
கூகுளின் கார்டுபோர்டு VR-ஐ சல்லிசான விலையில் நாமே செய்துவிட முடியும். அதை வைத்து யூடியூபில் இருக்கும் சின்ன வீடியோக்களை நாம் பார்த்தும் மகிழலாம்.
கொரோனா சூழ் உலகத்தில் எல்லாவற்றுக்கும் கொரோனாவைத்தான் துணைக்கு அழைக்க வேண்டியதிருக்கிறது. எந்தவொரு அறிகுறியும் இல்லாமல், அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட Wordle என்னும் விளையாட்டை தற்போது மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் விளையாடி வருகிறார்கள். மிகவும் எளிமையான விளையாட்டுதான். ஆனால், உலகமே பித்துப்பிடித்துப் போய் மண்டையைச் சொறிந்துகொண்டு இருக்கிறது.
இந்த விளையாட்டில் ஐந்து எழுத்து ஆங்கில வார்த்தையைக் கண்டுபிடிக்க வேண்டும். உங்களுக்கு ஆறு வாய்ப்புகள் வழங்கப்படும். முதல் முறையில் நீங்களாகவே தோராயமாக ஐந்து எழுத்து வார்த்தையை நிரப்புவீர்கள். அதில் எது சரி, எது தவறென, மஞ்சள், சாம்பல், பச்சை வண்ணங்களில் கோடிட்டுக் காட்டும். இதை வைத்து அடுத்த அடுத்த வரிசைகள், உங்களின் கணிப்புகளை நிரப்ப வேண்டும். ‘ஏம்பா, இதெல்லாம் ஒரு விளையாட்டா’ என்கிறீர்களா? எந்த க்ளூவும் இல்லாமல், ஆங்கிலத்தில் இருக்கும் 26 எழுத்துகளில் ஓர் ஐந்தெழுத்து வார்த்தையைக் கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபம் இல்லை. அதையும் தாண்டி, இதில் இரண்டு ஈர்க்கும் விஷயங்கள் இருக்கின்றன. இந்த விளையாட்டைக் கண்டுபிடித்த ஜோஷ் வார்ட்லி, இதை வைத்துப் பணம் பார்க்கும் திட்டமில்லை என அறிவித்துவிட்டார். ஆம், ஆறு வாய்ப்புகள் முடிந்து தோற்றாலோ அல்லது வென்றாலோ அந்த நாள் முடியும் வரை காத்திருக்கத்தான் வேண்டும். ஏனெனில், இந்த விளையாட்டை ஒரு நாளுக்கு ஒருமுறை மட்டுமே விளையாட முடியும். “ஒரு நாளுக்கு மூன்று நிமிடங்கள் இதுபோன்ற விஷயங்களுக்குச் செலவு செய்தால் போதுமானது. உங்கள் டேட்டாவும் எனக்குத் தேவையில்லை’’ என்கிறார் ஜோஷ். இரண்டாவது என்ன என்கிறீர்களா, ஒருமுறை பதிலைக் கண்டுபிடித்தபின்னர், நீங்களே ஆசைப்பட்டாலும் இந்த விளையாட்டை மீண்டும் அதே நாளில் விளையாட உங்களுக்கு ஆசை இருக்காது.


VR
கடந்த வாரம் பொன்மணி AR பார்த்தோமா, இந்த வாரம் கண்மணி VR. எல்லா ஷாப்பிங் மால்களிலும் கேமிங் சென்டர்களைப் போலவே, VR கடைகளிலும் கூட்டம் அலைமோதுகிறது. தலையில் ஒரு கருவியை மாட்டிக்கொண்டு ஆளுக்கொரு பக்கமாக நடந்துகொண்டிருப்பார்கள். உட்கார்ந்து மட்டுமே வெறிக்க வெறிக்கப் பார்க்கும் கும்பல்களுக்கு அதற்கேற்ற விளையாட்டுகள் VR-ல் உண்டு. ஆக்மெண்ட்டட் ரியாலிட்டியைப் போலவே, விர்ச்சுவல் ரியாலிட்டி கடந்த தசாப்தத்தில் பிரபலமான மற்றுமொரு டெக்னாலஜிதான். நிஜ உலகில், தனக்கான ஓர் உலகத்தை அதனுள் பொருத்திக்கொண்டு AR செயல்படும்.
கடந்த வாரக் கட்டுரையில் பில்போர்டு AR பற்றிப் பார்த்திருப்போம். அந்த விளையாட்டை விளையாடுவதற்கு, நமக்கு ஒரு சமதளத்திலான தரை வேண்டும். அப்போதுதான் அந்த இடத்தில் விர்ச்சுவலாக பில்போர்டைப் பொருத்த முடியும். அதே சமயம் விர்ச்சுவல் ரியாலிட்டியில் அப்படி எதுவுமே தேவையில்லை. முற்றிலுமாக ஒரு விர்ச்சுவல் உலகத்தை நமக்கு அது பரிசளித்துவிடும். AR விர்ச்சுவலும், ரியாலிட்டியும் கலந்த கலவையென்றால், VR வெறுமனே ஒரு புனைவு உலகை நம் கண் முன்னர் காட்டும். என்ன... AR விளையாட்டுகளை ஸ்மார்ட் போனிலேயே விளையாட முடியும். VR-க்குத்தான் தலைமேல் புதிதாகக் கருவிகளையெல்லாம் வாங்கி மாட்ட வேண்டும். அடுத்ததாக XR வரை உலகம் சென்றுவிட்டாலும், இன்னும் AR, VR-ஐயே நாம் அதிகமாகப் பயன்படுத்தவில்லை என்பதே யதார்த்தம்.


