
கடந்த வாரம் 90-களின் முற்பகுதியில் என எழுதியிருந்தோம் அல்லவா. ‘கர்ணப்’ பிழையாகிவிட்டது, 90களின் இடையில் என அதை மாற்றிப் படித்துக்கொள்ளவும்.
இப்போது விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு எனச் சண்டை போட்டாலும், 90ஸ் கிட்ஸ், 80ஸ் கிட்ஸ் எனப் பலரும் ஒரு காலத்தில் பார்த்துக்கொண்டிருந்தது WWE தான். ஜூலை மாதம் நடந்த எத்தனையோ பிரச்னைகளுக்கு நடுவே, Wyatt என்பவரை WWE அமைப்பினர் வெளியேற்றிவிட்டனர் என ‘இந்தியன்’ பட மனோரமா பாணியில் மண்ணை வாரித் தூற்றிக்கொண்டிருந்தனர் WWE ரசிகர்கள். ‘‘WWE என்பது ஏமாற்று வேலை, அதில் அடியெல்லாம் விழாது, ரத்தம் எனக் குங்குமத்தண்ணீர் வழியும்; எல்லாமே பொய்’’ என ஒரு கும்பல் சொல்லும். ‘பொய்யா கோப்பால்’ என்றொரு கும்பல் கேட்கும். இந்த இரண்டு கும்பல்களும் ஆண்டுக்கு ஆண்டு மாறிக்கொண்டே இருப்பார்கள். புதிதாக வரும் கும்பல் அதே ஆர்வத்துடன் இதை ரசித்துக்கொண்டிருப்பார்கள்.

அண்டர்டேக்கருக்கு ஏழு உயிர்; கெய்னும், ஹண்டர்டேக்கரும் அண்ணன் தம்பி; வின்ஸ் மெக்மோஹன், டிரிஷ் ஸ்டேர்ட்டஸ் எனப் பழைய மார்பெல் சாக்லேட்களுக்கு இலவசமாகக் கொடுத்த ஸ்டிக்கர்களை நோட்டுப்புத்தகங்களிலும், பீரோக்களிலும் ஒட்டி வைத்து வீட்டில் அடி வாங்கிய தருணங்கள் ஏராளம்.
சரி, கடந்த வாரம் ‘ஒலிம்பிக்கில் ஏன் சூப்பர் மேரியோ ட்யூன் மட்டும் மிஸ்ஸானது தெரியுமா’ எனக் கேட்டிருந் தோம் அல்லவா? மேரியோவையும், சோனிக்கையும் வைத்து Nintendo நிறுவனம் ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பெரிய திட்டங்களைத் தீட்டியிருந்தது. ஒலிம்பிக் மெடல்களுடன் மேரியோவும் சோனிக்கும் வலம் வருவார்கள் என எதிர்பார்த்திருந்த நிலையில், அதை அப்படியே டெலிட் செய்தது Nintendo. அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பாடல்களைக் குறைத்தது Nintendoவின் கடைசி நிமிட விலகலுக்கு ஒரு காரணமாகச் சொல்லப்பட்டது. இறுதியில் Nintendo நிறுவனமே வெளியேறிவிட்டது.


