Published:Updated:

டெக் தமிழா Notifications

கடந்த மாத டெக் செய்திகளின் தொகுப்பு!

OnePlus Tv

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் குறிப்பிடத்தக்க இடம் வகிக்கும் ஒன்ப்ளஸ் நிறுவனம் செப்டம்பர் 26-ம் தேதி டிவி ஒன்றையும் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த டிவி முதன்முதலில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்பதை ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பீட் லாவ் உறுதிப்படுத்தியிருக்கிறார். டிவியில் QLED பேனல் பயன்படுத்தப்படும் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. Android TV OS-ல் இது இயங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டிவியின் அளவு 43 முதல் 75 இன்ச் வரைக்கும் இருக்கலாம். அமேசான் இணையதளத்தில் இது விற்பனைக்கு வரும். இந்தியாவில் வெளியானதுக்குப் பின்தான் விரைவில் வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சீனா பகுதிகளிலும் இந்த டிவி விற்பனைக்குக் கொண்டு வரப்படும் என ஒன்ப்ளஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா ஃபர்ஸ்ட்...வேர்ல்டு நெக்ஸ்ட்!
Samsung 108 MP sensor

கடந்த மாதம் ஸ்மார்ட்போன் கேமரா தொடர்பாக சாம்சங் வெளியிட்ட ஒரு தகவல்தான் ஸ்மார்ட்போன் வட்டாரத்தில் ஹாட் டாபிக். போனில் பயன்படுத்தும் வகையிலான 108 MP கேமரா சென்ஸாரை அறிமுகப்படுத்தியிருக்கிறது சாம்சங். மொபைலில் 108 MP என்பது சாதாரண விஷயம் இல்லை என்பதால் இது பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கிறது. Samsung ISOCELL Bright HMX என்ற இந்த சென்ஸாரை ஷியோமியுடன் இணைந்து உருவாக்கியிருக்கிறது சாம்சங். துல்லியமான போட்டோக்களை எடுப்பதற்குத் தகுந்த வகையில் சென்ஸாரின் அளவு இருக்க வேண்டியது அவசியம். Samsung ISOCELL Bright HMX-ல் இருக்கும் இமேஜ் சென்ஸாரின் அளவு 1/1.33 இன்ச். இந்த அளவு பெரிய சென்ஸார் மொபைலுக்கு வருவது இதுவே முதல்முறை. கூடிய விரைவில் ஷியோமியின் ஏதாவது ஒரு புதிய ஸ்மார்ட்போனில் 108MP கேமராவை எதிர்பார்க்கலாம். சாம்சங் அடுத்த வருடம் வெளியிடவுள்ள கேலக்ஸி S11 சீரிஸில் இந்த சென்ஸாரைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டு.

எங்களுக்கு எண்டே கெடையாது!
Steve Jobs is still alive

டெக் ஜாம்பவன்களில் ஒருவரான ஆப்பிளின் முன்னாள் CEO ஸ்டீவ் ஜாப்ஸ் கணையப் புற்றுநோயால் 2011-ல் தனது 56-வது வயதில் காலமானார். இந்நிலையில் இணையத்தில் வைரலான ஒரு புகைப்படத்தினால் ஸ்டீவ் ஜாப்ஸ் மரணிக்கவில்லை, தலைமறைவாக வாழ்ந்துகொண்டிருக்கிறார் என வதந்திகள் பரவத் தொடங்கியிருக்கின்றன. எகிப்தின் தலைநகரான கெய்ரோ நகரில் அப்படியே ஸ்டீவ் ஜாப்ஸ் போன்ற உருவத்தில் இருக்கும் ஒருவர் தேநீர் அருந்தும் புகைப்படம்தான் இதற்குக் காரணம். reddit தளத்தில் இந்த போட்டோ பதிவேற்றப்பட்ட பிறகு வைரலானது இந்தப் புகைப்படம். இது எப்போது எங்கு எடுக்கப்பட்டது போன்ற தகவல்களுக்குத் தெளிவான ஆதாரங்கள் இல்லை. இதற்கு முன்னும் இதே போல ரியோ டி ஜெனிரோவில் ஸ்டீவ் ஜாப்ஸ் தலைமறைவாக இருக்கிறார் என ஒரு செல்ஃபி ஐந்து வருடங்களுக்கு முன்பு டிரெண்ட் ஆனது. ஆனால் அது ஸ்டீவ் ஜாப்ஸ் இல்லை என்று அந்த நபரே முன்வந்து விளக்கம் கொடுத்திருந்தார்.

