
சுயாதீனத் திரைப்படங்கள், சுயாதீன இசை பாணியில்தான் பெரிய நிறுவனங்களின் பெயர்களைச் சுமக்காமல் வரும் விளையாட்டுகளை Inde Games என அழைக்கிறார்கள்.
வீடியோ கேம்களைத் திரைப்படங்களாக மாற்ற ஒப்பந்த வேலைகள் படுவேகமாக நடந்துவருகின்றன. சூப்பர் மேரியோ, அன்சார்ட்டட் எல்லாம் திரைப்படங்களாக வரவிருக்கின்றன என முந்தைய வாரங்களில் சொல்லியிருந்தோம். தற்போது, அடுத்த கட்டமாக MegaMan விளையாட்டை லைவ் ஆக்ஷன் திரைப்படமாக எடுக்க ஒப்பந்தம் போட்டிருக்கிறது நெட்பிளிக்ஸ். வீடியோ கேம்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட The witcher, Castlevania தொடர்கள் நெட்பிளிக்ஸில் சக்கைப்போடு போட்டுவருகின்றன. The witcher தொடரின் இரண்டாவது பாகம் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது. அதுகுறித்து அடுத்த வாரம் ஓ.டி.டி கார்னர் பகுதியில் எழுதுவோம். கேம் கம்பெனிகள் முன்பெல்லாம் ஆளைப் போட்டு வைத்திருப்பதுபோல, அடுத்ததாக Resident evil, Tomb raider தொடர்களையும் வெளியிடவிருக்கிறார்கள். போக்கிமான் தொடரும் அடுப்பகத்தில் தயாராகிக்கொண்டிருப்பதாகச் செய்திகள் வலம்வருகின்றன. நெட்பிளிக்ஸ் ஏற்கெனவே தங்கள் செயலிக்குள் கேம்களை இணைத்திருக்கிறார்கள். ஒரு பக்கம் அமேசான் ப்ரைம் நிறுவனம், ஆண்டுச்சந்தாவை ஏற்றியதோடு கிரிக்கெட் ஒப்பந்தங்களை வாங்கிக் குவித்து தன்னையும் ஹாட்ஸ்டார் போல மாற்றிவருகிறது. இன்னொரு பக்கம் நெட்பிளிக்ஸ், கேம்களைத் தொடர்களாக மாற்ற ஒப்பந்தங்களைப் போட்டு வருகிறது. இந்தத் தொடர் ஓட்டத்தில் எது வெல்லும் என்பதைப் பார்வையாளர்கள்தான் முடிவு செய்யப் போகிறார்கள்.


PUBG-ஐப் பற்றி மிகப்பெரிய அப்டேட் ஒன்று வந்திருக்கிறது. இனி PUBG-ஐ இலவசமாக விளையாட முடியும். ஏற்கெனவே இலவசமாகத்தானே விளையாடுகிறோம் என்கிறீர்களா? Free To Play ஆப்சன் மொபைல் வீரர்களுக்கு மட்டும்தான். பிளே ஸ்டேஷனுக்குப் பணம் செலவு செய்தாக வேண்டும். STEAM, PlayStation, XBOX, Stadia என எல்லா பிளாட்பார்ம்களிலும் என பப்ஜியை இலவசமாக ஆட முடியும். ஜனவரி 11-ம் தேதி வரை இதற்கு முன்பதிவு செய்யுங்கள் என விளம்பரம் செய்திருக்கிறது KRAFTON நிறுவனம். ஏற்கெனவே PUBG விளையாடி KRAFTON ஐ.டி வைத்திருப்பவர்களும் இதில் தங்களை இணைத்துக்கொள்ளலாம். அவர்களுக்குச் சில பல ரிவார்டுகளைத் தருவதாக உறுதி செய்திருக்கிறது பப்ஜி.
