Published:Updated:

தாம்பரத்தில் விமானத்தை இறக்கிய `சூரரைப் போற்று' பைலட் `சே' யார் தெரியுமா?!

"சைதன்யாங்கிற கேரக்டரைப் பத்தி நிறைய இன்புட்ஸ் கொடுத்தாங்க. ஸ்கிரிப்ட் ரீடிங் செஷன் ரொம்ப ரொம்ப உதவியா இருந்தது. சூர்யா சாரும் செம சப்போர்டிவ்." - `சூரரைப் போற்று' கிருஷ்ணகுமார் பேட்டி!

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'சூரரைப் போற்று' படத்துக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்து வருகிறது. படத்தில் நடித்த ஒவ்வொரு நடிகரைப் பற்றியும் சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அதில் முக்கியமானவர் சூர்யாவின் நண்பராக 'சே-சைதன்யா' கேரக்டரில் நடித்த கிருஷ்ணகுமார். தியேட்டர் நாடக உலகில் கேகே என அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் பல்வேறு நாடகங்களில் நடித்திருக்கிறார். எழுதி இயக்கியிருக்கிறார். இவர் மனைவி ரோஹினி ராவ் பாய்மரப்படகு போட்டிகளில் இந்தியாவுக்காகப் பல்வேறு பதக்கங்களை வென்றவர்.

பத்து வருஷமா மேடை நாடகக் கலைஞரா இருந்திருக்கீங்க. நாடகத்தின் மீதான ஆசை எப்போதிலிருந்து இருந்தது?

"நான் ஆறாவது படிக்கும்போது லிட்டில் தியேட்டர்ல ஒரு நாடகத்துக்கு போயிருந்தேன். அங்க சுந்தர் ராம்னு ஒரு நடிகர் சூப்பரா ஒரு கேரக்டர்ல நடிச்சிருந்தார். அங்க வந்திருந்தவங்க எல்லோருமே எழுந்து நின்னு கைத்தட்டினாங்க. அது என் மனசுல அப்படியே பதிஞ்சிடுச்சு. படிக்கிறதுக்காக அமெரிக்கா போனேன். எனக்கு நடிக்கணும்னு ஆசை. அப்புறம் எதுக்கு இன்ஜினீயரிங் படிச்சு நாலஞ்சு வருஷத்தை வீணாக்கணும்னு தோணுச்சு. சரினு ஸ்காலர்ஷிப் எல்லாம் விட்டுட்டு சென்னைக்கு வந்துட்டேன். அதே தியேட்டருக்கு போய் நடிப்பு கத்துக்கிட்டேன். அப்புறம் எழுதி இயக்க ஆரம்பிச்சுட்டேன். நான் நடிக்கிறதை கவனிச்சு ஒரு அமைப்பு என்னை கொரியாவுக்கு அனுப்பினாங்க. அங்க உலகத்துல இருக்கிற பலவிதமான கலைஞர்களோட பயணிக்க வாய்ப்பு கிடைச்சது. அதை இங்க வந்து மத்தவங்களுக்கு சொல்லிக்கொடுக்கலாம்னு ஆரம்பிச்ச பயணம் இது. பத்து வருஷமாகிடுச்சு. அந்த சமயத்துலதான் 'சூரரைப் போற்று' வாய்ப்பு வந்தது."

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தியேட்டர் அனுபவம் கொஞ்சம் கிடைச்சவுடன் நிறைய பேர் சினிமா பக்கம் வந்திடுவாங்க. ஆனா, நீங்க பத்து வருஷம் எப்படி அங்கேயே இருந்தீங்க?

கிருஷ்ணகுமார்
கிருஷ்ணகுமார்

"என்னைப் பொறுத்தவரை நடிப்புக்கலை அவ்ளோதான். புத்திசாலியான நடிகர்கள் இங்கிருந்து அங்க ஸ்கோர் பண்ணலாம். அங்கிருந்து இங்கே ஸ்கோர் பண்ணலாம். எல்லாமே பாடம்தான். என்கிட்ட அடிக்கடி கேட்கப்படுற கேள்வி 'பத்து வருஷமா எவ்ளோ கஷ்டப்பட்டீங்க?' அப்படிங்கிறதுதான். நான் காலேஜை விட்டுட்டு சென்னைக்கு திரும்ப வந்ததும் நிறைய கஷ்டப்பட்டேன். வேலையில்லை; வேலைக்கு ஏத்த தகுதியுமில்லை. இப்போ பேசுற நண்பர்கள் எல்லாம் அப்போ பேசமாட்டாங்க. கிரிக்கெட்டோ, வீடியோ கேமோ யாராவது பாராட்டணும்னு நாம விளையாடலை. நமக்கு பிடிச்சிருக்கு அதுக்காக விளையாடுறோம் அதுமாதிரிதான். தியேட்டர் ப்ளே பண்ணும்போது ஒரு சில மாதங்கள் தினமும் மூணு மணி நேரம்தான் தூங்குவேன். அந்தளவுக்கு வேலை இருக்கும். செட், லைட்டிங், டைரக்‌ஷன்னு எல்லாமே பண்ணுவேன். அந்த பத்து வருஷத்துல நிறைய பாடம், நிறைய சந்தோஷம் இருந்தது. அந்த நாள்கள்தான் என்னை இந்த மாதிரியான தருணத்துக்கு கூட்டிட்டு வந்திருக்கு."

