Published:Updated:

கேம்ஸ்டர்ஸ் - 23

கேம்ஸ்டர்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
கேம்ஸ்டர்ஸ்

புவியெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஒரே விஷயம் இணையம். கொரோனாவும் தான்.

சென்னை வெள்ளத்தின்போது சமூக வலைதளங்களில் வெவ்வேறு விஷயங்களுக்குப் பயன்பட்டுவந்த பல கணக்குகள் வெள்ளம் குறித்தும், நிவாரணம் குறித்தும் தகவல்கள் வெளியிட்டன. அப்படியானதொரு செய்திதான் இது.

Wario64 என்கிற அமெரிக்காவைச் சேர்ந்த ட்விட்டர் கணக்குக்கு 10 லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உண்டு. ‘கேம் சி.டி-க்கள் எங்கு கம்மி விலையில் கிடைக்கின்றன; பிளே ஸ்டேஷன் 5 எங்கு கிடைக்கிறது’ போன்ற தகவல்களை வெளியிட்டுவந்த கணக்கு, கொரோனா பக்கம் அதன் பார்வையைத் திருப்பியிருக்கிறது. தினமும், ஐந்து லட்சத்துக்கும் அதிகமானோர் அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால், தடுப்பூசி எங்கு போடப்படுகிறது; வீட்டிலேயே சோதனை செய்யும் நிறுவனங்கள் யார் போன்ற செய்திகள் இன்னும் பொதுமக்களை வெகுவாகச் சென்றடையவில்லை. இரண்டு ஆண்டுகளாக தனது கணக்கை இதற்கென மாற்றியமைத்திருக்கிறது Wario64. சிலர் நக்கலாக ‘அமெரிக்க அரசாங்கத்தைவிடவும் விரைவாக சில தடுப்பூசி குறித்த விஷயங்களைக் கொண்டு சேர்க்கிறது Wario64’ எனப் பாராட்டிவருகிறார்கள். கேமர்கள் நல்லவர்கள்..!

கேம்ஸ்டர்ஸ் - 23

புவியெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஒரே விஷயம் இணையம். கொரோனாவும் தான். ஆனால், இந்த 5ஜி காலத்தில் இணையம் இல்லாமலே விளையாடும் புதிர் விளையாட்டைக் கண்டுபிடித்து அசத்தியிருக்கிறது TinyPlay நிறுவனம். நவம்பர் மாதம் வெளியான Thereporteur விளையாட்டின்படி நீங்கள் ஒரு ரிப்போர்ட்டர். கல்லூரியில் படிக்கும் மாணவ நிருபரான நீங்கள், ஒரு கொலையாளியைக் கண்டுபிடிக்க வேண்டும். அந்தக் கட்டடத்தில் இருக்கும் பல்வேறு மனிதர்களிடம் பேசிக்கொண்டே அங்கிருக்கும் புதிர்களைக் களைய வேண்டும் . கதை விரிய விரிய, கடினமான டாஸ்குகளும் கொடுக்கப்படும். கேம் அதன் ஆரம்பக்கட்டத்தில் இருப்பதால், ஆங்காங்கே உடையுதாம், சரியுதாம் புகார்களும் இருக்கத்தான் செய்கின்றன. இணையமே தேவையில்லைன்னு சொல்றீங்களே, எப்படி டவுன்லோடு பண்ணுவீங்கன்னு கேட்பவர்களுக்கு புருடபுராணத்தின்படி தண்டனைகள் வழங்கப்படும்.

கேம்ஸ்டர்ஸ் - 23

Survival horror

சண்டை விளையாட்டுகளில் எப்போதும் விளையாடும் வீரர்களிடம் ஆயுதங்கள் கை நிறைய இருக்கும். இப்படியே அடிச்சுக்கிடே இருந்தா எப்படி என யோசித்தபோதுதான், சமபலத்தில் சிலவற்றைக் குறைக்கலாம் என முடிவு செய்தார்கள். வில்லன்கள் கை ஓங்கியும், ஹீரோக்களின் கை இறங்கியும் விளையாட்டுகள் உருவாக்கப்பட்டன. பெரிய வில்லன், ஆனால் புத்தி காலி. ஹீரோக்களிடம் ஆயுதங்கள் குறைவாக இருக்கும், அதே சமயம் சாமர்த்தியமாக அங்கிருந்து தப்பிக்கக்கூடிய மூளை இருக்கும். இப்படி உருவானவைதான் சர்வைவல் ஹாரர் விளையாட்டுகள். சிங்கிள் ஹீரோ வெர்சஸ் ஊர்ப்பட்ட வில்லன்கள்; கும்பல் ஹீரோக்கள் வெர்சஸ் ஒரேயொரு பயில்வான் எனப் பல்வேறு ஃபார்மேட்களில் இந்த கேம்கள் உண்டு.

