சிகளில் பெரிதாய் மெனக்கெடாததும், பேசவந்த அரசியல் மீதான பார்வையில் உள்ள போதாமைகளும்தான் படத்தில் பிரச்னைகள். அடையாளத்தின் காரணமாகத்தான் அவர்கள் அச்சுறுதல்களுக்கு ஆளாகிறார்கள் எனும்போது, அதற்கு எதிரான போராட்டத்தில் அந்த அடையாளத்தை முன்னிறுத்துதலே முக்கியமானது. இங்குதான், படம் முழுமை அடையாமல் போய்விடுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நசீர் ஒரு இஸ்லாமியன் என்பதாலேயே நெருக்கடிக்கு ஆளாகிறான் எனச் சொல்லவரும் இயக்குநர், நசீரின் மீது இஸ்லாமியன் எனும் அடையாளத்தை அரைகுறையாகவே ஏற்றியிருக்கிறார். அதைத் தவிர்த்து நசீர் ஒரு நல்லவன், சாந்தமானவன், ஏழை, மொத்தக் குடும்பமும் அவன் உழைப்பை நம்பித்தான் இருக்கிறது, சிறப்புக் குழந்தையின் தந்தை என வேறு சில காரணிகள் மூலம் பார்வையாளர்களிடம் பரிவைக் கோருகிறார். சிலரின் மனதுக்குள் விதைக்கப்பட்டிருக்கும் இஸ்லாமிய வெறுப்பை கேள்விகேட்காமல், கழிவிரக்கக் காட்சிகளைக் கட்டமைத்திருக்கிறார்.

Nasir
Nasir

சவும்யானந்தா சாஹியின் ஒளிப்பதிவு, அட்டகாசம். ஒரு சதுர சட்டகத்துக்குள் அங்கு சுற்றியுள்ள அத்தனை விஷயங்களையும் சேகரித்திருக்கிறது. படத்தின் முதல் காட்சிக்கும், கடைசி காட்சிக்கும் உள்ள கனெக்ட் அற்புதமானது. படத்தொகுப்பாளர் அர்க்யா பாசு, அதீத நிதானத்தோடு காட்சிகளைத் தொகுத்திருக்கிறார். அந்த அதீத நிதானம், சில இடங்களில் அதிர்ச்சியையும் அயர்ச்சியையும் ஒருசேரத் தருகிறது. நடிகர்கள் குமரன் வளவன், பாக்கியம் சங்கர், ஜென்சன் திவாகர், ராஜேஷ், பிரசன்னா எல்லோருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

படத்தில் ஆண் - பெண் உறவுமுறை பற்றிய உரையாடல்கள் பல இடங்களில் வருகின்றன. அதற்கான காரணம், நசீர் பாத்திரத்தை இன்னும் தூய உள்ளம் கொண்டவராக, உணர வைப்பதற்காகவா எனத் தெரியவில்லை. இதுபோல சில பிரச்னைகள் இருந்தாலும், `நசீர்' ஒரு மிக முக்கியமான திரைப்படம். ஒரு பெரும் பயணத்தின் முதல் அடியை அது எடுத்துவைத்திருக்கிறது.

Nasir
Nasir
``சீக்கிரமே விஜய் சாரை இயக்குவேன். அந்தப் படம்..?'' - இயக்குநர் சுசீந்திரன்
நசீர், தன் மனைவிக்கு மல்லிகைப்பூ வாங்கித்தரும் காட்சி ஒன்றுபோதும். இதுவரை பேசப்படாத, பேசப்படவேண்டிய விஷயங்களை தைரியமாகப் பேசுவதற்குக் களம் அமைத்துக் கொடுத்திருக்கிறான். நன்றி 'நசீர்'!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு