
மார்ச் 2022க்குள் 3 கோடி ஸ்விட்ச்களை இலக்காக வைத்திருந்த நிண்டெண்டோ, இப்போது 2.4 கோடி ஸ்விட்ச்களைத் தயாரிப்பதே கடினம் என இலக்கைக் குறைத்திருக்கிறார்கள்.
ரஜினி, அஜித், விஜய் படங்களின் டிக்கெட்டுகளுக்குப் போட்டியாக விற்றுக்கொண்டிருக்கின்றன கேமிங் கன்சோல்கள். இந்த தேதியில் அடுத்த ஸ்டாக் என XBOX, பிளே ஸ்டேஷன் நிறுவனங்கள் கமுக்கமாக அறிவித்தாலும் சில நிமிடங்களில் மொத்தமாய் விற்றுத் தீர்ந்துவிடுகின்றன.
வால்மார்ட்டோ, இந்தியச் சந்தைகளோ, எல்லாவற்றிலும் சில நொடிகளில் எல்லாம் மாயமாகிவிடுகின்றன. ‘நல்லா வித்தா கம்பெனிகளுக்கு லாபம்தானே... இன்னும் நிறைய தயாரிக்க வேண்டியதுதானே’ என்கிறீர்களா? அதில்தான் மிகப்பெரிய ட்விஸ்ட் இருக்கிறது. புதிய மொபைல்களின் வருகையில் இருந்து, பிளே ஸ்டேஷன் வரை விற்பனையில் பெரிய கொக்கியைப் போட்டு வைத்திருக்கிறது சிப்செட் தொழிற்சாலை. புதிய கார்களின் வருகையையும் சிப்செட்டுகள் ஸ்தம்பிக்க வைத்திருக்கின்றன. பல ஆண்டுகளுக்குப் பிறகு பிளேஸ்டேஷன் அடுத்த பதிப்பை வெளியிட்டிருப்பதால், அதை வாங்க உலகம் முழுக்கவே போட்டா போட்டி நடக்கிறது. ஆனால், சிப்செட் இல்லை, அதனால் உற்பத்திக் குறைவு. அதனால், limited stocks என போர்டு மாட்டி வைத்திருக்கிறது சோனி. இன்னொரு பக்கம், ‘விரைவாக பிளே ஸ்டேஷன்களை வாங்க நீங்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா’ என SmartBuy டெக்னிக்குகளை அடுக்கிக்கொண்டு செல்கிறார்கள் கேமிங் எழுத்தாளர்கள். சிப்செட் பஞ்சாயத்து தற்போது நிண்டெண்டோவின் ஸ்விட்சையும் அழுத்தத் தொடங்கியிருக்கிறது.




மார்ச் 2022க்குள் 3 கோடி ஸ்விட்ச்களை இலக்காக வைத்திருந்த நிண்டெண்டோ, இப்போது 2.4 கோடி ஸ்விட்ச்களைத் தயாரிப்பதே கடினம் என இலக்கைக் குறைத்திருக்கிறார்கள். கடந்த ஆண்டைவிட 37% விற்பனையில் பாதிப்பு இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது. எல்லோரும் வொர்க் ஃபரம் ஹோமில் இருந்தபோது, சிப்செட் தயாரிப்பதில் ஏற்பட்ட சுணக்கமும் இதற்கு ஒரு காரணம் என்கிறார்கள். சோனி நிறுவனமோ பிளே ஸ்டேஷன் 5 பிரச்னை 2022 ஜூன் வரை தொடரும் என கூலாகத் தெரிவித்திருக்கிறது. நீங்க ஏன் நேரடியா சிப்செட்டே இல்லாம, பிளே ஸ்டேஷன் 6ன்னு ஒண்ணு விடக்கூடாது சோனி..?
சமயங்களில் சில புதிர்களுக்கான விடைகள் தாய் தந்தையைச் சுற்றி வந்து ஞானப்பழம் வாங்குவதுபோல எளிதாக முடிந்துவிடும். நாம்தான் எதற்கென்றே தெரியாமல், உலகத்தைச் சுற்றிக்கொண்டு இருப்போம். இந்த வாரம் நாம் பார்க்கப்போவதெல்லாம் அப்படியான ஜாலி விளையாட்டுகள்தான். பிளேஸ்டேஷன், XBOX எனப் பலர் வித்தை காட்டிக்கொண்டிருக்க, சிலரோ, கன்சோல்களை நம் மொபைலுக்குள்ளேயே வைக்க ஆரம்பித்தனர். Airconsole Multiplayer games போன்ற செயலிகளை மொபைலில் டவுன்லோடு செய்துகொள்ளுங்கள். அந்தச் செயலியின் மூலம், உங்கள் மொபலையே கன்சோலாக மாற்றிவிடலாம்.





