
ஹாலிலோ, பெட்ரூமிலோ கேம் விளையாடுபவர்களை அந்த இடத்தை விட்டு நகர்த்துவது என்பதே பெரும்பாடான ஒரு விஷயம்.
நெட்ப்ளிக்ஸ் நிறுவனமே தங்கள் வீடியோ பிளாட்பாரத்தில் கேம்களை நுழைத்துக்கொண்டிருக்கும் காலத்தில், விளையாட்டுக்கென ஆரம்பிக்கப்பட்ட ஒரு செயலியை சாட் பாக்ஸாக மாற்றி அசத்தியிருக்கிறார் ஜேசன் சித்ரன். கணினிப் பொறியாளரான ஜேசனுக்கு கேமிங் தொழிற்சாலைக்குள் அடியெடுத்து வைக்க வேண்டும் என்பது பெருங்கனவு. கேமிங்தான் எல்லாமே என்றிருந்த ஜேசன் முழுநேரமும் World of Warcraft விளையாடிக்கொண்டிருந்ததால், கல்லூரிப் படிப்பில் தட்டுத் தடுமாறித்தான் கரையேறி இருக்கிறார். இருந்தாலும், கேமின்வழி நட்பான பெண்ணைத்தான் கரம்பிடித்திருக்கிறார்.

சரி, விஷயத்துக்கு வருவோம். அவர் உருவாக்கிய Discord செயலியின் சர்வரில் ஒரு கட்டத்தில் வெறும் ஆறு பேர் மட்டுமே விளையாடிக்கொண்டிருக்க, இது சரிப்பட்டு வராது என முடிவு செய்து, என்ன செய்யலாம் என யோசித்திருக்கிறார். டிஸ்கார்டு கேமில் இருக்கும் சிறப்பம்சமே அதன் சாட்டிங் வசதி தான். வித்தியாசமான ஈமோஜிக்கள், வண்ணமயமான வசதிகள் என சாட்டிங்கை ரகளையாக உருவாக்கியிருந்தார் ஜேசன். கேமிங்கைப் பின்னுக்குத்தள்ளி, இனி சாட்டிங் தான் எங்கள் செயலி என மாற்றி எழுதினார் ஜேசன். சில அலுவலகங்களில் அன்றாடத் தகவல் பரிமாற்றங்களுக்கு Slack என்னும் செயலியைப் பயன்படுத்துவார்கள். கிட்டத்தட்ட டிஸ்கார்டு அதன் வேறொரு வெர்ஷன். டிஸ்கார்டில் விளம்பரங்களெல்லாம் கிடையாது. 15 பேருக்கு ஒரு சாட் பாக்ஸ் வேண்டும் என்றால், தனி சர்வரை வாடகைக்கு எடுத்து நம் பாட்டுக்கு பேசிக்கொண்டிருக்கலாம். தங்களின் விதிமுறைகளுக்குக் கட்டுப்படாமல் நடக்கும் அக்கவுன்ட்களையும், சர்வர்களையும் டிஸ்கார்டு நீக்கிவிடும். இதுவரையில் 4,70,000 அக்கவுன்ட்களையும், 43,000 சர்வர்களையும் நீக்கியிருக்கிறது டிஸ்கார்டு. எது தேவையோ அதுவே கரென்சி என்னும் தாரக மந்திரத்துடன் செயல்பட்ட ஜேசன் ஒரு வித்தியாசமான கேமர் தான். ‘ஆமா, சாட் பண்றதுக்கு எதுக்கு காசு தரணும். அதுதான் வாட்ஸப்லயே பண்ணலாமே’ என்கிறீர்களா? டிஸ்கார்டோ, ஸ்லாக்கோ உருவாக்கப்பட்டது வாட்ஸப்காரர்களுக்கு அல்ல.
இந்த வாரத்துக்கான புதுவரவு Star wars: Hunters. ‘ஒரே ஒரு ஐடியா, ஓஹோன்னு வாழ்க்கை’ என்பதற்கான முழுமுதல் உதாரணம் ஸ்டார் வார்ஸ் குழுவின் சூப்பர் ஸ்டார் ஜார்ஜ் லூகாஸ்ட்தான். படத்தின் கதையே Dune புத்தகத்தில் இருந்து களவாடப்பட்டது என்கிற சர்ச்சைகள் இருந்தாலும், இன்னும் மகாலட்சுமியை கல்லாப் பெட்டிக்குள் வரவழைத்துக்கொண்டே இருக்கிறார்கள் ஸ்டார் வார்ஸ் குழுவினர். படங்கள், முன்கதைகள், பின்கதைகள், வீடியோ கேம்கள், காமிக்ஸ், வெப் சீரிஸ், தீம் பார்க், நாவல் எனக் கால்பதித்த எல்லாவற்றிலும் வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறார்கள். முன்பதிவு செய்தவர்களுக்கென பிரத்யேகமாக Star wars hunters கேமை அனுப்பியிருக்கிறார்கள். இந்த ஆண்டு வெளியாகவிருக்கும் இந்த விளையாட்டு ஒரு ஆக்ஷன் கேமாக வடிவமைக்கப் பட்டிருக்கிறது. Imara Vex , Grozz, J-3DI, Sentinel, Slingshot, Rieve, Zaina எனப் பல்வேறு கதாபாத்திரங்களை நுழைத்து, ஸ்டார் வார்ஸ் படங்களில் வரும் வித்தியாசமான கதைக்களங்களில் சண்டை செய்வது போன்ற தோற்றத்தை உருவாக்கியிருக்கிறார்கள். ஸ்டார் வார்ஸ் ரசிகர்கள் ஒருமுறை இந்த விளையாட்டை ஆடிப் பார்க்கலாம்.

