Published:Updated:

கேம்ஸ்டர்ஸ் - 17

கேம்ஸ்டர்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
கேம்ஸ்டர்ஸ்

Users' Choice Game

கடந்த வாரம் வட கொரிய அரசு செய்யும் காமெடிக் கொடுமைகள் பற்றிச் சொல்லியிருந்தோம் அல்லவா. இந்த வாரம் ஒரு சீன மென்சோக காமெடி. கேமிங் வல்லுநர் சான் செங் தங்கள் கேம் பற்றி ஒரு விளம்பரம் நடத்த பொம்மைத் துப்பாக்கிகளை வாங்கியிருக்கிறார். அவரை மூன்றாண்டுகள் சிறையில் அடைத்திருக்கிறது சீன அரசு. மனிதர்களைக் கொல்லவோ, மயக்கம் அடையச் செய்யவோ பயன்படுத்தப்படும் ஆயுதங்களைத் தடை செய்யப்பட்ட ஆயுதங்களாக அறிவித்திருக்கிறது சீனா. 2010-ம் ஆண்டு இதிலொரு திருத்தம் கொண்டுவரப்படுகிறது. ‘ஒரு காகிதத்தைக் கிழிக்கும் அளவுக்கு பொம்மைத் துப்பாக்கியிலிருந்து வரும் குண்டுக்கு சக்தி இருக்குமானால், அதையும் தடை செய்யப்பட்ட துப்பாக்கியாகக் கருத வேண்டும்’ என்கிறது அந்தத் திருத்தம். தற்போது விடுதலையாகியிருக்கும் சான் செங், தன்னைப் போலவே பொம்மைத் துப்பாக்கிகள் வாங்கிய வழக்குகளில் இருபதுக்கும் மேற்பட்ட நபர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகக் கூறியிருக்கிறார். இதெல்லாம் எப்படி இவ்ளோ தைரியமா வெளிய வந்து சொல்றாரு என்கிறீர்களா? அமெரிக்காவுக்குத் திரும்பிய பின்னர்தான் இதுகுறித்துப் பேசியிருக்கிறார்.

கேம்ஸ்டர்ஸ் - 17

டிசம்பர் மாதம் வந்துவிட்டாலே, இந்த ஆண்டுக்கான பெஸ்ட் பட்டியல் போடுவதுதான் உலக வழக்கம். ஆன்லைன் ஆடியோதளமான ஸ்பாட்டிபை எல்லாம் ஒருவர் எத்தனை நிமிடம் பாடல்கள் கேட்டார், யாருடைய பாடல்கள் என எல்லாவற்றையும் ஒப்பித்துவிடும். ‘ஏம்பா இதையெல்லாம் குறிப்பெடுத்து வச்சிருக்க’ என நமக்கே ஒரு நிமிடம் ஷாக்காகிவிடும். ஆண்டிராய்டு செயலிகளின் பிளே ஸ்டோரும் இந்த ஆண்டுக்கான சிறந்த விளையாட்டுகளின் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. அதில் சில கேம்களின் அறிமுகம் இந்த வாரம்.

கேம்ஸ்டர்ஸ் - 17

பப்ஜி இந்தியாவில் தடை செய்யப்பட்ட பின்னர், இந்தியாவுக்கென பிரத்யேகமாக Battlegrounds Mobile India என்கிற விளையாட்டை வெளியிட்டது Krafton நிறுவனம். இந்த ஆண்டின் சிறந்த விளையாட்டாக நடுவர்கள் தேர்ந்தெடுத்திருப்பது இதைத்தான். மாங்கு மாங்கென சிவாஜி, கமல் நடித்தாலும் கூட்டம் எம்.ஜி.ஆர், ரஜினி பக்கம் செல்லும். அதைப்போலவே நீ வேணும்னா பப்ஜிக்கு விருது கொடுத்துக்க, எங்களுக்கு Garena Free Fire MAX தான் என சின்ன ரேம் மொபைல்களிலும் கில்லியாக அசத்தும் கரேனாவுக்கு ஓட்டுகளைக் குத்தி வின்னராக்கியிருக்கிறார்கள் ரசிகர்கள்.

கேம்ஸ்டர்ஸ் - 17

JanKenUP!

குறைந்தபட்ச உடல் உழைப்பைத்தரும் விளையாட்டு என்றால் ராக், பேப்பர், சிஸர். இந்த கேமுக்கு எல்லாம் விளக்கவுரை எழுத முடியாது பாஸ். ஆனால், ராக் பேப்பர் சிஸருக்கும் இருவர் அவசியம். கொரோனா காலத்தில் சிங்கிள் குழந்தை வீட்டுக்காரர்கள் எங்கே போவார்கள். அவர்களுக்கென இந்த மார்ச் மாதம் உருவாக்கப்பட்ட கேம்தான் JanKenUP. ஆன்லைனில் இருக்கும் உங்கள் தோழருடன் இந்த கேமை நீங்கள் விளையாடலாம். இதற்குள் சில மோடுகளை வேறு வைத்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

கேம்ஸ்டர்ஸ் - 17

Bird Alone

இதுவும் கிட்டத்தட்ட தனிமையில் சிக்கியிருப்பவர்களுக்கான விளையாட்டுதான். உலகில் தனித்திருக்கும் பறவையுடன் நாம் நம் வாழ்க்கை குறித்துப் பல விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளலாம். ஆனால், விளையாடிப் பார்த்த பின் இந்த கேமுக்கு தனிமையே பரவாயில்லை என்றுதான் தோன்றியது. உங்களுக்கும் அப்படித் தோன்றினால், மெயிலிலோ கடிதத்திலோ, கமென்ட் செக்‌ஷனிலோ சொல்லுங்கள்.