இந்த வாரத்திலிருந்து கேம்களின் ஆதிகாலத்தை நோக்கிய பயணத்தைத் தொடங்கலாம் என்றால், அதற்குள் மற்றுமொரு கவலைதரும் செய்தி. சுடோகுகளின் காட்ஃபாதர் என அழைக்கப்படும் ஜப்பானின் மகி கஜி மறைந்துவிட்டார். குறுக்கெழுத்துப் போட்டிகள் பல ஆண்டுகளாகச் செய்தித்தாள்களை அலங்கரித்துவந்தாலும், அதற்கான விடைகளை நம்மால் ஓரளவு கணித்துவிட முடியும். அந்தச் சூழலில்தான் உள்ளே வந்தது SUDOKU. 81 கட்டங்களுக்குள் 9*9 கட்டங்கள். 1 முதல் 9 வரை எண்கள். ஒரு வரிசையில் அவை ஒருமுறை மட்டுமே வர வேண்டும். ஒரு கட்டத்தில் செய்தித்தாளில் இந்தப் பக்கத்தை யார் முதலில் நிரப்புவது என்பதில் போட்டி ஆரம்பித்தது. பள்ளியில் இருக்கும் செய்தித்தாளை ஆசிரியர்கள் படிக்கப் பிரிக்கும்போதே, SUDOKU பக்கம் மட்டும் நிரப்பப்பட்டிருக்கும். SUDOKU 81 கட்டங்கள், ரூபிக்ஸ் க்யூப் 54 கட்டங்கள். இரண்டிலும்தான் இன்றளவுக்கும் அத்தனை போட்டிகள் நடந்துகொண்டிருக்கின்றன. இரண்டுக்குமான விடைகளை யாரும் யூகித்துவிட முடியும். ஆனால், அது எத்தனை நொடிகளுக்குள் என்பதில்தான் வாழ்க்கையில் சுவாரஸ்யம் அடங்கியிருக்கிறது. சரி, செய்தித்தாளில் இருக்கும் SUDOKU தவிர்த்து எத்தனை விதங்களில் SUDOKU இருக்கிறது தெரியுமோ. வேறொரு எபிசோடில் பார்க்கலாம்.

கடந்த வாரம் 90-களின் முற்பகுதியில் என எழுதியிருந்தோம் அல்லவா. ‘கர்ணப்’ பிழையாகிவிட்டது, 90களின் இடையில் என அதை மாற்றிப் படித்துக்கொள்ளவும். அப்போதுதான் கேமிங் அதன் உச்சத்தை எட்டியிருந்தது. ‘ரத்தம் தெறிக்கத் தெறிக்க ஒரு கேம் கோடிங் எழுத முடியுமா சொல்லு’ என கேமிங் நிறுவனங்கள் ஊழியர்களைப் போட்டு அடித்துக்கொண்டிருந்தன. Mortal Kombat விளையாட்டை 1992-ம் ஆண்டு அப்படித்தான் அமெரிக்கா உருவாக்கியது. அதற்கு முன்பிருந்த ‘ஒத்தைக்கு ஒத்தை வாரியா’ விளையாட்டு என்றால் அது ஜப்பானின் Street fighter தான். ‘ரத்தச் சத்தம் மட்டும் போதாது, முத்தச் சத்தமும் வேண்டும்’ என நினைத்த ஜப்பான், இன்னும் பல படிகள் கீழே போய், ‘அடல்ட் கொஞ்சம் தூக்கலா’ என LOADED விளையாட்டை 1995-ல் வெளியிட்டது. முதல் வாரத்திலேயே 2,50,000 காப்பிகள் கப்பலில் ஏற்றப்பட்டன. அடுத்தது என்ன, அதிகமாக எல்லாம் யோசிக்கவில்லை. மேக் இட் சிம்பிள் என RELOADED எனப் பெயர் வைத்து அதன் அடுத்த பாகத்தை ரிலீஸ் செய்தார்கள். அதுவும் பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்தது. இந்த இரண்டுக்கும் போட்டியாக இதே சீசனில் வந்த மற்றுமொரு அமெரிக்க விளையாட்டு Primal Rage. இவற்றில் Loaded சீரிஸ் தவிர மற்ற அனைத்துக்கும் பொதுவான விதிகள் சில உண்டு. குறிப்பிட்ட நேரத்தில் எதிராளியை அவுட்டாக்க வேண்டும். ஒரே நேர்க்கோட்டில் இருவரும் நின்றுகொண்டு சண்டை செய்ய வேண்டும். ரோஷமான வீடியோ கேம் சண்டை வரலாறு உருவானது இப்படித்தான். இந்த 2D எப்படி அடுத்தடுத்த கட்டம் போனது...


