Published:Updated:

கேம்ஸ்டர்ஸ் - 20

கேம்ஸ்டர்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
கேம்ஸ்டர்ஸ்

மாங்கா எனப்படும் ஜப்பானிய கிராஃபிக் நாவல்களில் சக்கைப்போடு போட்டது இந்த வகைமை.

சில விஷயங்களை மறுபடியும் கிளறாமல் இருப்பதே நல்லது என்பதை மீண்டும் நிரூபணம் செய்திருக்கிறது Matrix. 20 வருடங்கள் கழித்து அவர்கள் வெளியிட்டிருக்கும் நான்காவது பாகத்தை ரீபூட், சீக்குவல், ஸ்பூஃப் என எப்படி வேண்டுமாயினும் சொல்லிக்கொள்ளலாம். அல்லது, வேண்டா வெறுப்பாகப் படத்தையெடுத்து Matrix resurrection எனப் பெயர் வைத்துக்கொள்ளலாம் என எடுத்ததாகவும் நினைக்கலாம். உயிர்த்தெழுதல் எனப் பெயர் வைத்துவிட்டு நம்மைச் சிலுவையில் அறைந்திருக்கிறது தற்போது வந்திருக்கும் Matrix திரைப்படம். அதே சமயம் The Matrix Awakens என்கிற டெக் டெமோ மூலம் மிரட்டி அதை ஈடுசெய்திருக்கிறார்கள். படத்தின் நாயகர்கள் கீனு ரீவ்ஸும், கேரி ஆன் மாஸும் இந்த விளையாட்டை விளக்குவதாய் இந்த வீடியோ அமைந்திருக்கிறது. வருங்காலங்களில் புதிய கதை சொல்லல் பாணிகளின் மூலம் எத்தகைய மாற்றங்களை கேமிங்கில் நிகழ்த்த முடியும் என்பதைப் பற்றி இந்த வீடியோ பேசுகிறது. சில நிமிடங்கள் காட்டப்படும் இந்த கேமில், வரும் கதாபாத்திரங்கள் அச்சு அசல் கீனு ரீவ்ஸ், கேரி ஆன் போலவே இருக்கிறார்கள். அதுவும் 20 ஆண்டுகளுக்கு முன் வந்த Matrix படங்களில் வரும் க்ளீன் ஷேவ் கீனு ரீவ்ஸ். Matrix பாணியிலேயே சொல்வதாயின், இனி ‘எது நிஜம், எது கேம்’ எனச் சொல்வது கடினம்.

கேம்ஸ்டர்ஸ் - 20

சினிமா டு கேம் பட்டியலில் இந்த மாதத்தின் புதிய வரவு Dune. பிராங்க் ஹெர்பெர்ட் எழுதிய இந்த நாவலைப் பலர் திரைப்படமாக்க முயன்று தோற்றுப்போக, முதல் பாகத்தை கடந்த ஆண்டு (ஆம், 2021 தான்) வெற்றிகரமாக இயக்கி முடித்து வெளியிட்டுவிட்டார் டென்னிஸ். அடுத்த பாகத்துக்கான ஷூட்டிங்கே வரும் ஜூலை மாதம்தான் ஆரம்பிக்கவிருக்கிறது. இதற்கிடையே Dune:Sisterhood என்கிற வெப் சீரிஸையும் HBO MAX தளத்துக்கு எடுக்கவிருக்கிறார்கள்.

எல்லாப் பக்கமும் கடை விரிக்கப்படும் போது, கேமிங் இல்லாமல் எப்படி? ஆம், Spice Wars என்கிற பெயரில் கேமாகவும் வரவிருக்கிறது. பாலைவன நகரமான அராக்கிஸ்தான் இந்த கேமின் கதைக்களம். ஹவுஸ் அட்ரெய்டீஸ், ஹவுஸ் ஹர்கோனென் சண்டைகள், ராட்சத மண்புழுக்கள் என எல்லாமே கேமில் வரலாம் எனச் சொல்லப்படுகிறது. புத்தகத்தை அடிப்படையாக வைத்தே இந்த கேமை உருவாக்கியிருக்கிறார்களாம். டிரெய்லர் மட்டுமே வந்துள்ள நிலையில், இன்னும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்பதே Dune படைப்பாளிகள் நமக்குச் சொல்லும் கசப்பான உண்மை. அப்படியே சட்டுபுட்டுன்னு பொன்னியின் செல்வனையும் கேமா எடுத்து ரிலீஸ் பண்ணலாமே பிரன்ச்.

