Published:Updated:

இறந்தவரை தோளில் சுமந்துசெல்லும் உறவினர்கள்! - வனத்துறைக்கு எதிராகக் கொந்தளிக்கும் பழங்குடியின மக்கள்

எம்.கணேஷ்
வீ.சக்தி அருணகிரி

தேனி மாவட்டம் குரங்கணியில், வனத்துறையின் கட்டுப்பாடு காரணமாக, இறந்துபோனவரின் உடலை உறவினர்கள் தோள்களில் சுமந்துசென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

Village people
Village people

போடி அருகே உள்ள குரங்கணி மலைக்கிராமத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. டிரெக்கிங் சென்ற பலர், காட்டுத்தீயில் சிக்கி இறந்தனர். இச்சம்பவத்துக்குப் பிறகு, குரங்கணி மலையில் உள்ள மலைக்கிராம மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது வனத்துறை. அதில் ஒரு பகுதியாக, குரங்கணியிலிருந்து 6 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள முதுவாகுடி என்ற பழங்குடியின கிராமத்துக்குச் செல்லும் ஜீப் பாதையைக் கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக மூடியது வனத்துறை. கிராமத்துக்குச் செல்ல வேண்டுமென்றால் நடந்து செல்ல வேண்டிய நிலை. மருத்துவ அவசரம் என்றால்கூட 6 கிலோமீட்டர் நடந்து, குரங்கணி வர வேண்டிய அவலம் ஏற்பட்டது.

Village people
Village people

இந்நிலையில், கடந்த மாதம், முதுவாகுடியைச் சேர்ந்த பவுன்ராஜ் என்பவருக்கும் சக்திவேல் என்பவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையில், பவுன்ராஜை, நாட்டுத்துப்பாக்கியில் சுட்டார் சக்திவேல். இதில் படுகாயமடைந்த பவுன்ராஜ், மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டு முதுவாகுடி திரும்பினார். இந்நிலையில், நேற்று பவுன்ராஜ் மரணமடைந்தார். இத்தகவல் போலீஸாருக்குத் தெரியவர, பவுன்ராஜ் உடலை பிரேத பரிசோதனை செய்ய தேனி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுவரத் திட்டமிட்டனர்.

ஜீப் வசதி இல்லாததால், அவரது உடலை டோலி கட்டி தங்களது தோள்களில் தூக்கி வந்துள்ளனர் பவுன்ராஜின் உறவினர்கள். பிரேத பரிசோதனை முடிந்து பவுன்ராஜின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மீண்டும், டோலி மூலமாக பவுன்ராஜின் உடலை அவரின் உறவினர்கள், முதுவாகுடிக்குத் தூக்கிச் சென்றனர்.

Village people
Village people

``நல்லது கெட்டதுக்குக்கூட ஜீப் வரமுடியவில்லை. வனத்துறை எங்களை ஏன் இப்படி கஷ்டப்படுத்துகிறார்கள் எனத் தெரியவில்லை. நாங்கள் வனத்துக்குள் என்ன தவறா செய்கிறோம். காலம் காலமாகக் குடியிருக்கும் இடத்தைவிட்டு வெளியேறச் சொல்கிறது வனத்துறை. இதற்கு எப்போதான் தீர்வு கிடைக்குமோ தெரியவில்லை'' என்று வேதனை தெரிவிக்கிறார்கள் முதுவாகுடி கிராம பழங்குடியின மக்கள்.