நல்லா சுத்துறீங்கடா டேய்!
Airtel XStream Box

தனது ஜிகாஃபைபர் சேவையை இந்த மாதம் முதல் மக்களுக்குக் கொடுக்கவுள்ளது ஜியோ நிறுவனம். டெலிகாம் சந்தையைப் போல் பிராட்பேண்டு சந்தையிலும் பெரும் மாற்றத்தை ஜியோ கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ஜியோவின் போட்டி நிறுவனமான ஏர்டெல் நிறுவனம் தனது பங்கிற்கு எக்ஸ்-ஸ்ட்ரீம் என்னும் புதிய சேவையை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த சேவையில் நேரலை டிவி(live tv), இசை, செய்திகள், ஸ்ட்ரீமிங் ஸ்மார்ட் ஸ்டிக், இணையம் மூலம் இயங்கும் செட்-அப் பாக்ஸ் எனப் பலவும் அடங்கும். இதற்கென பிரத்யேகமாக எக்ஸ்-ஸ்ட்ரீம் பாக்ஸ், எக்ஸ்-ஸ்ட்ரீம் ஸ்டிக் என இரு சாதனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது ஏர்டெல். ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் இவை 3,999 ரூபாய்க்கு விலைக்கு வரும்.

சபாஷ் சரியான போட்டி!

ப்ளே-ஸ்டேஷன் என்கிற பெயரின் மூலம் கேமிங் உலகில் தனி சாம்ராஜ்யம் ஒன்றை உண்டாக்கிய நிறுவனம் சோனி. இந்த நிறுவனத்தின் அடுத்த ப்ளேஸ்டேஷன் அறிமுகப்படுத்தும் வேலைகள் தீவிரமாக நடந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில் PS5 டிசைன் எப்படியிருக்கும் என்பதைக் காட்டும் ஒரு புகைப்படம் சமீபத்தில் வெளியாகி வைரலானது. மற்ற ப்ளே-ஸ்டேஷன்களைப் போல PS5-யிலும் சி.டி.கள் கொண்டு ஆடும் விதத்தில்தான் வடிவமைப்பு இருக்கும் என நம்பப்படுகிறது. ஆனால், சோனி உட்பட முக்கிய நிறுவனங்கள் அனைத்துமே கிளவுட் கேமிங் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளதால் அதற்கான கூடுதல் வசதிகள் PS5-ல் இருக்கும் என நம்பலாம். PS5 எப்படியும் அடுத்த ஆண்டின் பிற்பகுதிதான் விற்பனைக்கு வரும் எனக் கூறப்படுகிறது.

காரா..ஆட்டக்காரா!

உலகமெங்கும் பல விமான சேவை நிறுவனங்கள் ஒரு வகையான மேக்புக் ப்ரோ லேப்டாப்களை எடுத்துச்செல்ல பயணிகளுக்குத் தடைவிதித்துள்ளன. இது எதற்கு தெரியுமா? கடந்த ஜூன் மாதம் 15 இன்ச் மேக்புக் ப்ரோவில் இருக்கும் பேட்டரி அதிக வெப்பமாக வாய்ப்பிருப்பதால் அவற்றைத் திரும்பப்பெறத் தொடங்கியது ஆப்பிள். இதனால் தீ ஆபத்து இருப்பதாக விமான சேவைகள் இவற்றைத் தடைசெய்தன. இதில் ஏர் இந்தியாவும் அடங்கும். 2015 முதல் 2017 வரை விற்பனையான 15 இன்ச் மேக்புக் ப்ரோ லேப்டாப்களில் மட்டும்தான் இந்தப் பிரச்னை இருப்பது குறிப்பிடத்தக்கது.

நெருப்புடா!
அடுத்த கட்டுரைக்கு