கேம்ஸ்டர்ஸ் - 20

Cyberpunk

கலையின் படைப்புலக பிரம்மாக்கள் நமக்கு உருவாக்கிய புதியதொரு வகைமைதான் cyberpunk. சாம்பல் மேடுகளும், சூழும் புகை மண்டலங்களுமென திரையரங்க சிகரெட் சென்சார் வசனம் நினைவிருக்கிறதா? அதைப் போன்றதொரு வித்தியாசமான உலகம்தான் cyberpunk. சயின்ஸ் பிக்‌ஷன் வகைமையில், நடந்தது, நடக்கிவிருப்பது, நடப்பது என எல்லாவற்றையும் கிரகித்து முடித்தபின்னர், புதிதாக என்ன செய்யலாம் என யோசித்தபோது சிலரின் மூளையில் உதித்திருக்கிறது இந்தச் செம்பணி. போதைமருந்துகள், கொலைகள், வன்முறை வெறியாட்டங்கள் என இப்போதைய உலகின் அக்கிரமங்களை எல்லாம் ‘ ஒருத்தன் வருவாண்டா உங்களை முடிச்சுக்கட்ட’ எனக் காத்திராமல், அந்த ஒருத்தனின் டைம்லைனுக்கு நம்மை அழைத்துச் சென்று விடுவது தான் இந்த cyberpunk. லைட்டா குழப்பறனோ? ஓகே, டெக்னாலஜியும் புதிய தொழில்நுட்பங்களும், ரோபோக்களும் நம்மை அடக்கி ஆளும் ஒரு எதிர்காலத்தில், சாதாரண வாழ்க்கைக்காகப் போராடும் ஒரு சாமானியன் என்னவெல்லாம் செய்து தாக்குப் பிடிக்க வேண்டியதிருக்கிறது என்பதாக இந்தக் கதைகள் நகரும். ரிட்லி ஸ்காட் இயக்கிய Blade runner, முந்தைய பக்கத்தில் பேசப்பட்டிருக்கும் Matrix வரை நிறைய படங்களை இதற்கு உதாரணங்களாகச் சொல்ல முடியும். ப்ரூஸ் பெத்கீ என்கிற அமெரிக்க எழுத்தாளர் 1983-ம் ஆண்டு cyberpunk என்கிற பெயரில் ஒரு சிறுகதை எழுத, அதையே இந்த வகைமைக்குத் தலைப்பாகவும் வைத்துவிட்டார்கள்.

cyberpunk பிறந்தது அமெரிக்காவாக இருந்தாலும், வளர்ந்து பள்ளிக்கூடம் போனதெல்லாம் ஜப்பான்தான். மாங்கா எனப்படும் ஜப்பானிய கிராஃபிக் நாவல்களில் சக்கைப்போடு போட்டது இந்த வகைமை. கட்ஷுஹிரோ ஒடமோ ‘அகிரா’வை வைத்து இதற்கான ரோபோட்டிக் சுழியைப் போட்டுவைத்தார். நாம் 2022-ல் கால்பதிக்கிறோம் என்றோம், cyberpunk 2020 1988-ம் ஆண்டே கால் பதித்துவிட்டது. அப்ப, 2020-ல் என்ன செய்திருப்பார்கள் என்கிறீர்களா? Cyberpunk 2077 தான்.

கேம்ஸ்டர்ஸ் - 20

Cyberika

‘Kefir!’ நிறுவனத்திடமிருந்து வந்திருக்கும் இன்னுமொரு மல்ட்டிபிளேயர் கேம்தான் cyberika. ஜோம்பிகளை அடித்துக்கொல்வது, நமக்கான உலகத்தை உருவாக்குவது என்னும் அடிப்படையில் இவர்கள் உருவாக்கிய The last day on earth பற்றி மூன்றாம் வாரத்தில் எழுதியிருந்தோம். 2017-ம் ஆண்டு வெளியிடப்பட்ட கேம், இன்றளவிலும் அப்டேட்டாகிக்கொண்டிருக்கிறது. புதிய புதிய சீசன்கள், வெவ்வேறு ஜோம்பிக்கள் எனப் பல விஷயங்களில் புதுமையைப் புகுத்தியிருந்தது ‘Kefir!’ நிறுவனம். அந்த கேமின் சில கேம்பிளான்களை வைத்துக்கொண்டு, cyberika-வை உருவாக்கியிருக்கிறார்கள். மல்ட்டிபிளேயர் கேம் என்று சொல்வதைவிட இந்த வகை விளையாட்டுகளை MMORPG cyberbunk வகைமையின் கீழ் பிரிக்கிறார்கள். MMORPG யின் ஹிஸ்டரி குறித்து வேறொரு கட்டுரையில் பார்க்கலாம். சுருக்கமாகச் சொல்வதாயின், வெவ்வேறு மனிதர்களாக நாம் உருமாறி, ஒரே இடத்தில் பல்வேறு மனிதர்களுடன் உரையாடிக்கொண்டே விளையாடுவதுதான் MMORPG.

சின்னச் சின்ன டாஸ்குகள், அடிதடிகள் என ரகளையாக ஆரம்பிக்கிறது Cyberika. 2084-ம் ஆண்டு நடக்கும் கதை என்பதால், நமக்கான கதாபாத்திர வடிவமைப்பும் படு ஸ்டைலிஷாக இருக்கிறது. வெவ்வேறு இடங்களுக்குக் காரில் செல்லலாம். ஆட்டோ பைலட் மோடில் அதுவே நம்மைப் பாதுகாப்பாகக் கொண்டு செல்லும். இல்லை, வேகமாகப் பறக்க வேண்டும் என்றால், நாமே காரை ஓட்டலாம். டெக் ஜாம்பவானான மகானா பயோடெக்கில் நாம் ஒரு சம்பவம் செய்வதில் ஆரம்பிக்கும் கதை, அங்கு நடக்கும் அடுத்தடுத்த டாஸ்குகள் மூலம் விரிகிறது.

கேமில் இசைக்கப்படும் பாடல்கள் பற்றிய விவரங்கள் இடப்பக்கத்தில் வந்துவிழுகின்றன. மியூசிக்கல் லைப்ரரியில் புதிய பாடல்களைச் சேர்க்க இது மிகவும் பயனுள்ளதாய் இருக்கும். PC-க்களில் மட்டுமே இப்படியான விளையாட்டுகளை விளையாட முடியும் என்கிற சூழல் மாறியிருப்பது வரவேற்கத்தக்கது.

- Downloading...