
பழைய வில்லன் நடிகர்கள் என்றதும் நம்பியாரும், வீரப்பாவும் நினைவுக்கு வருவார்கள் அல்லவா? அதுபோல, புதிர் விளையாட்டுகளில் ஆதிகால மாடல், டைல் மேட்சிங்.
ஆத்ம நிர்பார் என மோடி சொல்லிக்கொண்டேயிருக்க, அதைச் சத்தத்தோடு சாதித்துவருகின்றன இந்தியாவின் கேமிங் நிறுவனங்கள். ஒரு பக்கம் இந்தியாவின் மார்க்கெட் என்பது அதிகரித்துக்கொண்டேயிருக்க அயல்நாட்டு கேம் நிறுவனங்கள் எல்லாம் இந்தியாவில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளன. EA, Ubisoft, Rockstar, Garena என அயல்நாட்டு நிறுவனங்களுக்கு மத்தியில் Gametion டெக்னாலஜிஸ் என்கிற இந்திய நிறுவனம் உருவாக்கிய விளையாட்டுதான் கடந்த லாக்டௌனில் கொடிகட்டிப் பறந்தது. 2016-ம் ஆண்டு இந்த நிறுவனம் வெளியிட்ட Ludo King என்கிற விளையாட்டை இதுவரையில் 50 கோடிப் பேர் டவுன்லோடு செய்திருக்கிறார்கள். தினசரி ஒரு மணி நேரத்துக்கு மேல், இந்த விளையாட்டைப் பலரும் விளையாடிவருகிறார்கள் என்கிறது ஒரு சர்வே. PVR போன்ற மல்ட்டிபிளெக்ஸ் தியேட்டர்கள் PUBG-யின் இந்தியன் வெர்ஷனான பேட்டில்கிரவுன்ட்ஸை திரையரங்கில் அமர்ந்து விளையாடும்படி போட்டிகளை நடத்தியிருக்கின்றன.

டைல் மேட்சிங்
வாராவாரம் ஜோம்பி, ரத்தம் , துப்பாக்கி என எழுதி இந்தப் பக்கங்களே சிவப்புநிறத்தில் தெரிய ஆரம்பிக்கிறது. பிரின்டிங் மெஷினிலும் சிவப்பு மை மட்டும் விரைவாகவே தீர்ந்துவிடுகிறதாம். அதுதான் இந்த வாரம் டைல் மேட்சிங் பக்கம் சென்று மேட்சுக்கு மேட்ச் ஆடுவோம்.
பழைய வில்லன் நடிகர்கள் என்றதும் நம்பியாரும், வீரப்பாவும் நினைவுக்கு வருவார்கள் அல்லவா? அதுபோல, புதிர் விளையாட்டுகளில் ஆதிகால மாடல், டைல் மேட்சிங். கலைத்துப்போட்ட டைல்களை அவற்றின் நிறம், மணம், சுவைக்கு ஏற்ப அடுக்க வேண்டும். டெட்ரிஸ் விளையாட்டைத்தான் விக்ஸ் என சுத்திசுத்தி எழுதிக்கொண்டிருக்கிறாயா என்கிறீர்களா. லைட்டா ஆம்தான். டெட்ரிஸா எனக் கன்னத்தில் கை வைத்து யோசிக்கும் 2K கிட் என்றால், கேண்டி கிரஷ் என்றும் சொல்லலாம். 2012-ம் ஆண்டு ஃபேஸ்புக்கில் ‘போஸ்ட் செய்தது போக, விளையாட்டுக்கும் சற்று ஈயப்படும்’ நோக்கி கேண்டி கிரஷை உருவாக்கியது கிங் டிஜிட்டல் எண்டெர்டெய்ன்மென்ட். அன்றிலிருந்து இன்றுவரை இந்த விளையாட்டின் மீது கிரஷ் பிடித்து அலைகிறார்கள் மனிதர்கள். இந்தப் போட்டிகளைப் பொதுவாக மேட்ச் 3 கேம்கள் என அழைக்கிறார்கள். இந்த வாரம் நாம் பார்க்கவிருக்கும் மேட்ச் 3 கேம்கள் நமக்கு மிகவும் பரிச்சயமானவை. நிம்மதியாக ஃபேஸ்புக்கில் எதையாவது மேய்ந்துகொண்டிருக்கும் போது, இந்த கேம் நம் கண் முன்னால் வரும். நாமும் ‘அட, நல்லாருக்கே’ என க்ளிக் செய்வோம். ஆனால், வேறொரு விளையாட்டு வந்து நிற்கும். இது கேண்டி கிரஷ்ல எனக் கடுப்பாகி புகார் அளிப்போம். Playrix நிறுவனத்தின் இந்த விளையாட்டுகளுக்கு இப்படியானதொரு அவப்பெயர் உண்டு. உண்மையில், நமக்கு விளம்பரமாக வருவது அந்த விளையாட்டுகளில் இருக்கும் ஒரு சிறுபகுதி. ஐந்து ரவுண்டு முடித்தால், வரும் இலவச இணைப்புதான் டிரெய்லராக வரும். இலவச இணைப்பை நம்பிப் போகலாம், செம்ம ஜாலியாக விளையாடலாம் என்பதற்கு நானே சாட்சி.
பிளே ஸ்டோரில் கொட்டிக் கிடக்கும் மேட்ச் 3 கேம்களில், நாம் ஏன் இதைத் தேர்வு செய்ய வேண்டும் என்கிறீர்களா? காரணம் இருக்கிறது. இத்தனை ஆண்டுகள் ஆன பின்பும் Gardenscapes, Homescapes இரண்டும் டாப் டென் பட்டியலில் எப்போதும் இருக்கின்றன. இரண்டையும் 10 கோடிக்கும் அதிகமானோர் டவுன்லோடு செய்திருக்கிறார்கள். மேட்ச் 3 போட்டிகளுடன் இணைந்து கதை நகரும் பாணியும், இடையிடையே கொடுக்கப்படும் புதிர்களும்தான் இந்த விளையாட்டுகளை சுவாரஸ்யம் ஆக்குகின்றன.


