Published:Updated:

`வேறு எந்தக் கோட்டமும் பெறாத சிறப்பு இது!' - அசத்தும் சேலம் ரயில்வே கோட்டம்

வீ கே.ரமேஷ்
VIJAYAKUMAR M

ரயில்வே வாரியத்தால் அடையாளம் காணப்பட்ட ஏ1 மற்றும் ஏ அந்தஸ்து பெற்றுள்ள ரயில் நிலையங்கள் அனைத்தும் ஐ.எஸ்.ஓ: 14001 தரச்சான்று பெற்றிருப்பது வேறு எந்தக் கோட்ட அலுவலகமும் பெறாத சிறப்பாகும்.

தென்னக ரயில்வே
தென்னக ரயில்வே

சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட சேலம் ரயில் நிலையம், கரூர் ரயில் நிலையம், ஈரோடு ரயில் நிலையம், திருப்பூர் ரயில் நிலையம், மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் என 5 ரயில் நிலையங்கள் ஐ.எஸ்.ஓ 14001:2015 (சுற்றுச்சூழல் மேலாண்மைத் திட்டம்) தரச் சான்று பெற்றிருப்பதால் தென்னிந்திய அளவில் சேலம் ரயில்வே கோட்டம் தனிச் சிறப்பையும், அனைவரின் பாராட்டுகளையும் பெற்றிருக்கிறது.

சேலம் ரயில்வே கோட்டம்
சேலம் ரயில்வே கோட்டம்
எம்.விஜயகுமார்

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி இந்திய ரயில்வே வாரியம் அந்தந்த ரயில்வே கோட்டங்களுக்கு 24 வழிகாட்டுதல்களைப் பின்பற்ற அறிவுறுத்தியது. இந்தவகையில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் வழிகாட்டுதல்கள் 36 ரயில் நிலையங்களில் பின்பற்றப்பட்டது. முதல்கட்டமாகச் சென்னை சென்ட்ரல், திருவனந்தபுரம், திருச்சி ஆகிய ரயில் நிலையங்கள் அடையாளம் காணப்பட்டன.

தற்போது இரண்டாம் கட்டமாக 720 ரயில் நிலையங்கள் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றிட அறிவுறுத்தப்பட்டது. அனைத்தும் ஏ1 மற்றும் ஏ அந்தஸ்து உள்ள ரயில் நிலையங்கள் அடையாளம் காணப்பட்டன. இந்நிலையில் சேலம் கோட்டத்திற்குட்பட்ட கோவை, சேலம், கரூர், திருப்பூர், மேட்டுப்பாளையம் ஆகிய ரயில் நிலையங்கள் தேசிய பசுமைத் தீர்ப்பாய வழிகாட்டுதல்களை பின்பற்றப்பட்டன. இந்த 24 வழிகாட்டுதல்கள் ஐ.எஸ்.ஓ:14001:2015 சுற்றுச்சூழல் மேலாண்மை தரம் பெறுவது முதல்படியாகும். அந்த வகையில் கோவை ரயில் நிலையம் ஏற்கெனவே ஒருங்கிணைந்த மேலாண்மை திட்டத்தில் ஐ.எஸ்.ஓ:14001 தரச்சான்று பெற்றது.

மாயா பீதாம்பரம்
மாயா பீதாம்பரம்

எனவே, இதர 5 ரயில் நிலையங்களுக்கும் ஐ.எஸ்.ஓ தரச் சான்று பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து குவெஸ்ட் தரச்சான்று நிறுவனம் மூலம் தணிக்கை மற்றும் சான்றிதழ் ஆய்வு செய்யப்பட்டது. முதல் கட்ட ஆய்வின் முடிவில் சேலம், கரூர், ஈரோடு, திருப்பூர், மேட்டுப்பாளையம் ஆகிய ரயில் நிலையங்களுக்கு குவெஸ்ட் நிறுவனம் ஐ.எஸ்.ஓ:14001:2015 தரச்சான்றிதழ் வழங்கியுள்ளது.

