Published:Updated:

தாயின் மருத்துவ செலவுக்காகக் கொண்டுவந்த பணத்தைத் தவறவிட்ட பயணி! - மீட்டுக் கொடுத்த ரயில்வே காவலர்

சென்னையிலிருந்து வந்த ரயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அலிப்கான் மற்றும் ஆதிமூலம் ஆகிய இரு காவலர்களைத் தொடர்பு கொண்டு ,பணப்பையைத் தவறவிட்டது குறித்து தகவல் தெரிவித்தனர்.

ரயில் பயணியிடம் பணத்தை ஒப்படைக்கும் ரயில்வே போலீஸார்
ரயில் பயணியிடம் பணத்தை ஒப்படைக்கும் ரயில்வே போலீஸார் ( உ.பாண்டி )

சென்னையிலிருந்து ராமேஸ்வரம் வந்த ரயில் பயணி ஒருவர் தவறவிட்ட ஒரு லட்ச ரூபாயை உரிய நேரத்தில் கண்டுபிடித்துக் கொடுத்த ரயில்வே காவலரை அதிகாரிகள் மற்றும் ரயில் பயணிகள் பாராட்டினர்.

ராமநாதபுரம் ரயில் நிலையம்
ராமநாதபுரம் ரயில் நிலையம்
உ.பாண்டி

சென்னை நுங்கம்பாக்கம், ஜோசியர் தெருவில் வசித்துவருபவர், அலியூல் முர்தசா. இவர், ராமநாதபுரத்தில் வசித்துவரும் தனது தாயாரின் மருத்துவ செலவுக்காக ரூபாய் ஒரு லட்சத்துடன் சென்னையிலிருந்து நேற்று இரவு ராமநாதபுரத்துக்கு ரயிலில் வந்துள்ளார்.

ராமநாதபுரம் ரயில் நிலையத்துக்கு இந்த ரயில் வந்ததும், அலியூல் முர்தசா தனது உடமைகளுடன் அவசரமாக ரயிலை விட்டு இறங்கியுள்ளார். ரயில் அங்கிருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்றபோது, தான் எடுத்துவந்த பைகளில் ஒன்றைத் தவற விட்டதை அறிந்தார். மேலும், அந்தப் பையில் தனது தாயாரின் மருத்துவ செலவுக்காகக் கொண்டுவந்த பணமும் இருந்ததால் பதற்றமடைந்தார்.

`போலீஸ்காரனுக்குப் பொண்ணு தரமாட்டேன்னு சொல்றாங்க!' - வேலையை ராஜினாமா செய்த ஹைதராபாத் காவலர்

இதையடுத்து, அங்கிருந்த சக பயணிகள் அவரை ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் பாதுகாப்புக்கு இருந்த போலீஸாரிடம் அழைத்துச்சென்று, பணப்பையைத் தவறவிட்டது குறித்து தெரிவித்துள்ளனர். அவர்கள், உடனடியாக ராமேஸ்வரம் ரயில்வே போலீஸாருக்குத் தெரியப்படுத்தினர். ரயில்வே போலீஸார், இது குறித்து சென்னையிலிருந்து வந்த ரயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அலிப்கான் மற்றும் ஆதிமூலம் ஆகிய இரு காவலர்களைத் தொடர்புகொண்டு, பணப்பையைத் தவறவிடப்பட்டது குறித்து தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, அலியூல் முர்தசா பயணித்த எஸ்-2 ரயில் பெட்டியைக் கண்காணித்த காவலர்கள், அதில் பயணித்த மற்ற பயணிகளை ரயிலிலேயே இருக்கச் செய்துவிட்டு பணப்பையைத் தேடினர். இந்தத் தேடுதலின்போது, காவலர் அலிப்கான் அந்த பணப்பையைக் கண்டெடுத்தார். அதில், பணம் அப்படியே இருந்துள்ளது. அதன்பின்னர், ரயிலில் இருந்து பயணிகள் இறங்க அனுமதிக்கப்பட்டனர். பணப்பை கண்டெடுக்கப்பட்ட தகவல் ராமநாதபுரத்தில் இருந்த பயணி அலியூல் முர்தசாவுக்கு தெரிவிக்கப்பட்டது. ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் வந்த அவரிடம், ரயில்வே போலீஸ் சார்பு ஆய்வாளர்கள் தனுஷ்கோடி, சுரேஷ் ஆகியோர் உரிய விசாரணை நடத்திய பின், காவலர் அலிப்கான் மூலம் பயணியிடம் பணப்பையை வழங்கினர்.

ரயில் பயணியிடம் பணத்தை ஒப்படைக்கும் போலீஸார்
ரயில் பயணியிடம் பணத்தை ஒப்படைக்கும் போலீஸார்
உ.பாண்டி

ரயில் பயணி தவறவிட்ட பணப்பையை, விரைவாகக் கண்டெடுத்த ரயில்வே காவலர்கள் அலிப்கான், ஆதிமூலம் ஆகியோரை காவல்துறை அதிகாரிகள் மற்றும் ரயில் பயணிகள் பாராட்டினர்.