Augmented reality
ஹாலிலோ, பெட்ரூமிலோ கேம் விளையாடுபவர்களை அந்த இடத்தை விட்டு நகர்த்துவது என்பதே பெரும்பாடான ஒரு விஷயம். நொடிகளில் மாறிவிடும் ஆன்லைன் விளையாட்டில் பாஸ் பட்டனுக்கும் வாய்ப்பில்லை. எவ்வளவு மோசமான செய்தி என்றாலும், ‘கொஞ்சம் பொறுங்க ப்ளீஸ்’ மனநிலையில்தான் இளசுகள் ஆன்லைன் விளையாட்டுகளை அணுகி வருகிறார்கள். ஒரே இடத்தில் உட்காந்து விளையாடுவதால், என்ன என்ன நோய்கள் வரும் என கொரோனா வரை பட்டியலிட்டு ஊடகங்களும் மருத்துவர்களும் பல்வேறு பாணியில் எச்சரிக்கை செய்தாலும், எதுவும் இதுவரையில் செவியையோ, அதைக் கடந்து மூளையையோ எட்டியதில்லை. விர்ச்சுவல் உலகத்தில் மட்டுமே வாழ்ந்துவந்த கேமர்களுக்கு, மிகப்பெரிய வரப்பிரசாதமாக வந்து இறங்கியது ஆக்மென்டட் ரியாலிட்டி தொழில்நுட்பம். ‘வெளிய வாங்க சார், பரலோக சாம்ராஜ்யம் காத்துக்கொண்டிருக்கிறது’ என வெளி உலகத்துக்கு மீண்டும் அழைத்து வந்தது AR. ஒலி, ஒளி, நுகர்வு எனப் பல்வேறு முறைகளில் தற்போது இந்த ஆக்மென்டட் ரியாலிட்டி தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், கேமர்களுக்கு அதிகபட்சம் அது வெளிச்சம் மட்டும்தான். பிக்காச்சூ, பிக்காச்சூ என சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒட்டுமொத்த உலகமும் மொபைலைப் பிடித்துக்கொண்டு ஓடியதே அதுதான் இதன் ஆரம்ப சிக்ஸர். இந்த வாரம் அப்படியான சில Augmented Reality பற்றிய சின்ன அறிமுகம்...

Pikmin Bloom
ஆக்மென்டட் ரியாலிட்டி கேம்களின் புதிய ரிலீஸ் பிக்மின் புளூம். கடந்த அக்டோபரில் வெளியான இந்த விளையாட்டும் இணையத்தில் சக்கைப்போடு போட்டு வருகிறது. வெளியே இளைப்பாற நடந்து செல்லும் வகையில் இந்த கேம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. நடக்க நடக்க நமக்கு பிக்மின் பொம்மைகளை நியாண்டிக் நிறுவனம் வழங்குகிறது. நடப்பதுதான் விளையாட்டின் முக்கிய குறிக்கோள் என்பதால், ஆப்பிள் ஹெல்த், கூகுள் ஃபிட் போன்ற செயலிகளை கனெக்ட் செய்துவிடுவது இன்னும் சிறப்பு. விதை, செடி, பூ, பழம் என ஒரு விர்ச்சுவல் மாடித் தோட்டத்தையே உங்களால் இந்த விளையாட்டின் மூலம் உருவாக்க முடியும். AR தொழில்நுட்பத்தின் மூலம் கேமராவைக் கொண்டு வீட்டைச் சுற்றி எத்தனை செடிகள் வைத்திருக்கிறீர்கள் என்றுகூட நாள்தோறும் கணக்குப் பார்த்துக்கொள்ளலாம். வீடு, பார்க் என சின்னச் சின்ன இடங்களில் நடக்க விரும்பும் மக்கள் இந்த கேமை முயன்றுபார்க்கலாம்.

