
போகிமேன் கோ விளையாடிய அனுபவம் இருக்கிறதா? உலகமே ‘பிக்காச்சூ பிக்காச்சூ’ என பொம்மைகளைப் பிடிக்க ஓடிக்கொண்டு இருந்தார்களே.
சென்னைப் புயல், ‘மாநாடு’ புயல் எல்லாம் ஓய்ந்தாலும், ஸ்குயிட் கேம்ஸ் புயல் ஓயாது போல. இந்த முறை அந்தத் தொடரை நிஜமாகவே நடத்தி முடித்திருக்கிறார் ஒரு யூடியூபர். MrBeast என்னும் யூடியூபர் இதற்கு முன்பே பல போட்டிகளை இப்படி இணையத்தில் நடத்தியிருந்தாலும். இந்த முறை அவர் செய்திருந்தது வேறு லெவல் மாஸ். 456 போட்டியாளர்களை வைத்துக்கொண்டு ஒட்டுமொத்தத் தொடரையும் ரீக்ரியேட் செய்திருக்கிறார். வெல்பவர்களுக்கு 4,56,000 டாலர் பரிசு, தோற்பவர்கள் அவுட், அவ்வளவே. ஒன்றும் ஆகாது. தொடரில் கடைசி எண் கொண்ட நபர்தான் போட்டியில் வெல்வார். இதிலோ அவர் கடைசி ரவுண்டில் அவுட் ஆகிவிடுவார். அதே போல், கடைசிப் போட்டியை மியூசிக்கல் சேர் போட்டியாக மாற்றியிருந்தார்கள். வெளியான ஆறு மணி நேரத்தில் ஒரு கோடி நபர்கள் இந்த வீடியோவைப் பார்த்திருக்கிறார்கள். உலகமே கொண்டாடினாலும், நாட்டாமை சரத் குடும்பத்துக்கும் பொன்னம்பலம் குடும்பத்துக்கும் இதிலும் ஏழாம் பொருத்தம்தான். சீனாவிலிருந்து ஸ்குயிட் கேம் என்ற தென் கொரிய தொடரை ஒருவர் வட கொரியாவுக்குள் கொண்டுவர முயல, அவருக்கு மரண தண்டனை விதித்திருக்கிறதாம் வடகொரிய அரசு. தொடரைப் பார்த்த ஐந்து மாணவர்களுக்கு சில ஆண்டுகள் கடும் தண்டனையாம். வழக்கம் போல இதுவும் வடகொரியாவில் ‘உருளுதாம் பொரளுதாம்’ டைப் செய்திதான் என்றாலும், அந்த நாட்டு மக்களை நினைத்தால் பாவமாகத்தான் இருக்கிறது. ஆமா, நம்மள நினைச்சு வேற நாட்டுக்காரங்க இப்படி ஃபீல் பண்ணுவாங்க இல்ல!


இந்த நாளை எப்படிக் கடப்பது என்றொரு கூட்டமும், நாளைய உலகில் நாம் யாராக இருக்கப் போகிறோம் என்றொரு கூட்டமும் எப்போதும் ஓடிக்கொண்டு இருக்கும். இந்த ‘நாளைய கூட்டங்கள்' தற்போது ஓடிக்கொண்டிருப்பது மெட்டாவெர்ஸ் நோக்கித்தான். ஃபேஸ்புக் தன் தாய் நிறுவனத்தின் பெயரை ‘மெட்டா’ என மாற்றியிருப்பது நினைவிருக்கலாம். ஒரு மெய்நிகர் உலகை உருவாக்கி அதற்குள் நம்மை எளிதாகப் பொருத்தி நேரத்தைக் கடத்த வைப்பதுதான் இந்த நிறுவனங்களின் அடுத்தகட்ட நகர்வுகளாக இருக்கக்கூடும். சாத்துக்குடிப் பழத்தை நீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்தது போய், இனி ஒவ்வொரு சாத்துக்குடியும் எப்படி இருக்கிறது என நீங்களே தொட்டுப் பார்த்து, தேர்ந்தெடுத்து ஆன்லைனில் ஆர்டர் செய்ய முடியும். அட, இதெல்லாம் நல்லதுதானே என்கிறீர்களா? அது தனி டிபார்ட்மென்ட். earth2.io என்றொரு இணையதளம் இருக்கிறது. ஒட்டுமொத்த உலகையும் இங்கு மெய்நிகரில் அங்குலம் அங்குலமாக உருவாக்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு டைலாக அங்கிருக்கும் இடங்களை நீங்கள் வாங்க முடியும். ஸ்டாலினின் வீட்டுக்கும், ஜெயலலிதாவின் வேதா இல்லத்துக்கும் நீங்கள் மெய்நிகரில் உரிமையாளராக முடியும். ஆனால், அது அவர்களுக்குத் தெரிய வேண்டிய அவசியமுமில்லை. இப்படி நீங்கள் வாங்கும் இடங்களை வேறொருவரும் வாங்க விரும்பினால், உங்களிடமிருந்து அதிக விலைக்கு வாங்கிக்கொள்ளலாம். ஆனால், ‘இதெல்லாம் மிகப்பெரிய மோசடி’ என்கிறார்கள் வல்லுநர்கள். கண்ணுக்குத் தெரிந்த ரூபாய் நோட்டையே செல்லாததாய் ஆக்கும் காலத்தில் கிரிப்ட்டோவோ, இரண்டாம் பூமியோ எல்லாமே கண்ணிவெடியில் தெரிந்தே கால் வைக்கும் விஷயங்கள்தான்.


போகிமேன் கோ விளையாடிய அனுபவம் இருக்கிறதா? உலகமே ‘பிக்காச்சூ பிக்காச்சூ’ என பொம்மைகளைப் பிடிக்க ஓடிக்கொண்டு இருந்தார்களே. போகிமேன் விளையாட்டை உருவாக்கிய நியாண்டிக் நிறுவனம், தற்போது Fold AR என்றொரு ஆக்மெண்டட் ரியாலிட்டி விளையாட்டை அறிமுகம் செய்திருக்கிறார்கள். இதுவும் கிட்டத்தட்ட மெட்டாவெர்ஸ் தான். போகிமேன் போலவே இதிலும் நீங்கள் ஊர் முழுக்க அலைய வேண்டும். ஆனால், இந்த விளையாட்டில் பிக்காச்சூ பொம்மைகளுக்குப் பதிலாக பிட்காயின்களை நீங்கள் கண்டுபிடித்து வெல்ல முடியும். அதே போல், பாய்சன் பில் என்கிற சில விஷயங்களும் இந்த விளையாட்டில் உண்டு. அதை நீங்கள் தொட்டுவிட்டால், ஒரு மணி நேரத்துக்கு உங்களால் விளையாட முடியாது. இப்போது வெறும் பீட்டா டெஸ்ட்டில் இருக்கும் இந்த விளையாட்டு, அடுத்த ஆண்டு எல்லோரின் பயன்பாட்டுக்கும் வரவிருக்கிறது. மெய்நிகர் உலகில் பணம் சம்பாதிக்கவும் பணம் பறிக்கவும் எல்லா நிறுவனங்களும் தங்களை ஆயத்தப்படுத்திவருகின்றன. விளையாட்டு விளையாட்டாய் இருக்கும் வரை எல்லாம் நல்லதே என மனதில் வைத்துக்கொண்டு செயல்படுங்கள்.