கேம்ஸ்டர்ஸ் - 17

Suspects: Mystery Mansion

‘அதே கண்கள்’ படம் பார்த்திருக்கிறீர்களா? இப்போது வந்த படமல்ல, ஈஸ்ட்மென் கலரில் வந்த படம். கிட்டத்தட்ட அதுதான் இந்த கேமின் கதையும். ஒரு மேன்ஷனுக்குள் ஒன்பது நபர்களுடன் நீங்களும் அனுப்பப்படுவீர்கள். அங்கு தரப்படும் டாஸ்குகளை கமுக்கமாகச் செய்ய வேண்டும். ஒன்பது பேரில் இருவர் தானே கொலையாளி. எனவே அவரும் நம்முடன்தான் சுற்றிக்கொண்டிருப்பார். தனியாகச் சென்றால் கதம் கதம்தான். நண்பர்களுடன் ஜாலியாக பேசிக்கொண்டே விளையாட அட்டகாசமான பொம்மை கேம் இது.

கேம்ஸ்டர்ஸ் - 17

Cats in Time - Relaxing Puzzle Game

கால இயந்திரத்தைத் தயார் செய்து வைத்திருந்த டிம் எட்கர், தன் விருப்பமான பூனைகளைத் தொலைத்துவிடுகிறார். அவை கால இயந்திரத்தில் வெவ்வேறு காலகட்டங்களுக்குச் சென்றுவிட, அவற்றை அந்தந்தக் காலங்களுக்குச் சென்று கண்டுபிடிக்க வேண்டும்.

வெவ்வேறு காலகட்டங்கள், பிரத்யேகமான புதிர்கள் என நம் மூளைக்குச் செமத்தியான வேலை கொடுக்கிறது இந்த விளையாட்டு. வீட்டில் இருக்கும் குழந்தைகளின் திறன் அதிகரிக்க நிச்சயம் இந்த விளையாட்டை நீங்கள் பரிந்துரைக்கலாம். அடிதடி விளையாட்டுகளுக்கு நடுவே மூளையைச் சற்று சுறுசுறுப்பாக்கும் இதுபோன்ற விளையாட்டுகளும் அவசியம்.

கேம்ஸ்டர்ஸ் - 17

Unmaze - a fable of light and shade

புதிருக்குள் இரு நண்பர்கள் சிக்கிக்கொள்ள, இருவரையும் நீங்கள் காப்பாற்ற வேண்டும். தீஸிஸ் என்பவரிடம் பேச மொபைலை வெளிச்சத்தில் வைத்து ஆட வேண்டும். ஆஸ்டீரீயடனிடம் பேச மொபைலை இருட்டி வைத்து ஆட வேண்டும். உங்கள் மொபைலின் முன்பக்க கேமராவில் தெரியும் வெளிச்சத்தை வைத்து கேமின் செட்டிங் அதற்கு ஏற்றாற்போல் மாறிக்கொள்ளும். Minotaur and the labyrinth என்னும் கிரேக்க நாவலின் அடிப்படையில் இந்தக் கதாபாத்திரங்களை உருவாக்கியிருக்கிறார்கள்.

மொபைலின் வெளிச்சத்தை வைத்து ஒரு விளையாட்டை அணுகுவதென்பது புதுவித அனுபவத்தைக் கொடுக்கிறது. வித்தியாச விளையாட்டு விரும்பிகள் இந்த விளையாட்டை முயன்று பார்க்கலாம்.

கேம்ஸ்டர்ஸ் - 17

Crash Bandicoot: On the Run!

Temple Run, Subway surf போன்ற விளையாட்டுகளை விளையாடியிருக்கிறீர்களா? candy crush விளையாட்டின் உலக சின்னப்புள்ளத்தனமான விளையாட்டு வீரர்களின் இதயத்தில் நீங்கா இடம்பிடித்த King நிறுவனம் இந்த Crash Bandicoot விளையாட்டை வெளியிட்டிருக்கிறது.

இந்த மார்ச் மாதம் வெளியான Crash விளையாட்டை இதுவரையில் 10 லட்சம் பேர் டவுன்லோடு செய்திருக்கிறார்கள்.

சின்னச்சின்ன லெவல்கள்; ஜாலியான பின்னணி இசை, குட்டி குட்டி வில்லன். தேவையான இடத்தில் ஓடணும், இடிக்கணும், தாவணும், தடுக்கணும். இவ்ளோதான் விளையாட்டு.

கேம்ஸ்டர்ஸ் - 17

- Downloading...