Inde Game
சுயாதீனத் திரைப்படங்கள், சுயாதீன இசை பாணியில்தான் பெரிய நிறுவனங்களின் பெயர்களைச் சுமக்காமல் வரும் விளையாட்டுகளை Inde Games என அழைக்கிறார்கள். ஆனால், இது சுயாதீனத் திரைப்படங்களைப் போல முழுவதுமாக பெரிய நிறுவனங்களின் துணையில்லாமல் நடப்பதில்லை. காரணம் அதற்கு ஆகும் செலவுகள். எவ்வளவு சுவாரஸ்யமான கேம் என்றாலும், அதை பிளே ஸ்டேஷனுக்குக் கொண்டு செல்ல பப்ளிஷர்கள் தேவைப்படுவார்கள். ஐடியா, குழு, உழைப்பு எல்லாம் எங்களுடையது; பணத்தை மட்டும் நீங்கள் தரலாம் டைப் சுயாதீன கேம்களும் உருவாகிவருகின்றன. Supergiant Games உருவாக்கிய Bastion வித்தியாசமான இடங்களில் எதிரிகளைப் பந்தாடும் ஒரு கேம். EA நிறுவனத்துக்காக வேலை பார்த்துக்கொண்டிருந்தவர்கள், தனியாகத் தொடங்கிய நிறுவனம்தான் Supergiant Games. வெறும் ஏழு நபர்களின் உழைப்பில் உருவானது Bastion. பலரின் ஏகோபித்த பாராட்டுகளை Bastion பெற்றாலும், XBOX அங்கீகாரத்துக்கு வார்னர் பிரதர்ஸின் துணை தேவைப்பட்டது. வார்னர் பிரதர்ஸின் வெளியீடாகவே வெளியானது Bastion. நம்மூர் சின்னப்படங்களில் ரெட்ஜெயண்ட் வெளியீடு என வருவதில்லையா. அது போலத்தான் இது. சில ஆண்டுகளுக்குப் பின்னர், அதன் ஸ்திரத்தன்மையை உறுதியாக்கிவிட்டு, வெளியீடுகளையும் தற்போது Supergiant நிறுவனமே பார்த்துக்கொள்கிறது.



கல்லூரி மாணவர்கள் ஜெனோவா சென், கெல்லி சாண்டியாகோ இருவரும் இணைந்து ஒரு கேமிங் கம்பெனியை உருவாக்குகிறார்கள். எல்லா கேமுக்கும் கேம்பிளே என்கிற ஒரு விஷயம் மிகவும் அவசியம். அது அதிவேகமாக இருக்க வேண்டும். பறக்கும் கார்கள், ஓடிக்கொண்டே இருக்கும் மனிதர்கள், சுட்டுக்கொண்டே இருக்கும் துப்பாக்கிகள், பீரங்கிகள் என எந்தவொரு கேமிலும் நீங்கள் அக்கடா என நிம்மதியாக இருக்க முடியாது. அதை ஏன் மாற்றக்கூடாது என யோசித்தார் ஜெனோவா சென். தன் சிறுவயதில் பல முறை ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளுக்குள் முடங்கிப் போயிருக்கிறார் ஜெனோவா. படுக்கையை விட்டு எழ முடியாத ஒரு சிறுவன், தன் கனவுகளின் மூலம் பல்வேறு இடங்களுக்குப் பறந்து செல்கிறான் என்பதுதான் அவர் கருவிலிருந்த முதல் கேம். பல்வேறு மாணவர்களின் உதவியுடன் Cloud என்கிற இந்த விளையாட்டை மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்காக உருவாக்குகிறார். மவுஸை வைத்து மட்டுமே விளையாடக்கூடிய எமோஷனலான விளையாட்டு இது. ஏழு மாதங்களில் 6 லட்சம் டவுன்லோடுகளை அள்ளுகிறது Cloud. ஜாலியாக ThatGameCompany என தங்களுக்கான நிறுவனத்தை இருவரும் உருவாக்குகிறார்கள்.