‘அதென்ன கன்சோல்’ என்கிறீர்களா? இரண்டு கைகளையும் வைத்து மணிக்கணக்காக ஒரு பிளாஸ்டிக் பொருளை சிறுவர்கள் சாவடி அடிப்பார்களே... அதுதான் கன்சோல். ஆனால், ‘அது மட்டும்தான் கன்சோலா’ என்றால், இல்லை. சிறு வயதில் ஒரு சிப்பை ஒரு பிளாஸ்டிக் பெட்டிக்குள் செலுத்தினால், சூப்பர் மேரியோ, வாத்து சுடுவது போன்ற விளையாட்டுகளை விளையாட முடியும். 999 கேம்ஸ் இன் ஒன் என எழுதி, 5 கேம்களையே மீண்டும் மீண்டும் அடுக்கியிருப்பார்கள். அதுவும் கன்சோல்தான். ‘இந்த கன்சோல் கேம்களை எல்லாம் நம்மால் தற்போது ஆட முடியுமா’ என்று சிலர் யோசிக்கலாம். அதற்கான தீர்வுதான் இந்தத் தற்காலிக மொபைல் கன்சோல்கள். நூற்றுக்கணக்கான சின்னச் சின்ன கேம்களை இந்த கன்சோல்கள் மூலம் நம் கணினியிலேயே விளையாட முடியும். https://www.airconsole.com/play என்ற தளத்தில் சின்னச் சின்ன அளவிலான பல கேம்கள் கொட்டிக் கிடக்கின்றன. அப்படியே இதில் நூல் பிடித்துப் போனால், சூப்பர் மேரியோ, காண்டிரா, பின் பால் என ஆதி காலத்தில் ஆடிய எல்லா விளையாட்டுகளையுமே விளையாட முடியும்.
சமீபத்திய வைரல் வார்த்தைகள் என்றால், பிட்காயினும் ஸ்குயிட் கேமும்தான். பிட்காயின் காசு போகும் விவகாரம் என்பதால், நாம் ஸ்குயிட் கேம் பக்கம் வருவோம். ஸ்குயிட் கேமை மாடலாக வைத்து வெளியாகியிருக்கும் இந்த விளையாட்டுதான் பலரது பால்ய காலத்தைத் தட்டியெழுப்பியிருக்கிறது. ஏற்கெனவே இருந்த சின்னப்புள்ள விளையாட்டுக்களில், ‘ஸ்குயிட் கேம்ஸ் ஸ்பெஷல்’ என இவர்கள் புதிதாக ரெஜிஸ்டர் பண்ணுங்க பாய்ஸ் என மொய் வாங்க, 3 லட்சம் நபர்கள் முன்பதிவு செய்ய முந்தி ஓடிவந்திருக்கிறார்கள். சில்லி வேர்ல்டு கேமைத் தயாரித்த சூப்பர் கேமிங் நிறுவனத்தின் ‘மாஸ்க் கன்’, ஏற்கெனவே 10 கோடி டவுன்லோடுகளைப் பெற்றுக் கலக்கிக்கொண்டிருக்கிறது. இதுவொரு ஆத்மநிர்பார் என்பது கூடுதல் சிறப்பு. அட ஆமாங்க, ‘Made in India.’



12 பேர் வரை விளையாடக்கூடிய இந்த விளையாட்டில் நாம் சில்லியா இல்லை டெவிலா என்பதை மட்டும் செய்துவிட்டு கலக்க வேண்டியதுதான். நாமாகவே ஒரு குழு ஆரம்பித்து நம் நண்பர்களுக்குள்ளே சிரித்துக்கொண்டும் பேசிக்கொண்டும் விளையாடலாம்.
எல்லாமே சின்னச் சின்ன விளையாட்டுகள். எதுவும் உங்களைப் போட்டுப் பாடாய் எல்லாம் படுத்தாது. ஜாலியாகக் குழந்தைகள் தினத்தைக் கொண்டாடுங்கள்.
- Downloading
*****
Jailbreak
உங்கள் நண்பருடன் இணைந்து போலீஸ் கண்களில் மண்ணைத்தூவி அந்தச் சிறையிலிருந்து தப்பிக்க வேண்டும்.
Murder Mystery
நம் தோழர்களே இதில் நம் எதிரிகள். யார் அந்தக் குற்றவாளி எனக் கண்டுபிடிக்க வேண்டும்.
Squid Royale
இது அந்த ஸ்குயிட் கேம்ஸ் ஸ்பெஷல். சிவப்பு லைட், பச்சை லைட், டல்கோனா குக்கி, டக் ஆஃப் வார் என ஸ்குயிட் கேம்ஸ் தொடரில் வெளியான கேம்களை வைத்துக் குட்டி குட்டியாகக் கலக்கியிருக்கிறார்கள்.
Hide and seek
ஒரு பெரிய இடத்தில் சின்னச் சின்ன டாஸ்க்குகளை முடிக்க வேண்டும். நம்மைத் துரத்தும் டெவிலிடம் மாட்டாமல் தப்பிக்க வேண்டும்.
Maze Race
வேகமாக அந்த இடத்திலிருந்து வெளியேற வேண்டும். எவ்வளவு வேகமாக என்றால், எளிதான விதிதான். கடைசி ஆள் நாமாக இருக்கக்கூடாது. டெவில் சொல்லும் கண்டிஷன் அது மட்டும்தான்.