கண்ணுக்குத் தெரியாத ஏலியன்களிடம் தப்பிக்கும் அதிரிபுதிரி Nostromo தான் சர்வைவல் ஹாரர் கேம்களின் தாய். கண்ணுக்கே தெரியாட்டி எப்படி பாஸ் ஜெயிக்கறது என்கிறீர்களா. கண் முன்னால் வரும்போது மட்டும் தெரியுமாம். அதன் பிறகு 1982-ல் haunted house வெளியானது. அந்த கேம், ஹாரர் கம்மி, புதிர்கள் தூக்கலாக சக்கைப்போடு போட்டது. சர்வைவர் ஹாரர் படங்களில் லோ பட்ஜெட்டில் வெளியாகி ஹாலிவுட்டில் சக்கைப் போடு போட்ட சமயம், அவற்றை அப்படியே கேம்களாகவும் மாற்றத் தொடங்கினர் கேமர்கள். ஹாரரும், அடல்ட் கன்டென்டும் இருக்கும் என்பதால், கல்லூரி மாணவர்கள் மத்தியில் இந்த ஜானர் படங்கள் பிரசித்தம். இதனாலேயே இந்தப் படங்களின் வில்லன்கள் விதவிதமான ஆயுதங்கள், குரூரமான கொலைகள் எனச் செய்ய ஆரம்பித்தனர். இவர்கள் தூக்கிப்போட்ட ஆயுதங்களை வைத்துதான் இன்றளவும் தெலுங்கு பாலகிருஷ்ணா சண்டை போட்டுவருகிறார்.

இந்த வாரம் நாம் பார்க்கவிருக்கும் விளையாட்டு asymmetric சர்வைவல் ஹாரர் வகை. இந்த வகைமை விளையாட்டுகளில், மிகவும் சிறப்பான சம்பவம் என்றால் அது Dead by daylight தான். பொதுவாக ஒரு விளையாட்டில் எல்லா வீரர்களுக்கும் ஒரே சக்திதான் இருக்கும். ஆனால், asymmetric வகைகளில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பலம் பலவீனம் உண்டு.

கேம்ஸ்டர்ஸ் - 23

dead by daylight 18+

மின்சாரமே இல்லாத ஓர் இடத்தில் தட்டுத்தடுமாறி ஒரு ஜெனரேட்டரை ஆன் செய்ய வேண்டும். யாரோ பின்தொடர்வது போல் இருந்தாலும், யாருமே இருக்க மாட்டார்கள். ஆனாலும், இதயம் உசைன் போல்ட்டுக்கு இணையாக அடிக்கத் தொடங்கியிருக்கும். கிடைக்கும் சிறிது வெளிச்சத்தில் ஸ்விச்சைப் போட்டதும், ஓங்கியொரு அடி. கண் விழித்துப் பார்த்தால், இருட்டறையில் கைகள் கட்டப்பட்டு, கறிக்கடையில் தொங்கவிட்டு இருப்பதுபோல், நாயகனைத் தொங்கவிட்டு இருப்பார்கள். சர்வைவல் ஹாரர் சினிமாக்களில் இந்தக் காட்சி எப்படியும் இடம்பிடித்துவிடும்.

இதுவரையில் நாம் பார்த்த எல்லா ஹாரர் படங்களின் வில்லன்களையும் ஒருசேர ஒரு கேமுக்குள் அடைத்தால் எப்படி இருக்கும்? அதுதான் dead by daylight கேம். சர்வைவல் ஹாரர் சினிமாக்களுக்கென ஒரு ரத்தக்காவு வாங்கும் ஒன்லைன் உண்டு. பால் பாக்கெட் போடக்கூட வழியில்லாத ஒரு பங்களாவுக்கு நான்கு பேர் தங்கச் செல்வார்கள். அப்படித் தங்கும் போதுதான் அங்கு ஒரு கொடூர வில்லன் இருக்கிறான் என்பதே தெரியும். அவன் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு அங்கிருந்து தப்பிக்க வேண்டும். ஆனால், வில்லன் என்ன கண்களைக் காட்டிக்கொண்டா இருப்பான்? ஒவ்வொருவராக வேட்டையாடுவான். கிட்டத்தட்ட இதுதான் இந்த கேம். 2016-ம் பி.சி-க்களில் வெளியாகி அசுர ஹிட் அடிக்க, 2020-ம் ஆண்டு ஆண்டிராய்டிலும் இந்த கேம் வெளியானது.