படம் நடிக்கணும்னு எந்த மொமன்ட்ல தோணுச்சு?

"இதுக்கு நேர்மாறான பதில்தான் என்கிட்ட இருக்கு. 2010-ல ஒரு படம் பண்ணேன். நல்ல மக்கள்கூட வேலை செஞ்சேன். ஆனா, அந்த ப்ராசஸ் எனக்கு பிடிக்கலை. 'படிப்பெல்லாம் விட்டுட்டு இதைப் பண்றோம். இது இவ்ளோதானா?'னு தோணிடுச்சு. என்னை அது திருப்திப்படுத்தலை. தவிர, அந்த சமயத்துல எனக்கு பெருசா எதுவும் தெரியாது. அதுக்குப் பிறகுதான், நிறைய கத்துக்க ஆரம்பிச்சேன். நான் ஏற்கெனவே சொன்ன மாதிரி, நான் கத்துக்கிட்டதை மத்தவங்களுக்கு சொல்லித்தரணும்னு ஆசை. இப்போவும் எனக்கு சினிமாவுக்குள்ள போகணும்னு அவசியம் இல்லை. நெடுமாறன் ராஜாங்கம் சொல்ற மாதிரி என் பொண்டாட்டி நல்லா சம்பாதிக்கிறாங்க. மேடை நாடகம் மூலமா வர்ற வருமானத்துல சந்தோஷமான வாழ்க்கைதான் வாழ்ந்துட்டு இருக்கேன். தியேட்டர் ப்ளே, சினிமா எதுவா இருந்தாலும் அந்த ப்ராஜெக்ட்டும் என் கேரக்டரும் நல்லாயிருந்தால் ஜாலியா பண்ணுவேன்."

நீங்க 'சூரரைப் போற்று' படத்துக்குள்ள எப்படி வந்தீங்க?

கிருஷ்ணகுமார் - விவேக் பிரசன்னா
கிருஷ்ணகுமார் - விவேக் பிரசன்னா

"சுதா மேம் ஒவ்வொரு கேரக்டருக்கும் மிகச்சரியான நபர்களை நடிக்க வைக்கணும்னு ரொம்ப கவனமா இருந்தாங்க. ஒருமுறை நான் கிக் பாக்ஸிங் ட்ரெயினிங்காக தாய்லாந்து போயிருந்தபோது அங்க ஒரு பொண்ணு எனக்கு முடிவெட்டிவிட்டாங்க. அந்த ஹேர்ஸ்டைல்ல ஒரு வீடியோ எடுத்து சோஷியல் மீடியால அப்லோட் பண்ணிருந்தேன். அதைப் பார்த்துட்டு காஸ்ட்யூம் டிசைனர் பூர்ணிமா கூப்பிட்டாங்க. அவங்க என் மனைவியோட ஃப்ரெண்ட். 'இந்த மாதிரி ஒரு கேரக்டர்தான் தேடிக்கிட்டிருக்காங்க. அவரும் தியேட்டர் ஆர்டிஸ்ட்தானே'னு சொல்லிருக்காங்க. அவங்கக்கிட்ட பேசும்போது சுதா மேம் பெயரைச் சொன்னாங்க. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. காரணம், எனக்கு 'இறுதிச்சுற்று' ரொம்பப் பிடிக்கும். அவங்களை மீட் பண்ணதும் 'நீங்க முதல் சாய்ஸ் இல்லை. இருந்தாலும் ஆடிஷன் பண்ணி பார்க்கலாம். வொர்க் அவுட்டாச்சுனா பண்ணலாம்'னு சொன்னாங்க. அந்த சமயத்துல இந்தியில அஜய் தேவ்கனுடைய 'மைதான்' படத்துல ஒரு ஹைதரபாத் கால்பந்து வீரர் கேரக்டருக்கு நடிக்க ஒரு வாய்ப்பு வந்தது. ஆனா, அதுக்கு இன்னும் ஒல்லியான நபர் தேவைப்பட்டிருக்கார்னு தெரிஞ்சது. அதனால, அதுல நடிக்கலை. அப்புறம், இந்தப் படம் க்ளிக்காகிடுச்சு. சைதன்யாங்கிற கேரக்டரைப் பத்தி நிறைய இன்புட்ஸ் கொடுத்தாங்க. ஸ்கிரிப்ட் ரீடிங் செஷன் ரொம்ப ரொம்ப உதவியா இருந்தது. சூர்யா சாரும் செம சப்போர்டிவ். ஃப்ளைட் ஓட்டுற சீன் நடிக்கும்போது ஒரு பைலட் கூடவே இருந்து எனக்கு என்ன பண்ணணும்னு சொல்லிக்கொடுத்தார். அந்த பேஸிக் விஷயங்களைக் கத்துக்கிட்டு பண்ணதனாலதான் உண்மைத்தன்மையா இருந்தது."