கூகுளின் கார்டுபோர்டு VR-ஐ சல்லிசான விலையில் நாமே செய்துவிட முடியும். அதை வைத்து யூடியூபில் இருக்கும் சின்ன வீடியோக்களை நாம் பார்த்தும் மகிழலாம். அதே சமயம், தற்போது வெளியாகும் பல VR விளையாட்டுகளுக்கு ஆக்குலஸின் quest2 அவசியம். பிளேஸ்டேஷன் மூலம் சோனி கொடிகட்டிப் பறக்கிறது என்றால், ஆக்குலஸின் லாபம் எல்லாம் மார்க் சக்கர்பெர்க் வசம்தான்.
இந்த வாரம் கொஞ்சம் VR கேம்ஸ்.

THE CLIMB 2
பதினைந்தே லெவல்கள், ஆனால் வித்தியாசமான டிசைன் மூலம் ஆச்சர்யப்படுத்தியது The climb 2. முதல் வெர்ஷனைவிட பலமடங்கு டெக்னிக்கல் விஷயங்களில் சாமர்த்தியமாகச் செயல்பட்டது இந்த வெர்ஷன். வெவ்வேறு இடங்கள், மாறும் ஒளி அளவுகள், இதுதான் இந்த கேமில் இருக்கும் விஷயமே! ‘சரி, என்னதான் செய்ய வேண்டும்’ என்கிறீர்களா. ஆக்குலஸை மாட்டிக்கொண்டால், உங்கள் கண்களுக்கு அந்த வித்தியாசமான உலகம் மட்டுமே தெரியும். அதில் தெரியும் கைகள் உங்கள் கைகள்தான். ஆக்குலஸ் டச் கருவிகளின் உதவியுடன், அதில் நீங்கள் ஏற வேண்டும். தடுக்கி விழ நேர்ந்தால், விர்ச்சுவலாக மரணம் நிச்சயம். ‘எனக்கு ஹைட்டுன்னாலே பயமாச்சே’ என்கிறீர்களா, இதை ஒருமுறை மட்டும் பரிசோதித்துப் பாருங்கள்.

SUPERHOT VR
துப்பாக்கி, தோட்டாக்கள், சுத்தியல் என விதவிதமான ஆயுதங்களை வைத்து எதிரிகளைப் பந்தாட விரும்பும் வீரர்களுக்கான விர்ச்சுவல் சொர்க்கபுரி இந்த சூப்பர்ஹாட் VR. ஆக்குலஸ் டச் போன்ற கருவிகளுடன் உங்கள் கைகளில் விர்ச்சுவலாக இந்த ஆயுதங்களைப் பிடித்து நீங்கள் சண்டை செய்ய வேண்டும். துப்பாக்கிச் சண்டை first person shooter விளையாட்டுகளில் இருக்கும் இரண்டு விஷயங்கள்: தானாக நிரம்பும் ஹெல்த் பார், ஆங்காங்கே கிடைக்கும் துப்பாக்கிகள். இந்த இரண்டுமே இதில் கிடையாது. அதனாலேயே இந்த கேமுக்கு ரசிகர்கள் அதிகம். கடந்த ஜூலை மாதம், கேமில் இருக்கும் சில சர்ச்சையான விஷயங்கள் நீக்கப்பட்டதால் சிலருக்கு இந்த விளையாட்டு பிடிக்கவில்லை (தங்களைத் தாங்களே சுட்டுக்கொல்லும் ஆப்ஷன் முன்னர் இருந்தது). சுற்றி கொஞ்சம் இடமிருக்கும் பகுதிகளில் இந்த விளையாட்டை ஆடுவது, சுற்றியிருப்பவர்களுக்கு நல்லது.