கேம்ஸ்டர்ஸ் - 23

Hellraiser, Saw, Stranger Things, Resident Evil, The Texas Chainsaw Massacre, Halloween என நாம் பார்த்த பல ஹாலிவுட் படங்களின் வில்லன்கள் இந்த கேமில் இருப்பார்கள். அதே போன்று, இந்தப் படங்களில் தப்பிக்கும் வல்லமை படைத்த கதாபாத்திரங்களும், அதே பெயரில், அதே லுக்கில் இந்த கேமில் இருப்பார்கள். விளையாட்டின் ஆரம்பத்தில் நமக்கு இரண்டு சர்வைவல் ஹீரோக்களும், ஒரு வில்லனும் வழங்கப்படும். கிங்காக இருக்கப்போகிறோமா, கிங் கில்லராக இருக்கப்போகிறோமா என்பதை நாமே முடிவு செய்யலாம்.

ஐந்து நபர்கள் ஒன்றாக இதை விளையாட முடியும். நான்கு சர்வைவர், ஒரு கில்லர்.

கில்லர்

கில்லர் ஒரு போடு போட்டாலே பாதி உயிர் போய்விடும். இரண்டாவது முறை ஓங்கி அடித்தால் உயிர் மட்டும்தான் இருக்கும். அதன்பிறகு அப்படியே கைத்தாங்கலாக அங்கிருக்கும் கொக்கிகளில் அவர்களை மாட்டிவிட வேண்டும். கில்லர்களால் மனிதர்களைவிட வேகமாக ஓடமுடியும். அதே சமயம், ஜெனரேட்டர் எங்கிருக்கிறது; கொக்கிகள் எங்கிருக்கிறது, அட அவ்வளவு ஏன், சமயங்களில் பரிதாபத்திற்குரிய சர்வைவர்கள் எங்கிருக்கிறார்கள் என்றுகூட பார்க்க முடியும்.

கேம்ஸ்டர்ஸ் - 23
கேம்ஸ்டர்ஸ் - 23

சர்வைவர்

‘என்ன, எல்லாமே கில்லருக்கு ஆதரவாக இருக்கிறதே’ என நினைக்க வேண்டாம். அந்த வீட்டிலிருக்கும் அந்த ஜெனரேட்டர்களைச் சரி செய்தால், கதவு திறந்துவிடும். கதவின் வழியாகவோ, அல்லது வேறொரு வழியிலோ வெளியேறிவிடலாம். கில்லர் வரும்போது, சில பொருள்களைத் தூக்கிப் போட்டு கில்லரின் வழியில் தடங்கலை ஏற்படுத்தலாம். ஆத்திர கில்லர்களுக்கு புத்தி மட்டு என்பதால் அவர்களால் அதை எளிதில் கடக்க முடியாது. உயிர்காக்கும் தோழனுடன் நீங்கள் விளையாட வந்திருந்தால், கொக்கியில் மாட்டப்பட்டு இருந்தாலும் காப்பாற்ற அவன் வருவான்.

- Downloading

கேம்ஸ்டர்ஸ் - 23

+ அட்டகாசமான விஷுவல்ஸ். புதிதாக ஒரு திரைப்படம் வெளியானால், அதிலிருக்கும் கதாபாத்திரங்களையும் விளையாட்டுக்குள் கொண்டு வந்துவிடுகிறார்கள்.

- இந்த விளையாட்டின் மிகப்பெரிய பிரச்னை, அது லோடாக எடுத்துக்கொள்ளும் நேரம்தான். கில்லராகத்தான் விளையாடுவேன் என அடம்பிடித்தால், லோடிங் டைம் இன்னும் ஜாஸ்தியாகும். சர்வைவர் என்றால், ஒரு தோசை சாப்பிடும் அளவு காத்திருந்தால் போதுமானது.