Published:Updated:

கேம்ஸ்டர்ஸ் - 18

கேம்ஸ்டர்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
கேம்ஸ்டர்ஸ்

ஆண்டிராய்டு பயனாளர்களுக்கான இந்த வாரத்தின் புதிய அறிமுகம் Haydos 380 என்னும் கிரிக்கெட் கேம். மேத்யூ ஹெய்டனின் குரலைப் பல இடங்களில் ஒலிக்க வைத்திருக்கிறார்கள்

கார் பயணம் சொகுசாக இருப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு பாதுகாப்பும் முக்கியம். `நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது' எனப் பேருந்துகளில் படம் பார்த்த கதையாக கார்களிலும் குட்டியாக ஒரு டி.வி-யைப் பொருத்தி எல்லோரும் படம் பார்க்க ஆரம்பித்தார்கள். பிறகு இந்த இரண்டுமே ஆபத்தானவை என நினைத்த நிறுவனங்கள், பேருந்துகளில் டி.வி-க்களை ஒவ்வொரு சீட்டுக்கும் மாற்றினார்கள். காரில் இன்னும் ஒரு படி மேலே சென்று, பின் சீட்டுகளுக்கு மட்டும் டி.வி என மாற்றினார்கள்.

பிறகு அதில் கேமிங்கும் சேர்க்கப்பட்டது. டெக்னாலஜியில் எப்போதும் வீம்பாக விளையாடும் எலான் மஸ்க், இந்த முறை அடுத்த சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். டெஸ்லா மாடல் 3 கார்களில், டிரைவர் சீட்டில் அமர்ந்திருப்பவரும் இனி வீடியோ கேம்கள் ஆடும் வகையில் வடிவமைத்திருக்கிறார். காரை ஓட்டிக்கொண்டிருந்தாலும், ஆட்டோ பைலட் மோடு போடாவிட்டாலும் இந்த கேம்களை விளையாட முடியும் என்பதுதான் இதிலிருக்கும் மிகப்பெரிய ஆபத்து. சும்மாவே கவனச் சிதறல்களால் புளிய மரத்தைத் தேடும் கார்களுக்கு இன்னும் சுலபமாக அந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறார் மஸ்க் எனக் குற்றம் சாட்டுகின்றனர் பாதுகாப்பு வல்லுநர்கள். டெஸ்லாவில் ஆட்டோ பைலட் சிஸ்டம் உண்டு. டிரைவர் சீட்டில் வெறுமனே அமர்ந்துகொண்டு காரைத் தானியங்கி மோடில் `லட்சுமி, நீயே ஓட்டிக்க' என்று உத்தரவிடலாம். வேறு சில நிறுவன கார்களிலும் ஆட்டோ பைலட் இருந்தாலும், அந்தக் கார்களில் InfraRed வசதி உண்டு. டிரைவரின் கண்கள் ஸ்டியரிங்கை விட்டு நகர்ந்தால், ஆட்டோ பைலட் ஆஃபாகிவிடும். டெஸ்லா கார்கள் ஏன் இதைச் செய்யவில்லை என அப்போதே கேள்வி எழுப்பப்பட்டது. டிரைவர்களின் கவனச்சிதறல்களால்தான் பல சமயங்களில் விபத்துகள் நிகழ்கின்றன. காருக்குள் கேமிங் எல்லாம் இன்னும் சில காலம் தள்ளிப் போடலாமே எலான் மஸ்க்.