Garden Scapes
Playrix நிறுவனத்துக்கு இப்படியானதொரு விளையாட்டுக்கான பிள்ளையார் சுழியாக அமைந்தது gardenscapesதான். நீங்கள்தான் இந்தப் பூந்தோட்டத்தை அழகுபடுத்தவிருக்கும் காவல்காரன். பூந்தோட்டத்தை அழகுபடுத்த, நீங்கள் விதிகளின்படி மேட்ச் 3 டைல்களை அடுக்க வேண்டும். 3 டைல்களுக்கு, நான்கு, ஐந்து என உங்களால் ஒரே விதமான டைல்களை அடுக்க முடியுமென்றால் தமாக்காதான். போட்டி சீக்கிரம் முடிந்துவிடும். அந்தத் தோட்டத்தின் பட்லரான ஆஸ்டின் இன்னும் விரைவாக உங்களுக்கு நன்றி நல்குவார்.
பிக்பாஸ் பாணியில் உங்களுக்கு ஒரு டாஸ்க் தரப்படும். அந்த டாஸ்க்கில் வெற்றிபெற, டைல்ஸ் ஆட வேண்டும். விளையாடி வென்றால் ஒரு ஸ்டார். அந்த ஸ்டாரை வைத்து இந்த டாஸ்க்கில் நீங்கள் வெற்றி பெறலாம். மின்னி மறையும் கிராபிக்ஸ் காட்சிகளுடன் டாஸ்க்கை அந்த கேமே செய்து முடித்துவிடும். செடிகள் நடுவது, நீச்சல்குளம் அமைப்பது, குப்பை அள்ளுவது எனப் பல டாஸ்க்குகள் இவற்றுள் அடக்கம்.
ஒருவேளை குறிப்பிட்ட எண்ணிக்கை களுக்குள் உங்களால் அந்தப் போட்டியை முடிக்க முடிய வில்லை என்றால், ஒரு ஆயுள் குறைந்துவிடும். பிறகு அடுத்த ஆயுளை வைத்துப் போட்டியில் விளையாட வேண்டும்.

Wildscapes
2016-ல் Gardenscapes, 2017-ல் Homes capes என இரண்டும் அதிரிபுதிரி ஹிட் அடிக்க, Playrix நிறுவனம் அடுத்து Wildscapes என்பதை வெளியிட்டது. அரண்மனை, காஞ்சனா சீரிஸ் படங்கள் பார்த்தவர்கள் இந்நேரம் Wildscapes விளையாட்டின் ஒன்லைனைக் கண்டுபிடித்திருப்பீர்கள். ஜேக் என்பவர் ஒரு மிருகக்காட்சி சாலையை நிர்வகித்துவருகிறார். அங்கு நீங்கள் வெவ்வேறு விலங்குகளை ஒழுங்குபடுத்தி, அவற்றுக்கான இடத்தைத் தேர்வு செய்து தர வேண்டும். மற்ற விதிகள் எல்லாம் ஏற்கெனவே மேலே இருப்பவைதான்.
மூன்று கேம்களுமே எல்லா வயதினரும் விளையாடிக்கூடியவை. விளையாட்டுகளுக்கான டிசைன்கள் மாறுமே ஒழிய, மூன்று கேம்களுக்குமான விதி ஒன்றுதான். ஆம், கேண்டி கிரஷை மீண்டும் விளையாட வேண்டும்.





Home Scapes
ஆஸ்டின் வில்லாவின் பூந்தோட்டத்தை அழகுபடுத்துவது Gardenscape என்றால், அந்த வில்லாவையே அழகுபடுத்துவது Homescape. day 1, day 2 என ஒவ்வொரு நாளுக்கான டாஸ்குகள் அணிவகுத்தபடி இருக்கும். போட்டிகளில் வெற்றி பெற்றுக்கொண்டே இருந்தால், முந்தைய பக்கத்தில் டிரெய்லராக ஒரு விளையாட்டு வரும் எனச் சொன்னோம் அல்லவா, அதில் உங்கள் புத்திக்கூர்மையைப் பயன்படுத்தி அதில் வெற்றி பெற வேண்டும்.
Homescape-ல் வில்லாவையும், அதைச் சுற்றியிருக்கும் கேரேஜையும் நீங்கள் ஒழுங்குபடுத்த வேண்டும். Gardenscapes-ல் ஆஸ்டினால் ஒரு நாய்க்குட்டியைத் தத்தெடுக்க முடியும் என்றால், இதில் ஒரு பூனைக்குட்டியைத் தத்தெடுக்க வேண்டும். இப்படித்தான் கதாநாயகன் முகத்தில் மரு வைத்த ரேஞ்சுக்கு சில பல மாறுதல்களைச் செய்திருக்கிறார்கள்.
Downloading...