Published:Updated:

கேம்ஸ்டர்ஸ் - 12

கேம்ஸ்டர்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
கேம்ஸ்டர்ஸ்

கண்ணைக் கவரும் மாயாஜாலங் களையெல்லாம் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், இது முழுக்க முழுக்க ஒரு கணித விளையாட்டு.

எல்லோரும் மார்க் சக்கர்பெர்க் ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனத்தின் பெயர் மாற்றியதைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். நாம் வேறொரு விஷயத்தைப் பார்க்கலாம். ஃபேஸ்புக், ஆப்பிள், அமேசான், நெட்பிளிக்ஸ், கூகுள் என ஐந்து பெருநிறுவனங்களையும் சேர்த்து ‘FAANG’ எனப் பலரும் அழைத்து வந்தனர். இப்போது ஃபேஸ்புக், META என மாறியிருப்பதால், இது இனி ‘MAANG’ என மாறிவிடுமா என ஒரு கும்பல் கிளம்பியிருக்கிறது. இன்னும் சிலரோ, பெயரை மாற்றியதுபோல, நாம் ஏன் இனி இதை ‘MANGA’ என அழைக்கக் கூடாது என ஆரம்பித்திருக்கிறார்கள். ஜப்பான் மாங்கா காமிக்ஸை மையப்படுத்தி இப்படி அவர்கள் சொன்னாலும், நமக்குத்தான் அது வேறு மாதிரி ஒலிக்கிறது. அதை 24*7 பயன்படுத்தும் மடையர்களாகிய நம்மையும் MANGAயையும் இணைத்துப் படித்தால் இன்னும் ஜாலியாக இருக்கிறது. டெஸ்லாவின் எலான் மஸ்க் வேறு கிண்டலாகத்தான் Texas Institute of technology & Science என்கிற பல்கலைக்கழகத்தைத் தொடங்கும் சிந்தனையில் இருக்கிறேன் எனத் தெரிவித்திருக்கிறார். என்ன என்ன சொல்றாங்க பாருங்க...

கேம்ஸ்டர்ஸ் - 12

இன்னொரு பெரிய நிறுவனமும் தன் பெயரை சற்று மாற்றியிருக்கிறது. இன்னும் தெளிவாகச் சொல்வதானால், இனி உங்களை அறிவழகன்னு தான் சொல்வோம் என ‘களவாணி' ஸ்டைலில் பிரகடனம் செய்திருக்கிறார்கள். Sony இனி தன் கணினிகளுக்கான பிளேஸ்டேஷன் கேம்களை PlayStation PC (Personal Computer) என்ற லேபிளுடன் வெளியிடப்போகிறதாம். பிளேஸ்டேஷனில் விளையாடுபவர்கள் எப்போதுமே ‘நாங்கெல்லாம் யாரு தெரியுமில்ல, ஆர்ம்ஸ பார்க்குறியா’ மைண்ட்செட்டில்தான் மற்றவர்களை அணுகுவார்கள். PC-யில் விளையாடுபவர்களையே ஏளனமாகப் பார்ப்பவர்களிடம், ‘மொபைலில் விளையாடுவோம்’ என்றால் என்ன மனநிலையில் பார்ப்பார்கள் என யோசித்துக்கொள்ளுங்கள். முன்பெல்லாம் பிளேஸ்டேஷனுக்கு செட்டான ஒரு விளையாட்டை PC-க்கு மாற்றுவதென்பது கடினம். சோனியும், ‘இந்த விளையாட்டுகள் எல்லாம் பிளேஸ்டேஷனில் மட்டும்தான்’ என கெத்தாக விளம்பரம் செய்வார்கள். சோனியின் போட்டியாளரான மைக்ரோசாப்ட்டின் XBOX நிறுவனமோ, விளையாட்டுகளை ஒரே சமயத்தில் கன்சோலிலும், PC-யிலும் விளையாட அனுமதிப்பார்கள். தற்போது சோனியும் அந்த முடிவை நோக்கி நகர்ந்திருக்கிறது. அதற்கான சமிக்ஞைகள் சிலகாலமாகத் தெரிந்தாலும், தற்போது PlayStation PC என்ற பதம் மூலம் அதை இன்னும் அழுத்தி நிரூபிக்கிறது. இனி ஒரே விளையாட்டை கன்சோலில் ஆடிவிட்டு, அப்படியே அலுவலகம் வந்து கேமிங் கணினியிலும் விளையாட முடியும். இன்னும் சில ஆண்டுகளில் ஒரே நேரத்தில் கன்சோல், கணினி, மொபைல் என மூன்றிலும் விளையாடும் சாத்தியங்கள் நிகழலாம்.

நவம்பர் மாதம் பள்ளிகள் எல்லாம் திறந்துவிட்டார்கள். குடும்ப ரேஷன் கார்டில் கொரோனாவைச் சேர்க்கும் அளவுக்கு கொரோனாவும் நாமும், மூக்கும் மாஸ்க்கும் போல ஒன்றாகிவிட்டோம். மீண்டும் பள்ளிக்குச் செல்ல, தமிழக அரசும் ப்ரிட்ஜ் கோர்ஸ் எல்லாம் நடத்துகிறது. அதனால், இந்த வார விளையாட்டுகளில் சற்று பாடத்தைக் கலக்குவோம்.

கேம்ஸ்டர்ஸ் - 12
கேம்ஸ்டர்ஸ் - 12

Mighty Party - PANORAMIK GAMES LTD

கண்ணைக் கவரும் மாயாஜாலங் களையெல்லாம் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், இது முழுக்க முழுக்க ஒரு கணித விளையாட்டு.