Warner Bros. Interactive Entertainment
கடந்த வாரம் மார்வெல் என்றால், இந்த வாரம் டிசி பக்கம் செல்வதுதானே நியாயம்! வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் கடந்த இருபது ஆண்டுகளாக பல்வேறு வீடியோ கேம்களை வெவ்வேறு நிறுவனங்களுடன் கூட்டுச் சேர்ந்து வெளியிட்டுக்கொண்டிருக்கிறது. Injustice: Gods Among Us, WWE Immortals, Mortal Kombat X, Harry Potter போன்ற விளையாட்டுகள் ஆண்டிராய்டிலும் ஹிட் அடித்திருக்கின்றன. காமிக்ஸ், சினிமா, கேம்ஸ் என ஒரு கதாபாத்திரத்தை வைத்து பல்வேறு ரூபங்களில் லாபம் பார்க்கும் டெக்னிக்தான் இதுவும். ஸ்பைடர்மேனைப் போலவே, பேட்மேனும் கடந்த சில வருடங்களில் பலமுறை மாறிவிட்டார்கள். நோலனின் திரைப்படங்களில் கிறிஸ்டியன் பேல், அதன்பின் பென் அஃப்லெக், தற்போது படமாகிக்கொண்டிருக்கும் பேட்மேனில் ராபர்ட் பேட்டின்சன் என மாறிக்கொண்டே இருக்கிறார்கள். இவர்கள் போக, டி.வி தொடர்களிலும் சில பேட்மேன் நாயகர்கள் வந்துவிட்டார்கள். கோத்தம் என்கிற பேட்மேன் காப்பாற்ற நினைக்கிற புனைவு நகரமும் ஒரு தொடராக வெளிவந்துவிட்டது. பேட்மேனின் எதிரி யார் என்றால், ஒரு பக்கம் நகரத்தை அழிக்க நினைக்கும் நூற்றுக்கணக்கான வில்லன்கள் எனலாம். ஆனால், இன்னொரு பக்கம் அதன் பதில் மிகவும் எளிமையானது. பேட்மேனுக்கு உள்ளிருக்கும் பயம்தான் அவரின் முதல் எதிரி.


Batman: The Telltale Series
இந்த விளையாட்டில் பேட்மேனின் கதையை எழுதப்போவது நீங்கள்தான். நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு ஏற்ப பேட்மேனின் கதை உருவாகிக்கொண்டேயிருக்கும். பேட்மேனுக்கான கதையுடன், ப்ரூஸ் வெய்னாக வரும் நிகழ்வுகளுக்கும் அதன் போக்கில் கதையை நகர்த்த வேண்டும்.
ஐந்து எபிசோடுகளுடன் வெளியானது BatMan: The Telltale Series. கதை சுவாரஸ்யமாக இருந்தாலும், டெக்னிக்கலாக மொபைலில் விளையாடுபவர்களுக்கு சிறப்பான அனுபவத்தை இந்த கேம் தரவில்லை. ஆனாலும், இந்த விளையாட்டையும் பலர் இன்னும் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். இதன் சீக்குவலாக இதே நிறுவனம் வெளியிட்ட விளையாட்டைத்தான் இந்த வாரம் பார்க்கப்போகிறோம்.

Batman: The Enemy Within Telltale
18+
முந்தைய கேமை விளையாடாவிட்டாலும், இந்த கேமை உங்களால் விளையாட முடியும். ஆனாலும், அதை விளையாடியிருந்தால் கூடுதல் சிறப்பு. வெய்னின் நிறுவனங்கள், கோத்தம் காவல்துறை, பேட்மேனின் ரகசிய குகை... இந்த மூன்று இடங்களை மையமாக வைத்து இந்த கேமை உருவாக்கியிருக்கிறார்கள். ‘சில்ரன் ஆஃப் அர்காம்’ என்கிற கும்பலை பேட்மேன் வீழ்த்தியவுடன் இந்தக் கதையின் நிகழ்வுகள் தொடங்குகின்றன. முதல் எபிசோடின் வில்லன் ரிட்லர் (அடுத்து வரவிருக்கும் பேட்மேன் திரைப்படத்திலும் ரிட்லர்தான் வில்லன்). பேட்மேன் எடுக்கும் முடிவுகளுக்கு ஏற்ப அமாண்டா வாலர், ஹார்லீ குயின், ஜோக்கர் என ஒட்டுமொத்தக் குழுவும் உள்ளே வருகிறார்கள்.
The Enigma, The Pact, Fractured Mask,What Ails You, Same Stitch என ஐந்து எபிசோடுகளாக இந்தக் கதை சொல்லப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு எபிசோடும் இரண்டு மணி நேரம் விளையாடும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. முதல் எபிசோடை மட்டும் ஆசை தீர விளையாடிப் பார்த்துவிட்டு வேறு கேமுக்கு நகர்ந்துவிடுவது நம் கிட்னிக்கு நலம்.
- Downloading...