Ingress Prime
போக்கிமான் கோ மூலம் உலகம் முழுக்க இந்தத் தொழில்நுட்பம் ஒரு ரவுண்டு வந்தாலும், ஆரம்பக்காலங்களில் வெளியான முதல் அட்டகாச AR விளையாட்டு என்றால், அது Ingress Prime தான். நாம் ஒரு சின்ன அம்புக்குறியாகத்தான் இந்த கேமில் தெரிவோம், அருகில் நிறைய கட்டடங்கள் இருக்கும் இடத்தில் இந்த விளையாட்டை விளையாடுவது இன்னும் சிறப்பு. குழுக்களாகப் பிரிந்து நிறைய விர்ச்சுவல் கதவுகளை இந்த கேமில் நம்மால் திறக்க முடியும். நாம் போட்டிகள் வெல்ல வெல்ல, Action Points நமக்கு வழங்கப்படும். 2017-ம் ஆண்டு இந்த கேமை முற்றிலுமாக அப்கிரேடு செய்து இன்க்ரெஸ் ப்ரைம் என வெளியிட்டு அசத்தியது நியாண்டிக். நிறைய பெரு நிறுவனங்கள் தங்களின் கட்டடங்களை இந்த கேமுக்குள் வழங்கி விளம்பரம் தேடிக்கொண்டிருக்கின்றன என்பது உப தகவல்.

Jurassic World Alive
‘போக்கிமான் கோ’வின் வெற்றியைத் தொடர்ந்து எல்லாப் பெரிய நிறுவனங்களும் AR-ல் கேம்களை வெளியிடத் தொடங்கின. யுனிவர்சல் நிறுவனம் தங்களிடம் இருக்கும் பெரிய தலைக்கட்டான ஜுராஸிக் வேர்ல்டையே AR-க்குள் இறக்கியது. ஊரைச்சுற்றி கேமராவை ஆன் செய்து நடந்துகொண்டே இருந்தால், வித்தியாசமான டைனோசர்களைக் கேமராவின் கண்வழி நாம் கண்டடைய முடியும். அதாவது, ‘500 மீட்டர் தள்ளி ஒரு டைனோசர் இருக்கிறது, ஓடியாங்க’ என்று சொன்னால், சட்டு புட்டுன்னு அங்கே செல்ல வேண்டும். நாம் கண்டுபிடிக்கும் டைனோசர்களை வைத்து, அவற்றின் DNA மாதிரிகளை வைத்து புதிய ஹைபிரிட் டைனோசர்களை நம்மால் உருவாக்க முடியும். ‘டைனோசர்ல ஹைபிரிடா’ என்றெல்லாம் போர்க்கொடி தூக்காமல் ஜாலியாக ஆடலாம்.

ஜோம்பீஸ்
ஜோம்பி பிரியர்களுக்கென நடுரோட்டில் நடந்துபோய் ஜோம்பிகளைக் கொல்லும் AR விளையாட்டுகளும் வரிசைகட்டி வெளியாகின. The Walking Dead: Our World, Zombies, Run! போன்றவை இதற்காக உருவாக்கப்பட்டவைதான். ஆனால், இவை அவ்வளவு ஹிட் அடிக்கவில்லை என்பதால் அடுத்த கேம் பக்கம் நகரலாம்.


Kings of Pool
‘அது ஏன் பாஸ் வெளியே போகணும்? வீட்டுக்குள்ளேயே விளையாட முடியாதா’ என AR வசதியையும் வீட்டுக்குள்ளே மீண்டும் கொண்டுவந்துவிட்டது Kings of pool. இதுவொரு மல்ட்டிபிளேயர் ஆன்லைன் விளையாட்டு. வீட்டுக்குள்ளேயே நல்ல தரையாகப் பார்த்து கேமராவை நோக்கினால், பச்சைப்பசேல் என பில்லியர்ட்ஸை உருவாக்கிவிட முடியும். அதில் நாம் கேஷுுவலாக உட்கார்ந்து விளையாட முடியும்.