புழு போன்றதொரு உயிரினத்தை வைத்து எமோஷனலான இசையுடன் ஜெனோவா சென் உருவாக்கிய Flow விளையாட்டால் ஈர்க்கப்பட்ட சோனி நிறுவனம், பிளே ஸ்டேஷன்களுக்குப் பிரத்யேகமாக மூன்று விளையாட்டுகளை உருவாக்கித்தர ஒப்பந்தம் போடுகிறது. Flow விளையாட்டின் சிறப்பம்சமே நாம் லெவல்களை செட் செய்ய வேண்டியதில்லை என்பதுதான். நாம் விளையாடும் வேகத்துக்கேற்ப அதுவே அதற்கான லெவலை செட் செய்து தன்னை மாற்றிக்கொள்ளும். Flow, Flower, Journey என மூன்று விளையாட்டுகளை சோனிக்காகச் செய்து தருகிறார்கள். ThatGameCompany ஆண்டிராய்டில் வெளியிட்ட முதல் கேம் Sky : Children of the light.



Sky: Children of the Light
இளையராஜாவின் இசையைக் கேட்பவர்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் அதிகமாகப் பயன்படுத்தும் வார்த்தை Bliss. அப்படியானதொரு அனுபவத்தைத் தருகிறது Sky. மொபைல் கேம் என்றதும் வேக வேகமாக டச் ஸ்கிரீனைத் தடவ ஆயுத்தமானால், ‘என்ன அவசரம்’ என்பது போல டீ செய்கிறது ஸ்கை. அதற்கேற்ப இழைந்தோடுகிறது அதன் பின்னணி இசை.
ஏழு வித்தியாசமான உலகங்கள், அதற்கேற்ப வித்தியாசமான தீம்களுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது ஸ்கை. நடக்கலாம், பறக்கலாம் என கேம் அதற்கேற்ப மெழுகுவத்திகளுடன் விரிவடைந்துகொண்டே இருக்கிறது. சோஷியல் மீடியாக்களின் வருகைக்குப் பின்னர் நாம் அதிகமாக விர்ச்சுவல் உலகில் புதிய நண்பர்களைத்தான் உருவாக்குகிறோம். இந்த கேமிலும் அது சாத்தியமாகிறது. புதியவர்களுடன் ஒரு குழுவாகவும் இந்த கேமை நீங்கள் விளையாட முடியும். அவர்களுக்குச் செல்லப்பெயரும் வைக்க முடியும். அவர்களுக்கு உங்களிடம் இருக்கும் பொருள்களைப் பரிசாகவும் தரலாம். தனியாக நீங்கள் இந்த கேமை விளையாடி முடிக்கலாம் என்றாலும், சில புதிர்களுக்கு கும்பலாக இருப்பது விளையாட்டை இன்னும் சுவாரஸ்யமாக மாற்றுகிறது.


விளையாட்டில் முக்கியமான பொருள் மெழுகுவத்திதான். அதை வைத்துத்தான் பிற பொருள்களை வாங்கவோ, விற்கவோ முடியும். தொப்பி, முகமூடி, ஆடைகள், இசைக் கருவிகள் எனப் பல்வேறு சின்னச்சின்னப் பொருள்களை அறிமுகப்படுத்திக்கொண்டே கதை நகர்கிறது. இன்னும் புதிய விளையாட்டுகளுடன் அவ்வப்போது ஸ்பெஷல் அப்டேட்டுகளையும் கொண்டு வருகிறார்கள்.
ThatgameCompany நிறுவனத்தின் பிற விளையாட்டுகளைப் போலவே இதுவும் எமோஷனலாக பலரின் மனங்களைக் கொள்ளை கொண்டிருக்கிறது என்பதுதான் நிதர்சனம். ஆன்லைன் கேம் என்றாலே பதைபதைப்புடன் எதிரிகளைச் சுட்டு வீழ்த்தும் காலத்தில், எமோஷனாக நிம்மதியாக ஒரு கேமை ஒரு குழுவாக விளையாடி அகமகிழ ஸ்கை நல்லதொரு வாய்ப்பாக இருக்கும்.
- Downloading...