Published:Updated:

`குடிக்க தண்ணி இல்ல; குளத்துக்குள் கட்டடம் கட்டுறாங்க!'-அடிக்கல் நாட்டிய அமைச்சருக்கு எதிராக மக்கள்

Minister Doraikkannu
Minister Doraikkannu

தஞ்சாவூர் அருகே குளத்துக்குள் பல்நோக்கு சேவை மையக் கட்டடம் கட்டுவதற்கு வேளாண்மைத் துறை அமைச்சர் தலைமையில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. நீர் நிலைகளைக் காக்க வேண்டிய அரசே அதை அழிப்பது வேதனையை ஏற்படுத்துகிறது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் எனப் பலரும் இன்றைக்கு நீர் நிலைகளின் அவசியத்தை உணர்ந்து அக்கறையோடு களமிறங்கி ஏரி, குளம் உள்ளிட்டவற்றை மீட்டெடுத்து தங்களது சொந்தச் செலவில் தூர்வாரி பராமரிக்கவும் தொடங்கியுள்ளனர். இவை பலராலும் பாராட்டப்பட்டு பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளதுடன் தண்ணீர் சேமிப்பின் அவசியத்தை உணரவும் வைத்துள்ளது. இந்த நிலையில், தஞ்சாவூர் அருகே குளத்துக்குள் கட்டடம் கட்டும் பணியைத் தொடங்கியுள்ளது அரசு. நீர் நிலைகளைக் காக்க வேண்டிய அரசே இதுபோன்ற செயலைச் செய்வது அதிர்ச்சியடைய வைப்பதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

lake
lake

தஞ்சாவூர் அருகே உள்ள மருங்குளம் நாலு ரோடு பகுதியில் 5 ஏக்கர் பரப்பளவிலான குளம் உள்ளது. ஆளும் அ.தி.மு.க அரசு சார்பில் இந்தக் குளத்துக்குள் பல்நோக்கு சேவை மையக் கட்டடம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு தலைமையில் சில தினங்களுக்கு முன்பு பூமி பூஜை போடப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்ட இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைத்திலிங்கம், மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை மற்றும் அரசு அதிகாரிகள், ஆளும் கட்சிப் பிரமுகர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

இது குறித்து அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்களிடமும் சமூக ஆர்வலர்களிடமும் பேசினோம். ``எங்க ஊரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது இந்தக் குளம். மழைக் காலங்களில் மேட்டுப் பகுதியிலிருந்து வரும் நீரால் நிரம்பி இப்பகுதிக்கான நீர் ஆதாரமாகவும் விளங்கிவந்தது. நீர் வழிப்பாதைக்கென கால்வாய்களும் இருந்தன. எட்டு வருடங்களுக்கு மேலாகவே போதிய பராமரிப்பு இல்லாமல் போனதால் நீர் வழிப் பாதைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டன.

lake
lake

போதிய மழை, நீர் வழிப்பாதைகள் இல்லாமல் போனதால் எப்போதும் குளம் வறண்டு காணப்படுகிறது. கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள், `காடு விளைஞ்சென்ன மச்சான் நமக்கு கை காளும் தானே மிச்சம்' என்று. அதேபோல் தண்ணீர் இல்லை குளம்தான் இருக்கிறதே என நிம்மதியில் இருந்தோம். அதோடு என்றாவது ஒருநாள் இவையெல்லாம் சரியாகி குளத்துக்கு தண்ணீர் வரும் என்ற நம்பிக்கையிலும் இருந்தோம். இதில் மண்ணை அள்ளிப்போட்டுவிட்டது ஆளும் அரசு.

ஏற்கெனவே குளத்துக்குள் மின்வாரியத் துறை அலுவலகம், பொது விநியோகக் கட்டடம், குப்பை தரம் பிரித்தலுக்கான இடம், கிராம சேவை மையம், மகளிர் சுகாதார வளாகம் போன்ற கட்டடங்களை கட்டி செயல்படுத்தியுள்ளனர். பரந்து விரிந்து காணப்பட்ட குளம் இதுபோன்ற செயல்களால் சுருங்கிவிட்டது. தற்போது மீண்டும் குளத்துக்குள் பல்நோக்கு சேவை மையம் கட்டடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி பூமி பூஜை போடப்பட்டுள்ளது. மாநிலங்களவை உறுப்பினர் நிதியிலிருந்து ஒரு கோடியே 40 லட்சம் செலவில் இந்தக் கட்டடம் கட்டப்படுகிறது.

lake
lake

எங்களுக்கு இந்தக் கட்டடம் கட்டுவதும் சந்தோஷம்தான். இதனால் எங்கள் கிராமம் வளர்ச்சியடைகிறது என்பது வேறு. ஆனால், ஊராட்சிக்குச் சொந்தமான இடங்கள் நிறைய இருக்கும்போது குளத்துக்குள் இதைக் கட்டுவதுதான் கவலையைத் தருகிறது. ஏற்கெனவே குளத்துக்கு நடுவில் மழைநீரை சேமித்து பூமிக்கடியில் செல்வதுபோல் தொட்டியும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தத் திட்டம் பாதிக்கும் சூழ்நிலை ஏற்படும்.

வேளாண்மைத் துறை அமைச்சர் தலைமையில் இதற்கான விழா நடைபெற்றது இன்னும் கவலை அளிப்பதாக உள்ளது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவருவது, ஆறுகளில் முறையாக தண்ணீர் வராமல் போனது, போதிய மழை இல்லாதது போன்ற காரணங்களால் அடிக்கடி கடும் தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதனால் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறது. சில நேரம் குடிப்பதற்கே தண்ணீர் கிடைக்காத நிலையும் ஏற்படுகிறது.

Minister Doraikkannu
Minister Doraikkannu

இதைப் போக்க வேண்டும் என்றால் நீர் நிலைகளைப் பராமரிக்க வேண்டும் என்பதை உணர்ந்து சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள் களத்தில் இறங்கி அதற்கான செயலில் ஈடுபட்டுவருகின்றனர். எத்தனையோ நீர் நிலைகள் இன்றைக்கு மீட்டெடுக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இதை நினைத்துப் பலரும் சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அரசே மழைநீரை கட்டாயம் சேமிக்க வேண்டும் என உத்தரவு பிறபிக்க உள்ளதாக தகவல்கள் வருகின்றன. இந்த நிலையில், நீர் நிலைகளைக் காக்க வேண்டிய அரசே குளத்துக்குள் கட்டடம் கட்டும் பணியை தொடங்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. உடனே இதில் கவனம் செலுத்தி இந்தக் கட்டடத்தை எங்க ஊருக்குள் உள்ள வேறு இடத்தில் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படிச் செய்தால் இப்போது எங்கள் மனமும் ஒரு நாள் இந்தக் குளமும் நிச்சயம் குளிரும்'' என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு