
எந்த வேலையும் செய்யாமல் ஜாலியாக விளையாடத்தான் மொபைலில் கேம் கொட்டிக் கிடக்கின்றன.
அமெரிக்கர்களுக்கு இந்த வாரம் மிகவும் அலாதியானது. உலகம் முழுக்க இருக்கும் மக்கள், புதிதாக அமெரிக்க நண்பர்களை உருவாக்கி பொருள்களை வாங்கி வரச் சொல்வதும் இந்த வாரம்தான். ஆம், ‘பிளாக் ஃப்ரைடே டீல்ஸ்’ என எலெக்ட்ரானிக் பொருள்களின் விலை சரமாரியாகக் குறையும் காலமிது. ஆனால், சிப்செட் பற்றாக்குறையால் இந்த ஆண்டு அப்படி எதுவும் இருக்காது என்கிறார்கள் வல்லுநர்கள். இந்தக் கட்டுரை இணையத்தில் கிடைக்கும் நாள் முதல் நான்கு தினங்கள் அமெரிக்காவே டீல்ஸில் ஜொலிக்கும். ஆனால், அதில் புதிய கேம் கன்சோல்கள் எதுவும் பெரிதாக இடம்பெறாது என்கிறார்கள். ஏற்கெனவே இந்த தேதியில் இன்ன நேரத்தில் வெளியாகும் என இணையத்தில் செய்திகள் வந்தாலே, தன்னாலே நொடிப்பொழுதில் விற்று முடிந்துவிடுகின்றன கன்சோல்கள். டிமாண்ட் அதிகம், ஸ்டாக் குறைவு என்பதால் அடுத்த ஆண்டு பிளாக் ஃப்ரைடே டீல்ஸுக்குக்கூட எதுவும் கிட்டாது என்பதே `நீங்க நம்பலைனாலும் நெசம்'. ஆகையால் அமெரிக்க தோஸ்துகளிடம் `டாக்ஸி டாக்ஸி' என்றெல்லாம் பாடாமல் இங்கேயே வாங்குவதுதான் நல்லது.


எந்த வேலையும் செய்யாமல் ஜாலியாக விளையாடத்தான் மொபைலில் கேம் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால், அதுவே பெரிய வேலையானால் என்ன செய்வது? வெறுமனே கதைகளைப் படித்துக்கொண்டு பட்டன் தட்டினால் போதுமானது. அதுவே சண்டையிடுவது, டீல் பேசுவது எல்லாம் முடித்துவிடும். இந்த பாணியில் புதிதாக Mafia World : Bloody War என்கிற கேமை அறிமுகம் செய்திருக்கிறது Century Game நிறுவனம். கேம் ஆரம்ப நிலையில் இருந்தாலும் எல்லா ஸ்டேஜிலும் திருநெல்வேலி அல்வா போல் ஸ்மூத்தாக வழுக்கிக்கொண்டு போகிறது அதிலிருக்கும் தேர்வுகள். எந்த கிராஷும் இல்லை. மாபியா டானான உங்களுக்கு பல்வேறு டாஸ்க்குகள் கொடுக்கப்படும். அந்த டாஸ்க்குகளை சரியாகச் செய்ய வேண்டும். உங்களுக்கெனத் தனி வில்லா, பார்ட்டிகள், வில்லன்கள், அடியாட்கள், கட்டப்பஞ்சாயத்துகள் எல்லாம் ஆங்காங்கே நடந்துகொண்டேயிருக்கும். 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் விளையாடலாம் என கேமின் அட்மின் சொன்னாலும், இது 18+ கேம் என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லிக்கொள்கிறோம்.
மார்வெல் காமிக்ஸ், சினிமா ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி. கேப்டன் அமெரிக்கா, ஸ்பைடர் மேன், அயர்ன்மேன், கேப்டன் மார்வெல், ஸ்டார் லார்டு, டாக்டர் ஸ்டிரேஞ்ச், பிளாக் விடோ, ஸ்டார்ம் என ஒவ்வொரு ஹீரோவுக்கும் மிகப்பெரிய ரசிகப் பட்டாளம் உண்டு. இவர்களை ஒட்டுமொத்தமாய் ஒரு கேமுக்குள் அட்டகாசமான கிராபிக்ஸுடன் அடக்கினால் எப்படி இருக்கும். அதுதான் Marvel Future Revolution.


Omega Flight
அவெஞ்சர்ஸ் படங்களுக்குப் பின்னர், மார்வெல் சினிமாக்களில் ஸ்பைடர்மேன், சாங் சி, எடர்னல்ஸ் போன்ற படங்கள் வெளியாகி வருகின்றன. இனி இதில் வரும் நாயகர்களை எல்லாம் வைத்து அடுத்தடுத்த பெரிய குழுக்களை உருவாக்கி, பெரிய பெரிய பெரிய வில்லன்களைப் போட்டுத்தள்ளுவதுதான் கதைக்களமாக வரும். அதைப்போலவே இந்த கேமும் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்கிறது.
The Convergence நிகழ்வுக்குப் பின்னர் பல உலகங்கள் ஒன்றிணைந்துவிடுகின்றன. எல்லா உலகங்களின் ஹீரோக்களும் இனி ஒரே உலகத்தில் இருக்கப்போகிறார்கள். அப்ப வில்லன்களும் வருவாங்கில்ல. ஆம், அந்த வில்லன்களை ஒட்டுமொத்தமாய் அடக்க, Omega Flight என்னும் குழுவில் வெவ்வேறு மார்வெல் ஹீரோக்கள் இணைகிறார்கள். அவர்கள் எப்படி வில்லன்களை வெல்கிறார்கள் என்பதுதான் இந்த கேமின் கதை.
கேமின் ஆரம்பத்தில் வரும் வீடியோவே ஒரு அனிமேஷன் படம் பார்த்த பிரமிப்பைத் தருகிறது. ஒவ்வொரு சூப்பர் ஹீரோவுக்குமான பவர், அவர்களின் அட்டாக்கிங் தேர்வுகள், இன்னொரு ஹீரோவுடன் இணைவது, குட்டி குட்டி வில்லன்கள் என நம்மை இந்த கேமுக்குள் தயார்படுத்தும் கேமே ஒரு தனி கேம் விளையாடிய அனுபவத்தைத் தந்துவிடுகிறது. ஆனால், அதன்பின்னர்தான் நிஜ கேமே ஆரம்பிக்கிறது. ‘மேனுவல் புக்கே இவ்ளோ பெருசுன்னா’ மோடில் விரிகிறது கேம்.
PC-க்களிலும் , கன்சோல்களிலும் இப்படியான கேம்களை உருவாக்குவது எளிதான விஷயம். ஆனால், ஒரு ஆண்டிராய்டு மொபைலுக்குள் இத்தனை விஷயங்களைக் கட்டமைப்பது என்பது லேசான காரியமல்ல. அதை Netmarble Games நிறுவனம் சிறப்பாகச் செய்திருக்கிறது. நமக்குப் பிடித்த ஹீரோவை வைத்து சர்வர்களுக்குள் நுழைந்து அந்தந்த மிஷன்களை ஜாலியாக விளையாடலாம்.
ஆகஸ்ட் மாதம் வெளியான கேம், பெரிய அளவிலான கேம் என்பதுதான் கேமில் இருக்கும் குறை. ஆனால், இத்தனை கதாபாத்திரங்களை உள்ளே வைத்தால் அளவு அதிகமாகாமல் கம்மியா ஆகும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனிகள்.
நவம்பர் மாதம் ‘எடர்னல்’ திரைப்படம் வெளியாக, இந்த ஹீரோக்களை மட்டும் எதற்கு சும்மா வைத்துக்கொண்டு என ஒரே அப்டேட்டில் இன்னும் ஒரு அரை டஜன் ஹீரோக்களை உள்ளே இழுத்துப் போட்டிருக்கிறார்கள்.
சரி, உள்ளே இருக்கும் மோடுகளை சுருக்கமாகப் பார்ப்போம்.




Blitz
நான்கு சூப்பர் ஹீரோக்களை நம் அணியில் வைத்துக்கொண்டு சூப்பர் வில்லன்களை வீழ்த்த வேண்டும்.
Special Operations
மக்களைக் காப்பாற்றுவது, ஊரே சேதாரம் ஆகாமல் தடுப்பது எனச் சில பணிகளைச் செய்து நல்ல பிள்ளை எனப் பெயர் வாங்க வேண்டும்.
Raid
இது வாத்தி ரெய்டு மோடு. கும்பலாக இணைந்து குறிப்பிட்ட நேரத்துக்குள் வில்லன்களை வதம் செய்ய வேண்டும்.
Omega War
அவெஞ்சர்ஸ் இறுதி பாகத்தின் கடைசிக் காட்சிதான் இந்த மோடுக்கான சேம்பிள்.
Dimensional Duel
‘ஒத்தைக்கு ஒத்தை வாரியா நைனா’ என 1*1 மோடில் சண்டை போட வேண்டும்.
- Downloading...
டிசம்பர் மாதம் வரவிருக்கும் ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் படத்தின் டிரெய்லரைப் பார்த்தீர்களா?
இல்லையெனில்...
பார்த்துவிடுங்கள். கடந்த இருபதாண்டுகளில் மூன்று முறை ஸ்பைடர்மேன் கதாநாயகர்கள் மாறியிருக் கிறார்கள். அந்த அந்தக் காலத்தில் இந்த நாயகர் களுக்கென பிரத்யேக சூப்பர் வில்லன்கள் ஸ்பைடர்மேனிடம் மிதி வாங்கி வலைக்குள் சிக்கித் தோற்றுப் போனார்கள். அந்த ஒட்டுமொத்த வில்லன்களும் இதில் மொத்தமாய், ‘பீட்டர் பார்க்கர கொல்றது கடமை இல்லை; உரிமை ’ என ஒன்றிணைகிறார்கள்.
டிசம்பர் மாதம் வரவிருக்கும் ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் படத்தின் டிரெய்லரைப் பார்த்தீர்களா?
ஆம் எனில்...
பல்வேறு உலகங்களில் இருந்து வரும் பீட்டர் பார்க்கரின் வில்லன்கள் அவரைப் போட்டுத்தள்ளப் படையெடுப்பார்கள். சமீபத்தில் ஹாட்ஸ்டாரில் வெளியான ‘லோகி’ தொடரின் இறுதியிலும் பல உலகங்கள் ஒன்றிணைந்துவிடும். டிசி காமிக்ஸ்கள் திரைப்படங்களாக ஹிட் அடிக்கிறதோ இல்லையோ, தொலைக்காட்சித் தொடர்கள் தொடர்ந்து வெளியாகிவருகின்றன. அவற்றிலும் இப்படியான பல உலகங்கள் ஒன்றிணையும் வைபவம் எல்லாம் உண்டு. எல்லாத்துக்கும் மேல கொஞ்சம் எக்ஸ்டிரா கேட்கும் ரசிகர்களுக்கு இந்தப் பல்வேறு உலக கான்செப்ட்டின் மீது எப்போதும் அலாதி பிரியம். பார்வையாளரின் மகிழ்ச்சியை உச்சநிலையிலேயே வைத்திருக்க சரியான நேரத்தில் அடுத்தடுத்த சூப்பர் ஹீரோக்கள், சூப்பர் வில்லன்கள் இறங்கிக்கொண்டே இருப்பார்கள்.