உங்கள் அறிவுக்கூர்மையைப் பயன்படுத்தி இதில் காய்களை நகர்த்த வேண்டும். உங்களுக்குச் சில கட்டங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அந்தக் கட்டங்களில் உங்களிடம் இருக்கும் வீரர்களை நீங்கள் அடுக்கலாம். அந்த வீரர்களின் தலைகளில் இருக்கும் எண்கள்தான் அவர்களின் விலை. ‘கிழக்கு செவக்கையிலே’ எனச் சொல்லிக் கொண்டே நீங்கள் உங்கள் வீரரைக் களமிறக்க வேண்டும். அவர் அந்தப் பக்கம் இருப்பவர்களில் ஒரு வெட்டு வெட்டுவார். பின்பு எதிரணியிலிருந்து ‘கீரே வெதக்கையிலே’ என அவர்கள், அந்தப் பக்கத்திலிருந்து ஒரு வீரரை அனுப்புவார்கள். அதே நேர்க்கோட்டில் உங்கள் வீரர் இருந்தால், அவர் மிதிபட்டுப் போக, நீங்கள் தப்பித்துக்கொள்ளலாம். வீரர்களுக்கு ஒற்றை இலக்கத்தில் எண்ணிக்கையென்றால், உங்களுக்கு இரட்டை இலக்கத்தில் எண்ணிக்கையிருக்கும். அதனால் சற்று லாகவமாக இதில் விளையாட வேண்டும்.

இந்த விளையாட்டில் சில ரவுண்டுகளைத் தாண்டினால். அடுத்து ஏணி விளையாட்டு உங்களுக்குத் தரப்படும். இதுவும் கணித ஸ்பெஷல்தான். பத்து அடுக்குகளில் எதிரணியின் வீரர்கள் ஒவ்வொரு எண்ணிக்கையில் இருப்பார்கள். கூட்டல் எல்லாம் உங்களுக்கு ஜுஜூபி என்றால், இந்த விளையாட்டை ஜஸ்ட் லைக் தட் வென்றுவிடலாம்.

கேம்ஸ்டர்ஸ் - 12
கேம்ஸ்டர்ஸ் - 12

Wordscapes

இந்த விளையாட்டுக்குச் சற்று ஆங்கிலப்புலமை அவசியம். பல்வேறு கட்டங்களில் கொடுக்கப்பட்டிருக்கும் ஆங்கில எழுத்துகளை அடுக்க வேண்டும். ஒரே கண்டிஷன்தான், நீங்கள் உருவாக்கும் வார்த்தைகளுக்கு அர்த்தம் இருக்க வேண்டும். ‘இத்தனை வார்த்தைகளை நம்மால் யூகிக்க முடிகிறதா’ என்பதே உங்களுக்குத் தனி நம்பிக்கையைக் கொடுக்கும். அகராதியை அருகில் வைத்துக்கொண்டு இந்த விளையாட்டை விளையாடுபவர்கள் அகராதி பிடித்தவர்கள்.

கேம்ஸ்டர்ஸ் - 12
கேம்ஸ்டர்ஸ் - 12

Water Sort - Color Puzzle Game

இதுவும் புத்திக்கூர்மையைச் சோதிக்கும் விளையாட்டுதான். பல்வேறு பாட்டில்களில் வெவ்வேறு நிறங்களில் நீரை ஊற்றி வைத்திருப்பார்கள். குறைவான வாய்ப்புகளில் ஒரே நிறத்திலான நீரை அந்தந்த பாட்டில்களில் சேர்க்க வேண்டும். ‘இதெல்லாம் ஒரு விளையாட்டா’ எனக் கேவலமாகத் தோன்றுகிறதல்லவா. ஒன்பதாவது லெவலிலேயே தலை சுற்ற ஆரம்பித்துவிடுகிறது.

காவல்துறை அதிகாரி ஜேம்ஸின் மனைவியையும் மகளையும் யாரோ கொடூரமாகக் கொன்றுவிடுகிறார்கள். தனியாக இருக்கும் ஜேம்ஸ், அதே வீட்டில் துப்புத் துலக்கி என்ன ஆனது எனக் கண்டுபிடிக்க வேண்டும். அமானுஷ்ய சத்தங்கள், பிசாசுகள், ரத்த எழுத்துகள் என கிளாசிக் ஹாரர் படங்களைப்போல பக்காவாக செட் செய்து வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு அறையாக நீங்கள் க்ளூ நோக்கி ஓட, பேய் உங்களை நோக்கி ஓடி வரும். அதிலிருந்து நீங்கள் தப்பிக்க ஒளிந்துகொள்ளலாம். அல்லது, அந்தப் பேயை திசை திருப்பிவிடலாம். தப்பித்தல், தாக்குதல், குணமாகுதல் என எல்லாமே வீட்டுக்குள்தான்.

கேம்ஸ்டர்ஸ் - 12
கேம்ஸ்டர்ஸ் - 12
கேம்ஸ்டர்ஸ் - 12
கேம்ஸ்டர்ஸ் - 12
கேம்ஸ்டர்ஸ் - 12

இணையம் இல்லாத சூழலிலும் நீங்கள் இந்த விளையாட்டை ஆட முடியும். அதற்காக கரன்ட் இல்லாத சூழலில், இருட்டில் அமர்ந்து ஆட வேண்டாம். திகில் எல்லாம் வேறு ரகத்தில் இருக்கின்றன. நம்புங்கள் அதுதான் நெசம்.

- Downloading...

மூட்டைப்பூச்சி நசுக்கறதுக்கு நவீன மெஷினா, இதெல்லாம் விளையாட்டா பாஸ் என்பவர்கள் ஆட வேண்டிய அற்புத விளையாட்டு இது. ஹெட்செட் அவசியம். ஸ்டிரிக்ட்லி 18+.