இதுபற்றி சேலம் ரயில்வே நிலைய உதவி வணிக மேலாளர் மாயா பீதாம்பரம், ``எங்க கோட்ட மேலாளரின் ஆலோசனைப்படி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் 24 வழிகாட்டுதல்களான ரயில் நிலையங்களின் நீர் பயன்பாடு குறித்து தணிக்கை செய்தல், மறுசுழற்சி, மழை நீர் சேகரிப்பு மூலம் நீர் பயன்பாட்டை குறைத்திடுதல். மின்சார சிக்கனத்தை வலியுறுத்தும் வகையில் எல்.இல்.டி மின் விளக்குகளைப் பொருத்துதல். பி.எல்.டி.சி மின்விசிறிகள், சூரிய ஒளி மின்சாரம் ஆகியவற்றை கடைப்பிடித்தல் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் மக்கும் மக்காத கழிவுகளை முறையாகக் கையாளுதல், ரயில் நிலையங்களில் அனைத்து நடைமேடைகளிலும் மக்கும், மக்காத குப்பைக் கழிவுகளை சேகரிக்கப் பல வண்ண தொட்டிகளை வைத்தல், ரயில் நிலையத்தைச் சுத்தமாக வைத்திருத்தல், ரயில் நிலைய வளாகத்தில் குப்பைகளைக் கொட்டும் பயணிகளுக்கு ரூ.500-ம் இதர நிறுவனத்தினருக்கு ரூ.5,000 அபரமும் வசூலித்தல், திறந்த வெளியில் மலம் கழித்தலை தடுக்க போதிய எண்ணிக்கையில் கழிவறைகளைக் கட்டுதல் ஆகியவற்றைப் பின்பற்றினோம்.

அண்ணாதுரை
அண்ணாதுரை

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவுகளைப் பின்பற்றுவதற்கு முன்னதாக ரயில்வே ஊழியர்களுக்கும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கும் முதலில் விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். பிறகு, கல்லூரி மாணவ, மாணவிகளைக் கொண்டு பயணிகளுக்கும் ரயில் நிலையங்களைச் சுத்தமாக வைத்துக்கொள்ள விழிப்புணர்வு செய்தோம். இதற்காக 6 மாதங்கள் பணியாற்றினோம். சேலம் கோட்ட மேலாளர் சுப்பாராவ், கூடுதல் கோட்ட மேலாளர் அண்ணாதுரை, முதுநிலை வணிக மேலாளர் ஹரிகிருஷ்ணன், முதுநிலை இயந்திரவியல் பொறியாளர் முகுந்தன் ஆகியோரின் முயற்சியாலும், ஊழியர்களும் பயணிகளும் ஒத்துழைப்பு கொடுத்ததாலும் இந்த ஐ.எஸ்.ஓ சன்றிதழ் பெற முடிந்தது'' என்றார்.

சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் சுப்பாராவ், ''தெற்கு ரயில்வேக்குட்பட்ட சேலம் ரயில்வே கோட்டத்தில் ரயில்வே வாரியத்தால் அடையாளம் காணப்பட்ட ஏ1 மற்றும் ஏ அந்தஸ்து பெற்றுள்ள ரயில் நிலையங்கள் அனைத்தும் ஐ.எஸ்.ஓ: 14001 தரச்சான்று பெற்றிருப்பது வேறு எந்தக் கோட்ட அலுவலகமும் பெறாத சிறப்பாகும்.

கோட்ட மேளாளர் சுப்பாராவ்
கோட்ட மேளாளர் சுப்பாராவ்

சேலம் ரயில்வே கோட்ட ரயில் நிலையங்கள் ஐ.எஸ்.ஓ தரச்சான்று பெற சேலம் ரயில்வே உதவி வணிக மேலாளர் மாயா பீதாம்பரம், கரூர் மற்றும் மேட்டுப்பாளையம் உதவி சுகாதார அலுவலர் குமார், திருப்பூர் கோட்ட சுகாதார நல அலுவலர் கும்பாரே, ஈரோடு ரயில் பெட்டி பணிமனை அலுவலர் தினேஷ் ஆகியோர் அந்தந்த ரயில் நிலையங்களுக்குத் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் அங்கீகரிக்கப்பட்ட அலுவலர்களாகச் செயல்பட்டு அவர்களின் உழைப்பால் ஐ.எஸ்.ஓ தரச்சான்று பெற்றிருக்கிறோம். இந்தச் சான்று 3 ஆண்டுகளுக்குப் பொருந்தும். தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுகளை சேலம் கோட்டம் தொடர்ந்து பின்பற்றி வருவோம்'' என்றார்.