In Death
மூன்று வித்தியாசமான உலகங்கள், வேறு லெவலில் களமிறங்கும் வில்லன்கள். இவர்களை எதிர்கொள்ள நம்மிடம் இருப்பதோ வில், அம்புதான். சில போட்டிகளில் நமக்குக் குறுக்குவில்லும் கிடைக்கும். அதைவைத்தும் சண்டை செய்யலாம். சாகாவரம் பெற்ற ஜோம்பிகள், மந்திரிகள், மாயாஜால தந்திரிகள் எனப் பலரும் சூழ்ந்திருக்கும் பாதாள உலகில், இவர்களைக் கொன்று அடுத்தடுத்த லெவல்களுக்கு நகர வேண்டும். மரண ஓலங்கள், பாதாள உலக செட்டப் என செத்து செத்து விளையாடுவோம் ரீதியில் இதை உருவாக்கியிருக்கிறது சூப்பர்ப்ரைட் நிறுவனம்.

DANCE CENTRAL VR
அடிதடி, ரத்தம், துப்பாக்கின்னு ஒரே வன்முறையா இருக்கே, நிம்மதியா விளையாட VR-ல எதுவுமே இல்லையா என்பவர்களுக்காகவே உருவாக்கப்பட்டது தான் DANCE CENTRAL VR. அதிலும் இவ்வாண்டில் இருந்தாவது ஃபிட்டாக இருப்போம், உடம்பைக் குறைப்போம் எனக் கங்கணம் கட்டி இருப்பவர்களுக்கு ஏற்ற விளையாட்டு இது. ஆக்குலஸைத் தலையில் மாட்டிக்கொண்டு நம் பாட்டுக்கு போடப்படும் பாடலுக்கு தய்யா தக்கா எனக் குதிக்கலாம். 1970களில் இருந்து இன்றுவரை ஹிட்டான பல பாடல்கள் இதன் பிளேலிஸ்ட்டில் உண்டு. மல்ட்டிபிளேயர் வசதியும் இருக்கிறது என்பதால், வீட்டில் இருந்தபடியே நீங்களும் உங்கள் சுற்றத்தாரும் இந்த கேமுக்குள் விர்ச்சுவலாக லாகின் செய்து, விர்ச்சுவல் மேக்கப் எல்லாம் முடித்துக்கொண்டு ஆடி மகிழலாம். அதில் கட்டளையிடும் நடன அசைவுகளை நாம் ஆடும் பட்சத்தில், எத்தனை கலோரிகளை எரித்திருக்கிறோம் போன்ற தகவல்களும் நமக்குச் சொல்லப்படும்.






மற்ற கேம்கள்
என்ன டெக்னாலஜியாக இருந்தாலும், அங்கே பெரிய நிறுவனங்கள் எப்படியும் வந்துவிடும். சினிமா புத்தகம், கேம்ஸ் என எல்லா இடங்களிலும் கால் பதிக்கும் நபர்கள் VR-ஐ மட்டும் விட்டுவார்களா என்ன? ரெசிடண்ட் ஈவில் சினிமாத் தொடர் VR-லும் உண்டு. RESIDENT EVIL 4 VR என்னும் விளையாட்டை ஒரிஜினலின் நான்காம் பாகத்தின் கதைக்கருவை வைத்து உருவாக்கியிருக்கிறார்கள். ‘மனிதன்’ பட ரஜினி ஸ்டைலில், நம் உடல் முழுக்க ஆயுதங்கள் இருப்பதால், நெஞ்சைத்தொட்டு கத்தியை எடுத்து எதிர்வருபவர்களைக் கொல்லும் வித்தியாச வசதிகள் எல்லாம் இதில் உண்டு. விண்வெளியில் நம்மை இருக்க வைத்து அழகு பார்க்கிறது STAR WARS: SQUADRONS. அவ்வளவு ஏன், வீடியோகேமில் இருந்து நம்முடன் கைகோத்து வரும் டெட்ரிஸ் விளையாட்டுகூட VR-ல் உண்டு பாஸ்.