கேம்ஸ்டர்ஸ் - 18
கேம்ஸ்டர்ஸ் - 18
கேம்ஸ்டர்ஸ் - 18

ஆண்டிராய்டு பயனாளர்களுக்கான இந்த வாரத்தின் புதிய அறிமுகம் Haydos 380 என்னும் கிரிக்கெட் கேம். மேத்யூ ஹெய்டனின் குரலைப் பல இடங்களில் ஒலிக்க வைத்திருக்கிறார்கள். மேத்யூ ஹெய்டனின் இமாலய 380 ரன்களைக் கடப்பது மட்டுமே தனியான டாஸ்க்காகத் தரப்படுகிறது. சேலஞ்ச் மோடுகளில் மேத்யூ ஹெய்டனின் பல நிஜ சாதனைகளை நாம் முறியடிக்க வேண்டும். மற்ற கிரிக்கெட் கேம்களைப் போல, இதில் சிக்ஸர் அடிப்பது அவ்வளவு சுலபம் அல்ல. ஈஸி மோடில் விளையாடினாலும், Loft பாரில் 100%ஐ எட்டினால் மட்டுமே சிக்ஸர் அடிக்க முடியும். அதேபோல, பீஸ்ட் மோடு என்கிற செட்டிங்கும் சுவாரஸ்யமாக இருக்கிறது. ஆனால், விளையாடிக் கொண்டிருக்கும் கேமை save செய்ய முடியாது என ஆரம்பித்து கேம் முழுக்கவே நிறைய மூட்டைப் பூச்சிகள். சிங்கிள் தட்டினாலும் பிளேயர் மாற மறுக்கிறது. எல்லா கிரிக்கெட் கேம்களையும் போலவே இதிலும் ஓவருக்கு ஒருமுறை விளம்பரம் போடுகிறார்கள். கிராபிக்ஸும் அவ்வளவு சிறப்பாக இல்லை. ஏற்கெனவே கிரிக்கெட் கேம்கள் கொட்டிக் கிடக்க, இன்னொரு புதிய கேம் என்கிற அளவில் மட்டுமே இந்த Haydos 380 தற்போதைக்கு இருக்கிறது. அடுத்தடுத்த அப்டேட்களில் தவறுகளைச் சரி செய்வார்கள் என நம்புவோமாக.

Drakengard

2003-ம் ஆண்டு Playstation 2-ல் வெளியானபோதே, யோகோ டரோவின் drakengard விளையாட்டுக்கு ஜப்பானில் ஏகப்பட்ட வரவேற்பு. பண்டைய கால ஐரோப்பிய நாடுகளை மனதில் கொண்டு உருவாக்கப்பட்ட மிட்கார்டு தான் drakengard விளையாட்டுகளின் ஆடுகளம். ‘`வீரர்களே, நாம் யார்?” என பாகுபலி டைப்பில் கர்ஜித்து சின்னச் சின்னப் போர்களுக்கு ஆட்களை அனுப்பலாம். அல்லது நாமே டிராகன் மீதேறி அமர்ந்து ‘டிஸ்க்யூல்’ என டிராகன் வாயிலிருந்து அக்னிக் குண்டுகளை (இதுக்கு எதுவும் பிரச்னை இல்லையே!) வரச்செய்து எதிரிகளை அழிக்கலாம். ஒருவரை டார்கெட் செய்து அடிக்க, சின்ன அக்னிக் குண்டுகள். இல்லையெனில் பொத்தாம் பொதுவாய் எல்லோருக்கும் பெய்யும் மழை போல, அக்னிக் குழம்பை டிராகன் வாயிலிருந்து அந்த ஏரியா முழுக்க யூரியா அடிப்பதுபோல கக்க வைக்கலாம். இந்த விளையாட்டு ஹிட் அடிக்க, 2005-ம் ஆண்டு கேம்பிளேயில் சில மாற்றங்களுடன் Drakengard இரண்டாம் பாகத்தை வெளியிட்டார் யோகோ டரோ.

கேம்ஸ்டர்ஸ் - 18
கேம்ஸ்டர்ஸ் - 18

Drakengard விளையாட்டின் முதல் பாகத்தின் ஐந்தாவது கதைக்களத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கிளைக்கதை விளையாட்டு தான் Nier. ஜப்பானில் மட்டும் ஹிட் அடித்தால் போதுமா, இன்னும் மார்க்கெட்டைப் பிடிக்கலாம் என உருவாக்கப்பட்டதுதான் Nier. அதற்கேற்ப ஆடுகளத்தை மாற்றியிருந்தார்கள். விசித்திரமான நோய் ஒன்று நாயகனின் உறவினருக்கு வர, அதன் தீர்வுக்கான வேட்கையில் இருக்கிறான் நாயகன். உறவினர் யோனாவைப் பீடித்திருக்கும் Black Scrawl என்னும் நோயிலிருந்து அவரை மீட்க வெவ்வேறு மான்ஸ்டர்களை எதிர்கொண்டு வீழ்த்த வேண்டும். Nier 5 லட்சம் என விற்பனையாக, உலக வெர்ஷனுக்கான ரீமாஸ்டர் செய்யப்பட்ட வெர்ஷனோ 10 லட்சம் விற்று அசத்தியது. 2010-ம் ஆண்டு nier வெற்றிக்குப் பிறகு, 2017-ம் ஆண்டு அதன் அடுத்த சீக்குவலான Nier: Automata-வை வெளியிட்டனர். டிராகன்களைக் கடந்து வெகுதூரம் வந்துவிட்டன nier விளையாட்டுகள். Nier automata-வில் வினோத மிருகங்கள், மெஷின்கள் எனப் பலவற்றில் ஏறி எதிரிகளைப் பந்தாடலாம். கடந்த ஜூலை வரை, 60 லட்சம் யூனிட்கள் விற்று சாதனை படைத்திருக்கிறது Nier: Automata.

`கேம் ஹிட் அடித்தால் அடுத்து என்ன, அதேதான்’ என்பதுபோல, காமிக்ஸ், புத்தகம், நாவல், மேடை நாடகம் என எல்லாவற்றிலும் கால் பதித்தன Drakengard தொடர்கள்.

கேம்ஸ்டர்ஸ் - 18
கேம்ஸ்டர்ஸ் - 18
கேம்ஸ்டர்ஸ் - 18
கேம்ஸ்டர்ஸ் - 18

Nier Reincarnation

பிளேஸ்டேஷன்களில் ஹிட் அடித்த Nier விளையாட்டுகளை இந்த முறை ஆண்டிராய்டிலும் ஐ.ஓ.எஸ்ஸிலும் இறக்கியிருக்கிறார்கள். Nier, Nier: Automata நடக்கும் கதைக்களத்தில்தான் Nier reincarnation-ம் நடக்கிறது. விண்ணை முட்டும் டவர்கள் இருக்கும் அந்த இடத்திற்குப் பெயர் Cage. இந்த விளையாட்டின் நாயகி ஒரு சிறுமி என்பதால், ஆண் பெண் பேதமில்லாமல், விளையாடும் எல்லோருமே அந்தச் சிறுமியாகத்தான் இந்த வித்தியாசமான உலகத்துக்குள் விளையாட வேண்டும். Mama என்னும் பேயின் உதவியுடன் நாம் அங்கு தரும் சின்னச் சின்ன டாஸ்குகளைச் செய்ய வேண்டும். கேஜுக்குள் இருக்கும் வெவ்வேறு இடங்களுக்குச் சென்று ScareCrows மூலம் புதிய ஆயுதங்களைப் பெறலாம். காலநிலைகள் சட்டென மாறுவது, வேறு உலகங்களுக்குப் பயணம் செய்வது என, கதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இந்த கேமை உருவாக்கியிருக்கிறார்கள். கதைக்களம் விரிய விரிய வெவேறு மனிதர்கள், டார்க் மான்ஸ்டர்கள் என மொபைல் விளையாட்டுகளில் புதியதொரு அனுபவத்தை நிச்சயம் தரும் இந்த Nier Reincarnation.

அதே சமயம், தற்போதிருக்கும் பிற அடிதடி கேம்களுடன் ஒப்பிட்டால், இதிலிருக்கும் சண்டை அனுபவங்கள் சுவாரஸ்யம் குறைவுதான்.

- Downloading...