இதில் ரியலில் ரீலாக சண்டைபோட்ட வகையறா WWE. ஆரம்பத்தில் WWF என அழைக்கப்பட்டாலும், அதே பெயரை வேறொரு நிறுவனமும் வைத்துவிட, ‘நீங்க அப்பர் பர்த் F வச்சுக்குங்க, நாங்க மிடில் பர்த் E எடுத்துக்கறோம்’ என செட்டில் ஆனார்கள் WWE குடும்பத்தினர்.
இருபதாண்டுகளுக்கும் மேலாக PLAYSTATION-ல் ரிங்குக்குள் கர்ஜித்துக்கொண்டிருக்கிறது WWE.

PLAYSTATION அளவுக்கு இல்லையென்றாலும், ஆண்டிராய்டில் இருக்கும் WWE விளையாட்டுகளில், ரிங்குக்குள் நடக்கும் போட்டிக்கான சுவாரஸ்யத்தைக் கொஞ்சமேனும் கொடுப்பது WWE Mayhem-தான். நம் உண்டியலுக்கெனச் சில பாயின்டுகளைப் பரிசளித்திருப்பார்கள். ஒவ்வொரு போட்டிக்கும், அதிலிருந்து சில புள்ளிகளைப் போட்டிக்கான கட்டணமாக அவர்களே எடுத்துவிடுவார்கள். சில நிமிடங்கள் விளையாடாமல் சும்மா வைத்திருந்தால், ஒரு பாயின்ட் வரும். இப்படிக் கொஞ்ச நேர விளையாட்டு, சில மணி நேர உருப்படியான வேலை என இந்த WWE Mayhem-ஐ நீங்கள் டீல் செய்ய முடியும்.

Story
ஆஃப்லைனிலும் ஆடலாம் என்பது முதல் பிளஸ். ஒவ்வொரு ஸ்டோரிக்குள்ளும் சிற்சில எபிசோடுகள். அதனுள் பல போட்டிகள் என ஆற அமர ஆடுபவர்களுக்கு ஏற்றது. ஒவ்வொரு போட்டிக்கும் எனெர்ஜி குறையும் என்பதால், அளவுடன் விளையாடி வளமுடன் வாழ வேண்டும்.
VERSUS
ஆன்லைனில் சும்மா போகும் நபர்களின் ஜடையைப் பிடித்து இழுத்து சண்டைக்குக் கூப்பிடலாம்.
EVENTS
அமாவாசை, பௌர்ணமி என்று வந்தால் அவர்களே விழா எடுத்து, சிறந்த வெற்றியாளர்களைத் தேர்வு செய்வார்கள். இந்தப் போட்டிகள் ரணகளமாக இருக்கும்.
FAN VOICE
கிராபிக்ஸ் சற்று அப்படி இப்படி என இருந்தாலும், நிறைய மூவ், வித்தியாசமான ரிங்குகள், போட்டிகள், தின ரிவார்ட்ஸ் என நம்மை பிஸியாக வைத்திருக்கிறது. சமயங்களில் லாக் அவுட் செய்துவிட்டு, மீண்டும் வந்தால் பழையதை மறந்த மூன்றாம் பிறை ஸ்ரீதேவியாய் மாறி நம்மைக் கமல்போல் விழிக்க வைத்துவிடுவதுதான் ஒரே குறை.
ALLIANCE
பேருக்கு ஏற்றாற்போல், இங்கும் கூட்டணி அமைத்துக்கொள்ளலாம். வெல்லும் பாயிண்டுகளில் ஆளுக்கு அம்பது என பிரித்துக்கொள்ளலாம்.
கவனம்
‘வாரத்துக்கு 50 ரூபாய் கட்டுங்கள், உலகத்தைச் சுற்றிக் காட்டுகிறேன்’ டைப்பில் விளம்பரங்கள் அவ்வப்போது வரும். அதற்குள் விழுந்துவிட வேண்டாம். பணம் கட்டாமல் விளையாடுங்கள். பணம் கட்டியவுடன் விளையாட நிறைய ஆப்ஷன் வரும் என்பது உண்மைதான் என்றாலும், அது தேவையில்லாத, பர்ஸைப் பதம் பார்க்கும் விஷயம்.