சூர்யா - விவேக் பிரசன்னா - நீங்க உங்க மூணு பேருக்குள்ள நல்ல கெமிஸ்ட்ரி இருந்தது. எப்படி செட்டாச்சு?

"விவேக் பிரசன்னா சூப்பரான மனிதர். படத்துக்கான பூஜை போடும்போது, நான் தூரமா எங்கேயோ இருந்தேன். என்னைக் கூப்பிட்டு பக்கத்துல நிக்கவெச்சார். அங்கேயே எங்களுக்குள்ள நல்ல நட்பு உருவாகிடுச்சு. செட்ல எல்லா விஷயத்துக்கும் எனக்கு அவர் உதவி பண்ணார். தங்கமான மனுஷன். பெரிய நடிகர்களோட நடிக்கும்போது அந்த கெமிஸ்ட்ரி மெயின்டெயின் பண்றது சிரமம். ஆனா, சூர்யா சார் ரொம்ப க்ளோஸா இருந்தார். அதே அளவுல எல்லோருக்கும் மரியாதை கொடுப்பார். ஒரு சீன் முடிச்சுட்டு நானும் விவேக் பிரசன்னாவும் ஓரமா நின்னு சிரிச்சு பேசிட்டு இருந்தோம். சூர்யா சார் வேகமா வந்து 'முக்கியமான சீன் போயிட்டு இருக்கு. நீங்க என்னன்னா ஜாலியா சிரிச்சுட்டு இருக்கீங்க'ன்னு சத்தமா பேசினார். என்னன்னு புரியாம நாங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் பார்த்துக்கிட்டோம். 'பயந்துட்டீங்கல்ல... வாங்க காபி சாப்பிடலாம்'னு கூட்டிட்டு போனார். அதையெல்லாம் மறக்கவே முடியாது. இப்படி அப்பப்போ ஜாலியான மொமன்ட்டும் இருக்கும்."

ஊர்வசி, கருணாஸ், அபர்ணா, காளி வெங்கட்னு எல்லாருமே பயங்கரமா ஸ்கோர் பண்ணிருக்காங்க. அவங்களோட உங்களுக்கு நடந்த உரையாடல் பத்தி சொல்லுங்க.

சூர்யா - கிருஷ்ணகுமார்
சூர்யா - கிருஷ்ணகுமார்

"ஊர்வசி மேம் கலக்கிட்டாங்க. இத்தனை வருஷத்துல எவ்ளோ அனுபவங்கள் இருந்திருக்கும். அவங்களைப் பத்தி நான் சொல்லத் தேவையில்லை. அவங்களைப் பார்த்தா அம்மா ஃபீல் வரும். டப்பிங் பண்ணும்போது 'நல்லா பண்ணிருக்கப்பா'னு சொல்லிட்டு போனாங்க. ரொம்ப சந்தோஷமா இருந்தது. கருணாஸ் சார் அந்த சீனை ஒவ்வொரு டேக்லயும் மெருகேத்துவார். பேப்பர்ல இல்லாத டயலாக் ஏதாவது பேசிடுவார். சில நேரங்கள்ல சிரிப்பு வந்திடும். சிரிக்காமல் நடிச்சிடணும். ஒரு சீன்ல அப்பாவித்தனமா பேசுவார். அதுல எல்லாம் செமயா பண்ணிட்டார். காளி வெங்கட் ஸ்பாட்ல நடிக்கும்போதே அவ்ளோ எமோஷனா நடிப்பார். அவர்கிட்டேயே சொன்னேன். படத்துல கூப்பிடுற மாதிரிதான் இப்போ வரைக்கும் 'சே அண்ணா'னுதான் கூப்பிடுறாங்க. அபர்ணா ரொம்ப ஸ்வீட். கேரளாவுல இருந்து வந்து மதுரை வழக்குல பேசுறது அவ்ளோ சாதாரணம் கிடையாது. ஆனா, அதை சூப்பரா பண்ணிட்டாங்க. படம் இந்தளவுக்கு அழகா இருக்கிறதுக்கு டெக்னீஷியன்கள் மிகப்பெரிய பங்கு இருக்கு."

வீட்ல என்ன ரெஸ்பான்ஸ்?

"அம்மா, அப்பா, மனைவினு எல்லோருக்கும் ரொம்ப ரொம்ப சந்தோஷம். என் அப்பா இருபது முறை படம் பார்த்திருப்பார்."

அடுத்து என்ன?

"இதுவரைக்கும் ஒண்ணுமில்லை. இதுக்கு மேல ஏதாவது வாய்ப்புகள் வந்தால் நடிப்பேன். இந்தப் படத்துக்கு ஆதரவு கொடுத்த எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றி!"

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு